Thursday, May 06, 2010

ஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி

ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரண்டு வங்கிகள் தாக்கப்பட்டன. தாக்குதலால் எரிந்து கொண்டிருந்த வங்கி ஒன்றினுள் (Marfin bank)சில ஊழியர்களும் அகப்பட்டுக் கொண்டனர். மூன்று பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். "சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு முதல் பலி!" அலறின ஐரோப்பிய நாளேடுகள். மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக சூளுரைத்தார் அதிபர் பபன்ற்றேயு. முதலாளித்துவஊடகங்களும்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பழி சுமத்த ஆரம்பித்தன. ஆனால் வங்கி எரிப்பில் பலியான ஊழியர்களின் உடலைப் பார்க்க வந்த வங்கி மேலாளரை சுற்றிவளைத்தனர் பொது மக்கள். அவரை நோக்கி "கொலைகாரன்" என்று கோஷம் எழுப்பினர். (பார்க்க: வீடியோ 1)

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த கிரீசுக்குகடன் உதவி வழங்குவதென்று ஐரோப்பிய ஒன்றியம், .எம்.எப். என்பன தீர்மானித்துள்ளன. ஆனால் அதற்குப் பதிலாக கிரேக்க அரசாங்கம் சமூகநல செலவினங்களைக் குறைக்க வேண்டும். வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தமது சம்பளத்தில் திடீரென 300 யூரோ குறைந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். ஓய்வூதியம் பெறுவோரின் வருமானத்தில் 100 யூரோ குறைந்தது. அதிகரித்துவரும் வேலையற்றோரின் நிலைமை கவலைக்கிடமானது. அவர்களுக்கு அரசு வழங்கி வந்த காப்பீடு ஏறக்குறைய கைவிடப்பட்டுவிடும். பொதுநலத்திட்டங்களான கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் இனிமேல் அரசசெலவினம் வெகுவாகக் குறைக்கப்படும். 110 பில்லியன் கடனுதவிக்கு பதிலாக, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் அழகான கிரேக்க தீவுகளை அரசாங்கம் விற்றுவிடும் என்று பொது மக்கள் மத்தியில்வதந்தி உலாவுகின்றது.

மே 5 ம் தேதி, ஐரோப்பிய கடனுதவியை ஏற்றுக் கொள்வதைப் பற்றி விவாதிக்க கிரேக்க பாராளுமன்றம் கூடியது. குறிப்பாக அரச செலவினங்களைக் குறைக்கும் நிபந்தனைகளை சுற்றியே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூறாண்டுகாலம் போராடிப் பெற்ற சமூக உரிமைகள், ஒரே இரவில் பறிபோவதைகண்டு வெகுண்டெழுந்த மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். "நெருக்கடியால் ஏற்பட்ட செலவை பணக்காரர்களிடம் இருந்து அறவிடு!", "அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருடர்கள்" போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் காணப்பட்டன. "(தேசம்) விலை போய்விட்டது" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தட்டி எல்லோர் கைகளிலும்இருந்தது. ஏறத்தாள மூன்று லட்சம் மக்கள் ஏதென்ஸ் நகரில் குழுமியிருந்ததாக வெகுஜனஊடகங்களே தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை. துறைமுகத்தில் படகுச் சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டதால், தீவுகள் வெளியுலகில் இருந்து துண்டிக்கப் பட்டன. உல்லாசப்பயணிகள் அதிகளவில் விஜயம் செய்யும் புராதன "அக்ரோபோலிஸ்" நகரம் கம்யூனிஸ்ட்கட்சியை (KKE) சேர்ந்த போராட்டக் காரர்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்தனர். சுருக்கமாக, ஏதென்ஸ் நகரம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

மக்கள் திரள் பாராளுமன்றத்தினுள் நுழைய முயன்ற போதிலும், கலவரத்தடுப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பாராளுமன்ற வளாகத்தில் கடுமையான சண்டை நடந்தது. மக்கள் எழுச்சியின் முன்னர் அதிகாரத்தை இழந்துகொண்டிருந்த காவலர்கள், இடதுசாரிக் கட்சிகளின் அலுவலகங்களை உடைத்துநொறுக்கி தமது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். (பார்க்க: வீடியோ 2 ) ஆர்ப்பாடக் காரர்கள் போலிஸ் வாகனம் ஒன்றையும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆடம்பரக் கார்களையும் எரித்து நாசமாக்கினார்கள். தேசிய வரித்திணைக்களக் கட்டிடமும் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு இலக்காகி எரிந்தது. "வன்முறையில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக் காரர்கள், ஸ்கூட்டரில் வந்து தாக்குதல் நடத்துகின்றனர். செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி உள்ளனர். மக்கள் திரளை தமது கவசமாகபாவிக்கின்றனர்." இவ்வாறு தனது இயலாமைக்கு சப்பைக் கட்டுகட்டியது ஏதென்ஸ் போலிஸ் நிர்வாகம்.

கிரேக்க பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டாங்களும் ஐரோப்பிய பங்கு சந்தை வர்த்தகத்தில் கிலியைதோற்றுவித்துள்ளது. யூரோநாணயத்தின் பெறுமதியை குறைத்துள்ளது. கிறீஸ், வழியில் போர்த்துக்கல், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பாரியபொருளாதார பிரச்சினைகளை சந்தித்துள்ளன. திவாலாகும் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழற்றிவிட்டு விட்டால் நல்லது, என்றும் சிலபொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். அப்படி செய்யாவிட்டால் டாலரை அடுத்து, யூரோநாணயமும் வீழ்ச்சியை நோக்கி செல்வதை தடுக்க முடியாது என்று எச்சரிக்கின்றனர்.

Video 1


Video 2

No comments: