Thursday, May 01, 2014

மே தினம்: செங்கொடியை தூற்றும் "அறிவுஜீவிகளின்" அறியாமை


இன்று நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேரம் வேலை, ஓய்வு, விடுமுறை போன்றன, நூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத் தெரியாது. சிக்காகோ நகரில், இரத்தம் சிந்திப் போராடிய தொழிலாளர்கள் உரிமைகள் பெற்ற நாள் தான் மே தினம். அன்று அவர்கள் ஏந்தியிருந்தது தான் செங் கொடி. இந்த வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள், செங் கொடியையும், மே தினத்தையும் பரிகசிப்பதன் மூலம் தமது அறியாமையை வெளிப் படுத்துகின்றனர்.

 // தேசியக்கொடிக்கும், செங் கொடிக்கும் இடையில் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு..! // 

 நிச்சயமாக. மறுக்க முடியாத உண்மை. தேசம் என்பது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. அது ஒரு விலங்குப் பண்ணை மாதிரி. மனிதர்கள் மாடு மாதிரி உழைக்கத் தயாராக இருக்க வேண்டும், அல்லது பட்டினி கிடந்து சாக வேண்டும்.

ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக தேசம் என்ற கூண்டைக் கட்டி, மனிதர்களை அதில் அடைத்து வைத்திருக்கிறார்கள். பிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்கள். எல்லோரையும் கண்காணிக்கிறார்கள். தேசம் என்ற கூண்டை சுற்றிலும் எல்லைக்காவல் உண்டு. வெளியே போக வேண்டுமானால் பாஸ்போர்ட் வேண்டும். சிறை மதில்கள் எமது கண்களுக்கு புலனாகாமல் தடுப்பதற்காக, "தேசியக் கொடி" என்ற திரை போட்டு மறைத்திருக்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான கொடி ஒன்று இருக்குமானால், அது செங்கொடியாகத் தான் இருக்கும். செங்கொடியானது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும், உழைக்கும் மக்களாக ஒன்றிணைக்கின்றது. அவர்களுக்கு தனித்தனியான தேசங்கள் கிடையாது. எல்லைக் கோடுகள் கிடையாது. உலகம் முழுவதும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தம்.

ஐ. நா. மன்றத்தின் நீலக் கொடி தோன்றுவதற்கு, பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, செங்கொடி உலக மக்களின் கொடியாக இருந்து வருகின்றது. சிக்காக்கோ முதல் பெய்ஜிங் வரை, வட துருவம் முதல் தென் துருவம் வரை, ஐந்து கண்டங்க‌ளிலும் வாழும் பல்லின மக்களின் கைகளில் பறந்து கொண்டிருக்கிறது.

*********

ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மீதான மத, அரசியல், பொருளாதார துஸ்பிரயோகங்களை கண்டுகொள்ளாத அறிவுஜீவிகள், செங்கொடியை கண்டால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு, புத்திமதிகள் கூறத் தொடங்கி விடுகின்றனர். தங்களை புனிதர்களாக கருதிக் கொண்டு, பெற்றோரின் கடமைகள் என்னவென்று போதிக்கக் கிளம்பி விடுகின்றனர். மற்றவர்களின் அரசியல் கொள்கைகளை மதிக்க வேண்டும் என்ற நாகரீகம் சிறிதும் இன்றி, துவேஷத்தை கக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அவர்களது அரசியல் கொள்கையை மட்டுமே குழந்தைகள் மேல் திணிக்க வேண்டுமென்ற சர்வாதிகார மனோபாவமே அன்றி வேறில்லை.



செங் கொடியை கண்டால் மிரளும் காளை மாடு போல, பல மேட்டுக்குடி அறிவுஜீவிகள்(?), செங்கொடிக்கு எதிராக, அநாகரீகமான அவதூறுகளை பொழிவதை கண்கூடாகக் காணலாம். செங்கொடி தோன்றிய வரலாறு பற்றி எதுவும் தெரியாத அறியாமை காரணமாக அப்படி நடந்து கொள்கின்றனர். இதே செங்கொடி தான், அறிவுஜீவிகளின் மானத்தையும் மறைக்க உதவுகின்றது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடந்த படுகொலைகளின் விளைவாக தோன்றியது தான் செங்கொடி. சிக்காக்கோ நகரில், ஹே மார்க்கட் சதுக்கத்தில் கூடிய (May 4, 1886) அமெரிக்க தொழிலாளர்கள், வேலை நேரத்தை எட்டு மணித்தியாலங்களாக குறைக்க வேண்டுமென போராடினார்கள். அன்றைய நாட்களில், தொழிலாளர்கள் தினசரி பதினைந்து மணிநேரம் வேலை செய்வது சர்வசாதாரணமானது.

எட்டு மணிநேரம் வேலை செய்யும் உரிமை கோரிப், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சமாதானக் கொடியான வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றார்கள். அன்று நடந்த குண்டு வெடிப்பு ஒன்றைத் தொடர்ந்து, பொலிஸ்காரர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பல தொழிலாளர்கள் கொல்லப் பட்டனர். குண்டடி பட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது. மே 1 தொழிலாளர்களின் தினமாக பிரகடனம் செய்யப் பட்டது.




முதலாளித்துவ உலகில் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப் படுவதில்லை. அதிகமாக சம்பாதிப்பவர் குறைவாக வேலை செய்கிறார். அதிகமாக வேலை செய்பவர் குறைவாக சம்பாதிக்கிறார். உலகம் முழுவதும் உள்ள மேட்டுக்குடியினர், "உடலை வருத்தி கடுமையான வேலை செய்வதால் அதிகமாக சம்பாதிப்பதாக", தமது அதி கூடிய வருமானத்தை நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



மே தினம் என்பது கொண்டாட்டம் அல்ல, அது ஒரு விடுதலைப் போராட்டம். உலகம் முழுவதும் 21 மில்லியன் பேர் இன்னமும் அடிமைத் தளைகளில் இருந்து விடுபடவில்லை. வளைகுடா நாடுகளில், நவீன அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கும், தெற்காசிய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக, மே தினத்தை போராட்டமாக முன்னெடுப்போம்.

No comments: