Showing posts with label ஜெர்மனி. Show all posts
Showing posts with label ஜெர்மனி. Show all posts

Friday, January 17, 2020

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. பண்டைய காலத்து பெருமை பேசுவதும், ஆயிரம் வருடங்களானாலும் இனம் மாறவில்லை என்று நம்புவதும் தேசியவாதத்தின் கொள்கைகள். தமிழ்த்தேசியம் என்றாலும், ஜெர்மன் தேசியம் என்றாலும் அதில் எந்தக் குறையும் இல்லை. எப்போதுமே மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். ஜெர்மன் தேசியமும் அதற்கு விதிவிலக்கல்ல.

உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் ஜேர்மனியர்களுக்கு "இன உணர்வு" ஏற்பட்டது. அதற்கு முன்னர் யாருமே தம்மை ஜெர்மனியர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் புரூசியர், ஆஸ்திரியர் என ராஜ்ஜியத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது அவரவர் வாழ்ந்த பிரதேசத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துக்காரர், யூதர்கள் என்று மதத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஜெர்மன் இனத்தவர்கள் ஒற்றுமையில்லாமல்  தமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

ஜெர்மனியர்கள் என்றால் யார்? ஆங்கில மொழியில் ஜெர்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஜெர்மன்காரர்கள் தம்மை டொய்ச்சே என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி டொய்ச் என்றும், அவர்களது நாடு டொய்ச்லாந்து என்றும் அழைக்கப் படுகின்றது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் காரர்கள் தமது மொழியில் அலெமான் என்று அழைக்கிறார்கள். ஜெர்மன், அலெமான் என்பன பண்டைய காலத்தில் ஜெர்மனியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்ட பெயர்ச் சொற்கள் தான். அதே நேரம் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்பன கூட ஜெர்மன் இனத்தவரைக் குறிப்பிடும் சொற்கள் தான்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் ரோம சாம்ராஜ்யத்திற்கு வடக்கே வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக கருதப் பட்டனர். ரோமர்கள் அந்த மக்களை "கெர்மானி" (Germani) எனும் பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் ஜெர்மனி ஆகியது. ஆனால், கெர்மானி என்பது ஒரே மொழி பேசும், ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இன்றைய ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது, டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், சுவீடிஷ்காரர்கள், நோர்வீஜியர்கள் எல்லோரும் ரோமர்களின் பார்வையில் கெர்மானி தான்.

உண்மையில் அன்றிருந்த ஜெர்மன் இனத்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அவர்கள் நகரங்களை கட்டவுமில்லை. அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. அவர்கள் இடி, மின்னல், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிபாட்டை பின்பற்றினார்கள். அத்துடன் ஜெர்மன் இனக்குழுக்கள் அடிக்கடி தமக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால் பெருந்தொகையிலான அகதிகள் ரோமர்களின் நாட்டுக்குள் தஞ்சம் கோரி இருந்தனர்.

இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து புலம்பெயரும் அகதிகளை தடுப்பதற்காக, ஐரோப்பியக் கோட்டை எனும் பெயரில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படுவது தெரிந்ததே. அதே மாதிரியான சூழ்நிலை தான் பண்டைய ரோம சாம்ராஜ்யத்திலும் நிலவியது. இருண்ட ஐரோப்பாவில் இருந்து ஜெர்மன் அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக ரோம சாம்ராஜ்யத்தின் வட புற எல்லைகள் பலப்படுத்தப் பட்டன. தெற்கே சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கே நெதர்லாந்து வரை ஓடிக் கொண்டிருக்கும் ரைன் நதி தான், அன்று ரோமர்களின் நாகரிகமடைந்த ஐரோப்பாவையும், ஜெர்மனியர்களின் காட்டுமிராண்டி ஐரோப்பாவையும் பிரிக்கும் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது.

அதற்காக, ஜெர்மனியர்கள் எல்லோரும் ரோம ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை. கணிசமான அளவு ஜெர்மன் இனத்தவர்கள் ஏற்கனவே ரோமப் பேரரசின் குடிமக்களாக உள்வாங்கப் பட்டு விட்டனர். இதற்கு நாம் பெரியளவு யோசிக்கத் தேவையில்லை. ஐரோப்பிய வரைபடத்தில் ரைன் நதிக்கு தெற்கில் உள்ள பிரதேசங்களை பார்த்தாலே போதும். 

அதாவது, இன்றைய நெதர்லாந்தில் ரொட்டர்டாம் நகருக்குக் கீழே உள்ள பகுதியும், பெல்ஜியம் முழுவதும் ரோம நாட்டிற்குள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் கூட, டச்சு மொழி (தற்காலத்தில்: நெடர்லான்ட்ஸ் மற்றும் பிளாம்ஸ்) பேசும் ஜெர்மன் இனத்தவர்கள். அத்துடன் இன்றைக்கு தனிநாடாக உள்ள லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் மாகாணமாக உள்ள அல்சாஸ், லோரேன் பிரதேசங்களில் வாழ்பவர்களும் ஜெர்மன் இனத்தவர்கள் தான். இன்றைக்கும் அவர்கள் பேசும் மொழிகள், உண்மையில் ஜெர்மனின் கிளை மொழிகளே!

மேற்குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினர், ரோம மயமாக்கப் பட்ட ஜெர்மனியர்கள் எனலாம். அவர்களில் படித்தவர்கள் லத்தீன் மொழி பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தனர். இந்த "நாகரிக வளர்ச்சி" தான் பிற்காலத்தில், தனித்துவமான ஜெர்மன் மன்னராட்சி தோன்றுவதற்கு அடித்தளம் இட்டது. மத்திய கால ஐரோப்பாவில், அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர், ஒரு அசல் ஜெர்மனியரான கார்ல் சக்கரவர்த்தி கெல்ன் (ஆங்கிலத்தில்: கொலோன்) நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். கார்ல் மன்னரின் நிர்வாகம் முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் தான் நடந்தது. அப்போதும் படித்தவர்கள் லத்தீன் பேசினார்கள். ஜெர்மன் மொழி? அது படிப்பறிவில்லாத பாமரர்கள் பேசும் கீழ்த்தரமான மொழியாக கருதப் பட்டது.

ரோமர்கள் ஆட்சிக் காலத்தில், இருண்ட ஐரோப்பாவை அடிபணிய வைக்கும் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதற்கான போர்களில் ஈடுபட்ட ரோம இராணுவத்தில், கணிசமான அளவில் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களும் இருந்தனர். ரைன் நதிக்கு அப்பால் சுதந்திரமாக வாழ்ந்த ஜெர்மனியர்களின் பார்வையில், அந்த வீரர்கள் துரோகிகளாக, ஒட்டுக் குழுக்களாக தெரிந்ததில் வியப்பில்லை. இருப்பினும் காலப்போக்கில் "காட்டுமிராண்டி ஜெர்மனியர்களும்" ரோம இராணுவத்தின் கீழ் இயங்கிய கூலிப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

"காட்டுமிராண்டி ஜெர்மனியர்கள்" எதற்கும் அஞ்சாத வீரர்களாக இருந்த படியால், அவர்கள் ரோமர்களால் பிரித்தானியா தீவு வரை கொண்டு செல்லப் பட்டனர். அதனால், ரோமர்கள் காலத்திலேயே பெருமளவு ஜெர்மானியர்கள் இன்றைய பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் சென்று குடியேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த படியால், அடுத்த வந்த தலைமுறையினர் ஜெர்மன் மொழியை மறந்து விட்டனர். ஏனெனில் பொதுவாக தாய்மார் ஊடாகத் தான் மொழி கடத்தப் படுகின்றது.

மத்திய காலத்தில், கிறிஸ்தவ மத ஆட்சிக் காலத்தில் தான், இன்றைய ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி அடைந்தன. சாதாரண பாமர மக்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தேவாலயங்களில் லத்தீன் மொழி பயன்படுத்தப் பட்டாலும், பொது மக்களுக்கு புரியும் மொழியிலும் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் நடைமுறைக் காரணங்களுக்காக "மக்களின் மொழி" பயன்படுத்தப் பட்டது. அது லத்தீன் மொழியில் தெயோடிசே (Theodisce) என அழைக்கப் பட்டது. அது காலப்போக்கில் மருவி டொய்ச் (Deutsch) ஆனது. பிற்காலத்தில், ஜெர்மனியர்கள் அதையே தமது மொழியின் பெயராக ஏற்றுக் கொண்டு விட்டனர்!

தெயோடிசே தான் ஆங்கிலேயரால் டச்(Dutch) என்றும் அழைக்கப் பட்டது. டச் என்பது நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியை குறிப்பிடும் ஆங்கில பெயர்ச் சொல். இன்றைய காலத்தில் டச், டொய்ச் (ஜெர்மன்) இரண்டும் வெவ்வேறு மொழிகளை குறிப்பிடும் சொற்கள். ஆனால் குறைந்தது ஐநூறு வருடங்களுக்கு முன்னராவது அது ஜெர்மனின் கிளை மொழியாக கருதப் பட்டு வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில், வட ஜெர்மனியில் லுய்பேக் நகரை மையமாகக் கொண்டு ஹான்சே எனும் வணிகர்களின் அமைப்பு இயங்கியது. மேற்கே அன்த்வேர்பன் (பெல்ஜியம்)முதல் கிழக்கே ரீகா (லாட்வியா) வரையில் ஹான்சே வணிகர்களின் பணத்தால் வளர்ந்த நகரங்கள் பல உண்டு. அன்று வர்த்தக நோக்கிற்காக ஒரு பொது மொழி தேவைப் பட்டது.

அப்போது தரப்படுத்தப் பட்ட ஜெர்மன் மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் "நேடர் டொய்ச்"(தாழ்நில ஜெர்மன்) என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இன்றைய ஜெர்மனியில் நேடர் டொய்ச் அழிந்து விட்டது. ஆனால் மத்திய காலத்து நேடர் டொய்ச் பிற்காலத்தில் "நெடர் லான்ட்ஸ்" (டச்) என்ற பெயரில் ஒரு தனியான மொழியாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஆப்பிரிகான்ஸ் மொழியும் அதிலிருந்து பிரிந்து சென்ற தனி மொழி தான்.

இதற்கிடையே மத்திய கால ஐரோப்பாவில் இன்னொரு அரசியல்- சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத பல இனங்கள் வாழ்ந்தன. அன்றிருந்த போப்பாண்டவர் அங்கெல்லாம் வாள்முனையில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டுமென்றார். அதற்காக தொய்ட்டன்ஸ் எனப்படும் ஜெர்மன் குதிரைப் படையினரை ஒரு சிலுவைப் போருக்கு அனுப்பினார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜெர்மன் படையினர், பெருமளவு நிலங்களை கைப்பற்றி காலனிப் படுத்தினார்கள். அங்கு பெருமளவு ஜெர்மன் இனத்தவரை குடியேற்றினார்கள். குறிப்பாக இன்றைய போலந்தின் வட மேற்குப் பகுதிகள் ஜெர்மன்மயமாகின.

இன்று போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையில் காலினின்கிராட் எனும் பெயரில் ஒரு சிறிய நிலப்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு காலத்தில் கேனிங்க்ஸ்பேர்க் என்ற பெயரில் ஜெர்மனியர்களின் பிரதேசமாக இருந்தது. அன்றைய காலத்தில் வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக" கருதப் பட்டனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமர்கள் ஜெர்மனியர்களை பார்த்து நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர். அதே ஜெர்மனியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் இயற்கை வழிபாடு செய்த மக்களை நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர்.

காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்த மாதிரி, அன்றைய ஜெர்மனியர்கள் வட கிழக்கு பிராந்திய மக்களுக்கு "புரூசீ" என்று ஒரு பொதுப் பெயர் சூட்டி இருந்தனர். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அந்த இடங்கள் யாவும் ஜெர்மனியரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர் "புரூசியா" (Prussia) என அழைக்கப் பட்டது. வெளியுலகில் இருந்தவர்களுக்கு, புரூசியா என்பது ஜெர்மனியை குறிக்கும் ஒத்த கருத்துச் சொல்லாக தென்பட்டது. அங்கிருந்த ஜெர்மனியர்களும் தம்மை புரூசியர்கள் என அழைத்துக் கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றுள்ள ஜெர்மனியின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புரூசிய சாம்ராஜ்யம் இருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் தேசியவாத கொள்கைகள் செல்வாக்குப் பெறத் தொடங்கி விட்டன. அதனால் ஜெர்மனியர்களின் தேசம் எனும் பொருள்படும் "டொய்ச்லாந்து" என்ற பெயர் சூட்டப் பட்டது. இருப்பினும் "ஜெர்மனியரின் தேசத்தில்" போலிஷ், லிதுவேனிய, இன்னும் பல மொழிகளைப் பேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்ந்தனர்.

அதைவிட கணிசமான அளவு ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவும், ஆஸ்திரியாவும் இடையறாது போரில் ஈடுபட்டிருந்தன. அதாவது இரண்டு ஜெர்மன் ராஜ்ஜியங்கள் நீண்ட காலம் பகைமை பாராட்டி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அதுவும் ரஷ்யா, பிரித்தானியா ஆகிய வல்லரசுகளின் நெருக்குதல் காரணமாக ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது வரைக்கும், புரூசியாவில், ஆஸ்திரியாவில் வாழ்ந்த யாருக்கும் ஜெர்மன் இன உணர்வு இருக்கவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவிலும், ஆஸ்திரியாவிலும் வாழ்ந்த ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். அந்தக் காலத்தில் அதுவே நாகரிகமடைந்த மொழியாக கருதப் பட்டது. இன்றைக்குப் பலர் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது மாதிரி, அன்றைய ஐரோப்பிய மேட்டுக்குடியினர் பிரெஞ்சு பேசுவதில் பெருமைப் பட்டனர். இன்றைய ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் உத்தியோகபூர்வ ஜெர்மன் மொழியாக உள்ள ஹோக் டொய்ச் (உயர்ந்த ஜெர்மன்) பிரெஞ்சு மொழியின் நிழலில் வளர்ச்சி அடைந்தது.

"ஜெர்மன் ஷேக்ஸ்பியர்" என்று அழைக்கப் படக் கூடிய இலக்கிய மேதை கோதே கூட பிரெஞ்சு மொழியை உயர்வாகக் கருதினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த நெப்போலியன் போர்களின் போது ஜெர்மனி முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்காக எல்லா ஜெர்மனியர்களும் நெப்போலியனை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதவில்லை. உண்மையில் நவீன ஜெர்மனியின் அடித்தளம் நெப்போலியனால் (ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்) இடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நெப்போலியன் காலத்தில் இன்றைய ஜெர்மனியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய "ரைன் சமஷ்டிக் குடியரசு" உருவானது. அங்கு நிலப்பிரபுக்களின் அதிகாரம் பறிக்கப் பட்டது. சட்டத்தின் ஆட்சி ஏற்பட்டது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற நடைமுறை வந்தது.

1848 ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு புரட்சி நடந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளை பின்பற்றிய ஜெர்மன் மத்தியதர வர்க்கத்தினரின் புரட்சி. அவர்கள் அமெரிக்கப் புரட்சியையும் முன்மாதிரியாகப் பார்த்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு: 
- மக்கள் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். 
- அரசமைப்பு சட்டம் எழுதப்பட வேண்டும். 
-பிரஜைகளின் தனி மனித உரிமைகள் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும். 
- தடையற்ற ஊடகச் சுதந்திரம் வேண்டும். 

பெர்லினில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னூறு பேரளவில் கொல்லப் பட்டனர். அதன் விளைவாக ஜெர்மன் புரட்சி தோல்வியுற்றது. இருப்பினும் அரசு முன்பு போல இயங்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற அமைப்பில் ஆரம்பத்தில் பழமைவாதக் கட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வீற்றிருந்தனர். சில வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப் பட்ட சோஷலிசக் கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தேசியவாதம் தோன்றியது. அது மொழி அடிப்படையிலான கொள்கையை முன்வைத்தது. வாரிசு உரிமை அடிப்படையில் ஆளும் மன்னர் பரம்பரைக்கு பதிலாக, ஜெர்மன் மக்களே ஜெர்மனியை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அந்தக் காலத்தில் தேசியவாதக் கொள்கை முற்போக்கானதாக கருதப்பட்டது. லிபரல் சித்தாந்தத்தை பின்பற்றியது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை ஆண்ட மன்னர்கள் தேசியவாதத்தை கண்டு அஞ்சினார்கள்.

தேசியவாதத்திற்கு இடம் கொடுத்தால் தமது அதிகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று மன்னர்கள் அஞ்சினார்கள். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் காலம் மாறிவிட்டிருந்தது. கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த புரூசிய, ஆஸ்திரிய மன்னர்கள் ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக ஜெர்மன் பேசும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அது ஜெர்மன் தேசியவாதத்தின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

Sunday, October 06, 2019

ஏன் "திராவிட மொழிகள்" என்று சொல்ல வேண்டும்?


அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.

ஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை! அவர்களது மொழியில் "டொய்ச்" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் "டொய்ச் லாந்து" (Deutschland).

ஆகவே "ஜெர்மனிய மொழிகள்" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே "பிரஷிய டொய்ச்" (Preußisch), மேற்கே "நீடர் (தாழ்ந்த) டொய்ச்" (Niederdeutsch), தெற்கே "ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் "நெடர்லான்ட்ஸ்" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் "ஆபிரிக்கான்ஸ்" (Afrikaans) மொழி.

இன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.

தமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.

பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.

அதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.

வரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.

Saturday, March 30, 2019

"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்" - இது ஒரு ஜெர்மன் கதை!

இது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: 
  • அரசியல் படுகொலைகள். 
  • இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். 
  • ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். 
  • ஏக‌ பிர‌திநிதி உரிமை கோர‌ல். 
  • தேசியவாத கொள்கை உட‌ன்பாடு கொண்ட‌ பிற‌ இய‌க்க‌ங்க‌ள் மீதான‌ த‌டை. 
  • ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை. 

இவை இருப‌துக‌ளில், முப்ப‌துக‌ளில் ஜேர்ம‌ன் வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற்ற‌ அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ள் அல்ல‌து ச‌ம்ப‌வ‌ங்க‌ள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப் படவில்லை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத் தான் எழுதப் பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப் படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். "அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்" மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, "இனத் துரோகிகளை களையெடுப்பது" அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.

நாஸிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்து தான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்த படியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி- தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.

ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப் பட்ட படியால்,OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப் பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் "அமைப்புக் குழு". தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.

அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே(Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப் படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப் படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, "துரோகிகளுக்கு மரணதண்டனை" என்பது தான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.

1921 - 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350 க்கும் மேற்பட்ட "எதிரிகள்" அல்லது "துரோகிகள்" OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப் பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.

அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்(Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்த படியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப் பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலிப் பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட "துரோகிகளில்" முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.

ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரி தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ்  சுட்டுக் கொல்லப் பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்த படியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.

இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் பொலிசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் பொலிஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து பொலிசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.

இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஸிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் "தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்" என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப் பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், "மாவீரர்களின்" சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். "தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்" புகழாரம் சூட்டினார்.

முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.

ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஸிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.

ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவுசெய்யப் பட்டிருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஸிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஸிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஸிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப் பட்டார். நாஸிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.

"நீளமான கத்திகளின் இரவு" (Nacht der langen Messer, 30 June - 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப் பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப் பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.

ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.

நாஸிகள் அல்லாத ஏனைய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில் தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும் தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகாத் தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார். 

அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு  வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஸிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஸி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

இது ஒரு ஜெர்மன் கதை.

Sunday, March 10, 2019

ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்

9 நவம்பர் 1918, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மன் தேசியக் கொடி இறக்கப்பட்டு, செங்கொடி ஏற்றப் பட்டது. அந்த நகரங்களில் "Räte" எனும் தொழிலாளர் மன்றங்கள் (ரஷ்யாவில் சோவியத் மாதிரி) உருவாகி இருந்தன.

நீங்கள் இந்த வரலாற்றுத் தகவல்களை இதற்கு முன்னர் கேள்விப் பட்டிரா விட்டால் ஆச்சரியப் படாதீர்கள். புதிய தலைமுறை ஜெர்மனியர்களுக்கு கூடத் தெரியவிடாமல் மூடி மறைக்கப் படுகிறது. ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

நவம்பர் 1918, முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த காரணத்தால், ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் இராணுவம், அப்போது தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை ஜெர்மன் மக்கள் போரை விரும்பவில்லை. பசி, பட்டினியால் வாடிய மக்களிடம் தேசியப் பெருமிதம், இனவுணர்வு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால், அன்றைய ஜெர்மனி முழுவதும் போருக்கு எதிரான குரல்களே அதிகமாக கேட்டன.

4.11.1918, வட ஜெர்மனியின் துறைமுக நகரமான 'கீல்" (Kiel) பதற்றமாக காட்சியளித்தது. சுமார் ஐயாயிரம் பேர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் கைகளில் செங்கொடிகள் பறந்தன. "சமாதானமும் உணவும் வேண்டும்!", "அப்பாவிகளை விடுதலை செய்!" போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன. அவர்கள் கீல் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வடக்கே உள்ள கீல் நகரை அண்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும், ஜெர்மன் கடற்படையும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தப் போரில் ஜெர்மனிக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜெர்மன் தளபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மாலுமிகள் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர். ஊரில் தமது உறவுகள் பசியால் வாடிக் கொண்டிருக்கையில், தாம் இங்கே போரிடுவது யாருக்காக என்று குமுறினார்கள்.

தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்பட மறுத்த மாலுமிகள், இயந்திரங்களை நிறுத்தி, கப்பல்களை கரைக்கு கொண்டு வந்தனர். கலகம் செய்த குற்றச்சாட்டில், 47 மாலுமிகள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப் பட்ட மாலுமிகளின் விடுதலையை வலியுறுத்தி, சக மாலுமிகள் மட்டுமல்லாது கப்பல் கட்டும் தளத்தில் இருந்த தொழிலாளர்களும் சேர்ந்து போராடினார்கள்.

தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சோஷலிச அரசியல் ஆர்வலர்கள் அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான USPD உறுப்பினர்களாக இருந்தனர். சிறையில் இருந்த 47 மாலுமிகளை விடுதலை செய்வதற்காக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்கரார்கள் கடற்படை முகாமை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கடற்படை அதிகாரி, கூட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

புரட்சியில் முதல் களப்பலியான தோழர்களின் மரணத்தைக் கண்டு புரட்சியாளர்கள் பின்வாங்கவில்லை. மாலுமிகள் இன்னும் பல போர்க் கப்பல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிறு ஆயுதங்களை கைப்பற்றினார்கள். அந்த ஆயுதங்களை கொண்டு கீல் நகரில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் கொள்ளையிடப் பட்டன. ஒரு சில மணிநேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. முன்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்து தடுத்த கடற்படை முகாம் அதிகாரி, வேறு வழியின்றி சிறை வைத்திருந்த மாலுமிகளை விடுதலை செய்தார்.

அப்போது சமூக ஜனநாயகக் கட்சி தான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோஷலிச குறிக்கோள் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியாக ஆரம்பிக்கப் பட்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD), புரட்சி நடந்த நேரத்தில் கொள்கையற்ற முதலாளித்துவ அரசியல் கட்சியாக சீரழிந்து போயிருந்தது. லெனின் அவர்களை "திருத்தல்வாதிகள்" என்று குறிப்பிட்டு பேசினார்.

SPD எப்போதோ தனது கொள்கையை கைவிட்டு விட்டு, சாதாரண அரசியல் கட்சியாகி ஜெர்மன் தேசியத்தை ஆதரித்தது. "தாய்நாட்டை பாதுகாக்கும் போருக்கு" முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. "ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது சோஷலிசக் கொள்கைக்கு முரணானது" என்று கூறி போரை எதிர்த்த கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர். "நான் இங்கே ஜெர்மானியர்களை மட்டுமே பார்க்கிறேன், கட்சிகளை அல்ல." என்று சக்கரவர்த்தியால் புகழப் படும் அளவிற்கு, சமூக ஜனநாயக் கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முண்டு கொடுத்து வந்தது.

ஜெர்மன் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடிய சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நொஸ்கே, கீல் நகர புரட்சியை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப் பட்டார். நொஸ்கே ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்க கைக்கூலி என்ற உண்மையை அறியாத தொழிலாளர்கள், அவரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதே நொஸ்கே தான் புரட்சியை காட்டிக் கொடுத்து, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடப் போகிறார் என்ற உண்மையை, அன்றைய தினம் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதைப் போன்று நடித்த நொஸ்கே, புரட்சியை நீர்த்துப் போக வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். "பிரிட்டன் படையெடுக்கும் அபாயம்" இருப்பதாக பயமுறுத்தி, மாலுமிகளை மீண்டும் போர்முனைக்கு அனுப்பும் வகையில் உரையாற்றினார். நொஸ்கேயின் துரோகம் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால், அது கீல் நகரில் மட்டுமே சாத்தியமானது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த சில நாட்களில் கடலை அண்டிய பிற நகரங்களுக்கும் புரட்சி பரவி விட்டது.

5 நவம்பர், லுய்பேக் (Lübeck) நகரம் புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 6 நவம்பர், குக்ஸ்ஹாவன் (Cuxhaven), பிறேமன்(Bremen), அத்துடன் ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரமான ஹம்பேர்க்(Hamburg) ஆகிய நகரங்கள் தொழிலாளர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. ஹம்பேர்க் நகரத்தின் பிராந்திய பத்திரிகை "செங்கொடி" என பெயர் மாற்றப் பட்டு வெளியிடப் பட்டது.

அடுத்து வந்த சில நாட்களில் இன்னும் பல வட- மத்திய ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்களும், படையினரும் கிளர்ந்தெழுந்து அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றினார்கள். தொழிற்சாலைகளும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அங்கெல்லாம் தொழிலாளர் மன்றங்கள் (சோவியத்) ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின. 8 நவம்பர், மேற்கு ஜெர்மன் நகரமான கெல்ன் (ஆங்கிலத்தில்: Cologne) வரை புரட்சி பரவி விட்டது. அதையடுத்து பிராங்க்பெர்ட், மியூனிச், லைப்சிக், மக்டபூர்க் ஆகிய பிற நகரங்களும் புரட்சியாளர்களின் வசமாகின. 9 நவம்பர், ரயில் வண்டிகளில் செங்கொடி ஏந்திய தொழிலாளர்கள் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

9.11.1918, பெர்லின் நகரம். ஜெர்மன் புரட்சிக்கு தலைமை தாங்கிய நாயகனை காண்பதற்காக மக்கள் வெள்ளம் கூடி இருந்தது. நகர மத்தியில் இருந்த பெருந் தெரு ஒன்றில், கனரக வாகனம் ஒன்றின் பின்பகுதி பெட்டி மேடை போன்று மாற்றப் பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய மனிதர் "புதிய ஜெர்மனி உருவாகி விட்டது" என்று முழங்கினார். அவர் பெயர் கார்ல் லீப்னெக்ட். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர். "சோஷலிசம் வாழ்க, சர்வதேச பாட்டாளிவர்க்கம் வாழ்க!" கார்ல் லீப்னெக்ட் முழக்கமிட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

கார்ல் லீப்னெக்ட், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அன்று அவர் உறுப்பினராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. லீப்னெக்ட் மட்டுமல்ல, ரோசா லக்சம்பேர்க், இன்னும் பல கட்சி உறுப்பினர்களும் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளாக இருந்த காலத்தில், "சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி"(USPD) பெயரில் இயங்கினார்கள்.

9 நவம்பர் 1918 ம் ஆண்டு, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கார்ல் லீப்னெக்ட், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையிலேயே அன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசு இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பகரமான சூழ்நிலையில் இரண்டு அறிவிப்புகள் வந்தன. ஒன்று, கம்யூனிஸ்டுகளின் "சோஷலிச ஜெர்மன் குடியரசு". மற்றது, சமூக ஜனநாயகவாதிகளின் "சுதந்திர ஜெர்மன் குடியரசு".

சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரீட்ரிஷ் எபேர்ட்(Friedrich Ebert), பிலிப் ஷைடேமன்(Philipp Scheidemann) இருவரும் சேர்ந்து இடைக்கால அரசை பொறுப்பேற்பதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் அறிவித்தனர். ஜெர்மனியில் "போல்ஷெவிக் தீவிரவாதம்" வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். அந்த நேரம், கார்ல் லீப்னெக்ட் போன்ற கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் "ஸ்பார்ட்டசிஸ்ட் குழு" என்ற பெயரில் இயங்கி வந்தனர். அவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து லெனினின் போல்ஷெவிக் கட்சியினர் ஆதரவளித்து வந்தனர்.

அடுத்து வந்த இரண்டு மாதங்களும் பெர்லின் நகரில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. வன்முறையும், கலவரமும் நாளாந்த நிகழ்வுகளாகின. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டன. வீதிகளில் தடையரண்கள் போட்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாக்கப் பட்டன. அங்கு ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் காவல் கடமையில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்நாட்டுப் போர், அதாவது வர்க்கப் போர் நிதர்சனமானது.

புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஸ்பார்ட்டசிஸ்ட் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடைமுறையில் உள்ள அரசை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளிவர்க்க அரசை கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால், அது ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இருக்காது என்றனர். (அதாவது, இடைக்கால அரசை ஆயுதமுனையில் தூக்கியெறிய விரும்பவில்லை.) அவர்களுடன் முரண்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் இருந்தனர். அனேகமாக, போரை முடிவுக்கு கொண்டு வருதல், பஞ்சத்தை போக்குதல் போன்ற உடனடி கோரிக்கைகளின் அடிப்படையில் தான் அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.

இதே நேரத்தில், பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்தன. சமூக ஜனநாயகக் கட்சியினர் "போல்ஷெவிக் தீவிரவாதத்தை" ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடாப்பிடியாக நின்றனர். டிசம்பர் மாதக் கடைசியில், பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேறிய கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் போன்றோர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) ஸ்தாபித்தனர். அவர்கள் அடி மட்ட மக்கள் திரளில் இருந்து சோஷலிசப் புரட்சி முன்னெடுக்கப் பட வேண்டும் என்று அறிவித்தனர். "சோஷலிசத்திற்கான போராட்டம் மக்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாளிக்கு எதிரான பாட்டாளிவர்க்கத்தின் போராட்டமாக நடக்க வேண்டும்." என்ற அறைகூவலுக்கு மக்கள் அணிதிரண்டனர். நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. பெர்லின் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சமர்கள் நடந்தன.

1919 ம் ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியிலும் புரட்சி வெடித்து அது விரைவில் சோஷலிச நாடாகும் வாய்ப்புகள் தென்பட்டன. சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற அரசாங்கத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக ஜனநாயகத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்த தீவிர தேசியவாதிகளான இராணுவ அதிகாரிகள் தமது இருப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். புரட்சி வென்றால் அவர்களது தலைகளும் உருளும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

பிரைகொர்ப்ஸ் (Freikorps) எனப்படும் தேசியவெறி கொண்ட கூலிப்படை இராணுவம் பெர்லினுக்கு வரவழைக்கப் பட்டது. அவர்கள் ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் மோதினார்கள். கடுமையான துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் தொழிற்சாலைகள், அரச கட்டிடங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். செங்கொடிகள் கிழித்தெறியப் பட்டன. இருப்பினும், பல கட்டிடங்களில் மறைந்திருந்த புரட்சியாளர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், பெர்லின் நகரம் முழுவதும் யுத்தகளமாக காட்சியளித்தது.

10-13 மார்ச், புரட்சியாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட கிழக்கு பெர்லின் பகுதியை பிரைகொர்ப்ஸ் படையினர் சுற்றி வளைத்தனர். சில அற்பக் காரணங்களுக்காகக் கூட பொது மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் மாதக் கணக்காக கிடைக்காத சம்பளப் பணத்தை கேட்டு தகராறு செய்த முப்பது மாலுமிகள், சுவரில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப் பட்டனர். பெர்லின் நகரில் மட்டும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது பத்தாயிரம் பேரளவில் படுகொலை செய்யப் பட்டனர். புரட்சியாளர்கள் மட்டுமல்லாது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், ஆதரவு தெரிவித்த மக்களும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

ஏற்கனவே, 15 ஜனவரி 1919 அன்று, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் பிரைகொர்ப்ஸ் படையினரால் கடத்தப் பட்டு, சில மணிநேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டதும் கம்யூனிஸ்ட் கட்சி சிதறிப் போனது. தொழிலாளர்களின் புரட்சிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்த சக்தி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. இதனால், பெர்லினில் மட்டுமல்லாது ஜெர்மனி முழுவதும் புரட்சி நசுக்கப் பட்டு விட்டதாக அரசாங்கம் பெருமூச்சு விட்டது. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் ஓயவில்லை. அவர்கள் தோற்கடிக்கப் படவுமில்லை. தலைநகரை தவிர்த்து, ஜெர்மனியின் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.

மிக விரைவில், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் தனது முட்டாள்தனமான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 1920 ம் ஆண்டு, பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரின் ஆயுதங்களை களையப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரைகொர்ப்ஸ் படையினர் பெர்லின் நகரில் ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்கள். இதனால், ஜெர்மன் அரசாங்கம் தெற்கே உள்ள ஸ்டுட்கார்ட் நகருக்கு இடம்பெயர்ந்தது.

சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுத்தனர். அவர்களது அறைகூவலை ஏற்று, பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுமளவிற்கு, அப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது. அதே நேரம், ரோசா லக்சம்பேர்க் போன்ற லெனினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வேறுவழியின்றி ரஷ்ய போல்ஷெவிக் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் வந்தது. லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தோற்கடிக்கப் படவில்லை என்ற உண்மை வலதுசாரி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்னும் சில வருடங்களில் ரஷ்ய போல்ஷேவிக்குகளின் உதவியுடன், ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அன்று கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவர் தான் அடோல்ப் ஹிட்லர். இராணுவத்திற்குள் இருந்த வலதுசாரிகளும், முன்பு புரட்சியை நசுக்கிய பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரும் ஹிட்லரை ஆதரித்தார்கள்.

இதற்குப் பிறகு நடந்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மர்மமான முறையில் பாராளுமன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அந்த சம்பவத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று பழிபோடப் பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆதரவாளர்களும் வேட்டையாடப் பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் பிற்காலத்தில் தடுப்பு முகாம்களில் நச்சுப் புகை அடித்துக் கொல்லப் பட்டனர்.

நாஸி சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சோவியத் யூனியன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா,அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். குறிப்பாக, சோவியத் யூனியனுக்கு அகதிகளாக சென்றவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் திரும்பி வந்தனர். பலர் ஏற்கனவே சோவியத் செம்படையில் சேர்ந்து நாஸிப் படையினருக்கு எதிராக போரிட்டிருந்தனர். அந்த ஜெர்மன் அகதிகள் தான் சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு (DDR) அடித்தளம் இட்டனர்.


Sunday, July 09, 2017

G20: ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம்!



முதலாளித்துவத்திற்கு எதிராக போராடியவர்களை,
தெருவில் அடித்து நொறுக்கும் ஜெர்மன் பொலிஸ். 


G20 மகாநாட்டை எதிர்த்து நடந்த கலவரங்கள் தொடர்பாக நான் இட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு:
ஹம்பூர்க், ஜெர்மனி. G20, ஜேர்ம‌னி, ஹ‌ம்பூர்க்: முத‌லாளித்துவ‌த்திற்கு எதிரான‌ போர்க்க‌ள‌ம். 
- வானில் வ‌ட்டம‌டிக்கும் அமெரிக்க‌ இராணுவ‌ ஹெலிகாப்ட‌ர்க‌ள். 
- டிர‌ம்ப் த‌ங்குவ‌த‌ற்கு எந்த‌க் ஹோட்டேலிலும் இட‌ம் கிடைக்க‌வில்லை! (வ‌ர‌வேற்பில்லை) அத‌னால், அர‌ச‌ விருந்தின‌ர் மாளிகையில் த‌ங்க‌ வைக்க‌ப் ப‌ட்டுள்ளார். 
- வ‌ங்கிக‌ள் த‌ம‌து ஊழிய‌ர்க‌ள‌ விடுமுறை எடுக்க‌ச் சொல்லி இருக்கின்ற‌ன‌. 
- க‌டைக‌ள் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. 
(5 July at 07:29 )


 "Welcome to Hell", "ந‌ர‌க‌த்திற்கு ந‌ல்வ‌ர‌வு"! - ஜேர்ம‌னியில் ந‌ட‌க்கும் முத‌லாளித்துவ‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள்: 

உல‌கில்‌ 20 தொழிற்துறை வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ நாடுக‌ள் ஒன்று கூடும் G20 ம‌காநாடு இன்று ஜேர்ம‌னி, ஹம்பூர்க் ந‌க‌ரில் ந‌டைபெறுகின்ற‌து. உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்று கூடி வ‌ர்த்த‌க‌ம் ப‌ற்றிப் பேச‌வுள்ள‌ன‌ர்.

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் பூட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ 
வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள். 
கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்று 
பலகை அடித்து மூடி இருக்கிறார்கள்.
ஜேர்ம‌னியின் இர‌ண்டாவ‌து ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், பார‌ம்ப‌ரிய‌மாக‌ ஒரு இட‌துசாரி ந‌க‌ர‌ம். பெருமள‌வில் க‌ம்யூனிஸ்டுக‌ள், அனார்க்கிஸ்டுக‌ள், தீவிர‌ இட‌துசாரிக‌ளைக் கொண்ட‌ ந‌க‌ர‌ம். 

முத‌லாம் உல‌க‌ப் போர் முடிவில், வெற்றிக‌ர‌மான‌ பாட்டாளிவ‌ர்க்க‌ப் புர‌ட்சி ந‌ட‌ந்து ஹ‌ம்பூர்க் சோவிய‌த் அமைக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. ஜேர்ம‌னியின் பிர‌தான‌மான‌ துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், இப்போதும் இட‌துசாரிக‌ளின் கோட்டையாக‌ க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து. 

ம‌காநாட்டுக்கும், முத‌லாளித்துவ‌த்திற்கும் எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்துவ‌த‌ற்காக‌ ஒரு இல‌ட்ச‌ம் ஆர்வல‌ர்க‌ள் ந‌க‌ர‌த்தில் கூடி இருக்க‌லாம் என்றும், அதில் ஆயிர‌க் க‌ண‌க்கானோர் வ‌ன்முறையில் ஈடுப‌ட‌லாம் என‌வும்‌ காவ‌ல்துறை க‌ண‌க்கிட்டுள்ள‌து. 

அங்கு எந்த‌ நேர‌மும் க‌லவ‌ர‌ம் ந‌ட‌க்க‌லாம் என்ற‌ அச்ச‌ம் கார‌ண‌மாக‌ வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. பொதும‌க்க‌ளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்க‌ள். 

பொலிஸ் வ‌ண்டிக‌ள் தாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. ர‌யில் த‌ண்ட‌வாள‌ங்க‌ளை தொடுக்கும் மின்சார‌ வ‌ய‌ர்க‌ள் நாச‌மாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் ந‌க‌ரில் ர‌யில் போக்குவ‌ர‌த்து பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. 
(6 July at 11:16)


"They are coming", "அவர்கள் வருகிறார்கள்" : 
போர்வெறி பிடித்த, நவ தாராளவாத 
கொடுங்கோலர்கள் வருகிறார்கள்.
முத‌லாளித்துவ‌ எதிர்ப்பு கிள‌ர்ச்சிக்கு அஞ்சி,  ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ப‌த‌ற்ற‌ம் நில‌வுகிற‌து. ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்த‌த் த‌டை. ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ந‌க‌ர‌ம் முழுவ‌தும் இராணுவ‌ம‌ய‌மாகிற‌து. பொலிஸ் வாக‌ன‌ங்க‌ளை விட‌ வேறெந்த‌ வாக‌ன‌மும் தெருவில் காண‌ முடிய‌வில்லை. 

அமைதியாக‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌விருந்த‌வ‌ர்க‌ளுக்கு பொலிஸ் அனும‌தி த‌ர‌ ம‌றுத்த‌து. த‌ண்ணீர் பீர‌ங்கிக‌ள் பொருத்திய‌ வாக‌ன‌ங்க‌ளை கொண்டு வ‌ந்திருந்த‌து. ஆர்ப்பாட்ட‌க் கார‌ர்க‌ள் பொலிசாரை தாக்கிய‌தாக‌ சொல்லி த‌ண்ணீர் பாய்ச்சி கூட்ட‌த்தை க‌லைத்த‌து. த‌ம்மை நோக்கி போத்த‌ல்க‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக,‌ பொலிஸ் த‌ன‌து தாக்குத‌லுக்கு நியாய‌ம் க‌ற்பித்த‌து. ஆனால் ஒரு குடிகார‌ன் ம‌ட்டுமே ஒரேயொரு போத்த‌லை வீசிய‌தாக‌ நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் தெரிவித்த‌ன‌. 

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் பொலிஸ் வ‌ன்முறையை எதிர்த்து பெரிய‌தொரு ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணி ந‌ட‌ந்தது. இத‌ற்கிடையே, அய‌ல் நாடுக‌ளில் இருந்து ஜேர்ம‌னிக்கு செல்ல‌ முய‌ன்ற‌ அர‌சிய‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ள் த‌டுத்து வைக்க‌ப் ப‌ட்டு, பாஸ்போர்ட் ப‌றிமுத‌ல் செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிய‌ வ‌ருகின்ற‌து. 
(6 July at 23:00)


ச‌க்திவாய்ந்த‌ 20 உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்றுகூடியுள்ள‌ ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ச‌ட்ட‌ம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள‌து. தெருக்க‌ளில் த‌டைக‌ள் போட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் உடைத்து சூறையாட‌ப் ப‌டுகின்ற‌ன‌. பொலிசார் குறைந்த‌து நூறு பேரை கைது செய்துள்ள‌ன‌ர். 

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரின் சில‌ ப‌குதிக‌ளை பொலிஸ் க‌ட்டுப்பாட்டில் வைத்திருக்க‌ முடிய‌வில்லை. இராணுவ‌ம் வ‌ர‌வ‌ழைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கு இர‌ண்டாவ‌து நாளாக‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌க்கிற‌து. இட‌துசாரிக‌ளின் கோட்டைக‌ளாக‌ க‌ருத‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் பொலிஸ் வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து வீதித் த‌டைக‌ள் போட‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. 

ப‌ல‌ இட‌ங்க‌ளில் BMW, பென்ஸ் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ள் எரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. ந‌க‌ர‌ம் எங்கும் புகை மூட்ட‌மாக‌ காண‌ப் ப‌டுகின்ற‌து. ஜேர்ம‌ன் ஊட‌க‌ங்க‌ள் "உள்நாட்டுப் போர்" என்று வ‌ர்ணிக்கும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்து வ‌ருகின்ற‌து. 
(7 July at 22:59)




ஹ‌ம்பூர்க் ந‌க‌ர‌ம் பற்றி எரியும் காட்சி. 
"முற்ப‌க‌ல் செய்யின் பிற்ப‌க‌ல் விளையும்." - பழமொழி 

 இல‌ங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற‌ நாடுக‌ளில் பேர‌ழிவு த‌ந்த‌ போர்களை உருவாக்கி, இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அக‌திக‌ளாக‌ அலைய‌விட்ட‌வ‌ர்க‌ள், G20 என்ற‌ பெய‌ரில் கூட்ட‌ம் போடுகிறார்க‌ள். இன்னும் எத்த‌னை பேரைக் கொன்றொழிக்க‌ திட்ட‌ம் போடுகிறார்க‌ளோ தெரிய‌வில்லை. 

அதைக் கண்டு இரத்தம் கொதிக்காதவர்கள், அதையெல்லாம் க‌ண்டுகொள்ளாத‌வ‌ர்க‌ள், "ஐயோ... காரை எரிக்கிறார்க‌ள். க‌டைக‌ளை உடைக்கிறார்க‌ள்." என்று கூப்பாடு போடுகிறார்க‌ள். த‌ங்க‌ள் ந‌ல‌னை ம‌ட்டும் பெரிதென‌ எண்ணும் ப‌ச்சையான‌ சுய‌ந‌ல‌வாதிக‌ள். 

 முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி காரணமாக, இல‌ட்ச‌க் கணக்கானோர் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். வேலை‌யிழ‌ந்த‌வ‌ர்க‌ள் எத்தனை இலட்சம்? அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கோப‌த்தை வெளிப்ப‌டுத்தும் போது இப்ப‌டித் தான் இருக்கும். இது இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தார்மீக‌க் கோப‌ம். த‌ங்க‌ளை இந்த‌ நிலைக்கு த‌ள்ளிய‌ முத‌லாளிக‌ள், அர‌சுக்கு எதிரான‌ கோபம். இது முத‌லாளித்துவ‌த்தின் அவமானகரமான தோல்வி.

"தினை விதைத்த‌வ‌ன் தினை அறுப்பான். வினை விதைத்த‌வ‌ன் வினை அறுப்பான்." - பழமொழி

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுச்சி கொள். 
சோஷலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்.

Tuesday, June 06, 2017

கோடை விடுமுறையில் சிறார்களுக்கான பொதுவுடைமை ஒன்றுகூடல்


ஐரோப்பிய அரசியல் கட்சிகள், கோடை கால விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஒன்றுகூடல்களை நடத்துவது வழக்கம். அதில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொடர்புள்ள அமைப்புகள் பங்குபற்றும். அரசியல் கலந்துரையாடல்கள் மட்டுமல்லாது, இசை நிகழ்ச்சிகள், பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

ஜெர்மனியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD இன் கோடை கால ஒன்றுகூடலில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. (3-4 ஜூன் 2017) அங்கு வருபவர்கள் தமது கூடாரங்களை கொண்டு வந்து புல்தரையில் தங்க வேண்டும். நாங்களும் ஒரு கூடாரத்தை கொண்டு சென்று தங்கினோம். அது இயற்கையோடு ஒன்றுகலந்து வசிப்பதைப் போலிருந்தது. மழை, வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டோம்.

Camping எனப்படும் கூடாரத்தில் தங்கும் அனுபவம் எனக்கும் புதிது. நானும் எனது மகனும் ஒரு கூடாரத்தில் தங்கி இரண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். ஜெர்மனி முழுவதிலும் இருந்து, நூற்றுக் கணக்கான குடும்பங்கள், பிள்ளைகளுடன் வந்து தங்கி இருந்தனர். முதல் நாள் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் கலந்து கொண்டனர். பலர் கைக்குழந்தைகளையும் எடுத்து வந்திருந்தனர்.


இறுதி நிகழ்வாக, முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்ததை போன்று, சிறுவர்களுக்கான Rotfüchse பயனீர் (Pioneer = சாரணர்கள்) அமைப்பின் அணிநடை இடம்பெற்றது. சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று, சில பருவ வயது இளைஞர்கள் மேள தாளத்துடன் முன்னே செல்ல, சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். உலகில் நடக்கும் போர்களுக்கு எதிரான உரையாற்றினார்கள்.

இதனை சில வலதுசாரிகள் "சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அவதூறு செய்யலாம். போரினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக சிறுவர்கள் பேசுவது "துஸ்பிரயோகம்" என்றால், "இலட்சக் கணக்கான மக்கள் பலியாகக் காரணமான போர்கள் புனிதமானவையா?"   என்ற கேள்வி எழுகின்றது.


மரப் பலகைகளை கொண்டு சிறுவர்கள் தயாரித்த விளையாட்டுப் புகையிரத வண்டி கண்ணைக் கவருவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. "புரட்சிகளே வரலாற்றின் ரயில் எஞ்சின்கள்" என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் பொறிக்கப் பட்ட போஸ்டரும் ஒட்டப் பட்டிருந்தது.

நூறு வருடங்களுக்கு முன்னர், லெனினும் தோழர்களும் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி, பின்லாந்து வழியாக ரஷ்யாவுக்கு புகையிரத வண்டியில் சென்றடைந்தனர். அந்த குறிப்பிட்ட நிகழ்வு ரஷ்யப் புரட்சியின் தொடக்கமாக அமைந்திருந்தது. 

அதே போன்ற புகையிரத வண்டியை தான் விளையாட்டுத் திடலில் வடிவமைத்திருந்தனர். சிறுவர்கள் மகிழ்வுடன் அதிலேறி விளையாடினார்கள். புகையிரதவண்டி பூர்த்தியானதும், பழைய புரட்சிப் பாடல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை ஒருவர் கிட்டார் இசைத்துப் பாடினார்.

அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்ட போதிலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொள்ளும் பொதுநல மனப்பான்மையை காண முடிந்தது. எல்லோரும் நாகரிகமாக நடந்து கொண்டனர். யாருமே மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப் படவில்லை.



ஜெர்மனியின் மேற்குப் பகுதியில், நெதர்லாந்து எல்லையோரம் உள்ள கேள்சென்கிர்ஷன் (Gelsenkirchen)  நகரில், வழமையாக குதிரையோட்ட போட்டிகள் நடக்கும் திடலில் நடந்த ஒன்றுகூடலுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சம்பந்தப் படாத வெளியாட்களும் வந்திருந்தனர். உள்ளூர் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தை பார்த்து விட்டும் சிலர் வந்திருந்தனர்.

அங்கு நடந்த பொதுக் கூட்டங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கலந்து கொண்ட ரஷ்யப் பெண்மணி ஒருவர், சோவியத் யூனியன், ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். ஆனால், MLPD நடத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இவர் போன்ற கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலரும் அங்கு வந்து தமது தப்பெண்ணங்களை மாற்றிக் கொண்டனர்.

அங்கு வந்திருந்த எல்லோரும் ஜெர்மானியர்கள் அல்ல. MLPD கட்சியுடன் தொடர்புடைய நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த மாவோயிச கட்சிகளை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர். அதை விட, குர்திஸ்தான், துருக்கி, பிலிப்பைன்ஸ், சிரியா, ஆப்கானிஸ்தான், டோகோ (ஆப்பிரிக்கா) என்று பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்டெபன் என்கல் 


MLPD கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் சுரங்கத் தொழிலாளியுமான ஸ்டெபன் என்கல் கலந்து கொண்ட கூட்டம் இடம்பெற்றது.


வோல்க்ஸ்வாகன் மக்கள் நீதிமன்றம் 
அது மட்டுமல்லாது, வோல்க்ஸ்வாகன் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கும் மக்கள் நீதிமன்ற அமரவும் இடம்பெற்றது. இதில் ஜெர்மனியின் போராட்டக் குணாம்சம் மிக்க தொழிற்சங்கமும் கலந்து கொண்டது.


ஒன்றுகூடலுக்கு வரும் ஒவ்வொருவரும், வாசலில் நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்னர், உணவுத் தேவைக்காக கூப்பன்கள் வாங்க வேண்டும். அதாவது, தம்மிடமுள்ள யூரோ நாணயத்தை கொடுத்து கூப்பன் துண்டுகளை வாங்க வேண்டும். அது மட்டுமே திடலில் செல்லுபடியாகும்.

உணவுச்சாலையில் சாப்பிடவும், குடிபானங்கள் அருந்தவும், புத்தகங்கள், கைப்பணிப் பொருட்களை வாங்குவதற்கும், அந்த கூப்பன் துண்டுகள் தேவை. அவற்றை விற்கும் கடைகள், நாம் கொடுக்கும் கூப்பன் துண்டுகளை கொடுத்து காசாக மாற்றிக் கொள்ளும்.

எதற்காக காசுக்கு பதிலாக கூப்பன் துண்டுகள் பாவிக்கப் படுகின்றன? இதில் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தெரிய வருகின்றது. பொதுவுடைமை சமுதாயத்தில் பணம் பாவனையில் இருக்காது. அதற்கு முன்னோடியாக இந்த நடைமுறை பின்பற்றப் படுகின்றது.

இரண்டாவதாக, குறிப்பிட்ட கட்சி மட்டுமல்ல, அந்தக் கட்சியுடன் நல்லுறவைப் பேணும் பிற அமைப்புகளும்,  தனிநபர்களும் தமது கடைகளை போட முடியும். ஆனால், வருமானத்தில் ஒரு பகுதி கட்சி நிதிக்கு செலுத்த வேண்டும்.

பணம் பாவனையில் இருந்தால் அதைக் கண்காணிப்பது கடினம். விற்பனையாளர்கள் எவ்வாறேயினும் வாடிக்கையாளரின் கூப்பன் துண்டுகளை காசாக்க வேண்டி இருப்பதால், வியாபாரத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டப் பட்டது என்பது தெரிய வரும்.

நமது தாயகத்தில் இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் இந்த உதாரணத்தை நடைமுறைப் படுத்தலாம். இதன் மூலம், மக்கள் விடுமுறையை பிரயோசனமான முறையில் கழிப்பதுடன், பொதுவுடைமை சமுதாயம் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவும் வழிவகுக்கும்.

******

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD, எஸ்சென் நகரில் நடத்தி வரும் சோஷலிசத்திற்கான வருடாந்த பேரணி.



சர்வதேச தோழர்கள் கலந்து கொண்ட மேடையில் இசைக்கப் பட்ட பிரபல பாஸிச எதிர்ப்புப் பாடல்:  

துருக்கி/குர்திய இசை நடனம்:

Saturday, January 14, 2017

"நாஸிகளும் தேசியவாதிகளே!" வலதுசாரி பயங்கரவாதிகள் பற்றிய ஆவணப்படம்



ஐரோப்பாவை பொருத்த‌வ‌ரையில் தேசிய‌வாத‌ம், இன‌வாத‌ம், நிற‌வாத‌ம் மூன்றுக்கும் இடையில் பெரிய‌ வித்தியாச‌ம் இல்லை. நாங்க‌ள் யாரை எல்லாம் இன‌வாதிக‌ள் என்று அடையாள‌ம் காண்கிறோமோ, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை தேசிய‌வாதிக‌ள் என்று அழைத்துக் கொள்கிறார்க‌ள். இது தான் உல‌க‌ ய‌தார்த்த‌ம்.

ஜேர்ம‌னியில் இய‌ங்கிய‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மான‌ "National Socialist Underground" (NSU) ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. (NSU-Complex: Nazi German Underground)

அதிலிருந்து சில‌ முக்கிய குறிப்புக‌ள்: 

-  நாஸிக‌ளும் தங்க‌ளை "தேசிய‌வாதிக‌ள்" என்று தான் சொல்லிக் கொண்ட‌ன‌ர்.  ஜேர்ம‌னியில் ந‌ட‌ந்த‌ ந‌வ‌ - நாஸிக‌ளின் ஊர்வ‌ல‌த்தில் எடுத்த‌ வீடியோக் காட்சியில், ஒரு ப‌தாகையில் "தேசிய‌வாத‌த்திற்கு ஆர்வ‌ல‌ர்கள் தேவைப் ப‌டுகின்ற‌ன‌ர்" என‌ எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. 

- முன்னாள் சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில் நடந்த "கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி" பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக பிரச்சாரம் செய்யப் பட்டது. "அது மக்கள் எழுச்சி அல்ல... நாஸி ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்." என்று கிழக்கு ஜெர்மன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அன்று யாரும் அதை நம்பவில்லை.

- உண்மையில், ந‌வ‌ நாஸிக‌ள் அல்ல‌து தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளே, அன்று கிழக்கு ஜெர்மன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌ ஜேர்ம‌னி ஒன்று சேர்ந்த‌து. அந்தத் தகவலை, ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்கும் முன்னாள் ந‌வ‌ நாஸி த‌ன‌து வாக்குமூல‌த்தில் குறிப்பிடுகின்றான்.

- முன்ன‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் தம் மீது மிகக் கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டதாக, நவ நாஸி தனது வாக்குமூலத்தில் குறிப்பிடுகின்றான். இர‌க‌சிய‌ப் பொலிஸ்அடிக்கடி தமது வீடுகளை சோதனையிட்டு கைது செய்து சிறையில் அடித்ததாக தெரிவித்தான். ஆனால், ஒன்றிணைந்த‌ ஜேர்ம‌னியிலும் தாம் வ‌ர‌வேற்க‌ப் ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்டான்.

- ந‌வ‌ நாஸி அமைப்புக‌ளில் சேர்பவர்கள், பெரும்பாலும் இட‌துசாரிக‌ளுக்கு எதிரான‌ வெறுப்புண‌ர்வு கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள்.  தெருக்க‌ளில் காணும் இட‌துசாரிக‌ளுக்கு அடிப்ப‌தென்றால் அல்வா சாப்பிடுவ‌து மாதிரி.பல தடவைகள் கைகலப்புகள் நடந்துள்ளன.

- ஜேர்ம‌ன் நாஸிக‌ள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொட‌ர்புக‌ளை ஏற்ப‌டுத்திக் கொண்டுள்ளன‌ர். இங்கிலாந்தின் Blood and Honour என்ற நவ நாஸி இயக்கத்தின் ஜெர்மன் கிளை, வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் தடை செய்யப் பட்டது.

- ந‌வ‌ நாஸிக‌ள் மிகவும் இர‌க‌சிய‌மாக‌ இராணுவ‌ப் ப‌யிற்சி எடுக்கிறார்க‌ள். கிழக்கு ஜெர்மனியில் கைவிடப் பட்ட முன்னாள் சோவியத் படை முகாம்களில் பயிற்சி எடுப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டது. அவர்கள் இராணுவப் பயிற்சியுடன் நின்று விடாது, ஆயுத‌ங்க‌ளையும் சேக‌ரிக்கிறார்க‌ள்.

- எதிர்கால‌த்தில் இன‌ப் பிர‌ச்சினை தீவிர‌ம‌டைந்து இன‌ங்க‌ளுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்கும் என்று நவ நாஸிகள் ந‌ம்புகிறார்க‌ள்.அதாவது, அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையில் போர் நடக்கும். அதே மாதிரி,ஜெர்மனியில் துருக்கியர்களுடன் போர் நடக்கும்.இது அவர்களது எதிர்பார்ப்பு.

- இன்றைய‌ ஜேர்ம‌ன் அர‌சு, நாஸிக‌ளை க‌ண்காணிப்ப‌த‌ற்காக‌ த‌ன‌து ஆட்க‌ளை ஊடுருவ‌ வைத்துள்ள‌து. நவ நாஸிகளை அரசுக்கு வேலை செய்ய வைப்பது மிகவும் இலகுவானது என்று ஓர் அரச அதிகாரி ஒத்துக் கொள்கிறார். பல அரச உளவாளிகள், பிரதானமான நவ நாஸி செயற்பாட்டாளர்களாக உள்ளனர். அரசுக்கும் அது தெரியும். ஆனால், இயக்கத்தின் தலைவர்களை கைது செய்யும் வரையில் பொறுமையாக இருப்பதாக கூறுகின்றது.

- த‌லைம‌றைவாக‌ இய‌ங்கும் ந‌வ‌ நாஸிக‌ளில் ஏராள‌மான‌ அர‌ச‌ உளவாளிக‌ள் உள்ள‌ன‌ர். இருப்பினும், அர‌சுக்கு வேலை செய்த‌ அதே ந‌வ‌ நாஸிக‌ள் தான், த‌லைம‌றைவாக‌ இய‌ங்கிய‌ NSU உறுப்பின‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் த‌சாப்த‌ கால‌மாக‌ அர‌சுக்கு தெரிய‌வில்லையாம்! (ந‌ம்ப‌ முடியுமா?)

- NSU உறுப்பின‌ர்க‌ள் மூன்று பேர் ம‌ட்டுமே என்று சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. NSU ப‌ல‌ த‌ட‌வைக‌ள் வங்கிக‌ளை கொள்ளைய‌டித்தும் பிடிப‌ட‌வில்லை. குறைந்தது பத்து வருடங்கள் கொள்ளைப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தனர். கண்காணிப்புக் கமெராக்கள் இருந்தும், கொள்ளையர்களை பிடிப்பதற்கு பொலிசிற்கு துப்புக் கிடைக்கவில்லையாம். 

-  இரண்டு ஆண் உறுப்பினர்கள், பட்டப் பகலில் நடந்த வ‌ங்கிக் கொள்ளை ஒன்றில் பொலிஸ் கண்காணிப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் ஒரு    பொலிஸ் ஹெலிகாப்டரால் விரட்டப் பட்டனர். பொலிஸ் தம்மை பின்தொடர்கிறது என்பது கொள்ளையர்களுக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் தப்பிச் சென்ற வாகனத்தினுள்  ம‌ர்ம‌மான‌ முறையில் இற‌ந்து கிட‌ந்த‌ன‌ர். 

- சம்பவ இடத்தில் இருந்திராத,  மூன்றாவ‌து ந‌ப‌ரான‌ ஒரு பெண் உறுப்பின‌ர், மறைவிடமாக பயன்படுத்தப்பட்ட வீட்டிற்க்கு நெருப்பு வைத்து விட்டு போலீஸில் ச‌ர‌ண‌டைந்தார்.(அதாவது ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டு விட்டன.)

- அந்த‌ மூவ‌ரைத் த‌விர‌ வேறு யாராவ‌து இருக்கிறார்க‌ளா? யாருக்கும் தெரியாது. அது தொட‌ர்பான‌ விசார‌ணை முடிவுக‌ள் இன்ன‌மும் மூடும‌ந்திர‌மாக‌ உள்ள‌ன‌. விசாரணையாளர்கள் சுதந்திரமாக இயங்க முடியாதவாறு மேலிடத்து உத்தரவுகள் வருகின்றன.

-  NSU பயங்கரவாதிகள், நாடு முழுவ‌தும் குறைந்தது பத்து அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்துள்ள‌னர். கொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒரு பொலிஸ் பெண்ம‌ணியை த‌விர‌ ஏனையோர் வெளிநாட்டு குடியேறிக‌ள். பெரும்பாலும் துருக்கிய‌ர்க‌ள், மற்றும் ஒரு கிரேக்க‌ர். 

- கொலை ச‌ம்ப‌ந்த‌மாக‌ துப்புத் துல‌க்கிய‌ பொலிஸ், "கிரிமின‌ல்க‌ளின் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள்" என்று அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌து. அதாவது, ஜெர்மனியில் வலதுசாரி பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை பொலிஸ் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. 

- ஒரு த‌ட‌வை கொலை ந‌ட‌ந்த‌ இட‌த்தில், அரச உளவாளி ஒருவரும்  "த‌ற்செய‌லாக‌" இருந்திருக்கிறார். கொலையை நேரில் கண்ட அந்த அர‌ச‌ உள‌வாளியிடம் பொலிஸ் சாட்சிய‌ம் எடுக்க‌வில்லை. விசேட‌ விசார‌ணைக் குழு இந்த‌ விட‌ய‌த்தை வெளிக் கொண்டு வ‌ந்த‌து. இருப்பினும், அப்போதும்  அந்த‌ நேர‌டி சாட்சி விசாரிக்க‌ப் ப‌டாத‌து ம‌ட்டும‌ல்ல‌, வேறு ப‌த‌வி கொடுத்து இட‌ம் மாற்ற‌ப் ப‌ட்டார்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, October 17, 2015

அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன?


தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.

ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.

மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.

"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.
(பார்க்க:

பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள். 

பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.

பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.

பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.

முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)

அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.

இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.

சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.


மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.

அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.