
2000 ம் ஆண்டு. பெர்லின் நகரம். ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரிக் கட்சியின் வெற்றியால் உற்சாகமடைந்த ஜெர்மன் நவநாசிகள் ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர். ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் ஒரேநாடாக இணைய வேண்டும் என கோஷம் போடுகின்றனர். "நாம் ஒரே தேச மக்கள்", பெர்லின் சுவர் வீழ்ந்த நேரம் எழுந்த அதே கோஷம். கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை ஒன்று சேர்க்க அபிலாஷை கொண்ட அதே குரல்கள். பெர்லின் தெருக்களில் மீண்டும் ஒலிக்கின்றன. கம்யூனிசம் தோற்றது. தேசியவாதம் வென்றது. அன்று அதைக் கொண்டாடினார்கள். ஒன்றிணைந்த ஜெர்மனிக்கு என்று சில கனவுகள் உள்ளன. காலத்திற்கு ஒவ்வாததாக கருதப்பட்ட ஜெர்மன் பேரினவாதத்தை மீண்டும் புதுப் பொலிவுடன் அரங்கேற்றும் தருணம் இது.
கடந்த பல வருடங்களாக பெர்லின் நகரம், ஒவ்வொரு மே தினத்தன்றும் கொந்தளிக்கின்றது. தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் மோதிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. வழக்கம் போல சண்டைக்காட்சியின் முடிவில் வரும் போலிஸ், தீவிர இடதுசாரிகளை மட்டும் கைது செய்து கொண்டு செல்லும். பெர்லின் வரலாறு இது போன்ற பல தெருச் சண்டைகளை கண்டுள்ளது. ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு முன்னர், நாசிகளும், கம்யூனிஸ்ட்களும் அடிக்கடி தெருச் சண்டைகளில் ஈடுபடுவார்கள். "கம்யூனிச காலிகள் வலுச் சண்டைக்கு இழுத்த கதைகளை" ஹிட்லர் "எனது போராட்டம்" நூலில் பதிவு செய்துள்ளார். அதே நூலில், "சிவப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான நாசிகளின் தற்பாதுகாப்பை" நியாயப்படுத்தி இருந்தார். ஹிட்லரை யாருமே பொருட்படுத்தாத அன்றைய காலகட்டத்தில், நாசிகளின் "தற்பாதுகாப்பு" பெரும் ஆக்கிரமிப்பு போராக மாறுவதை எதிர்பார்த்திருக்க முடியாது.
முதலாம் உலகப்போர் ஐரோப்பாவில் அளவிட முடியாத பேரிழப்பை ஏற்படுத்தி இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். பெரும்பான்மையான மக்கள் அனைத்தையும் இழந்து ஏதிலிகளானார்கள். ரஷ்யாவிலும் அதே நிலைமை. அங்கு லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தது. உலகின் முதலாவது பொதுவுடைமை அரசு, ஆலைகளையும், தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்கியது. இதனால் ரஷ்யாவில் பெரும் முதல் இட்டிருந்த, மேற்கு ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்தனர். கடைசி ரஷ்ய சக்கரவர்த்தி ஜாருக்கு வழங்கிய அந்நிய நாட்டுக் கடன்கள் வேறு. "முன்னைய அரசுக்கு ரஷ்ய மக்கள் பொறுப்பேற்க முடியாது." என லெனின் கூறிவிட்டார். தங்களுக்கு ஒரு ரூபாய் தன்னிலும் திரும்ப வராது என்பதால், மேற்குலக அரசுகளும், வங்கிகளும் ஆத்திரமுற்றன.
தொலைவில் இருந்த ரஷ்யா தான் அப்படி என்றால், பக்கத்தில் இருக்கும் ஜெர்மனியும் புரட்சியாளரின் கைகளுக்கு போகும் அபாயம் தோன்றியது. பெர்லின், மியூனிச் போன்ற நகரங்களில் புரட்சி வென்றது. அங்கே "தொழிலாளரின் சோவியத்" பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி புரட்சியை ஆதரிக்க மறுத்து விட்டது. ஜெர்மன் அரசு இராணுவத்தை அனுப்பி, தொழிலாளர் எழுச்சியை நசுக்கியது. சமூக ஜனநாயகக் கட்சியில் புரட்சியை ஆதரித்த பிரிவினர், கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே, அதன் தலைவர்கள் அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெர்மன் பாராளுமன்றம், இனி வருங்காலத்திலும் புரட்சியை முளைக்க விடாமல் தடுப்பது குறித்து ஆராய்ந்தன.
இதே நேரம் போரில் தோற்ற ஜெர்மனியை தண்டிப்பதற்காக பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட்டது. கடன் சுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றிருந்த ஜெர்மன் அரசியல்வாதிகள் அனைவரையும் வெறுத்தனர். "ஜெர்மனியை மீண்டும் வல்லரசாக்குவதாக" கூறிய ஹிட்லரின் உரைகளை செவிமடுத்தனர். ஒரு புறம் புரட்சிக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்கள். மறுபக்கம் வீராவேச உரைகளால் மக்களைக் கவரும் ஹிட்லர். ஜெர்மன் பாராளுமன்றம், இரண்டாவது தெரிவை விரும்பியது. (கத்தோலிக்க) கிறிஸ்தவ கட்சி ஹிட்லரை அதிபராக்கும் திட்டத்தை முன்மொழிந்தது.
ஹிட்லரின் தேசிய சோஷலிசக் கட்சினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தினர். முழு அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்காக ஜெர்மன் பாராளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்கள் மீது பழி போடப்பட்டது. பாராளுமன்றத்தை செயலிழக்க வைத்தாகி விட்டது. ஜென்ம விரோதிகளான கம்யூனிஸ்ட்களையும் ஒடுக்கியாகி விட்டது. இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தினார் ஹிட்லர்.
நாஸிஸ கொடுங்கோலாட்சி ஆரம்பமாகியது. ஹிட்லரின் இனவெறிக் கொள்கைகள் அரச ஆணைகளாகின. வெள்ளை ஆரிய இனமே உலகில் சிறந்தது, என்ற கற்பிதம் ஐரோப்பியரின் மனதில் விதிக்கப்பட்டது. "ஜெர்மன் இனம் உலகை ஆளப்பிறந்தது" என்று அறிவித்தார் ஹிட்லர். ஆங்கிலேயர்கள் ஜேர்மனிய இனத்தை சேர்ந்தவர்கள். "அங்க்லோ-சாக்சன்" இனக்குழுவில் இருந்து இங்க்லீஷ் என்ற சொல் வந்தது. பிரான்சிலும் ஜேர்மனிய இனமே மேலாதிக்கம் செலுத்துகின்றது. "பிரான்க்" என்ற ஜெர்மன் இனக்குழுவில் இருந்தே பிரான்ஸ் என்ற சொல் வந்தது. டச்சுக் காரரும், ஸ்கண்டிநேவியரும் ஒரே ஜெர்மன் மூதாதையரைக் கொண்டவர்கள் என்பதற்கு, மொழி ஒற்றுமையே சாட்சி. மேற்குறிப்பிட்ட ஆரிய இனங்களை சேராத யூத, ஸ்லாவிய, ரோம (ஜிப்சி) இனங்கள் தாழ்த்தப்பட்டன.
தாழ்த்தப்பட்ட இனங்களை சேர்ந்த மக்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த முகாம்களில் இவர்களிடம் அடிமை வேலை வாங்கப்பட்டது. ஜெர்மன் அரசு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்கள் கூட அடிமைகளின் உழைப்ப சுரண்டி லாபம் கண்டன. அன்று ரத்தம் குடித்த கம்பனிகள் சில இன்றும் இயங்குகின்றன. Volkswagen , Siemens , Deutsche Bank போன்ற ஜெர்மன் கம்பனிகளும், GE, Ford போன்ற அமெரிக்க கம்பனிகளும் பாசிசத்தால் பயனடைந்தன. இதைவிட பணம், நகை, என்று சேர்த்து வைத்திருந்த பணக்கார யூதர்களிடம் கொள்ளையடித்த பணத்தை வங்கிகள் பங்குபோட்டன.
ஹிட்லரின் அரசு உதயமான போது வாழ்த்துத் தெரிவித்தவர்களில் பாப்பரசர் முக்கியமானவர். அவர் ஏற்கனவே முசோலினியின் பாசிச அரசுக்கு தனது ஆதரவை வழங்கி இருந்தார். ரோம சாம்ராஜ்யக் கனவில் திளைத்த வத்திக்கான், பாசிஸ்ட்களுக்கு அதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. பாசிச சல்யூட் அடிக்கும் முறை, ரோமரின் வணக்கம் செலுத்தும் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், சிலுவைப்படை வீரர்களால் மத்திய கிழக்கு யூதர்கள் கொல்லப்பட்டனர். ஸ்பானிய யூதர்கள் கழுவிலேற்றப்பட்டனர். இவையெல்லாம் பாப்பரசரின் ஆசீர்வாதத்துடன் நடந்தவை. ஆகவே வத்திக்கானுக்கும், ஹிட்லருக்கும் இடையில் பெரியளவு கொள்கை வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஹிட்லரின் ஜெர்மன் தேசியவாதம் மூன்று நோக்கங்களை கொண்ருந்தது. முதலாவது, அனைத்து ஜெர்மன் மொழி பேசும் மக்களுக்கும் ஒரே தேசம். இரண்டாவது, ஐரோப்பாக் கண்டத்தில் இன/மொழி அடிப்படையிலான தேசிய அரசுகளை உருவாக்குவது. மூன்றாவது, புதிய காலனியாதிக்கம். ஜெர்மானியர்களை ஒன்று சேர்ப்பதற்கு அதிக எதிர்ப்பு வரவில்லை. ஆஸ்திரியாவையும், செக்கொச்லோவியாவின் ஜெர்மன் மொழி மாகாணத்தையும் ஜெர்மனியுடன் சேர்த்ததை, அந்த பிரதேச மக்களும் வரவேற்றனர். அடுத்ததாக அண்டை நாடுகள் மீது படையெடுத்த போது, அந்த நாடுகளின் நாசிச ஆதரவு இயக்கங்கள் ஒத்துழைத்தன. அங்கெல்லாம் பொம்மை அரசுகளை ஆட்சியில் அமர்த்த முடிந்தது.
தனி நாடு கோரிய பிரிவினைவாதிகள் ஹிட்லர் ஆதரவுடன் புதிய தேசங்களை உருவாக்கினர். செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து பிரிந்த ஸ்லோவாக்கியா. யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்த குரோவாசியா, போன்றன சிறந்த உதாரணங்கள். இங்கெல்லாம் ஆட்சிக்கு வந்தவர்கள் தீவிர வலதுசாரி பாசிஸ்ட்கள். முசோலினியின் பாசிச இத்தாலி ஏற்கனவே கொசோவோவை செர்பியாவிடம் இருந்து பிரித்து, அல்பேனியாவுடன் இணைத்து விட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரில் வெற்றியடைந்த நேச நாடுகள், ஹிட்லர் பிரித்த புதிய நாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பின.
எதிர்பாராவிதமாக 20 ம் நூற்றாண்டின் இறுதியில் வரலாறு திரும்பியது. மேற்குலக நாடுகள், ஸ்லோவாக்கியா, குரோவாசியா, கொசோவோ போன்ற புதிய சுதந்திர நாடுகளுக்கு ஆதரவளித்தன. புதிய சுதந்திர நாடுகளில், முன்பு நாசிச படைகளுடன் ஒத்துழைத்த அதே நபர்கள் ஆட்சிக்கு வந்தனர். மீண்டும் அதே ஜெர்மனி பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது. இந்த நாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்த முதல் நாடும் ஜெர்மனி தான். ஹிட்லர் காலத்தில் இருந்து இன்று வரை, ஜெர்மனியின் வெளிவிவகாரக் கொள்கை மாறவில்லை.
(தொடரும்)
4 comments:
very nice history about germany. i like it. World Wonder Burj Dubai Photo Gallery @ http://simplygetit.blogspot.com/2010/01/burj-dubai-photos-burj-khalifa-pictures.html
முதலில் வாழ்த்துக்கள்
"ஆபிரிக்கர்கள் கண்டுப்பிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் வெளியீட்டுக்கு
இந்தப் பதிவும் சிறப்பாக இருக்கிறது உலகப்போர்கள், நாஜிக்களின் இனவெறி என மேலோட்டமாக அறிந்திருந்தாலும் அறியாத பல விடயங்களை அறியத் தருகின்றமைக்கு நன்றி. பெர்லின் சுவர் உடைப்புக்கு பின்னரான கிழக்கு ஜெர்மனி வாழ் காம்ரேட்டுக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் "கிழக்கும் மேற்கும்" என ஒரு பயணக்கட்டுரை வாசித்த ஞாபகம். எழுதியவரும் வெளிவந்த நாளிதழ் வீரகேசரியா? தினககுரலா எனவும் ஞாபகமில்லை.
நன்றி, ஹென்றி & தர்ஷன்.
தர்ஷன், இந்தக் கட்டுரை ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பு குறித்த மகாநாடுகள் நடைபெற்ற காலத்தில் எழுதப்பட்டது. இப்போது தான் பதிவிடுகிறேன். EU போர்வையின் கீழ் ஜெர்மனி உலக வல்லரசாகின்றது என்பதே கட்டுரையின் சாராம்சம்.
Good Article.. Romas are not gypsies. Gypsies are people moved from South Asia to Europe.
Post a Comment