Friday, March 11, 2011

குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

ஸ்டாலின் கால Gulag தடுப்பு முகாம்களை ஆய்வு செய்து எழுதிய அமெரிக்க எழுத்தாளர் Anne Applebaum உடன், பெல்ஜிய எழுத்தாளர் Dirk Verhofstadt நடத்திய நேர்காணலின் சுருக்கம். "Gulag. A History" நூலுக்கு புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர், "குலாக் என்பது வதை முகாம்" என்ற தவறான பிம்பத்தை தகர்த்துள்ளார்.

கேள்வி: சோவியத் ஒன்றியத்தில் தடுப்பு முகாம்கள் எதற்காக உருவாக்கப்பட்டன? அவை வதை முகாம்களா? அன்றில் தொழில் முகாம்களா?
பதில்: இரகசிய அரசு ஆவணங்களின் படி, சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறையை துரித கதியில் விருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட தொழில் முகாம்கள். ஆனாலும் அந்த முகாம்களில் மனிதர்கள் இறந்துள்ளனர். வட பகுதியிலும் (துருவத்திற்கு அண்மையில்), யுத்த காலத்திலும் முகாமில் வைக்கப் பட்டிருந்த பெருந்தொகை மக்கள் இறந்துள்ளனர். 1942 -1943 க்கும் இடைப்பட்ட காலத்தில் 25 % சிறைக் கைதிகள் மரணமடைந்திருக்கலாம்.

கேள்வி: ஆகவே தடுப்பு முகாம்கள் கைதிகளை சித்திரவதை செய்யும், அல்லது அழிக்கும் நோக்கில் அமைக்கப் படவில்லை. அங்கே யாருமே சித்திரவதைக்குள்ளாவோ, அல்லது கொலை செய்யப் படவோ இல்லையா?
பதில்: ஆமாம், அங்கே பலர் சித்திரவதை, அல்லது கொலை செய்யப்பட்டனர். இருப்பினும் முகாம் பொறுப்பாளர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாக கருதினார்கள். முகாம் பொறுப்பாளர்களும், காவலர்களும் கைதிகளை "மக்கள் விரோதிகளாக" கருதினார்கள். அதாவது மக்களை விட தாழ்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி சாதனமாக பார்க்கப் பட்டார்கள். யாருமே அவர்களை கொல்லத் துணியவில்லை. எவராவது இறந்தால் வருத்தப் படவுமில்லை.

கேள்வி: எத்தகைய காரணங்களுக்காக குலாக்கில் மனிதர்களை பூட்டி வைத்திருந்தார்கள்?
பதில்: ஸ்டாலின் காலத்தில், அந்நியர்கள், வெளிநாட்டுப் பயணம் செய்தவர்கள், விசித்திரமான நடத்தைகளுக்காக சந்தேகப் பட்டவர்களும் கைது செய்யப்பட்டார்கள். சோவியத் யூனியனின் அனைத்துப் பகுதியை சேர்ந்தவர்களும், எல்லா இனத்தவர்களும் கைதிகளானார்கள். சில நேரம், இராணுவம், கட்சி, போன்ற நிறுவனங்களை சேர்ந்தோரும் கைதானார்கள். எல்லோரும் அரசியல் குற்றங்களுக்காக கைது செய்யப் படவில்லை. சமூக கட்டுப்பாடுகளை மீறியோரும், கூட்டுப் பண்ணையில் திருடியோரும் கூட முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.

கேள்வி: மொத்தம் எத்தனை பேர் கைதிகளாக அடைந்து கிடந்தார்கள்?
பதில்: 1929 லிருந்து 1953 வரையில் 18 மில்லியன் மக்கள் குலாக் முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர். அதை விட ஏழு மில்லியன் மக்கள் தொலை தூர பிரதேசங்களுக்கு நாடு கடத்தப் பட்டனர். அவர்கள் முகாம்களில் அடைக்கப்படவில்லை, மாறாக வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். 25 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 15 % பலவந்தமாக இடம்பெயர்ந்தோ அல்லது முகாம்களிலோ வாழ்ந்தார்கள்.

கேள்வி: சோவியத் குலாக் முகாம்களை நாஸிகளின் தடுப்பு முகாம்களுடன் ஒப்பிட முடியுமா? இரண்டுக்கும் இடையில் என்ன வேறுபாடு?
பதில்: கைதிகளின் அன்றாட வாழ்க்கை, வேலை, மற்றும் காவலர்களின் நடத்தைகள், தண்டனைகள், பிரச்சாரம் அனைத்திலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. குலாக் முகாம்கள் தசாப்த காலமாக நிர்வகிக்கப் பட்டு வந்துள்ளன. முகாம் வாழ்வு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில வருடங்கள் குரூரமாக இருக்கும். சில காலங்கள் வாழ்க்கைத் தரம் ஏற்கக் கூடியதாக இருக்கும். குலாக் முகாம்கள் பலவகையானவை. தங்கச் சுரங்கத்தை அண்டிய முகாமில் வாழ்க்கை நரகமாக இருக்கும். அதே நேரம், மொஸ்கோவில் அறிவுஜீவிகளை அடைத்து வைத்திருந்த முகாம் ஆடம்பரமானதாக இருக்கும். அங்கே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி, செம்படைக்கு ஆயுதம் வடிவமைப்பது.

அதற்கு மாறாக, நாஸிகளின் முகாம்கள் சிறிது காலமே நிலைத்திருந்தது. யுத்தத்தில் நேச நாடுகளின் படைகள் முன்னேறிக் கொண்டு வரவும், நாஸிகள் தோற்பது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது முகாம் கைதிகளை அழித்தொழிக்க விரும்பினார்கள். சோவியத், நாஸி தடுப்பு முகாம்களுக்கு இடையில் முக்கியமான இரண்டு அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. சோவியத் யூனியனில் குற்றம் சாட்டப்பட்ட "மக்கள் விரோதிகள்" என்ற சொற்பதம், பொதுவாக எவரையும் குறிக்கும். இலகுவில் பகுத்தறிய முடியாது. மாறாக, நாஸி ஜெர்மனியில் குற்றம் சாட்டப்பட்ட "யூதர்கள்", எந்த வகையிலும் தம்மை மாற்றிக் கொள்ள வழியற்றவர்கள். நாஸி தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட எந்தவொரு யூதரும் உயிர் பிழைப்பேன் என்று எண்ணவில்லை.

சோவியத் குலாக் முகாம்களில் மரணங்கள் சம்பவித்திருந்தாலும், அங்கிருந்த கைதிகள் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. அல்லது குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த காரணத்திற்காக எவரும் கொலை செய்யப்படவில்லை. பொறியியலாளர் போன்ற அறிவுத் தகமை கொண்டோர் தமது திறமையை வளர்க்க முடிந்தது, அல்லது இலகுவான வேலைகள் வழங்கப்பட்டன. சில முகாம்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் சேர்ந்து விட்டால், பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், செம்படையில் போர்வீரராக விரும்புவோரும் விடுதலை செய்யப்பட்டனர். சில நேரம், குறிப்பிட்ட கைதிகளின் நிலைமை திடீரென மாறலாம். உதாரணத்திற்கு, போலந்து சோவியத்துடன் கூட்டுச் சேர்ந்தவுடன், போலிஷ் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். சில நேரம், முகாம் பொறுப்பாளர்கள், காவலர்கள் கூட கைதிகளாகலாம்.

இரண்டாவது முக்கிய வேறுபாடு, பொருளாதார நலன். சோவியத் குலாக் முகாம்கள் குறிப்பிட்ட இடத்தில் தொழிற்துறை ஆரம்பிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டன. ஆனால், அதற்காக முகாம் கைதிகள் மனிதநேயத்துடன் நடத்தப் பட்டதாக கூற வரவில்லை. காவலர்கள் கைதிகளை கால்நடைகளைப் போல நடத்தினார்கள். அவர்கள் விரும்பினால் உணவு கொடுத்தார்கள், அல்லது நிறுத்தினார்கள்.

கேள்வி: ரஷ்யாவில் இன்றும் குலாக் முகாம்கள் இயங்கி வருகின்றனவா?
பதில்: இல்லை. ஸ்டாலினின் மரணத்திற்குப் பின்னர் குலாக் முகாம்கள் அகற்றப்பட்டன. ஆயினும், நாடு முழுவதும் அரசியல் கைதிகள் வழமையான சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். இன்றுள்ள ரஷ்ய சிறைக் கூடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

(நேர்காணலின் ஒரு பகுதி. http://www.liberales.be இணையத் தளத்தில் பிரசுரமானது.)

8 comments:

Mohamed Faaique said...

thnks for the information. 1st time i'm reading about Gulag.

thiagu1973 said...

தோழர் மனிதர்களை விட கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதன் மூலம் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்றே யூகிக்கலாம் அதெப்படி அனேகர் எந்த காரணமும் இன்றி கொல்லப்பட்டு இருப்பார்கள்

Kalaiyarasan said...

தோழர், எழுத்தாளர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. மக்கள் விரோதிகள் என்றால் தாழ்வாகப் பார்க்கும் பழக்கத்தை குறிப்பிட்டார். சில முகாம்கள் மோசமாக பராமரிக்கப்பட்டன. அப்படியான இடங்களில் தான் கொல்லப்பட்டவர்கள் அதிகம். அந்த முகாம் பொறுப்பாளரின் தனிப்பட்ட குணாம்சமும் அதற்கு காரணம்.

thiagu1973 said...

தனிபட்ட குணாம்சத்தை கண்ட்ரோல் செய்யபடவில்லை என்றால் அதை தெரிந்தே செய்தால் அதுதானே மிகப்பெரிய தவறு

Kalaiyarasan said...

தோழர், இப்படியான குறைபாடுகள் அனைத்து புரட்சிகளிலும், விடுதலைப் போராட்டங்களிலும் இருக்கவே செய்யும். எல்லோரையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது.

thiagu1973 said...

//தோழர், இப்படியான குறைபாடுகள் அனைத்து புரட்சிகளிலும், விடுதலைப் போராட்டங்களிலும் இருக்கவே செய்யும். எல்லோரையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. // புரட்சி முடிந்தபிறகு சில ஆண்டுகள் லெனின் ஆட்சி செய்கிறார் பிறகே ஸ்டாலின் ஆட்சிக்கு வருகிறார் அப்போது தற்செயல் படுகொலை நடக்கிறது பிறகு
அவருக்கு பிறகு போகிறது இதெல்லாமே தற்செயல் என சொல்வதை விட இம்மாதிரி செயல்களை வன்மையா கண்டித்து விமர்சனம் செய்யவேண்டுமே என நான் கருதுகிறேன்

Kalaiyarasan said...

இவை எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. லெனின் ஆட்சி செய்த காலத்திலும் படுகொலைகள் நடந்துள்ளன. உலக வரலாற்றில் அனைத்துப் புரட்சிகளும் வன்முறைக்கூடாகவே நடந்துள்ளன. மேலும் புரட்சி என்பது ஒரே நாளில் முடிந்து விடும் விஷயமல்ல. புரட்சியை பாதுகாக்கும் போராட்டம் பல வருடங்கள் தொடர்ந்து நடக்கும். ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி மட்டுமல்ல, பிரெஞ்சுப் புரட்சி, பிரிட்டிஷ் புரட்சி, அமெரிக்கப் புரட்சி எல்லாம் இதை விட அதிக படுகொலைகளுடன் நடந்தவை தாம். அப்போதும் குலாக் பாணி முகாம்கள் இருந்துள்ளன, அவற்றில் சிறை வைக்கப்பட்ட கைதிகள் இறந்துள்ளனர். அனைத்துப் புரட்சிகளிலும், எதிர்ப்புரட்சியாளர்கள் மீது கொடூரமான வன்முறை பிரயோகிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சியில் காணப்படும் குறைபாடுகள், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியின் போதும் காணப்பட்டன. ஒரு புரட்சி கொண்டு வரும் சமுதாய மாற்றமே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும். அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளை மக்கள் இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும், நானும் தான். நாம் எப்போதாவது அவற்றை வன்மையாக கண்டித்து விமர்சனம் செய்திருக்கிறோமா?

thiagu1973 said...

//எதிர்ப்புரட்சியாளர்கள் மீது கொடூரமான வன்முறை பிரயோகிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சியில் காணப்படும் குறைபாடுகள், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சியின் போதும் காணப்பட்டன. ஒரு புரட்சி கொண்டு வரும் சமுதாய மாற்றமே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.//அப்படி எனில் இதில் தனிநபர் விருப்பு வெறுப்பின்றி காரணத்தோடுதான் கொல்லப்பட்டார்கள் என சொல்வதில் தப்பில்லையே