Friday, August 03, 2012

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு

பகுதி - 1 : க்மெர் ரூஜ், ஓர் அறிமுகம்
"பொல்பொட்", "க்மெர் ரூஜ்", இனப்படுகொலையின் ஒத்த கருத்துள்ள சொற்களாக, இன்றைக்கும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன. நாம் எல்லோரும், இந்த சொற்களை எதிர்மறையான அர்த்தம் தரும் வண்ணம், பேசக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் மறுபக்கத்தை பார்க்குமாறு யாராவது கோரினால், "கம்போடிய இனப்படுகொலையை விசாரிக்கும் ஐ.நா. நீதிமன்றத்தை" காட்டி அவர்களின் வாயை அடைக்கலாம். ஆனால், ஐ.நா. நீதிமன்ற விசாரணை கூட, (போரில்) வென்றவர்களின் நீதியாகவே நடத்தப் படுகின்றது. அதாவது தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக இனங் காணப்பட்டு தண்டனை வழங்கப் படுவார்கள். அவர்கள்  நடத்திய படுகொலைகள் பற்றிய தகவல்கள் கூட மூடி மறைக்கப் படும். வென்றவர்கள், "இனப்படுகொலைக்கான நோபல் பரிசு" கொடுத்து கௌரவிக்கப் படுவார்கள்!

பொல்பொட்டும், க்மெர் ரூஜும் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கம்போடியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் பணிப்புரையின் பெயரில்  விமானக் குண்டுவீச்சுகள் நடத்தப் பட்டன. பல கிராமங்கள் இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப் பட்டன. குறைந்தது, "மூன்று இலட்சம் கம்போடிய மக்களை இனப்படுகொலை செய்தமைக்காக", நிக்சனுக்கு அரசு செயலாலராகவிருந்து, அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற கிசிங்கருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது!  நயவஞ்சகத் தனமாக, நிக்சன் படுகொலை செய்த மக்களின் எண்ணிக்கை, பொல்பொட்டின் கணக்கில் சேர்க்கப்பட்டது. அது போன்றே, இன்னொரு நாட்டின் மீது அத்துமீறிப் படையெடுத்த வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கொள்ளப் பட்டது.

இவ்வாறு தான், "பொல்பொட் நான்கு மில்லியன் கம்போடிய மக்களை இனப்படுகொலை செய்ததாக", இன்றளவும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அதன் அர்த்தம், பொல்பொட் படுகொலை செய்யவில்லை என்பதல்ல. சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை நிறுவனங்களும், பக்கச்சார்பற்று ஆய்வு செய்த ஊடகவியலாளர்களும், "குறைந்தது ஒரு மில்லியன், அதிக பட்சம் இரண்டு மில்லியன் மக்கள், பொல் பொட்டினால் கொல்லப் பட்டிருக்கலாம்" என்கின்றனர். இரகசியமாக நடந்த கொலைகள் பலவற்றின் சரியான எண்ணிக்கை ஒருக்காலும் தெரியாமல் போகலாம்.

பொல்பொட்டினால் அங்கீகரிக்கப் படாத, வெற்றிக் களிப்பில் மிதந்த க்மெர்ரூஜ் உறுப்பினர்களால் புரியப்பட்ட படுகொலைகள் போன்றவை, உலகில் எந்த நாட்டிலும் நடக்கலாம். குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த படுகொலைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் பொழுது, கம்போடியாவில் நடந்தது அதிகமல்ல. ஆயினும், கம்போடிய மக்களின் பழமைவாத மனோபாவமும், படுகொலைகளை தீர்வாக கருதுவதற்கு காரணமாக அமைந்தது. பொல்பொட், க்மெர்ரூஜ், கம்போடிய புரட்சி பற்றி எந்த ஒரு ஆய்வையும் செய்யாது, எழுந்தமானமாக படுகொலைகளை பற்றி மட்டுமே பேசுவது உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக, கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பூர்சுவா அறிவுஜீவிகளும், இதனை தமது வர்க்க நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரமாகவே முன்னெடுத்து வருகின்றனர். மேற்கத்திய, மேட்டுக்குடி பிரச்சாரங்களுக்கு அப்பால், கம்போடியாவில் நடந்தவற்றை பக்கச் சார்பற்று ஆய்வு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கம்போடியாவில் நடந்தது ஒரு புரட்சி. ஆனால், அது அது ஒரு மார்க்சிய புரட்சி அல்ல. பொல்பொட்டின்  கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது. ஆனால் பொல்பொட், மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தின் வழி நடக்கவில்லை. அந்தக் கொள்கைக்கு மாறாக, கம்போடிய மண்ணின் தன்மைகளுக்கேற்ற தனித்துவமான சித்தாந்தம் ஒன்றை வரித்துக் கொண்டார். கம்போடியாவை தவிர, வேறந்த நாட்டிலும் அந்த சித்தாந்தம் எடுபடவில்லை. கம்போடியப் புரட்சியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அவா, பொல்பொட்டிற்கு இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்,கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் அமைப்பான மூன்றாம் அகிலத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. அது குறித்து அவர்கள் அக்கறைப் படவுமில்லை. பொல்பொட் அதிகாரத்தில் இருந்த மூன்றரை வருடங்களாக, கம்போடியா வெளியுலக தொடர்புகளை துண்டித்துக் கொண்டது. சீனாவைத் தவிர, வேறந்த நண்பனும் இருக்கவில்லை. அதனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, சீனா ஊடாகத் தான் பயணம் செய்ய முடிந்தது. இத்தகைய காரணங்களால், வெளியுலகத்தவரால் கம்போடியா ஒரு மர்ம தேசம் போன்று பார்க்கப் பட்டது. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே, இனப்படுகொலை பற்றிய செய்திகள் மேற்கத்திய நாடுகளில் பரவிக் கொண்டிருந்தன.

சீனாவின் ஆலோசனையின் பேரில், க்மெர்ரூஜ் அரசாட்சியின் இறுதிக் காலங்களில் சில வெளிநாட்டு தொடர்புகள் ஏற்பட்டன. சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து நண்பர்கள் குழு, கம்போடியாவிற்கு விஜயம் செய்தது. இந்திய நக்சலைட் புரட்சி பற்றி எழுதிய பிரபல சுவீடிஷ் எழுத்தாளரான யான் மிர்தால் அவர்களில் ஒருவர். யான் மிர்தால் எழுதிய குறிப்புகளுடன், சில அமெரிக்க ஊடகவியலாளர்களின் குறிப்புகளையும் இந்தக் கட்டுரை எழுதுவதற்கு உசாத்துணையாக எடுத்துக் கொண்டுள்ளேன். அத்துடன், பொல்பொட்டின் வரலாற்று நூல்களும், படுகொலைகளுக்கு தப்பியவர்களின் நினைவுக் குறிப்புகளைக் கொண்ட நூல்களும், மேலும் கம்போடிய வரலாற்று நூல்களும், இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைத் தொடரின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள உசாத்துணைப் பட்டியலை, வாசகர்கள் தாமாகவே தேடி எடுத்து வாசித்து அறிந்து கொள்ளலாம். ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்களைக் கொண்ட, பிரச்சார நோக்கில் எழுதப் பட்ட நூல்களை பெரிதும் தவிர்த்திருக்கிறேன். உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக, பொல் பொட்டையும், க்மெர் ரூஜையும் எதிர்த்ததாக நினைப்பது தவறு. கம்போடியாவில் பொல் பொட்டின் புரட்சியை, உலகம் முழுவதும் இருந்த,சீன சார்பு "மார்க்சிய-லெனினிசக் கட்சிகள்" ஆதரித்திருந்தன. அது மட்டுமல்ல, அமெரிக்காவை சேர்ந்த ஊடகவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் சிலர், நிபந்தனைகளுக்குட்பட்டு ஆதரித்திருந்தனர். ஆனால், பழியை தோற்றவர்கள் மீது போட்டு சுகம் காணும் உலகில், அவற்றை ஆராய்பவர்கள் மிகக் குறைவு.

கம்போடியாவில் நடந்தது ஒரு மார்க்சியப் புரட்சி அல்ல என்பதால், கம்போடியா மக்களின் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கம்போடியாவில் பேசப் படும் க்மெர் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. அதனால் க்மெர் மக்களின் சரித்திர கலாச்சாரப் பின்னணியை அறிவது அவசியமானது. பொல்பொட்டின் இயக்கத்தை "க்மெர் ரூஜ்" என்றே உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அது பிறரால் சூட்டப் பட்ட குறியீட்டுப் பெயர் என்பது பலருக்கு தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தை, மேற்கத்திய நாடுகளில் "தமிழ்ப் புலிகள்" (Tamil Tigers) என்று தான் அழைப்பார்கள். அது போன்றது தான் இதுவும். அதாவது, ஒரு மொழியைப் பேசும் மக்கள் இனத்துடன்,வெளிநாட்டவர்கள் அந்த இயக்கத்தை சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்கின்றனர். "க்மெர் ரூஜ்" (Khmer Rouge) என்பதை, க்மெர் மொழி பேசும் மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக கருதியதால் தான், அவர்களுக்கு அந்தப் பெயர் நிலைத்தது. உண்மையிலேயே, அந்த நாட்டில் ஒரு ஜனநாயக க்மெர் தேசியவாத அமைப்பு இருந்தது. அன்றைய ஆட்சியாளரான மன்னர் சிஹானுக், மிதவாத தேசியவாதிகளை "க்மெர் ரோஸ்" என்றும், தீவிர தேசியவாதிகளை "க்மெர் ரூஜ்" என்றும் அழைத்தார். மக்கள் வாயிலும் அந்தப் பெயர் நுழைந்து விட்டது. (பிரெஞ்சு மொழியில் ரூஜ் என்றால் சிவப்பு என்று அர்த்தம்.)

க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், தமது அமைப்பை "அங்கர்" (Angkar) என்று தான் மக்களிடம் அறிமுகம் செய்தனர். க்மெர் மொழியில் அங்கர் என்றால், இயக்கம் என்று அர்த்தம். இது நமக்கு ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களை நினைவு படுத்துகின்றது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்தியிருந்த அமைப்புகளை, ஈழத் தமிழ் மக்கள் "இயக்கம்" என்று தான் அழைத்தனர். க்மெர் மக்களின் கலாச்சாரமும், தமிழ் மக்களின் கலாச்சாரமும் பல அடிப்படை ஒற்றுமைகளை கொண்டிருப்பதால், அந்த மக்களின் மன நிலையை புரிந்து கொள்வது கடினமானதல்ல. கம்போடியா அமைத்துள்ள இந்தோ-சீன நிலப்பரப்பு, இந்திய உப கண்டத்தில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் அமைந்திருப்பதால், இவ்விரண்டு இன மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் எப்பொழுதோ அறுந்து விட்டது. நாம் பல தகவல்களை மேலைத்தேய அறிஞர்களிடம் இருந்து தான் அறிந்து கொள்கின்றோம். அதனால், நாங்களும் ஐரோப்பியர்கள் போன்று சிந்திக்கப் பழகி விட்டோம். க்மெர் ரூஜ், மற்றும் கம்போடிய புரட்சி பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான அணுகுமுறைக்கு அதுவும் ஒரு காரணம்.

கம்போடிய புரட்சி பற்றி ஆய்வு செய்வதும், அறிந்து கொள்வதும், இந்திய உப கண்டத்தை சேர்ந்த மக்களுக்கு அவசியமானது. குறிப்பாக மூன்றாம் உலகை சேர்ந்த மக்கள், கம்போடிய புரட்சியின் தன்மையைகளை அறிந்து கொள்ளக் கூடாது என்பதில், மேலைத்தேய கொள்கை வகுப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். அதற்கு காரணம் என்ன? இந்தியாவில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நான் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரத்தில் வாழும் உயர் சாதியை சேர்ந்த, மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை முறை எப்படி அமைந்துள்ளது? அவர்களது சிந்தனையோட்டம் எவ்வாறு காணப்படுகின்றது? அதற்கு மாறாக, நாகரீகம் எட்டிப் பார்க்காத கிராமங்களை சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சாதி ஏழை மக்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் நீங்கள் அறிந்தவை தான். குறிப்பாக நகர்ப்புற பணக்காரர்களுக்கு, நாட்டுப்புற ஏழைகளின் இருப்பு பற்றிய அக்கறை கிடையாது.

திடீரென ஒரு நாள், அரசு இயந்திரம் இயங்காமல் ஸ்தம்பித்து விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். கிராமத்து இளைஞர்களின் பட்டாளம், ஆயுதங்களுடன் நகரங்களுக்குள் நுழைகின்றது. அங்கே அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இந்தக் கோணத்தில் இருந்து தான், நாம் "பொல்பொட், க்மெர் ரூஜ், கம்போடிய புரட்சியை" புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும் )

1 comment:

valibar said...

இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/