Monday, December 01, 2008

இலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்


பல்லினக் கலாச்சாரம் கொண்ட இலங்கைத் தீவில், இப்போதும் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இன்றும் பலர் இலங்கையில் மொழியையும், இனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர். சிங்கள மொழியும், தமிழ் மொழியும் பல்வேறு பூர்வீக கலாச்சாரக் கூறுகளை கொண்ட மக்களை தன்னுள் உள்வாங்கியுள்ளன. சரித்திர காலத்திற்கு முந்திய தீபெத்தோ-இந்திய இனத்தை சேர்ந்த நாகா மக்கள் பற்றி தகவல்கள் குறைவு. ஆனால் பண்டைய இராசதானிகளின் அரசியல் தொடர்புகளால், தமிழகத்தில் இருந்து சென்று தென்னிலங்கையில் குடியேறி, தற்போது சிங்களவர்களாகி விட்ட மக்களைப் பற்றிய சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிய ஐரோப்பியர் வருகை இனவிகிதாசாரத்தை மேலும் பன்முகப்படுத்தியது எனலாம். இலங்கையை படை எடுத்து கைப்பற்றிய போர்த்துகேய கடற்படை வீரர்கள் ஆண்களாக இருந்ததால், உள்நாட்டு பெண்களை திருமணம் செய்து பறங்கியர் என்ற புதிய இனத்தை உருவாக்கினர். போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை தமது அமெரிக்க காலனிகளுக்கு கொண்டு சென்று குடியேற்றியது போல, இலங்கைக்கும் கொண்டு வந்தனர்.

இலங்கையின் மேற்குக் கரையில் புத்தளம் பகுதியில், விடுதலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளின் வம்சாவளியினர், இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் "காபிர்" என்று பெயரிடப்பட்ட இந்த ஆப்பிரிக்க இன மக்கள், போர்த்துகேய, ஆப்பிரிக்க மொழிச் சொற்கள் கலந்த கிரயோல் மொழி பேசுகின்றனர். மேலும் "பைலா" என்ற ஆப்பிரிக்க வேர்களைக் கொண்ட இசை நடனமும் அவர்களது கலாச்சார தனித்துவத்திற்கு சாட்சி.

அண்மையில் தன்னார்வ குழு ஒன்றின் அனுசரணையின் பேரில், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்கள் சிலர், தமது நாட்டின் ஆப்பிரிக்க வம்சாவளி பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்த வீடியோவை இந்தப் பதிவில் இணைத்துள்ளேன். மேலதிக தகவல்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள உசாத்துணை தொடுப்புகளை பார்வையிடலாம்.


KAFFIR COMMUNITY IN SRI LANKAஉசாத்துணை தொடுப்புகள்:
Sri Lanka Kaffir people
Kaffirs in Sri Lanka - Descendants of enslaved Africans
________________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

11 comments:

கானா பிரபா said...

அட இவ்வளவு தகவல்கள் நான் பிறந்த நாட்டிலா? நன்றி நண்பா அருமையான தொகுப்பு

vasuhi said...

பலருக்கு தெரியாத விடயங்களை எழுதி வருகிறீர்கள்.
உங்களுடைய Article வாசித்த பின்பு தான் ஆபிரிக்க வம்சாவளி மக்கள் எமது நாட்டில் வசிப்பது எனக்கு தெரியும்.
உங்களுடைய தகவல்களுக்கு நன்றி.
நிறைய எழுதவும்.

கலையரசன் said...

கானா பிரபா, வாசுகி உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி. நிச்சயமாக பலருக்கு தெரியாத விடயங்களை வெளிக்கொணருவதே எனது பதிவுகளின் நோக்கம். தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

kumar said...

உங்களின் தகவலை வாசித்த எனக்கு சிறுவயதில் எனது தாயார் சொன்ன விடயம் ஞாபகத்துக்கு வருகிரது. நானும் அதே புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவன். நாங்கள் அவர்களை காபிரி என்று தான் சொல்வோம். அவர்களுடன் பேசியும் உள்ளேன். சரளமாக சிங்களமொழியில் உரையாடுவார்கள்.இப்பொலுது எனது தாயார் கூறிய விடயம் வெள்ளைகாரர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களை சங்கிலியால் பிணைத்துதான் கொண்டு போவார்கலாம். அவர்களுக்கு வாயிலும் பூட்டு போட்டிருக்குமாம். அதற்கு காரணம் தங்களுடன் நன்றாக பழகிய ஒரு வெள்ளைக்கார பெண்குழந்தையை கொன்று தின்று விட்டார்களாம். இது எவ்வளவு உண்மை என்பதில்சந்தேகம் உண்டு. நான் சின்னவயதில் அவர்களை கண்டால் சற்று தூரமாகவே செல்வேன்.

வதீஸ்வருணன் said...

வணக்கம் கலையரசன் உங்களது இந்தப் பதிவை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்களது நோக்கம் மிகவும் சிறந்தது. வாழ்த்துகள் இவற்றை வெளிகொண்டுவந்த யா தொலைக்காட்சியில்தான் நான் வேலை செய்கிறேன் மேற்படி காப்பிரிய இனத்தவர்களை பற்றிய இந்தக் கதை மிகவும் சுவாரசியமானது. இவ்வாறான பலருக்கு தெரியாத பலவற்றை நாங்கள் எங்களுடைய நிகழ்ச்சியின் மூலம் வெளிகொண்டு வந்திருக்கிறோம். உங்கள் பதிவில் இவற்றை இணைத்ததற்கு மிகவும் நன்றிகள்
எங்களுடைய இணைய முகவரி
www.yatv.net
எனது மின்னஞ்சல் முகவரி
vathees@yatv.net

நிமல்-NiMaL said...

இது எம்மில் பலரும் அறிந்திரா தகவல்கள்... பகிர்வுக்கு நன்றிகள்..!

கலையரசன் said...

குமார், வதீஸ்வருணன், நிமல் உங்கள் எல்லோருடைய வருகைக்கும் நன்றி.

வதீஸ்வருணன் உங்களுடைய மின்னஞ்சலை தந்தமைக்கு நன்றி. வெகு விரைவில் தொடர்பு கொள்கிறேன். இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் செய்யாத அருமையான பணியை நீங்கள் செய்கின்றீர்கள். வாழ்த்துகள்.

PRAKASH said...

பைலா இசை நடனம் சிங்கள இனத்தவர்களது என்பதாகத்தானே அடையாளப்படுத்த்ப்பட்டிருந்தது

Anonymous said...

Thanks for the post. I would like to know more minority communities in sri lanka, except Tamil and Muslim. I have some details. If you have further details, i'd like to read.

Riyas Mohamed said...

உங்களுடைய Article வாசித்த பின்பு தான் ஆபிரிக்க வம்சாவளி மக்கள் எமது நாட்டில் வசிப்பது எனக்கு தெரியும்.
உங்களுடைய தகவல்களுக்கு நன்றி.பைலா இசை நடனம் சிங்கள இனத்தவர்களது என்பதாகத்தானே அடையாளப்படுத்த்ப்பட்டிருந்தது..

கலையரசன் said...

இங்கே குறிப்பிடப்படும் ஆப்பிரிக்க வம்சாவளியினர், இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருபவர்கள். அனேகமாக, ஆப்பிரிக்க வம்சாவளியினரில் பெரும்பான்மையானோர், சிங்களவராகவோ, தமிழராகவோ அல்லது முஸ்லிமாகவோ மாறி விட்டார்கள். அவ்வாறு "இனம் மாறாமல்" எஞ்சியவர்களை பற்றி தான் இந்தக் கட்டுரை. மேலும் பைலா என்பது போர்த்துக்கேயர் மூலம், சிங்களவர்கள் கற்றுக் கொண்ட இசை, நடனம் ஆகும். பைலா என்பது போர்த்துக்கீசிய சொல்லான Bailar என்பதில் இருந்து வந்தது. பைலார் என்றால் "நடனம் ஆடுதல்" என்று அர்த்தம்.