Sunday, April 13, 2008

தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்

"ஒரு முக்கியமான தகவலை நான் சொல்ல விரும்புகின்றேன். கியூபா துருப்புகள் அங்கோலாவில் இருந்த போது, அந்த நாடு (அன்றைய நிறவெறி) தென் ஆப்பிரிக்க இராணுவ படையெடுப்பிற்கு உட்பட்டிருந்தது. அதே நேரம் அமெரிக்கா சில அணு குண்டுகளை, ஹிரோஷிமா-நாகசாகி மீது போட்ட அதே குண்டுகளை, பாசிச நிறவெறி தென் ஆப்பிரிக்கவிற்கு அனுப்பி வைத்தது. பலர் இன்றைக்கு மறந்து விட்டாலும், அங்கோலா போர், எட்டு அணு குண்டுகளை வைத்திருந்த, அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட நிற வெறி தென் ஆபிரிக்கவிற்கு எதிராக, கியூபா-அங்கோலா வீரர்கள் போராடினார்கள். இது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. உலகம் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை."

 - பிடல் காஸ்ட்ரோ (எனது வாழ்க்கை, என்ற சுயசரிதை நூலில் இருந்து)

1970 க்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட காலங்களில், கியூபா ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பங்குபற்றவென்று, 350000 இராணுவ வீரர்களையும், வைத்தியர்களையும், பிற தொண்டர்களையும்; அங்கோலா, நமீபியா, மொசாம்பிக், கினி பிசாவு, கேப் வெர்டே, சாவோ தோமே ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த சண்டைகளில் இதுவரை 2077 கியூபா படையினர் மாண்டுள்ளனர்.

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன், என்ற பழமொழிக்கேற்ப, அந்த நாடுகளின் விடுதலைக்கு தனது இன்னுயிரை கொடுக்க தயாராக இருந்த, ஆப்பிரிக்க கண்டதினை சேராத ஒரேயொரு நாடு, கியூபா மட்டுமே. இத்தனை தென் ஆப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பல தடவை நன்றியுடன் கூறியுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பல தடவை மேற்கத்திய நாடுகள், கியூபா உடனான உறவுகளை முறிக்க சொல்லி அழுத்தம் கொடுத்த போதும், அதை மறுத்து, பிடல் காஸ்ட்ரோ தனது ஆருயிர் நண்பன் என்று பகிரங்கமாக அறிவித்தார். தனது நாடு கியூபாவிற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதை அடிக்கடி சுட்டிக்கட்டுவார்.

"வெள்ளை நிறவெறி தென் ஆப்பிரிக்காவில் நாம் உரிமைகளற்று அடக்கப் பட்ட நேரம், நீங்கள் அவ்வரசிற்கு ஆதரவு வழங்கினீர்கள். கியூபா எமது பக்கம் நின்றது. எமக்கு உதவி செய்ய கியூபா போராளிகளை, வைத்தியர்களை, ஆசிரியர்களை அனுப்பி வைத்தது. ஒரு நாளும் அவர்கள் காலனியவாதிகளாக வரவில்லை. எமக்காக இரத்தம் சிந்தியதற்காக ஆப்பிரிக்கர்களான நாங்கள், கியூபாவிற்கு தலை வணங்குகிறோம். இந்த சுயநலமற்ற சர்வதேசியத்தை நாம் ஒரு போதும் மறவோம். " 
- இதை நெல்சன் மண்டேலா மேற்கத்தைய தலைவர்களின் முகத்திற்கு நேராகவே கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் கியூபா பல மனம் நெகிழ வைக்கும் உதவிகளை செய்துள்ளது. கியூபா சுதந்திரமடைந்து ஒரு சில வருடங்களே ஆகியிருந்தது. அறுபதுகளில் பிரெஞ்சு காலனிய ஆட்சியை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த அல்ஜீரிய போராளிகளுக்கு, கியூபா ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்தது. திரும்பி வந்த கப்பலில், போரால் பாதிக்கப்பட்டு பெற்றாரை இழந்து அனாதைகளான அல்ஜீரிய பிள்ளைகள் இருந்தனர். அந்தப்பிள்ளைகள் கியூபா பிரசாவுரிமை பெற்று, கல்வி கற்று, இன்றைக்கும் கியூபாவில் வாழ்கின்றனர். 

அதே போல 1978 ல் அங்கோலாவில் இருந்த நமீபியா அகதி முகாம் ஒன்று, தென் ஆப்பிரிக்க படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, மக்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது, கியூபா படைகள் போய் சண்டையிட்டு, அந்த அகதிகளை காப்பாற்றி கியூபா அனுப்பி வைத்தனர். அப்படி காப்பாற்றப் பட்டவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளுமடங்குவர். அந்த அகதிக் குழந்தைகளில் ஒன்று, இன்று நமீபியாவின் தூதுவர். இந்த சம்பவங்களெல்லாம் காஸ்ட்ரோ வினால், அவரது சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ("My Life, Fidel Castro", published by Allen Lane, an imprint of Penguin books)


ஆப்பிரிக்க விடுதலைபோராட்ட வரலாற்றில், அங்கோலா, நமீபியா, கினி ஆகிய நாட்டு விடுதலைப் போராட்டங்கள் மட்டுமே கியூபா விற்கு பெருமை சேர்த்த போர்கள். சோமாலியாவின் படையெடுப்பினை எதிர்த்து போரிட, எத்தியோப்பிய சென்ற போது, ஒரு பிழையான நண்பனை தெரிவு செய்ததாக பட்டது. அன்றைய எத்தியோப்பிய அதிபர் மெங்கிஸ்டுவின் கொடுங்கோலாட்சியும், எரித்திரிய சுதந்திர போராளிகளை அடக்கியதிலும், கியூபா உடன்படவில்லை. 

இதனால், அந்தப் போர் பற்றிய விபரங்களை Castro தனது நூலில் குறைத்துக் கொண்டுள்ளார். அதை போலவே, காங்கோவில் சே குவேரா ஒரு சிறு படையுடன் போய், கபிலாவின் இயக்கத்துடன் சேர்ந்த போதும் நடந்தது. முதலாவதாக கபிலா ஒரு முற்போக்குவாதியாக சேவுக்கு படவில்லை. இரண்டாவதாக கபிலாவின் படையினர், போராட தயங்கும் சுகபோகிகளாக இருந்தனர். இதனால் வெறுத்து போன சே தனது ஆப்பிரிக்க சாகசங்களை அத்தோடு முடித்து கொண்டு கியூபா திரும்பினார்.

ஆபிரிக்காவில் அப்போது போராடிய விடுதலை இயக்கங்கள், மார்க்சிய- லெனினிய சித்தந்ததை வரித்துக்கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்காவின் எ.என்.சி. கூட ஆரம்பத்தில் மார்க்சிய அடிப்படை கொண்டிருந்தது. சோவியத் யூனியன் அப்போது, காலனிய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைய விரும்பிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தாராளமாக உதவி வந்தது. ஆப்பிரிக்காவில் சோவியத் நிதியுதவி வழங்கி வந்ததுடன் , கியூபா இராணுவ உதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டது. கியூபாவில் கறுப்பினத்தவர் மொத்த சனத்தொகையில் அரைவாசி என்பதால், ஆப்பிரிக்க சென்ற படையினரில் கணிசமான கறுப்பின வீரர்கள் இருந்தனர். 

ஆரம்பத்தில், உதாரணத்திற்கு அங்கோலா போன்ற நாடுகளில், உள்ளூர் போராளிகள் தாமே முன்னணியில் நின்று சண்டை பிடிக்க வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், சில தோல்விகளை சந்தித்த பின்பு, கியூபா படைபிரிவை சுதந்திரமாக போரிட விட்டனர். கியூபா வீரர்கள் சண்டையில் காட்டிய துணிச்சல், போரில் பல வெற்றிகளை கொண்டு வந்து சேர்த்தது. Castro அந்த நூலில் சொல்வது போல, கியூபா படையினர் பல வருடங்களாக போரிட்டதின் விளைவு , நமீபியா சுதந்திரம், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியின் முடிவு என்பன சாத்தியமாகின.

இன்று மேற்கத்திய நாடுகள் (முன்னாள் காலனிய ஆட்சியாளர்கள்), ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றதற்கு பல காரணங்கள் கூறலாம். ஆனால் சுதந்திரத்திற்காக போராடிய இயக்கங்கள் பலவற்றின் அரசியல் சித்தாந்தம் "மார்க்சிச-லெனினிசமாக" இருந்த உண்மையையும், இப்படியே விட்டால் தம்மால் "தீய சித்தாந்தம்" என்று அறிவிக்கப்பட்ட ஒன்று, நாளை அந்த கண்டம் முழுவதும் பரவிடும் என்ற அச்சம், பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்க முக்கிய காரணம். மேலும், சோவியத் யூனியனின் நிதியுதவியும், கியூபா வின் இராணுவ உதவியும் விடுதலைப் போராளிகளுக்கு தொடர்ந்து கிடைக்கலாம் என்பதாலேயே பல போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த வரலாற்றை இப்போது நினைவு படுத்துவதன் காரணம் என்ன. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்றை திரிபுபடுத்த நினைக்கின்றது. ஒரு காலத்தில் கம்யூனிச நாடக இருந்த அங்கோலா இன்று அமெரிக்காவிற்கு பெற்றோலிய எண்ணை ஏற்றுமதி செய்யும், பொருளாதார முக்கியத்துவம் உள்ள நண்பன். பல ஆப்பிரிக்க நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு அடி பணிந்து வருகின்றன. இந்த நிலைமையை பயன்படுத்தி, கடந்த கால உண்மைகளை இன்றைய இளம் சந்ததிக்கு மறைத்து, சரித்திரத்தை மாற்றி எழுதும் முயற்சி நடக்கிறது. நூலில் இத்தனை சுட்டிக்காட்டும் Castro, மறைந்த ஆப்பிரிக்க காலனியாதிக்க- எதிர்ப்பு தலைவர் அமிகால் காப்றேல் சொன்னதை நினைவு கூறுகிறார். "கியூபா போராளிகள் எமது தேசத்தின் விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்தனர். ஆனால் அதற்கு கைமாறாக அவர்கள் தமது போரில் மடிந்த சக போராளிகளின் உடல்களை மட்டுமே எடுத்துச் செல்கின்றனர்."
இப்போது அந்த அணு குண்டுகள் எங்கே?

"Orange Free State" என்பது ஒரு தென் ஆப்பிரிக்காவில், வெள்ளை இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம். apartheid என்ற இனங்களை பிரித்து வைக்கும் நிர்வாக முறையை அறிமுகப்படுத்திய, அன்றைய டச்சு காலனியாதிக்கவாதிகளின் பிள்ளைகள், ஒல்லாந்து அரசபரம்பரையின் ஒரேஞ் என்ற பெயரையே தமது குடியேற்றங்களுக்கு இட்ட தீவிர வலதுசாரிகள். கருப்பர்களுடன் கலந்து வாழ்ந்தால் , தமது இனத்தூய்மை கெட்டுவிடும் என்று ஒதுங்கி வாழ்கின்றனர். தாம் வாழும் மாகாணத்தையே ஒரு தனி தேசம் போல பாதுகாப்பவர்கள், அதற்கென சட்டவிரோதமாக தனியார் இராணுவமே வைத்திருக்கின்றனர். இன்றைய தென் ஆப்பிரிக்க அரச படையினர், அங்கே நுழைய அஞ்சுகின்றனர். அரசாங்கமோ, ஏன் வீண் பிரச்சினை என்று, அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டது. 

அன்றைய நிறவெறி அரசாங்கத்திற்கு, அமெரிக்க வழங்கிய எட்டு அணு குண்டுகளும், இது போன்ற பாதுகாக்கப்பட்ட வெள்ளையர் காலனிகளிலேயே இருக்கும் என்று நம்பப்படுகின்றது. அதை பற்றி யாரும் கதைப்பதில்லை. இன்றுவரை கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் அது. தென் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பினத்தவர் ஆட்சியில் இருக்கலாம், ஆனால் அது அரசியல் அதிகாரம் மட்டுமே. தொழில்துறை நிறுவங்கள், பெருந்தோட்டங்கள், போன்ற கணிசமான அளவு பொருளாதார பலம் மட்டுமல்ல, இராணுவ பலமும் இன்னமும் வெள்ளையர் கைகளில் உள்ளன. அந்த அதிகார மையத்தை தகர்க்காமல், அணு குண்டுகளை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அது நடக்கக்கூடிய காரியமல்ல. அதை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும், மேற்குலக நாடுகளால் தடுத்து நிறுத்தப்படும்.

**********

கியூபா பற்றிய மேலதிக தகவல்களுக்கு இதையும் வாசிக்கவும்:
  • கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

  • 5 comments:

    மு. மயூரன் said...

    கலையரசன்,

    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.

    பன்னாட்டு விவகாரங்கள் தொடர்பான உங்கள் குறிப்புக்கள் மிகுந்த ஆர்வமூட்டுகின்றன.

    வாழ்த்துக்கள்.

    மு. மயூரன் said...

    கலையரசன்,

    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.

    பன்னாட்டு விவகாரங்கள் தொடர்பான உங்கள் குறிப்புக்கள் மிகுந்த ஆர்வமூட்டுகின்றன.

    வாழ்த்துக்கள்.

    Anonymous said...

    அமெரிக்காவின் உண்மை ரூபத்தை தோலுரிக்கும் அற்புதமான அரசியல் வரலாறு கட்டுரை. பாராட்டுக்கள்.

    Kalaiyarasan said...

    உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து வாசியுங்கள், உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.

    -கலையரசன்

    arul said...

    arumayana thagavalgal