Monday, August 20, 2012

காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 14]

(பதினான்காம் பாகம்)

19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் தான், முதன்முதலாக "ஆரிய சித்தாந்தம்" தோன்றியது.  இந்தியா என்ற தேசத்திற்காக, அரசியல் நிர்ணய சட்டம் எழுத வேண்டிய நேரம் வந்தது. அதற்காக ஒரு பிரிட்டிஷ் நீதிபதி சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையடைந்த நீதிபதிக்கு, ஒரு கலாச்சார அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், ஆகிய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்ததை கண்டுபிடித்தார்.  அந்த தகவல், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள், இந்திய தத்துவ இயல், இந்து மதம், பௌத்த மதம், ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு படையெடுத்தார்கள்.

அவர்களின் தேடல் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. இலங்கை, திபெத் (அன்று சுதந்திரமான தனிநாடு) ஆகிய  நாடுகளுக்கும் சென்றார்கள். சமஸ்கிருதம், பாளி மொழிகளில் எழுதப் பட்ட இலக்கியங்களை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தனர். அவர்கள் கற்றறிந்த பண்டைய இலக்கியங்களில் இருந்து, தாமாகவே சில முடிவுகளுக்கு வந்தார்கள். அவர்களது ஆராய்ச்சி பெரும்பாலும் தொல்பொருள் துறை, அகழ்வாராய்ச்சி, பண்டைய வரலாறு, போன்ற "நாகரிக உலகிற்கு சம்பந்தமற்ற" விடயங்களாக இருந்தன. ஆனால், எமது இன்றைய கருத்துருவாக்கம், சிந்தனை முறை, அரசியல்-மத நம்பிக்கைகள், எல்லாம், குறிப்பிட்ட சில ஐரோப்பிய அறிவுஜீவிகளால் உருவாக்கப் பட்டவை என்பதை பலர் அறிவதில்லை. 

ரிக் வேதத்தை மொழிபெயர்த்தவர்கள், அதனை முதலில் இந்துக்களின் புனித நூல் என்றார்கள். ஆனால், விரைவிலேயே அது ஆரியர்களின் வரலாற்று நூலாக புரிந்து கொள்ளப்பட்டது. வேத நூல்களில் எந்த ஒரு இடத்திலும், இந்து என்ற சொல்லே எழுதப் பட்டிருக்கவில்லை. அதனால், அதனை ஆரியர்கள் என்ற இனத்தை சேர்ந்த மக்களின் நூல் என்று கருதலாமா? பைபிளை (பழைய ஏற்பாடு) "யூதர்களின் வரலாற்றைக் கூறும் நூல்", என்று படித்தவர்களால் அப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திரனும், அவனது மக்களும், குதிரை வண்டிகளில்,  கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்த கதைகள் செய்யுள்களாக இயற்றப் பட்டுள்ளன. ஆனால், அவர்கள் ஆரியர்கள் என்றால், அந்த இன மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் தாயகம் எங்கேயுள்ளது? அதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ள அரசர்கள்/தலைவர்கள்  எல்லாம் ஆரியர்களும் அல்ல.  ஆரிய இனக்குழுக்களுக்கு திராவிட அரசர்கள் தலைமை தாங்கியுள்ளமை, அவர்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகின்றது. (The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World, David W. Anthony) ஆகவே, இங்கே ஒரு குழப்பம் எழுகின்றது. ஆரியர்கள் என்றால் யார்? அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லா?  முக்கியமாக, ஆரியர் என்பது வெள்ளையினத்தைக் குறிக்கும் சொல்லா? 19 ம் நூற்றாண்டு, ஐரோப்பிய அறிவுஜீவிகளுக்கு அந்தக் குழப்பம் இருக்கவில்லை.  "ஆரியர் என்பது வெள்ளயினத்தைக் குறிக்கும்.வெள்ளையினக் குடியேறிகளின் இந்தியப் படையெடுப்புகளைப் பற்றிய கதைகள் தான் ரிக் வேதத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன." இத்தகைய ஒரு தலைப்பட்சமான முடிவுகள் தான், பிற்காலத்தில் நிறவெறிக் கொள்கை வகுப்பாளர்களால் ஹிட்லருக்குப் போதிக்கப் பட்டன.

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று, அர்த்தமில்லாமல் எழுந்தமானமாக தலைப்பிடவில்லை. இந்து என்ற சொல், இந்தியாவில் வாழ்ந்த புராதன மத நம்பிக்கைகளை கொண்ட மக்களைக் குறிப்பதற்காக, பிரிட்டிஷ் காரர்களால் சூட்டப் பட்ட பெயராகும். முன்பு இஸ்லாமிய-அரேபியர்கள் பாவித்த சொல்லை, பிரிட்டிஷார் கடன் வாங்கி இருந்தனர். இந்துக்களின் புனித சின்னமாக கருதப்படும் ஸ்வாஸ்திகா, ஹிட்லரினால் நாஜிக் கட்சியின் சின்னத்திற்காக கடன் வாங்கப் பட்டது. அது தொடர்பாக, இந்துக்களின் பூர்வீகத்தை ஆராய அக்கறை கொண்டிருந்தார். அதற்காக சில தூதுவர்களை திபெத் வரை அனுப்பினார். (1938–1939 German expedition to Tibet, http://en.wikipedia.org/wiki/1938%E2%80%931939_German_expedition_to_Tibet) அவர்கள், திபெத்தில் இந்துக்களின் தாயகத்தை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பது தெரியாது. அதற்குள் நாஜி ஜெர்மனி போரில் தோற்று விட்டது. சில வருடங்களில், தீபெத் சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்டது. உண்மையில், ஜெர்மனியர்கள் மத்திய ஆசியாவிலும்  இந்துக்களின் வேர்களை தேடிச் சென்றிருப்பார்கள். ஆனால், அன்று அந்தப் பகுதி முழுவதும், எதிரியான சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 

"இந்து மதம் உலகிலேயே மிகவும் பழமையான மதம். அதனை தோற்றுவித்தவர் யார் என்பது தெரியாது." என்று இந்துக்கள் பெருமையாக கூறிக் கொள்கின்றனர். சரி, பழமையான மதம் என்பதற்கு எதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்?  ரிக் வேதத்தை விட, காலத்தால் பழைமையான வேறு நூல்கள் ஏதாவது கிடைக்கின்றனவா? ரிக் வேதம், இந்துக்களின் புனித நூல் என்றால், ஆரியர்களின் வரலாறும் அதில் மட்டுமே எழுதப் பட்டுள்ளது. ஆகவே, இந்து மதம் ஆரியர்களின் மதம் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால், அது சரியா? இந்து மதம் ஆரியர்களுடையது என்றால், ஆரியர்கள் வெள்ளையினத்தவர் என்றால், அவர்களின் பூர்வீகம் எது? சீனாவில் உள்ள திபெத்தில் தான், இந்து மத சின்னங்கள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன.

யாரும் எளிதில் நெருங்க முடியாத, இமய மலை உச்சியில் இருக்கும் நாடு என்பதால், அந்நிய நாகரீகங்களால் பாதிக்கப்படவில்லை. மேலும், "சிவபெருமான் வசிக்கும்" கைலாய மலை, "சிவனின்  உச்சந் தலையில் இருந்து உற்பத்தியாகும்" கங்கை நதியின் மூலம், போன்ற பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உள்ளன. சிவபெருமான் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பு பற்றிய கதையும், அந்தப் பிரதேசத்தில் பிரசித்தமானது. முன்னொரு காலத்தில், கருட இனத்தவர்களுக்கும், நாக இனத்தவர்களுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. போரில் நாக இனத்தை அழிய விடாமல், சிவன் பாதுகாத்ததாக ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றது.  (சில புராணங்கள் நூல் வடிவில் எழுதப் படாமல் மறைந்து விட்டன. அப்படி ஒரு புராணத்தில் இருந்த கதை.) அந்தக் கதைகளை, காஷ்மீர், திபெத் பகுதியில் வாழும் மக்கள் சொல்லக் கேட்டு சிலர் எழுதியுள்ளனர்.

காஷ்மீரின் பண்டைய சரித்திரம், நாகர்  இன மக்களே காஷ்மீரின் பூர்வகுடிகள் என்று கூறுகின்றது. காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களும், இந்துக்களும் அதனை நம்புகின்றனர். இன்றைக்கும் காஷ்மீரில், நதி நீர் உற்பத்தியாகும் மூலத்தை "நாகா" என்ற பெயரில் அழைக்கின்றனர். அந்த இடங்களில் நாகதேவதைகள் வசிப்பதாக நம்புகின்றனர். அது மட்டுமல்ல, வருடத்தின் முதலாவது பனிப் பொழிவை, "நிலா பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு மட்டுமே சிறப்பான, இந்துக்கள், முஸ்லிம்களுக்கு பொதுவான பண்டிகை அது.  நமது காலத்தில், எழுத்து வடிவில் வாசிக்கக் கிடைக்கும் பண்டைய இலக்கியம் ஒன்றின் பெயர், "நிலா மத புராணம்". (The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html)  பிற்போக்கான இந்து மத புராணங்களோடு ஒப்பிடும் பொழுது, நிலா மத புராணம் ஒரு இனத்தின் அல்லது நாட்டின், அனைத்து அம்சங்களையும் கூறுகின்றது. அதாவது, கடவுளரின் வீரசாகசக் கதைகளும் உண்டு. அதே நேரம், வரலாறு, சட்டம், பூகோளம், சமூகவியல், மதச் சுதந்திரம், பெண் சுதந்திரம், போன்ற பல துறைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

அதை வாசிக்கும் பொழுது, இன்றைய "மேற்கத்திய ஜனநாயக சமூகம்" போன்றதொரு நாகரிக சமுதாயம், காஷ்மீரில் இருந்துள்ளமை தெரிய வருகின்றது.  பிராமணர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுத்தாலும், சூத்திரர்களை கீழானவர்களாக கருதவில்லை. மன்னனின் முடிசூட்டு விழாவில் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. பெண்கள் பொது இடங்களில் நடக்கும் பண்டிகைகளில் கலந்து கொள்ள முடிந்தது. விசேட தினங்களில் நடக்கும் நீர் விளையாட்டுகளில், ஆண்களோடு பெண்களும் சேர்ந்து பங்குபற்றினார்கள். நாக தெய்வத்தை வழிபடும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டாலும், பிரம்மா, சிவன், விஷ்ணு, புத்தர்  போன்ற தெய்வங்களை வழிபடுபவர்களுக்கும், மதச் சுதந்திரம் இருந்தது. மன்னன் எப்போதும் நாக இனத்தை சேர்ந்தவனாக இருந்த போதிலும், "மன்னன் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்!" இத்தகைய "சட்டத்தின் ஆட்சி", 19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

நிலாமத்த புராணத்தில் குறிப்பிடப் படும், நாகர்களின் மன்னனின் பெயர் நிலா. (வாசுகி என்பதும் ஒரு நாக இன மன்னனின் பெயர் தான். நிலா, வாசுகி இருவரும் நாக (பாம்புத்) தெய்வங்களாக மக்களால் வழிபடப் பட்டு வந்தனர்.) நிலா வின் தந்தை, காசியப்ப முனிவர். அவரின் பெயரில் இருந்து காஷ்மீர் (காஷ்யப்பா) என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆதி காலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், மலைகளால் அணைக்கட்டு போல சூழப்பட்ட நீரேரி போன்று காணப்பட்டதாம். நீர் அகற்றப் பட்ட பின்னர், நாகா இன மக்கள் வந்து குடியேறினார்கள். இது ஒரு காலத்தில், ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரையிலான பகுதி, பனியினால் மூடப்பட்டு கிடந்ததது என்ற விஞ்ஞான அறிவியலை நினைவு படுத்துகின்றது. பனி உருகும் பொழுது, பெரும் நீர்ப் பெருக்கெடுத்து, மலைகளை ஊடறுத்து ஓடிய அடையாளங்களை கிரேக்க நாட்டில்  இப்பொழுதும் காணலாம். 

பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், காஷ்மீரில் குடியேறிய நாகா இன மக்கள், புதிய குடியேறிகளான மனுவின் மக்களுடன் (ஆரியர்கள்) கூடி வாழ வேண்டியேற்பட்டது. மேற்கே இருந்து வந்த மணவர்கள் என்ற இன்னொரு இனம் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவர்களோடு மோதல் ஏற்பட்டு, பின்னர் (கடவுளர் தலையிட்டு) சமரசம் செய்து வைத்தார்கள்.  (நிலாமத்த புராணம், Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html )  இந்த மணவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த திராவிடர்களாக இருக்கலாம்.  ஆப்பிரிக்க திராவிடர்கள் இந்திய உப கண்டத்தில் குடியேறிய காலத்தில், அங்கே நாகா இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றாலும், பல இடங்களில் இரண்டு இனங்களும் கூடிக் கலந்து வாழ்ந்தன. நாகர்-திராவிடர் இனக்கலப்பு, இலங்கைத் தீவு வரையில் இடம்பெற்றுள்ளது. (பார்க்க: The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt) பண்டைய காலத்தில், திராவிடர் என்ற சொல் இருக்கவில்லை. ரிக் வேதத்தில் தாசர்கள், மகாவம்சத்தில் இயக்கர்கள், இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப் பட்டு வந்தனர். 

இந்து புராணங்களுக்கும், சீனப் புராணங்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுவது ஒன்றும் புதினமல்ல. உதாரணத்திற்கு சில: விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் ஆமை. சிருஷ்டிப்பு பற்றிய சீனக் கதையிலும் ஆமை முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. சீன பௌத்த நம்பிக்கையிலும், பூமியை தாங்கிப் பிடிக்கும் அண்ட வெளி ஆமை முக்கிய இடம் வகிக்கின்றது. சுன் வுகொங் (Sun Wukong) என்ற குரங்கு அரசன் பற்றிய சீனப் புராணக் கதை, இராமாயணத்தில் வரும் அனுமானை நினவு படுத்துகின்றது. அனுமான் சீதையை தேடிச் சென்றால், சுன் வுகொங் பௌத்த சூத்திர நூல்களை தேடிச் செல்கிறான். அனுமான் போன்று, சுன் வுகொங் மலையைத் தூக்குமளவு பலம் பொருந்தியவன். நினைத்த நேரம், உருவத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன். எமக்கு நன்கு தெரிந்த வேலேந்திய முருகன் போன்று, வாளேந்திய மஞ்சு ஸ்ரீ  (Manjushri) தெய்வம் சீனாவில் பிரசித்தமானது. மஞ்சுஸ்ரீ தெய்வத்தை வழிபடும் மந்திரமான, "ஓம் அர பசா நாதின்..."(Oṃ A Ra Pa Ca Na Dhīḥ)    உங்கள் காதில் "ஓம் அரஹரா நாதா" என்று ஒலிக்கலாம். முருகன் சிவனுக்கும், மஞ்சுஸ்ரீ புத்தனுக்கும், "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் என்பது ஐதீகம். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், நாடுகளின் சர்வதேச எல்லைகளும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும், வேறு விதமாக இருந்தன. வட இந்தியப் பிரதேசங்களுக்கும், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. பட்டு வாணிபமும், அதனோடு தொடர்பான நகரங்களும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, வட சீனாவில் இருந்து வட இந்தியா வரையில், ஒரு நாகரிக உலகை சிருஷ்டித்து இருந்தன. அந்த மக்களுக்கிடையில் வர்த்தகத் தொடர்பு மட்டுமல்ல, மத, கலாச்சாரத் தொடர்புகளும் ஏற்பட்டன. எந்த மத நம்பிக்கையும், யாரும் யாரையும் அடிமைப் படுத்தி பரவவில்லை.

இன்றைய உலகில், ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மதங்களை கீழாகப் பார்க்கின்றனர். மதச் சகிப்புத் தன்மை குறைந்து வருகின்றது. ஆனால், நாங்கள் "நாகரீகமடைந்த மனிதர்கள்" என்று பெருமையடித்துக் கொள்கிறோம். வடக்கே சமர்கண்ட் (இன்று உஸ்பெகிஸ்தான்) நகரில் இருந்து, தெற்கே காஷ்மீர் வரையில், மக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருந்தது. யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அதனால், மக்கள் விரும்பினால் பிற மதத்தவரின் தெய்வங்களையும் வழிபட்டார்கள். ஆட்சியாளர்களும் தமது மதங்களை மக்கள் மேல் திணிக்கவில்லை. (பார்க்க: Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress)

ஆரியர்கள் இந்திய உபகண்டத்திற்கு வந்த காலம், கி.மு. 1000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், ஆரியர்களின் படையெடுப்பு,  ஒரே நேரத்தில் நடந்திருக்க முடியுமா? உலக வரலாற்றில் பல பொய்கள் புனையப் பட்டுள்ளன என்பதை, இன்று பல சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆரியர்கள் என்ற வெள்ளையின மக்களின் இந்தியா நோக்கிய இடப்பெயர்வு, வரலாற்றில் ஒரு தடவை மட்டும் நடந்திருக்குமா? இந்திய உபகண்டத்தில் வெள்ளையின மக்களின் குடியேற்றம், கி.மு. 5000 ஆண்டிலிருந்து, 20 ம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இந்த உண்மையை எல்லா வரலாற்று நூல்களும் மறைத்து வந்துள்ளன. எதற்காக?


(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:
1.The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html
2.Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html
3.Sun Wukong, http://en.wikipedia.org/wiki/Sun_wukong
4.Manju Shri,  http://en.wikipedia.org/wiki/Manjusri
5.China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

6 comments:

இன்று... said...

ஆர்வம் தருகிறது..ஆனால் அவசரம் தெரிகிறது...
இன்னும் விபரமாய் (உதாரணமாய் – ஸ்வஸ்திகா தேடிய ஹிட்லரின் முயற்சிகள், ஆரியர்கள் வெள்ளையர்களா போன்றவை பற்றி) கூறினால் நல்ல கட்டுரைத் தொடராய் அமையும், எல்லோருக்கும் உபயோகமாய் இருக்கும்..நன்றிகள்.

Kalaiyarasan said...

நன்றி, ஆர்.பி. ஜெய்,
இந்தக் கட்டுரைத் தொடர் இந்து மதத்தின் தோற்றம் பற்றியது என்பதால், ஹிட்லர், ஆரியர் பற்றி விரிவாக அலசாமல் தவிர்த்திருக்கிறேன். ஆரியர்கள் வெள்ளையர்களா என்பதற்கான விடை, அடுத்த பதிவில் கிடைக்கும்.

Kannan said...

அட்டகாசம், பிரமிக்க வைக்கும் உழைப்பு.

Kaththukutti Communist said...
This comment has been removed by a blog administrator.
Kaththukutti Communist said...

எனக்கு தெரித்த ஒன்று தமிழ் மொழிக்கு தமிழ் என்று பெயர் வைத்து 3000 அல்லது அதற்கு குறைவனா ஆண்டு ஆகும்.என்று நான் படித்து உள்ளேன்.இது சரி அல்லது தவறா? தெரித்தால் சொல்லவும்,தமிழ் மொழி வட‌ இந்தியவில் இருத்து பரவியதாக நீங்கள் குறிப்பிடுகின்றிர்,ஜி.யு போப்,கால்வேல் போன்றோர் அழித்த குமரி கண்டத்தில் இருத்து பரவியது என்று குறிப்பிட்டு உள்ளனார்,பண்டைய தமிழ் மொழி கிளை எலு என்று படித்தேன்.எது உண்மை தெரித்தால் குறிப்பிட வேண்டும்

Kalaiyarasan said...

குமரி கண்டம் என்ற மறைந்த கண்டம் இன்னும் நிரூபிக்கப் படவில்லை. தென்னிந்தியா, இலங்கையை சேர்ந்த நகரங்கள், அல்லது நிலப்பரப்புகள் கடலின் அடியில் மறைந்துள்ளன. ஆனால், அது தான் குமரி கண்டம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
மேலும், தமிழர்களும், தமிழ் மொழியும் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆப்பிரிக்கா, அரேபியா, பாபிலோனியா, ஈரான், இந்த நாடுகளை கடந்து வந்துள்ளனர். இவ்வாறு இலகுவாக கிடைக்கும் தரவுகளை விட்டு விட்டு, எதற்காக கடலுக்குள் கிடக்கும் குமரி கண்டத்திற்குள் தேட வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் குறிப்பிடும் அறிஞர்கள் போன்ற பலர், அந்தக் காலத்தில் ஐரோப்பிய வெள்ளையரின் தவறான நிறவெறிக் கொள்கைகளில் இருந்து தான் சிந்தித்து வந்தனர். அதாவது, ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அந்தக் காலத்தில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஆபிரிக்காவில் தமிழரின் தொன்மை பற்றி அறிந்து கொள்ள எனது பதிவுகளை வாசிக்கவும்.


நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
http://kalaiy.blogspot.nl/2012/06/blog-post_11.html