Thursday, May 22, 2014

"தெற்காசிய ஒன்றியம்" : மோடியின் எதிர்காலக் கனவு?



ஐரோப்பிய ஒன்றியம் மாதிரி, மோடி தலைமையில் ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவாகுமா? இன்று (21-05-2014), ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர், "ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு பொது அரசு" உருவாகும் என்று சொன்னால், யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அப்படிச் சொன்னவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். ஏனென்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில், அந்தளவு தூரம் பகைமை நிலவியது.

மொழியால், கலாச்சாரத்தால் மாறுபட்ட ஐரோப்பிய இனங்கள், சதா சர்வ காலமும், ஒருவருடன் ஒருவர் சண்டை போடுவதிலேயே காலம் கழித்து வந்தன. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையிலான வெறுப்புணர்வு, இன்றுள்ள இந்திய, பாகிஸ்தான் பிரச்சினையை விட மிகத் தீவிரமாக இருந்தது. சிங்களவர்களும், தமிழர்களும் மோதிக் கொண்டதை விட மிகவும் மோசமாக, ஐரோப்பிய இனங்கள் தமக்குள் மோதிக் கொண்டன. ஈழப் போரில் இறந்ததை விட, பல மடங்கு அதிகமான ஐரோப்பிய மக்கள் இனப் பகையால் மாண்டனர். இன்று அவை எல்லாம் பழங் கதைகள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதாரணத்தை, இன்று பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பின்பற்ற விரும்புகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம், சார்க் நாடுகள் போன்ற அமைப்புகள், அந்த நோக்கத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்தியப் பிரதமராக தெரிந்தெடுக்கப் பட்ட நரேந்திர மோடி, சார்க் நாடுகளின் தலைவர்களை தனது பதவிப் பிரமாணத்திற்கு அழைத்ததின் பின்னணிக் காரணமும் அதுவாக இருக்கலாம். சார்க் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மாதிரி, தமக்கு இடையிலான பகையை மறந்து, பொதுவான வர்த்தக அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் ஏற்கனவே ஆலோசிக்கப் பட்டுள்ளது.

நீண்ட காலமாகவே, உள்நாட்டு தீவிரவாதத்தை ஒழிப்பது சார்க் நாடுகளின் தலையாய கடமையாக இருந்து வந்தது. அதனால் தான், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் போரில், இந்தியாவும், பாகிஸ்தானும் கை கோர்த்துக் கொண்டு, இலங்கை அரசுக்கு உதவின. உண்மையில், ஈழப் போரின் முடிவானது, தெற்காசிய நாடுகளில் முன்னெப்போதும் நடந்திராத முன்னுதாரணமாக திகழ்ந்தது. அந்த உதாரணம், இனி வருங்காலத்தில், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பின்பற்றப் படலாம்.

"மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை அழித்தது. மோடியின் பாஜக அரசு அமைந்தால், தமிழர்களுக்கு சாதகமாக அமையும்." என்றெல்லாம் பரப்பப் படும் கதைகள், பூகோள அரசியல் குறித்த அறியாமையில் இருந்து எழுகின்றது. இந்திய அரசின் வெளிவிவகார கொள்கை, எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் மாறப் போவதில்லை. மன்மோகன் சிங் தொடக்கி வைத்ததை, நரேந்திர மோடி முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய பொருளாதார பலம் மிக்க நாடான ஜெர்மனி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதே போன்று, தெற்காசிய ஒன்றியம் உருவானால், அங்கே இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இங்கே பாகிஸ்தானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல நூறு வருடங்களாக, ஜெர்மனியுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த பிரான்ஸ், இறுதியில் இணங்கிப் போன மாதிரி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேரலாம்.

தெற்காசிய நாடுகள் ஒன்று சேர்வதற்கு அடிப்படையாக உள்ள பொதுவான குணாம்சம் என்ன இருக்கிறது? அந்தக் கேள்வி ஐரோப்பாவிலும் எழலாம். ஐரோப்பியர்கள், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்டவர்கள் மட்டுமல்ல. பொதுவானதாக கருதப்படும் கிறிஸ்தவ மதம் கூட அவர்களை ஒன்று சேர்க்காமல், பிரித்து வைத்திருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு வெறுப்புக் கொண்டிருந்தார்கள். கிரேக்க (ஒர்தொடக்ஸ்) கிறிஸ்தவ மரபை பின்பற்றுவோருடனும் அப்படித் தான்.

உண்மையில், இருபதாம் நூற்றாண்டில் பரவிய முதலாளித்துவ லிபரல் கலாச்சாரம் தான், அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் ஒன்று சேர்த்தது. 2 ம் உலகப் போருக்குப் பிந்திய ஐரோப்பாவில், மத-இனப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. புதிய தலைமுறை ஐரோப்பியர்கள், வாழ்க்கைக்கு பொருளாதாரமே முக்கியம் என்று உணர ஆரம்பித்தனர். 

இதே மாதிரியான முதலாளித்துவ லிபரல் கலாச்சாரம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. ஆகவே மோடி தலைமையில், ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவானால், அது குறித்து யாரும் ஆச்சரியப் படத் தேவையில்லை. பல்லின, மத வேறுபாடுகளைக் கொண்ட மக்களை ஒன்று சேர்க்கும் வல்லமை முதலாளித்துவத்திற்கு உண்டு.


ஐரோப்பிய ஒன்றியம் குறித்த முன்னைய பதிவுகள்:
ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்

மோடி குறித்த முன்னைய பதிவுகள்:
மோடியால் எதையும் சாதிக்க முடியாது
நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்

2 comments:

Natraj said...

மிக அழகாக எழுதி இர்ருகிரீர்கள் . தெற்காசிய ஒன்றியம் ஏற்பட்டால் நல்லதா இல்லையா ?

Kalaiyarasan said...

//தெற்காசிய ஒன்றியம் ஏற்பட்டால் நல்லதா இல்லையா ?//

இந்தியாவுக்கு, குறிப்பாக இந்திய பெரும் வணிக நிறுவனங்களுக்கு நன்மை உண்டு.