Monday, August 06, 2012

இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - 
பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
(பகுதி -  3) 

க்மெர் ரூஜ் கால படுகொலைகளை விசாரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவென, ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று பெரும் பொருட்செலவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. "கம்போடியாவில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்" என்று இதற்கு தலைப்பிடப் பட்டுள்ளது. இது சர்வதேச அரசியலில் இன்னொரு கேலிக்கூத்து! க்மெர் ரூஜ் தலைவர்கள், உறுப்பினர்கள் மனிதப் படுகொலைகளை புரிந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவற்றை "இனப்படுகொலை" என்று வரையறுக்க முடியுமா? "இன்னொரு இனம், மொழி, மதத்தை சேர்ந்த மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையே, இனப்படுகொலை" என்று நம்பப் படுகிறது. இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுக்கும் அனைத்து ஆவணங்களிலும், அப்படி தான் கூறப்பட்டுள்ளது.  ஆனால், பொல் பொட், மற்றும் க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், வேண்டுமென்றே இன்னொரு இனத்தை அழித்தொழிக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 

இதனால், ஐ.நா. நீதிமன்ற வழக்கறிஞர்கள், "வியட்நாமிய மக்களை படுகொலை செய்த சம்பவங்களை" உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால், அவை எல்லாம், வியட்நாம் என்ற அண்டை நாட்டுடனான பரம்பரை பகை காரணமாக நடந்த படுகொலைகள். (கம்யூனிச சர்வதேசியத்திற்கு முரணாக, க்மெர் ரூஜ் முன்னெடுத்த க்மெர் தேசியவாதம், இனக்குரோதத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.)  க்மெர் ரூஜ் ஆட்சிக்கு வந்தவுடனேயே, பெருமளவு வியட்நாமியர்கள் வெளியேற்றப் பட்டனர், அல்லது தாமாகவே வெளியேறிச் சென்றனர். ஆனால், அந்தக் காலத்தில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்ததையும், இலட்சக்கணக்கான வியட்நாமிய அகதிகளும், போராளிகளும் கம்போடியாவில் புகலிடம் கோரி இருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைத் தவிர, கம்போடியாவின் பூர்வீக வியட்நாமியர்கள், பல தடவைகள்  அடக்குமுறைக்கு ஆளானார்கள். ஆனால், எந்தவொரு தருணத்திலும், அது ஒரு இனப்படுகொலையாகவோ, அல்லது இனச் சுத்திகரிப்பாகவோ நடந்ததற்கான தகவல் எதுவுமில்லை. கம்போடியாவின் இன்னொரு சிறுபான்மையினமான காம் (Cham) மக்கள் மீதான அடக்குமுறையும், இனப்படுகொலை என்ற அளவுக்கு செல்லவில்லை. அந்த சம்பவங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம். 

கம்போடியாவில் இனப்படுகொலை குற்றம் புரிந்தமைக்காக, யாரையாவது தண்டிக்க வேண்டுமானால், அது அமெரிக்க அரசாகத் தான் இருக்கும்! அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், அரசு செயலாளர் கிசிங்கர், மற்றும் பல அமெரிக்க அதிகாரிகள், விமானமோட்டிகள், போர்வீரர்கள், குறைந்தது  ஆறு  இலட்சம் கம்போடிய மக்களை இனப்படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் தாராளமாக குவிந்து கிடக்கின்றன. [Problems of Communism Jan-Feb 1979, p. 40 col. 2 & note 35] (Year Zero: The Silent Death Of Cambodia, http://vimeo.com/17634265 )  ஆனால், "கடவுளுக்கு நிகரான மன்னர் சட்டத்திற்கு மேலே உள்ளவர்" என்ற மத்திய கால விதி போன்று, அமெரிக்காவும் சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டது. அமெரிக்கர்கள் இனப்படுகொலை செய்தால், அதற்காக நோபல் பரிசு கொடுத்து பெருமைப் படுவோமே தவிர, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் தைரியம் எமக்கு கிடையாது. அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பேசவும் மாட்டோம்.(Nobel Hypocrisy, Peace Prize Awards to War Criminals, http://www.globalresearch.ca/index.php?context=va&aid=7118) வியட்நாம் போரில் அமெரிக்கா தலையிட்டிருக்கா விட்டால், க்மெர் ரூஜ் என்ற இயக்கமே உருவாகி இருக்காது. அது மட்டுமல்ல, க்மெர் ரூஜ் அரசு கலைக்கப்பட்ட பின்னரும், இன்னொரு பத்து வருடங்கள், கெரில்லா இயக்கமாக போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம், அமெரிக்க அரசு க்மெர் ரூஜுக்கு பக்க பலமாக நின்று உதவிக் கொண்டிருந்தது. (On the side of Pol Pot: U.S. supports Khmer Rouge, http://msuweb.montclair.edu/~furrg/pol/polpotnus.pdf

1979 ம் ஆண்டு, கம்போடியா மீது படையெடுத்த வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகள் தான், முதன்முதலாக "இனப்படுகொலை" என்ற வார்த்தையை பயன்படுத்தின. அப்பொழுதெல்லாம், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், ஐ.நா.சபையில், க்மெர் ரூஜ் தூதுவரை கம்போடிய அரச பிரதிநிதியாக அங்கீகரித்திருந்தனர். வியட்நாமிய ஆக்கிரமிப்பை சீனா மட்டுமே எதிர்த்து வந்தது. பிற நாடுகள் எல்லாம் மௌனமாக இருந்து சம்மதம் வழங்கிக் கொண்டிருந்தன. அன்றிருந்த பனிப்போர் அரசியல், பூகோள அரசியல் எல்லாம் வேறு. இருந்தாலும், வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகள் ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்தன. 

S - 21  என்று க்மெர் ரூஜ் பரிபாஷையில் அழைக்கப்பட்ட Tuol Sleng சிறைக்கூடத்தை அருங்காட்சியகமாக மாற்றி விட்டார்கள். குறைந்தது நாற்பதாயிரம் பேராவது, அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர் என்று நம்பப் படுகின்றது. உண்மையில் அந்தக் கைதிகள் எல்லோரும், க்மெர் ரூஜ் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)  Tuol Sleng சிறைக்கூடம், மேலைத்தேய மக்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப போதுமானதாக இருந்தது. இன்றைக்கும், பொல் பொட், க்மெர் ரூஜ் புரிந்த அக்கிரமங்களை காட்டும் ஆவணப் படங்களில், இந்த சிறைக்கூடம் தவறாமல் இடம்பெறும். 

ஒரு பக்கம், இனப்படுகொலை செய்த குற்றவாளிகள், ஐ.நா. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகளாக அமர்ந்திருக்கின்றனர். மறு பக்கம், முன்னை நாள் க்மெர் ரூஜ் குற்றவாளிகள், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றனர். இந்த வேடிக்கையான முரண்நகையை கம்போடிய மக்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? 1997 ம் ஆண்டு நடந்த சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய ஹூன் சென், ஒரு முன்னாள் க்மெர் ரூஜ் மாவட்ட கமாண்டர். ஒரே தடவையில் பல ஆயிரம் பேரை, களையெடுப்பு என்ற பெயரில் "இனப்படுகொலை" செய்த, க்மெர் ரூஜ் பிராந்திய தளபதி, இன்றைய கம்போடிய தேசிய இராணுவத்திலும் பதவி வகித்தார். அவர்கள் யாரும், தமது க்மெர் ரூஜ் கடந்த காலத்திற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. 

இன்று அவர்களது ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகார அடக்குமுறை, எங்கும் எதிலும் ஊழல், தேசத்தின் வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு விற்று தமது பைகளை மட்டுமே நிரப்புவோர், ஏழைச் சிறுமிகளை பாலியல் இச்சைக்காக நுகர படையெடுக்கும் மேலைத்தேய உல்லாசப் பயணிகள்.... இவற்றைப் பற்றி எல்லாம், சர்வதேச சமூகம் அறிந்தும் அறியாதது போல நடந்து கொள்கின்றது. இவை எல்லாம் எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், பொல் பொட், க்மெர் ரூஜுக்கு எதிரான இனப்படுகொலைப் பிரச்சாரங்கள், நீதிமன்ற விசாரணைகள் எல்லாம், ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.நா. நீதிமன்ற விசாரணைகள் எந்தக் காலத்திலும் முடியப் போவதில்லை என்பதும், குற்றவாளி என்று யாரும் தண்டிக்கப் படப் போவதில்லை என்பதும் பலரது சந்தேகமாகும்.  

1979 ல், க்மெர் ரூஜ் அரசு கவிழ்க்கப் பட்ட பின்னர், பொல் பொட்டும், பிற தலைவர்களும், தாய்லாந்து எல்லையோரம் முகாம் அமைத்து இருந்தனர். குறைந்தது பதினைந்து வருடங்களாவது, அவர்கள் அங்கே மறைந்திருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்கள், மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் தாய்லாந்தில் இருந்து சென்று கொண்டிருந்தன. தாய்லாந்து இராணுவத்திற்கு பொல் பொட்டின் மறைவிடம் எங்கே உள்ளது என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. அது மட்டுமல்ல, பொல் பொட் கடும் சுகயீனமுற்றிருந்த காலத்தில் எல்லாம், தாய்லாந்து மண்ணில் வைத்து, இராணுவ வைத்தியர்களால் பரிசோதிக்கப் பட்டார். அப்பொழுதெல்லாம், இனப்படுகொலை குற்றவாளிகளை பிடித்து, ஐ.நா. விடம் ஒப்படைக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லையா? 

"க்மெர் ரூஜ் நடத்திய இனப்படுகொலை, சர்வதேச சமூகத்திற்கு தாமதமாகத் தான் தெரிந்தது." என்று யாரும் சிறுபிள்ளைத்தனமாக வாதாட நினைக்க வேண்டாம். க்மெர் ரூஜ்  ஆண்ட 1976 அல்லது 1977 காலப்பகுதியில், கம்போடியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் அலறிக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில், கம்போடியாவிற்கு விஜயம் செய்த சுவீடனை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் யான் மிர்தல், அங்கு தங்கியிருந்த காலத்தில், "எங்கேயும் இனப்படுகொலையை கண்ணால் காணவில்லை" என்று தெரிவித்தார். அவரது பயணக்குறிப்புகள், "Kampuchea mellan två krig" (இரண்டு யுத்தங்களுக்கு இடையிலான கம்பூச்சியா) என்ற நூலாக வெளிவந்தது. இது பற்றி, சுவீடனின் Aftonbladet நாளேட்டில் வந்த கட்டுரையை இந்த இணைய இணைப்பில் வாசிக்கலாம். ( Jag såg inget massmord , JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja,  http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab )

"கம்போடியாவின் கொலைக்களம்" என்ற பெயரில், பல்வேறு நூல்கள், ஆவணப்படங்கள், சினிமாப் படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால், அவற்றில் எந்த ஒரு இடத்திலும், "க்மெர் ரூஜ் எதற்காக இருபது இலட்சம் சொந்த மக்களை படுகொலை செய்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. ஒரு விடுதலை இயக்கம், தாம் யாருக்காக போராடுகிறோம் என்று கூறுகின்றதோ, அந்த மக்களையே படுகொலை செய்து குவித்துக் கொண்டிருக்காது. அதன் அர்த்தம், ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த இன மக்களுக்கு எதிராக துப்பாக்கியை திருப்பாது என்பதல்ல. எண்ணிக்கை மாறு பட்டாலும், உலகில் உள்ள அனைத்து விடுதலை இயக்கங்களும் சொந்த இனத்தை சேர்ந்தவர்களை கொலை செய்துள்ளன. ஆனால், மொத்த சனத்தொகையில் கால் வாசியை தாமே அழித்தொழிக்க மாட்டாது. 

"க்மெர் ரூஜ் தலைவர்கள் மனித குலத்திற்கு எதிரான படுகொலைகள் புரிந்தவர்களாக கருதப் படுவார்களானால்", அதே கோட்பாடு உலகின் பிற விடுதலை இயக்கங்கள் மீது சேறு பூசவும் பயன்படுத்தப் படலாம். "தமது சொந்தப் பலத்தில் வெற்றி பெற்று, அந்நிய  உதவி  எதுவுமின்றி, தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நிர்வகிக்கும் வாய்ப்புப் பெற்ற விடுதலை இயக்கங்கள் எதுவும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது," என்பது தான் ஏகாதிபத்தியத்தின் நோக்கமாகும். அது மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கறை படிந்த கடந்த காலத்தை மறைக்கவும் முடியும். ஒரு காலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த, அமெரிக்கா, வியட்நாம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், "கம்போடியாவுக்கான ஐ.நா. நீதிமன்றத்தை" ஒன்று சேர்ந்து ஆதரிக்கின்றன. 

கம்போடியாவின் அண்மைக்கால வரலாற்றில், அந்நிய நாடொன்றிற்கு அடிமைப் பட்டிராத காலம் மிகக் குறைவு. அங்கர் வாட் கோயிலைக் கட்டிய சுதந்திர கம்போடிய ராஜ்ஜியம் இன்று ஒரு கனவு மட்டுமே. 16 ம் நூற்றாண்டில் இருந்து,  சக்தி வாய்ந்த அயல் நாட்டினரான, தாய்லாந்தும், வியட்நாமும், கம்போடியாவை ஆக்கிரமிப்பதற்கு போட்டி போட்டார்கள். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனிய ஆதிக்கவாதிகளான பிரெஞ்சுக் காரரின் உதவியுடன் தான் அவர்களை தூர நிற்க வைக்க முடிந்தது. க்மெர் மன்னர் பரம்பரையில் வந்த சிஹானுக், 1970 ம் ஆண்டு வரையில் பிரான்ஸின் பாதுகாப்பில் ஆட்சி நடத்தினார். அந்த வருடம் வலதுசாரிகள் ஆதரவுடன், சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த லொன் நொல், அமெரிக்கா உதவியுடன் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். 1979 முதல் 1989 வரையில், பத்தாண்டுகளாக வியட்நாமிய துருப்புகள் நிலைகொண்டிருந்தன. 

ஆக மொத்தம், மூன்றரை ஆண்டுகள் மட்டுமே, அதாவது க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில் மட்டுமே, கம்போடியா பூரண சுதந்திரமடைந்த  நாடாக இருந்துள்ளது! க்மெர் ரூஜ் சொந்த மக்கள் மீது திணித்த கட்டுப்பாடுகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அந்தக் காலங்களில் எந்தவொரு அந்நிய நாட்டினதும் உத்தரவு அங்கே செல்லுபடியாகவில்லை. "இலவச ஆலோசனை"  பெறுவதற்கு கூட மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. நம்பிக்கைக்குரிய நண்பனாக கருதப்பட்ட சீனாவை கூட, நாட்டு நிர்வாகத்தில் மூக்கை நுளைக்க விடவில்லை. க்மெர் ரூஜ் அரசுக்கு சொல்லிக் கொள்ளும் படியான நண்பர்கள் யாரும் இருக்கவில்லை, அல்லது நண்பனாக இருக்கக் கூடியவர்களையும் சந்தேகப் பட்டார்கள். பிற சோஷலிச நாடுகளுடனும், இராஜதந்திர மட்டத்திலான உறவுகள் மட்டுமே வைத்துக் கொள்ளப்பட்டன. நட்பு நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகளும், தூதுவராலயங்களுக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருந்தது. 

வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்கும் அது தான் நிலைமை. போர் முடிந்தவுடன், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக, தாய்லாந்தில் தொண்டு நிறுவனங்கள் காத்து நின்றன. "பட்டினி கிடந்தது செத்தாலும் பரவாயில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் உணவை உண்டு, எமது மக்கள் அன்னியருக்கு அடிமைப் பட வேண்டாம். நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்து கொள்வோம்." என்பதுவே க்மெர் ரூஜின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், அந்தப் பிடிவாதத்திற்காக கம்போடிய மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்தார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, அனைத்து பிரஜைகளும் வயலில் இறங்கி வேலை செய்தார்கள். ஒரு நாட்டின் ஓட்டு மொத்த மனித உழைப்பையும் விவசாயத்தில் ஈடுபடுத்தியிருந்தால், அந்த நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தும், சில இடங்களில் பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன?