Saturday, August 04, 2012

கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்


"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு 

(பகுதி - 2)
க்மெர் ரூஜ் இயக்கமானது, உலகிலேயே மிகவும் இரகசியமான அமைப்பாகும். நீண்ட காலமாக அதன் தலைவர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பொல் பொட்டும் பிற தலைவர்களும், இரகசியத்தை பேணுவதில் காட்டிய அதீத அக்கறை, சில நேரம் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. உதாரணத்திற்கு, வியட்நாமிய படையெடுப்பின் பொழுது, அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களின் மிகை மதிப்பீடு காரணமாக, பல ஆவணங்களை, சாட்சியங்களை அழிக்காமலே சென்று விட்டனர். அவை எல்லாம் எதிரிகளின் கைகளில் சிக்கி, "இனப்படுகொலை சாட்சியங்களாக" இன்றைக்கும் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்காக, பொல் பொட், க்மெர் ரூஜ் மேல் வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்று கூறி விட முடியாது.

 "தீவிர கம்யூனிச வெறி காரணமாக", சியாம் ரீப்பில் உள்ள அங்கர் வாட் கோயிலை உடைத்தார்கள், க்மெர் கலைப் பொக்கிஷங்களை அழித்தார்கள், என்றெல்லாம் மேற்குலகில் பரவிய வதந்திகளில் உண்மை கிடையாது. தலைநகர் ப்னோம் பென் கைப்பற்றப் பாட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்ட காலங்களிலும், பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப் பட்டு வந்தன. யாரும் பயன்படுத்தா விட்டாலும், பொது நூலகம், அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு எந்த சேதமும் நடக்க விடவில்லை. ஆனால், வியட்நாமிய படையெடுப்பின் பின்னர், பலஅரிய கலைப் பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, வியட்நாம் கொண்டு செல்லப்பட்டன. க்மெர் ரூஜ் இயக்கத்தினர், ஓரளவு க்மெர் தேசியவாத கொள்கையையும் கொண்டிருந்தனர். அங்கார் வாட் கோயில் போன்ற பண்டைய க்மெர் நாகரிக சின்னங்களை பாதுகாப்பதால், க்மெர் தேசியத்தை கட்டியெழுப்ப நினைத்தார்கள். உண்மையில், பொல் பொட் தலைமையிலான தனித்துவமான கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்கு, க்மெர் தேசிய உணர்வு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

க்மெர் மன்னன் ஜெயவர்மனால் கட்டப்பட்ட, உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டு ஸ்தலமான அங்கர் வாட் கோயில் பற்றி, ஏற்கனவே பல தமிழர்கள் கேள்விப் பட்டிருப்பார்கள். ஜெயவர்மன் என்ற பெயர் தமிழ்பெயர் போன்று ஒலிப்பதாலும், அது ஒரு இந்துக் கோயில் என்பதாலும், "அங்கர் வாட் கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள்"  என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரையில், கம்போடியாவில் க்மெர் நாகரீகம் சிறந்து விளங்கியது. அன்றைய க்மெர் சாம்ராஜ்யம், வியட்நாம், தாய்லாந்தின் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது. இன்றைக்கும் இவ்விரு அயல் நாடுகளிலும், க்மெர் மொழிச் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். குறிப்பாக, தென் வியட்நாமிய பகுதி, அதாவது ஹோசிமின் (சைகோன்) நகரும், அதைச் சூழவுள்ள பிரதேசமும் ஒரு காலத்தில் க்மெர் மக்களின் நாடாக இருந்தது. வந்தேறுகுடிகளான வியட்நாமியர் இன்று அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். அந்தப் பகுதியில், க்மெர் நாகரீகத்திற்கு முந்திய "பூனான்" (Funan) நாகரீகம் நிலவியது. அந்த நாகரீகத்தின் நிஜப் பெயரும், மக்கள் பேசிய மொழி பற்றியும் இன்று யாருக்கும் தெரியாது. எமக்குத் தெரிந்ததெல்லாம், அரச கரும மொழியாக சமஸ்கிருதம் இருந்துள்ளது என்பது மட்டுமே.

ஆகவே, கம்போடியாவை சேர்ந்த க்மெர் மொழி பேசும் மக்கள், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியவர்கள் என்பது, மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் மூலம் நிரூபிக்க முடியும். "இந்திய கலாச்சாரம்" என்றால், நாங்கள் புரிந்து கொள்வது என்ன? உலக வரைபடத்தில், தலை கீழ் முக்கோணம் போன்ற வடிவில் இருக்கும் இந்தியா என்ற தேசம் உங்கள் மனக்கண்ணில் தோன்றினால், அது தவறாகும். சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னர் தான், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், ஒரே மாதிரியான ஐரோப்பிய கலாச்சாரம் பரவியது. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, ஆப்கானிஸ்தான் முதல் இந்தோனேசியா வரையில் இந்தியக் கலாச்சாரம் பரவி இருந்தது. ஆனால் அது இந்தியாவில் இருந்து பரவிய கலாச்சாரமா, என்பது கேள்விக்குறி தான்.

இது குறித்து இது குறித்து இங்கே மேலும் ஆராய்வது எமது நோக்கமல்ல.க்மெர் மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை பற்றி புரிந்து கொண்டால் போதும். கலாச்சாரம் மட்டுமல்ல, கருமையான தோல் நிறமும் க்மெர் இனத்திற்கு உரிய விசேட அம்சம் தான். கம்போடியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஒருவர் அந்த வித்தியாசத்தை தனது கண்ணால் பார்க்கலாம். நாட்டுப்புறங்களில்,கிராமங்களில் விவசாயம் செய்து வாழும் மக்கள், கருப்பாக இருப்பார்கள். அதே நேரம், பெரு நகரங்களில், வசதியாக வாழும் மக்கள் சிவப்பாக இருப்பார்கள். தமிழ் நாட்டை போன்ற வரட்சியான காலநிலை கொண்ட கம்போடியாவில், வயலில் வேலை செய்யும் மக்கள், சூரிய வெப்பம் காரணமாக கருத்து விட்டதாக நினைப்பார்கள். அதற்கு மாறாக, நகரங்களில் சொகுசாக வாழும் மக்கள், எப்பொழுதும் நிழலுக்குள் வாழப் பழகி இருப்பார்கள்.

பழம் பெருமை வாய்ந்த  அங்கர் வாட் கோயிலை கட்டியவர்கள் யார் என்று, அருகே உள்ள கிராங்களில் வாழும் மக்கள் அறிந்திருக்கவில்லை. கடவுளரும், பூத கணங்களும் கட்டியதாக, அவர்கள் நம்பினார்கள். பொல்பொட் நிலப்பிரபுத்துவ அமைப்பை நிராகரித்த போதிலும், ஒரு காலத்தில் அதி உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட,க்மெர் மக்கள் சக்தியை வியந்து பாராட்டிக் கொண்டிருந்தார். "ஜெயவர்மன் அங்கர் வாட் கோயிலை அடிமைகளைக் கொண்டு கட்டியது போன்று, கம்போடியாவின் அபிவிருத்தி என்ற குறிக்கோளுக்காக, பொல்பொட் தனது மக்களை அடிமைகளாக வேலை வாங்கியதாக,"மேற்கத்திய எழுத்தாளர்கள் குறிப்பிடுவதுண்டு. பொல்பொட்டின் நோக்கம், ஒன்று திரட்டப் பட்ட மனித உழைப்பின் மூலம், புதிய உலகம் ஒன்றை சிருஷ்டிப்பதாக இருந்தது. சுருக்கமாக சொன்னால், பின்தங்கிய ஏழை நாடான கம்போடியா, இருபதாண்டில் முதலாம் உலகின் தரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக, அனைத்து பிரஜைகளும் பொது இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். ஒரு வேளை, பொல்பொட்டின் கனவு நிறைவேறி இருந்தால், "நவீன க்மெர் நாகரீகம்" உருவாகி இருக்கலாம். ஆனால், பண்டைய க்மெர் நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு என்ன காரணமோ, அது பொல்பொட்டின் மூன்றரை வருட ஆட்சியில் நடந்தது. மன்னர் காலத்தில் நடந்ததைப் போன்று, இரத்தம் உறிஞ்சும் கடின உழைப்பு, மற்றும் சக்திக்கு மீறிய கட்டுமானப் பணிகளும், பஞ்சத்தால் பலர் மடிவதற்கு காரணமாக அமைந்தன. ஆனால், அது கம்போடியா முழுவதற்கும் பொதுவான அம்சமாக இருக்கவில்லை.

கம்போடியா நீண்ட காலமாக, நிலப்பிரபுத்துவ சமுதாயமாக காணப்பட்டது. மார்க்ஸ் எதிர்வு கூறிய, முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி எதுவும் அங்கே நடக்கவில்லலை. தலைநகரான ப்னோம் பென் மட்டுமே தொழிற்துறை வளர்ச்சி கண்டிருந்தது. தலைநகரத்தில் மட்டுமே தொழிற்சாலைகள் இருந்ததால், பாட்டாளி மக்களும் மொத்த சனத்தொகையில் மிகக் குறைவாகவே இருந்தனர். தொண்ணூறு வீதமான கம்போடியர்கள், விவசாயிகளாக அல்லது விவசாயக் கூலிகளாக நாட்டுப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆகவே, கார்ல் மார்க்ஸ் முன்மொழிந்த பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு, கம்போடியா ஏற்ற இடமாக இருக்கவில்லை. பொல் பொட்டிற்கும் பிற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும், இந்த உண்மை நன்றாகத் தெரியும்.

பொல்பொட் முன்மொழிந்த "மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்" பின்வரும் தர்க்கவாதத்துடன் நியாயப் படுத்தப் பட்டது. "ஒவ்வொரு நாட்டு மக்கள் இயக்கமும் அதற்குரிய மார்க்சிய-லெனினிசத்தை கொண்டுள்ளது. கம்போடியாவில் வேர் விட்ட, க்மெர் சித்தாந்தம் ஒன்றை வகுப்பதே எமது இலக்கு ஆகும். ஆகவே, கட்சி உறுப்பினர்கள் மார்க்சிய நூல்களை படிக்க வேண்டியதில்லை, அந்த நூல்களை க்மெர் மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை." உலகில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும், தனது உறுப்பினர்கள் மார்க்சிய நூல்களை படிக்கத் தேவையில்லை என்று கூறியதில்லை. அந்த வகையில், பொல்பொட்டும், க்மெர் ரூஜும் தனித்துவமானவர்கள். அவர்கள் புரட்சியாளர்கள் தான்.  ஆனால், நிச்சயமாக மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்கள் அல்ல.பொல்பொட் முன்மொழிந்த புதிய சித்தாந்தப் பிரகாரம், நாட்டுப்புற விவசாயிகள், கம்போடியாவின் பாட்டாளி வர்க்கமாக கருதப் பட்டனர். கம்போடியாவின் பொதுவுடமைப் புரட்சிக்கு, அந்த வர்க்கத்தினரே தலைமை தாங்க வேண்டும் என கற்பிக்கப் பட்டது.க்மெர் ரூஜ் என்ற விடுதலைப் படையில் போராளிகளாக சேர்பவர்கள், மார்க்சிய லெனினிசம் படிக்க வேண்டிய கடமை இருக்கவில்லை. அவர்களது வர்க்கப் பின்னணியே போதுமானது.

கம்போடிய கம்யூனிஸ்டுகள், சர்வதேச கம்யூனிச அமைப்புடன் சேராமல் தனியாக பயணித்தனர். பிற்காலத்தில், அதிகாரத்திற்கு வந்த பின்னர் தூர கிழக்காசிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உறவு ஏற்பட்டது. பிற சோஷலிச நாடுகளின் இராஜதந்திர உறவும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்தோனேசிய, தாய்லாந்து கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அவை எல்லாம் சர்வதேச தனிமைப் படுத்தலில் இருந்து தப்புவதற்காக தேவை கருதி உருவான தொடர்புகள். பொல்பொட் கம்போடியாவில் நடைமுறைப் படுத்தியது, ஒரு மார்க்சியப் புரட்சி அல்ல. ஆனால், 19 ம் நூற்றாண்டு ஐரோப்பிய சோஷலிச சிந்தனையாளர்கள் சிலரது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் பொதுவுடமைப் புரட்சியாகும். அந்த தத்துவ அறிஞர்கள் கைகளில் அதிகாரமும், ஆயுதங்களும் இருக்கவில்லை. பொல்பொட்டின் கைகளில் அவை இரண்டும் தாராளமாக இருந்தன. அது மட்டுமே வித்தியாசமாகும். மேலும், கூட்டுறவுப் பண்ணைகளும், பொதுவுடைமை பொருளாதாரமும், மார்க்சியத்திற்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் அல்ல. ஆதி கால கிறிஸ்தவ சமூகங்களும் அவ்வாறு தான் தம்மை நிலைநிறுத்திக் கொண்டன. 


பிற்காலத்தில், கம்போடிய மேட்டுக்குடியினரை படுகொலை செய்து, அந்த வர்க்கத்தின் இருப்பையே இல்லாதாக்கிய, பொல்பொட் ஒரு நிலவுடமையாளரின் மகன் என்பது அதிர்ச்சியான தகவல் தான். சாலோத் சார் என்ற இயற்பெயரைக் கொண்ட பொல்பொட்டின் நெருங்கிய உறவினர்கள், ஒரு அண்ணன் கூட, அரச மாளிகையில் பதவி வகித்தவர்கள். பாடசாலைக் கல்வியை முடித்த சாலோத் சார், பிரான்ஸ் சென்று உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கம்போடியா பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. பொல் பொட்டும் வேறு சில மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளும், பிரான்ஸ் சென்று கல்வி கற்க தெரிவான முதலாவது கம்போடிய பிரைஜைகள் என்ற பெருமையை பெறுகின்றனர்.

உயர் கல்வி கற்று, பதவி வகிக்கும் திறமை கொண்ட புத்திசாலிப் பிள்ளைகள், பிற்காலத்தில் க்மெர் ரூஜ் இயக்கத்திற்கு தலைமை தாங்கப் போகிறார்கள் என்று, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய பின்னர், பொல்பொட் ஒரு பாடசாலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் எல்லோருக்கும் பிடித்த, இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவர். எளிதில் உணர்ச்சி வசப் படாதவர், கோபத்தை வெளிக்காட்டாதவர், சத்தம் போட்டு பேசாதவர், எந்த தருணத்திலும் கேட்ட வார்த்தை பேசாதவர்.... என்றெல்லாம் நண்பர்களால் புகழாரம் சூட்டப் பட்ட, நல்ல குணங்களைக் கொண்ட மனிதர். பிற்காலத்தில், நான்கு மில்லியன் மக்களை இனப்படுகொலை செய்த கொலைவெறியனாக உலகம் முழுவதும் தூற்றப் படப் போகிறார் என்று, யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

உலகம் முழுவதும், ஐரோப்பிய காலனியாதிக்க எஜமானர்கள், காலனிய நாடுகளில் உள்நாட்டு சேவகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். பொல்பொட் குழுவினர் உயர்கல்வி கற்க பிரான்ஸ் சென்ற காரணமும் அதுவாகத் தான் இருக்க முடியும். ஆனால், அன்று நடந்து கொண்டிருந்த அமெரிக்க-வியட்நாம் யுத்தம், ஐரோப்பிய கம்யூனிச சக்திகளுக்கு புத்துயிர்ப்பை வழங்கி இருந்தது. விரும்பியோ விரும்பாமலோ, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கம்போடிய மாணவர்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. அன்று வரையில், மார்க்சிய நூல்கள் எதுவும் க்மெர் மொழியில் மொழிபெயர்க்கப் படவில்லை. பொல்பொட்டும், சக மாணவர்களும், பிரெஞ்சு மொழியில் தான் அவற்றை படித்தார்கள். கம்போடிய மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து, "மார்க்சிய கற்கை வட்டம்" ஒன்றை உருவாக்கி கொண்டார்கள். 

மார்க்சிய கற்கை வட்டத்தை சேர்ந்த மாணவர்கள், பிற்கால க்மெர் ரூஜ் தலைவர்களாக உருவானார்கள். Cercle Marxiste  என்ற மார்க்சிய வட்டத்தில் உருவான நட்பு, கொள்கைப்பற்று, நீண்ட காலமாக இயக்கத்திற்கு விசுவாசமானவர்களாக தொடரச் செய்தது. இருப்பினும், களத்தில் மாறிய சூழ்நிலை காரணமாக, அவர்களில் சிலர் பொல்பொட் டின் கட்டளையின் பேரில் கொல்லப் பட்டனர். (க்மெர் ரூஜ் மொழியில்: மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.) பொல்பொட்டின் அதிகார வேட்கை மட்டுமே அதற்கு காரணமாக கூற முடியாது. தான் கொண்ட கொள்கையில் தளராத மனவுறுதியும், தன்னலத் துறவும், பொதுநலம் மட்டுமே முக்கியமாகக் கருதும் மனப்பான்மையும், பொல்பொட்டிடம் அளவுக்கதிகமாகவே காணப்பட்டன.

பொல்பொட் பிற தலைவர்களைப் போல, தனது உறவினர்கள், நண்பர்களைக் கொண்ட ஆதரவுத் தளத்தை வைத்திருக்கவில்லை. கம்போடியா என்ற நாட்டின் நிறைவேற்று அதிகாரம் வாய்ந்த அதிபராக பொல் பொட் இருந்த காலத்தில், அவரது சொந்த சகோதரர்கள் சாதாரண மக்களாக கூட்டுறவுப் பண்ணைகளில் வேலை செய்தனர். (தமது சகோதரன் தான் தேசத்தின் சக்தி வாய்ந்த தலைவன் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.) அதே போன்று, க்மெர் ரூஜ் தலைவர்களாக இருந்தவர்கள், சிறு பராயம் முதலே பழக்கமான நண்பர்களாக இருந்த போதிலும், அவர்களது கட்சி மீதான விசுவாசம் கேள்விக்குட்படுத்தப் பட்ட பொழுது, ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டப் பட்டனர்.

க்மெர் ரூஜ் புரிந்த "இனப்படுகொலை"யின் பெரும் பகுதி, இயக்கத்தை தூய்மைப் படுத்தும் நடவடிக்கையான களையெடுப்பு காரணமாக நடந்துள்ளது. அனைத்துக் கொலைகளையும், இயக்கத்திற்காக, இலட்சியத்திற்காக என்று நியாயப் படுத்த முடிந்தது. "பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு, களையெடுப்பு அவசியம்". எண்பதுகளில்  ஈழ விடுதலை இயக்கங்கள் கூறிய அதே காரணத்தை தான், எழுபதுகளில் க்மெர் ரூஜ் தலைமையும் கூறி வந்தது. களையெடுப்பு என்ற பெயரில் கொல்லப்பட்டவர்கள் செய்த குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப் பட்டனவா? துரோகிகளின் பட்டியல் நீண்டு சென்று, இறுதியில் பொல்பொட் மீதும் துரோகிப் பட்டம் சூட்டப் பட்டது. புறக் காரணிகளை தவிர்த்து, எல்லை மீறிப் போன "துரோகிகள் அழிப்பு" க்மெர் ரூஜ் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. "பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு



1 comment:

வலையுகம் said...

புதிய அரிய பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன் நன்றி தோழரே