ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். இலங்கை அரசு, சிம்பாம்வே நாட்டு ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இருந்து தொன் கணக்கில் ஷெல்களை வாங்கியிருந்தது. நெடுந்தூரம் வீசக் கூடிய ஆர்ட்டிலெறி ஷெல்கள், நடந்து கொண்டிருந்த போருக்கு இன்றியமையாததாக இருந்தது. சிம்பாப்வேக்கு கடல் எல்லை கிடையாது. அதனால் அருகில் உள்ளக் மொசாம்பிக் நாட்டு துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டன. ஆயுதங்களுடன் புறப்பட்ட கப்பல் சில நாட்களின் பின்னர் மாயமாக மறைந்தது. "பெர்முடா மர்மம்" போல உலகை வியப்பில் ஆழ்த்திய "மாயக் கப்பல்" உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என்ற தகவல், சில நாட்களுக்கு பின்னர் தெரிய வந்தது. சிறி லங்கா அரசு ஆயுதம் வாங்க பணம் கொடுத்த இஸ்ரேலிய ஆயுத வியாபாரி, பின்னர் புலிகளிடம் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு விற்பனை விபரங்களை கொடுத்திருக்கிறான். மிகக் கச்சிதமாக நடந்து முடிந்த அந்த ஆயுதக் கடத்தல் நாடகம் ஒரு உண்மையை தெளிவு படுத்தியது. ஆயுதங்கள் யார் கைக்கு போகின்றது என்பது ஆயுத வியாபாரிகளுக்கு தேவையில்லாத சமாச்சாரம். அவர்களைப் பொறுத்த வரை, ஆயுதம் என்பது ஒரு விற்பனைப் பண்டம். சரக்கை விற்று லாபம் சம்பாதிப்பது மட்டுமே அவர்கள் நோக்கம். நாய் விற்ற காசு குரைக்கவா போகின்றது?
ஆயுத விற்பனையால் அமெரிக்கா என்ற தேசம் உலகில் செல்வந்த நாடாகியது. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு, பிரிட்டன் தனது காலனிகளை விட்டுக் கொடுத்தது. டியோகோ கார்சியா என்ற தீவை அமெரிக்க இராணுவத்திற்கு அடி மாட்டு விலைக்கு விற்றது. அதே போல முதலாம் உலகப்போரில் பணத்தை வாரியிறைத்த ரஷ்யாவின் சக்கரவர்த்தி சார், ஆயுதங்கள் வாங்குவதற்காக அலாஸ்கா என்ற மாநிலத்தையே அமெரிக்காவுக்கு தாரை வார்த்தார். அலாஸ்கா எண்ணெய் தரும் கற்பகதரு என்ற உண்மை அன்று சார் மன்னனுக்கு தெரிந்திருக்கவில்லை. இவையெல்லாம் ஆயுதம் வாங்கி ஆண்டியாகிப் போன உலக வல்லரசுகளின் வரலாறு. உலகப் போர்களினால் வல்லரசுகளே காணாமல் போகின்றன. சாதாரண ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் தாக்குப் பிடிக்குமா?
ஐரோப்பியர்களுக்கு, இரண்டாம் உலகப்போரில் நன்றாக அடிபட்ட பின்னர் ஞானம் பிறந்தது. ஐரோப்பிய நாடுகள் தமக்குள்ள கூடிப் பேசின. "நாம் எதற்காக எமது அனைத்து வளங்களையும் அநியாயமாக போரில் செலவிட வேண்டும்? மொத்த சனத்தொகையில் அரை வாசியாவது போரினால் அழிந்து விட்டன. அதனால் எமக்குள் இனிமேல் ஒற்றுமை அவசியம்." நூறாண்டுகளாக பகைவர்களாக இருந்த ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பழசை மறந்து நண்பர்களானார்கள். கடல் கடந்து வாழும் தூரத்து மச்சான் அமெரிக்காவும் புதிய உறவுகளை அங்கீகரித்து, "நேட்டோ" என்ற இராணுவக் கூட்டமைப்பினுள் கொண்டுவந்தது.
உலகப்போருக்கு பின்னர் தோன்றிய "பனிப்போர்" என்ற கெடுபிடிப்போர் அமெரிக்க ஆயுத விற்பனையை மேலும் அதிகரிக்கவே செய்தது. மாஷல் உதவி என்ற பெயரில் கோடிக்கணக்கான டாலர்கள் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகித்த நாடுகள் அமெரிக்க ஆயுதங்களை வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் ஒரு தொகை மாஷல் நிதி அமெரிக்காவுக்கே திரும்பிச் சென்றது. இதைவிட புதிதாக தோன்றிய ஐரோப்பிய ஆயுதத் தொழிற்சாலைகள் அமெரிக்க ஆயுதங்களுக்கான பகுதிகளை உற்பத்தி செய்து வழங்கின. அவ்வாறு ஆரம்பித்த அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய கொள்கை, அண்மைய நிதி நெருக்கடிக்குள்ளும் இழுத்து விட்டது.
எழுபதுகளில் அரேபிய வளைகுடா நாடுகளில் எண்ணெய் துரித அபிவிருத்திக்கு வழிகோலியது. சும்மா படுத்திருக்க கிடைத்த எண்ணெய் விற்ற லாபம், அரபு நாடுகள் வளர்ச்சியடைய உதவியது. புதிய பணக்காரர்களைப் பார்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரே வயிற்றெரிச்சல். "எம்மிடம் எண்ணெய் விற்று சுரண்டிய பணம், அதாவது நமது பணம் அநியாயமாகப் போகப்போகிறதே." என்ற கவலை வாட்டியது. நல்ல வேளையாக இஸ்லாமியப் புரட்சி நடத்த ஈரானுக்கும், பக்கத்தில் இருந்த ஈராக்கிற்கும் இடையில் போர் மூண்டது. அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு போரை தாக்குப்பிடிக்க ஈராக்கிற்கு (மறைமுகமாக ஈரானுக்கும்) ஆயுத விநியோகம் அமோகமாக நடந்தது. அதே நேரம் ஈரான் பூச்சாண்டி காட்டி, சவூதி அரேபியா போன்ற வளைகுடா அரபு நாடுகளுக்கு நவீனரக ஆயுத தளபாடங்கள் விற்கப்பட்டன. இவ்வாறாக எண்ணெய் வாங்க கொடுத்த பணம் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றது.
அமெரிக்க-ஐரோப்பிய நிறுவனங்கள் சாதாரண ஆயுதங்களை மட்டும் விற்கவில்லை. இரசாயன ஆயுதங்களையும் விற்றார்கள். அன்றைய ஈராக் சர்வாதிகாரி சதாம் ஹுசைன், “அரேபியர்களின் மானங்காக்க ஈரானுடன் மல்லுக்கட்டிய மாவீரன்” என வர்ணிக்கப்பட்ட காலம் அது. சதாம் கையில் கிடைத்த இரசாயனக் குண்டுகள், ஈரானிய, குர்திய மக்கள் மீது பரீட்சித்துப் பார்க்கப்பட்ட கொடுமை அரங்கேறியது. 2004 ம் ஆண்டு, அதாவது சதாமை அகற்ற அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த பின்னர் தான், இரசாயன குண்டுகளை விற்ற ஆயுத வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். அது கூட ஒரு கண் துடைப்பு நாடகமே. நெதர்லாந்தை சேர்ந்த அந்த வியாபாரி பலிக்கடாவாக்கப் பட்டு, மேற்குலக அரசாங்கங்களின் பங்களிப்பு மறைக்கப் பட்டது.
மேற்குலகின் ஆயுத வியாபாரம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. முதலாளித்துவ வளர்ச்சியுடன் கூடப்பிறந்த அம்சம். பண்டைய காலங்களில் பிற நாடுகளை கொள்ளையடித்து செல்வம் சேர்ப்பதற்காக யுத்தங்கள் நடத்தப்பட்டன. முதலாளித்துவம் கூடவே (ஆயுத) வியாபாரத்தையும் சேர்த்துக் கொண்டது. "போர் என்பது வெல்வதற்காக நடத்தப்படுவதில்லை." என்றார் ஒரு போரியல் அறிஞர். எந்தப் போரிலும் நன்மை அடையும் கூட்டம் ஒன்றிருக்கும். மக்கள் அழிவதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில் ஒருவரின் அழிவில் இன்னொருவர் வாழும் வேதனை விளையாட்டு இது.
ஆப்பிரிக்காவை காலனிப்படுத்த ஆயுதங்கள் பெரிதும் உதவின. ஐரோப்பாவில் இருந்து சென்ற கப்பல்களில் ஆயுதங்கள் சரக்குகளாக ஏற்றப்பட்டன. ஐரோப்பியருடன் நட்புறவு கொண்ட ஆப்பிரிக்க இனக்குழுக்களுடன் பண்டமாற்று செய்து, அவர்கள் பிடித்துக் கொடுத்த அடிமைகளை வாங்கிச் சென்றார்கள். இவ்வாறு ஐரோப்பியரிடம் ஆயுதம் வாங்கி, பிற இனத்தவர்களை அடிமைகளாக பிடித்துக் கொடுத்தவர்களின் பேரப்பிள்ளைகள் இன்று பல ஆப்பிரிக்க அரசாங்கங்களில் வீற்றிருக்கின்றனர். காலனிய நாடுகள் "விடுதலை" பெற்ற போது, புதிய ஆட்சியாளர்கள் ஐரோப்பியர் விட்டுச் சென்ற ஆயுதங்களையும் வரதட்சணையாக பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் எல்லாம் காலனிய எஜமானனுக்கு பிடித்தமான ஆட்சியாளர்கள். விரும்பத்தகாத சக்திகள் ஆட்சியை கைப்பற்றிய போது மாத்திரம், கனரக ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. சுருக்கமாக, முன்னாள் காலனிய நாடுகளில் ஆயுதங்கள் யார் கைகளில் இருக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள்.
ஏகாதிபத்திய விசுவாசிகளாக ஞானஸ்நானம் பெற்ற உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஒரு வேளை தேசாபிமானம் காரணமாக முரண்பட்டால் என்ன செய்வது? அதற்கும் இருக்கிறது வழி. ஆட்சியாளருடன் விரோதம் கொண்ட எதிராளியை தேடிப்பிடித்து, வேண்டியளவு ஆயுதங்களை இலவசமாகவோ, கடனாகவோ கொடுத்து விட வேண்டும். திடீர் சதிப்புரட்சிகள், அல்லது ஆயுதப்போராட்டம் மூலம் எதிராளிகள் ஆட்சியைப் பிடிப்பார்கள். ஐவரி கோஸ்ட், சியாரா லியோன், லைபீரியா போர்கள் அண்மைய உதாரணங்கள். அநேகமாக எல்லா பிரெஞ்சு மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகள் எங்கும், பிரான்ஸ் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளை ஊக்குவித்தது. உள்ளூர் யுத்த பிரபுக்கள், வாங்கிய ஆயுதங்களுக்கு பண்டமாற்றாக, தம்நாட்டு இயற்கை வளங்களை விலை பேசுவார்கள். மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் போர் என்றால் ஆயுத சந்தைக் காட்டில் மழை தான். சில வேளை, மனித உரிமை மீறல் காரணம் காட்டி ஐ.நா. மன்றம் ஆயுதம் விற்கத்தடை போடலாம். அப்போதெல்லாம் இடைத்தரகர்கள் களத்தில் தோன்றுவார்கள்.
ஆயுதங்கள் விற்கும் இடைத் தரகர்கள் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட கம்பனிகளின் தலைமை நிர்வாகிகள். கவர்ச்சிகரமான பெயர்களுடன் சர்வதேச நகரங்களின் வணிக மையங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளனர். சாதாரண வர்த்தக ஸ்தாபனம் போல காட்சி தரும் கட்டிடங்களில் கொலைக்கருவிகளை விற்பதற்கான பேரம் பேசப்படும். வாடிக்கையாளர்கள் ஆப்பிரிக்காவில் இருந்தாலும், ஆசியாவில் இருந்தாலும், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள தலைமையகம் தான் சரக்கை அனுப்புவதற்கு இறுதி முடிவை எடுக்கும். அதன் அர்த்தம் சரக்கு(ஆயுதங்கள்) அமெரிக்க தயாரிப்பு என்பதல்ல. வாடிக்கையாளர்கள் கேட்கும் விலைக்கேற்ப ஆயுதங்கள் கையிருப்பில் உண்டு. மலிவு விலை கலாஷ்னிகோவ் துப்பாக்கி தேவைப்படுவோருக்கு, உக்ரையினில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் எதுவும் சாத்தியம்.
உலகில் பல மரணங்கள் சிறு ஆயுதங்களால் இடம்பெறுவதாக அரசுசாரா நிறுவனம் ஒன்று அழுத்தம் கொடுத்தது. இதனால் ஏ.கே. 47 இரக துப்பாக்கிகளை தடை செய்வதற்கு மேற்குலக நாடுகள் முயன்றன. ஏ.கே. 47 (சீனாவில் T - 56 ) வகை துப்பாக்கிகளை தயாரிப்பது ரஷ்யாவும், சீனாவும் என்பதை மேற்குலகால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எத்தகைய காலநிலைக்கும் உகந்த, இலகுவாக பயன்படுத்தக் கூடிய ரைபிள்களை கண்டுபிடித்த ரஷ்யரான கலாஷ்னிகோவ், தனது பெயர் ஒரு காலத்தில் உலகப் புகழ் அடையுமென்று அன்று எதிர்பார்த்திருக்க முடியாது. எழுபதுகளில் விடுதலை போராட்ட இயக்ககங்களின் மனங்கவர் ஆயுதமான கலாஷ்னிகோவை (ஏ.கே.47 ), இன்று சிறார் போராளிகளும் இலகுவாக பயன்படுத்துகிறார்கள். இதனால் சிறார் போராளிகளை தடை செய்யக் கோரும் மனித உரிமைத் தீர்மானங்கள் மறைமுகமாக கலாஷ்னிகோவ் விற்பனையையும் குறைக்கப் பார்க்கின்றன.
ஆயுத உற்பத்தி ஜாம்பவானான அமெரிக்காவும் இலகுரக ஆயுதங்களை தயாரித்துள்ளது. M-16 என்ற ரைபிள், ஏ.கே.47 வகையை சேர்ந்தது. இருப்பினும் அவை குளிர் வலைய நாடுகளுக்கே உகந்தது என்று கூறி, அமெரிக்காவின் கூட்டாளிகளே நிராகரித்து விட்டனர். மேற்குலகம் தடைசெய்ய விரும்பும் சிறு ஆயுதங்களில் இன்னொன்று ஆர்.பி.ஜி. ரொக்கட் லோஞ்சர்கள். வாகனங்களை, கட்டிடங்களை தகர்க்கக் கூடிய இலகுரக ஆயுதம். நோஞ்சானான ஒருவர் கூட சுலபமாக காவிச் சென்று இயக்கலாம். அது கூட ரஷ்ய கண்டுபிடிப்பு தான். புஜபலமுள்ள இரண்டு பேர் தூக்க வேண்டிய அமெரிக்காவின் பசூக்கா ரக ஆயுதத்தை விட சிறந்தது என்பதால் சந்தை சூடு பிடித்தது. மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் எல்லாம் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அறுபது வருடங்களைக் கடந்த பின்னரும் சந்தையில் அவற்றிக்கு கேள்வி அதிகம்.
ஆர்.பி.ஜி. மேற்குலகில் "தாங்கி எதிர்ப்பு ஆயுதம்" என்றும் அழைக்கப்படுகின்றது. நிலக்கண்ணி வெடியிலும் அசையாத தாங்கிகளை தூரத்தில் இருந்து ஏவப்படும் ஆர்.பி.ஜி. ராக்கெட்கள் தகர்த்து விடுகின்றன. சமீபத்திய ரஷ்ய தயாரிப்பான ஆர்.பி.ஜி. 29 , ஈராக்கிய போராளிகளால் வெற்றிகரமாக பாவிக்கப்பட்டன. பாதுகாப்பானது என கருதப்பட்ட அமெரிக்க நவீன கவச வாகனங்களை ஆர்.பி.ஜி. குண்டுகள் தகர்த்தன. லெபனானில் ஹிஸ்புல்லா என்ற கெரில்லா இயக்கம், மாட்சிமை தங்கிய இஸ்ரேலிய இராணுவத்தை ஆர்.பி.ஜி. துணையுடன் அடித்து விரட்டியது. இதனால் உலகில் அதி நவீன ஆயுதங்களை வைத்திருப்பதால், எவராலும் எதிர்க்க முடியாது என இறுமாப்புக் கொண்டிருந்த அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிப்போயின. ரஷ்யாவில் ஆர்.பி.ஜி. உற்ப்பத்தி செய்யும் நிறுவனம் மீது மறைமுக அழுத்தங்களைக் கொடுத்தன. ரஷ்ய மொழியை தாய்மொழியாகக் கொண்ட இஸ்ரேலிய அரசியல் பிரமுகர்கள் இதற்கென அனுப்பி வைக்கப்பட்டனர். ரஷ்ய ஜனாதிபதி மட்டத்தில் கொடுத்த அழுத்தம் காரணமாக, அரபு நாடுகளுக்கு ஆயுதம் விற்பதில் பல தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பல வளர்ந்த நாடுகளிலேயே இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்துறைப் புரட்சியின் பக்க விளைவு அது. நவீன ஆயுதங்களை வடிவமைக்க பல விஞ்ஞானிகளின் மூளை பயன்படுகின்றது. அதிக தாக்குதிறன் வாய்ந்த கருவிகள் பல புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு மெருகூட்டப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வகை ஆயுதத்தை ஒரே நிறுவனம் தயாரிப்பதாக நினைப்பது தவறு. உதாரணமாக ஏவுகணையில் பொருத்தப்படும் ராடார் கருவி வேறொரு நட்பு நாட்டில் உள்ள "அப்பாவி" நிறுவனத்தால் தயாரிக்கப்படலாம். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சர்வதேச பங்குச்சந்தைகளில் சூடான பங்குகளை விற்றுக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய மேற்கத்திய வங்கிகள் பொது மக்களின் ஓய்வூதியக் கட்டுப் பணத்தை ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. எங்கோ ஒரு ஆப்பிரிக்க, ஆசிய நாட்டில் ஒன்றுமறியா மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடன் எந்தவித சம்பந்தமில்லாதது போல மேற்கத்திய வயோதிபர்கள் உல்லாசமாக வாழ வழி சமைத்துக் கொடுக்கப்படுகின்றது. ஆமாம், ஒருவர் துன்பத்தில் இன்னொருவர் இன்பம் காணும் விசித்திரமான உலகம் இது.
நிச்சயமாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஆயுத சந்தையில் குதித்துள்ளமை எதிர்பார்க்கக் கூடியது தான். பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், செக் குடியரசு, நோர்வே, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தான். எல்லோரும் அதிக லாபம் தரும் பண்டத்தை சந்தையில் விற்பதற்கு போட்டி போடுகின்றனர். ஆயுதங்களை விற்பது மேற்குறிப்பிட்ட தேசங்களின் அரசுகள் என அர்த்தப் படுத்திக் கொள்வது தவறானது. தாராளவாத பொருளாதாரக் கொள்கை அரச தலையீடற்ற வர்த்தகத்தை வேண்டி நிற்கின்றது. ஐ.நா. மன்றம் தடைச் சட்டம் போடும் போதெல்லாம், ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தடையை நீக்க சொல்லி தாம் சார்ந்த அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. வர்த்தக நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்ட இந்த நிறுவனங்கள், எந்த அரசியல் சார்புக் கொண்டனவல்ல. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் சீன நிறுவனமொன்று அரசுக்கும், புலிகளுக்கும் ஆயுதங்களை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
யுத்தங்களற்ற, ஆயுதங்களற்ற உலகத்தை கனவு காணும் சமாதான விரும்பிகள், மக்கள் மனதை மாற்றுவதன் மூலம் புதியதோர் உலகம் படைக்க எண்ணுகின்றனர். இத்தகைய சமாதான இயக்கங்களை அரசுகளும் நிதி கொடுத்து ஆதரிக்கின்றன. இவற்றிற்கு அரசு அளிக்கும் நிதியை விட, ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்கும் மானியம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சமாதான ஆர்வலர்கள் பின்பற்றும், இயேசுவின் தத்துவமான: "ஆட்சியாளர்கள், ஆளப்படுவோர் அனைவர் மனதிலும் அன்பை விதைத்து சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது" இன்று வரை தோல்வியை தான் தழுவியுள்ளது. அதற்கு காரணம் சர்வதேச மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் சிக்கலான பொருளாதாரம். நிச்சயமாக அதிக லாபம் தரும் ஆயுத உற்பத்தியில் முதலைப் போட்டு பணத்தை பெருக்க எந்த முதலீட்டாளர் தான் விரும்பமாட்டார்? வழக்கமாக தொழிலாளரின் உழைப்பை சுரண்டி, உபரி மதிப்பில் லாபம் காணுவது வணிக நிறுவனங்களின் வாடிக்கை. ஆயுத தொழிற்சாலைகள் அதற்கும் ஒரு படி மேலே சென்று, போரில் மக்களைக் கொல்வதின் மூலம் லாபம் பார்க்கின்றன. மனிதர்கள் மரணிப்பதால் தான் சவப்பெட்டி செய்பவனின் பிழைப்பு நடக்கின்றது. அதே போல உயிர்களைக் கொல்லும் ஆயுதங்களை விற்பதால், உலகின் ஒரு பகுதி சனத்தொகை வசதியாக வாழ்கின்றது. ஆயுதங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் மூலதனத் திரட்சி, உலகெங்கும் உள்ள நடுத்தர வர்க்கத்தினரது ஊதியத்தை உயர்த்தி வைத்துள்ளது. வெறும் அன்பினால் உலகை மாற்றலாம் எனக் கருதும் எத்தனை பேர் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தயாராக இருக்கிறார்கள்?
______________________________________________________________
"உன்னதம்" (நவம்பர் 2009) இதழில் பிரசுரமாகியது.
8 comments:
உலகம் தோன்றிய நாளில் இருந்தே இது தான் நீதியாக்கப்பட்டுள்ளது. ஒரு சாரார் வாழவும், ஒரு சாரார் சாகவும்... அதற்கு மதங்கள் அழகாக துணை நிற்கின்றன. நிற வேறுபாடும் அதற்கு துணை நிற்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் மத்திய கிழக்காசியாவில் யுத்தம் என்றால் நமக்கு தெரியாது. ஆனால் இன்றோ மேற்குலக நாடுகளுக்கு ஒரு சிக்கல் என்றால்- அது ஏனையோரையும் பாதிக்க வேண்டும் என்று
மேற்குலகம் நினைக்கிறது. மேற்குலகம் ஏனைய நாடுகளால் சீரழிக்கப் படும் காலம் வரும். பணம் கொழுத்த வெள்ளைக்கார நாடுகள், ஏனைய நாட்டு மக்களின் உயிரோடு விளையாடி பார்க்கிறது. ஒரு வேளை மேற்குலக நாடுகள் இந்த வேலையை செய்யாது போனால் - கிழக்காசிய நாடுகளோ, மேற்காசிய நாடுகளோ அல்லது ஆப்பிரிக்க நாடுகளோ செய்யும். செய்து தான் ஆக வேண்டும். அது தான் நியதி. ஒருவனின் அழிவில் தானே
இன்னொருவனின் வளர்ச்சி. மனிதர்களின் அழிவை மனிதர்கள் பார்க்கிறார்கள். சாம்ராஜ்யங்களின் அழிவை சாம்ராஜ்யங்கள் பார்க்கிறது. மதங்களின் அழிவை மதங்கள் பார்க்கிறது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஆயுத விந்பனைகளும், மனித அழிவுகளும் தொடரும். ஆயுதவிற்பனையில் இந்தியாவின பங்கு எதுவும் இல்லையா?
//ஆயுதவிற்பனையில் இந்தியாவின பங்கு எதுவும் இல்லையா?//
இருக்கிறது. ஆனால் உலக சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு மிகக்குறைவு.
indha marana viyabarigal kuriththu vegujana oodagangal yedhuvume solvadhillai enbadhal paranthupatta makkalukku idhu patri yedhuvume therivadhillai.ungal pani sirakka vazhthukkal.
-jeevagiridharan
நன்றி, ஜீவா. எனது கட்டுரைகள் பல வாசகர்களின் பெரு மதிப்பைப் பெறுவதன் காரணமும் அதுதான்.
//ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சர்வதேச பங்குச்சந்தைகளில் சூடான பங்குகளை விற்றுக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய மேற்கத்திய வங்கிகள் பொது மக்களின் ஓய்வூதியக் கட்டுப் பணத்தை ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.//
சில நிறுவனங்களின் பெயரை குறிப்பிட முடியுமா? ஆர்வமாய் உள்ளது. நன்றி.
மேலும், ஆயுத வியாபாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட Lord of War என்ற திரைப்படத்தை பார்த்தது இக்கட்டுரையை புரிந்து கொள்ள மிகவும் உதவியது.
பிரதீப், அனேகமாக எல்லா பெரிய வங்கிகளும் அப்படித் தான். மக்களின் ஓய்வூதியப் பணம் ஒரு நிலையான வைப்பு என்பதாலும், ஆயுதத்தில் முதலீடு செய்வது அதிக லாபம் கொடுப்பதாலும் வங்கிகள் அப்படி நடந்து கொள்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள முன்னைய பதிவொன்றை பார்க்கவும்: "மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்" http://kalaiy.blogspot.com/2008/10/blog-post_19.html
தகவலுக்கு நன்றி :)
Post a Comment