Friday, April 11, 2008

வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்

ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது). அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின் சரித்திர நூல்களில் பதிப்பிக்கப்பட்டு, "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து "சுதந்திர மேற்கு" நோக்கி இடம்பெயர்ந்த "வீர மக்கள்" பற்றிய கதைகள், பாடசாலை பிள்ளைகளுக்கு போதிக்கப் படுகின்றது. அதேபோல் கம்யூனிச நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என்று கவனமாக இருக்கின்றனர். கொரிய போர் முடிந்து, கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (வட கொரியா) உருவான போது, லட்சக்கணக்கான கொரியர்கள் ஜப்பானில் இருந்து போய் குடியேறினர். அதே போலே இரண்டு கொரியக்களை பிரிக்கும் எல்லையில் காவல் கடமையில் இருந்த சில அமெரிக்கா இராணுவ வீரர்களும், வட கொரியா நோக்கி ஓடிப்போய், ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர். அப்படி அங்கே குடியேறிய ஒரு முன்னாள் அமெரிக்கா வீரர் பற்றிய விவரண சித்திரம் அண்மையில் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர்களைப் பற்றி அமெரிக்கா அரசாங்கம் இதுவரை இரகசியமாக வைத்திருந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், ஒரு வயதான அமெரிக்கர், தனது ஜப்பானிய மனைவியுடன் இணையும் நோக்கில் வெளியே வந்து, கைது செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் சர்வதேச செய்தியாகிய பின்னர் தன் இந்த தகவல்கள் உண்மை என்பது உலகிற்கு தெரிந்தது.

பிரிட்டிஷ் இளைஞர்கள் இருவரால் இந்த விவரணப்படம், crossing the line என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. ட்றேச்நோக் என்ற அமெரிக்க வீரர், தெற்கு-வட கொரியாவை பிரிக்கும் எல்லைக்கோட்டில் கடமையாற்ற பணிக்கப்பட்டவர். தனக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அஞ்சி, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட எல்லையை கடந்து, வட கொரிய சென்று தஞ்சம் கோரும் காட்சியுடன் படம் ஆரம்பமாகின்றது. ஆரம்பத்தில் அவர் ஒரு அமெரிக்கன் என்பதால் கொலை செய்ய எண்ணும் வட கொரியர்கள், பின்னர் மனம் மாறி, தலைநகர் பியங்கியங் அனுப்பி வைக்கின்றனர். அங்கே நடந்த விசாரணையில், அவரை சாதாரண போர்வீரராக கண்ட கொரியர்கள், பின்னர் அவரை பிற அமெரிக்க வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க படுகின்றார். இதைபோல நான்கு அமெரிக்கர்கள், வட கொரியாவில் அறிமுகமாகின்றனர். அவர்கள் புதிய நாட்டில், பல கலாச்சார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கொரியர்கள் மட்டும் வாழும் அந்த நாட்டில், தாம் அமெரிக்கர்கள் என்பதால் வெறுக்கப்படுவதாக உணர்கின்றனர். அதற்கு முன்னர் நடந்து முடிந்த கொரிய போரில், அமெரிக்கா குண்டு வீசி, பல பொதுமக்களை கொன்றுள்ளதால், அனைத்து கொரியர்களும் தம்மை வெறுப்பதாக கலாச்சார அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அந்த நாட்டிலிருந்து தப்பி போகும் பொருட்டு, சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோருகின்றனர். தாம் ஐரோப்பிய இனத்தவர் என்பதால், ரஷ்யர்கள் தம்மை பாதுகாப்பார்கள் என்ற எண்ணம் வேறு. அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரஷ்யர்கள் அவர்களை கொரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். அகப்பட்ட நான்கு அமெரிக்கர்களும், கொரியர்கள் தம்மை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யபோவதாக அஞ்சுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, கொரியர்கள் அவர்களை அரசியல் பாடசாலைக்கு அனுப்பி, கொரிய சரித்திரம், கலாச்சாரம், சித்தாந்தம் பற்றி போதிக்கின்றனர். அன்றிலிருந்து அந்த நான்கு அமெரிக்கர்களும் வட கொரியாவில் தங்கிவிட தீர்மானிக்கின்றனர்.

தொடர்ந்து கொரியாவில் தமது துணைகளை தேடிக்கொண்டு, அங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுப்பதுடன், வட கொரிய பிரசைகளாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றனர். இந்த விவரண சித்திரத்தின் நாயகன் ட்றேஸ்நோக் ஒரு ரோமானிய பெண்ணை மணம் செய்து, இரு ஆண் பிள்ளைகளுடன் அமைதியான குடும்ப வாழ்கை வாழ்கின்றார். அவரது மகன் தன்னை ஒரு கொரியனாக அடையாளப் படுத்துவதுடன், ஒரு இராஜ தந்திரியாக பணி புரிய ஆசைப்படுகின்றார்.

என்னோடுபேசிய ஒரு கொரிய பிரசை, அந்த நாட்டில் உள்ள அடக்குமுறை என்ன என்பதற்கு என்று கூறிய காரணம் பலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். கிழமைக்கு நாற்பது மணித்தியாலம் வேலை நேரம் போக, ஒரு நாள் கட்டாயம் அரசியல் வகுப்பில் பங்குபற்ற வேண்டும், என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்தார். சாதாரண தொழிலாளிகள் கூட, அரசியல், சமூகவியல், சரித்திரம் கற்பது ஒரு சிலருக்கு "அடக்குமுறை" போல தெரிகின்றது. சர்வதேச நாடுகளினால் திரிக்கப் பட்ட பொய்கள், தற்போது நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன.
அந்த நால்வரில் ஒரு அமெரிக்கர், கொரியர்களால் கடத்தப்பட்ட ஒரு ஜப்பானிய பெண்மணியை திருமணம் செய்ததால் திருப்புமுனை ஏற்படுகின்றது. கொரியா உளவாளிகளுக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுக்க, கடத்தப்பட்ட அந்தப் பெண்மணி, பின்னர் ஜப்பானிய அரசுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி திருப்பி அனுப்பப்படவே, அவரைத்தேடி செல்லும் இந்த அமெரிக்க கணவர், ஜப்பானிய பிரதமரின் வேண்டுகோளையும் மீறி, அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டார். அது பின்னர் உலக செய்தியானது. கைது செய்யப்பட்டவர், தனது விடுதலை கருதி வட கொரிய அரசாங்கம் பற்றி கூறிய பொய்கள், இந்த விவரண படத்தில் மறுக்கப்படுகின்றன. வட கொரியாவில் சர்வாதிகாரம் நிலவினால், அந்த அமெரிக்கர்கள் சோவியத் தூதுவராலயத்தில் தஞ்சம் கோரியிருக்க முடியாது, அதை விட அவர்களது தப்பி ஓடும் முயற்சிக்காக சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, அவர்களுக்கு அரசியல் பாடம் கற்பித்தவுடன் நில்லாது, திரைப்பட துறையில் வேலையும் பெற்றுக்கொடுத்தனர். விவரணப் படம் தயாரித்தவர்கள், இவை "பிரச்சாரப் படடங்களா" என்று கேட்டதற்கு, ட்றேஸ்நோக் சரியான பதிலடி கொடுக்கின்றார். கொரியாவில் அமெரிக்கா செய்த கொடூரங்கள், ஏற்கனவே ஆவணப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி படம் தயாரித்தால், எப்படி அது "பிரச்சாரப் படம்" ஆகும்?அப்படிப் பார்த்தால் தற்போது வரும் ஹோலிவூட் படங்கள் பல, அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கும் பிரச்சார படங்களாக கருத இடமுண்டு.

தலைநகர் பியங்கியாங்கில் கூட தண்ணீர் தட்டுப்பாடு , மின்சார வெட்டு முதலிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ட்றேஸ்நோக் குடும்பம், இன்று வரை வட கொரியா அரசாங்கத்திற்கு, மறைந்த தலைவர் கிம் உல் சுங்கிற்கு, தனித்துவமான ஜூகே கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதை காட்டுவதுடன் படம் முடிகின்றது. நாட்டில் நிலவிய கடுமையான பஞ்சத்தால், லட்சக்கணக்கான மக்கள் மடிந்த போதும், தமக்கு உணவு கிடைத்து வந்ததாக இந்த குடும்பத்தினர் நன்றியுடன் கூறுகின்றனர். அந்தப் படத்தில், குறிப்பிடக்கூடிய அம்சம் என்னவெனில், பல வட கொரியர்கள் இன்று ஆங்கில பாடம் கற்பது தான். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இன்றைய தொழில்நுட்பம் பற்றி கற்பதற்கு ஆங்கிலம் தேவையாகவிருக்கின்றது என்பது தானே தவிர, நம்மவரைப் போல ஆங்கில மோகம் கொண்டதால் அல்ல. கொரிய மக்கள் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை மட்டுமே வெறுக்கின்றனரே தவிர, அமெரிக்க மக்களையோ, அல்லது ஆங்கில மொழியையோ வெறுக்கவில்லை என்பது படத்தில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.

இந்தப்படம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பரப்பி வரும் பொய்களுக்கு, பலத்த அடி கொடுக்கின்றது. வட கொரியாவில் வாழும் மக்கள், ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்வதாக கூறி வந்த பொய்களை இந்தப் படம் உடைக்கின்றது. இதைபோலவே சில டச்சு திரைப்பட துறையினர் தயாரித்த, "வட கொரியாவில் ஒரு நாள்" என்ற படமும், வட கொரியர்கள் பிறரைப் போல சாதாரண வாழ்க்கை வாழும் மக்கள் தான் என்று நிரூபித்தது. அது தான் உண்மையும் கூட. வட கொரியர்களும், பிற நாட்டு மக்களைப் போல, தமது வேலை, குடும்பம், வருமானம் என்று வாழ்பவர்கள் தான். பொது மக்கள் தமது அடிப்படை தேவைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர். தாம் வாழ்வது ஒரு சோஷலிச நாடா? அல்லது முதலாளித்துவ நாடா?ஜனநாயக நாடா? என்று கவலைப் படுவதில்லை. இதையே தென் கொரியா வந்து தஞ்சம் கோரும், வட கொரியர்களும் கூறுகின்றனர். தென் கொரியாவில் நடக்கும் பிரச்சாரம், தமது நாட்டின் உண்மை நிலையை கூறுவதில்லை என்று இவர்கள் குறைப்படுகின்றனர். ஜெர்மனியை பின்பற்றி, கொரியாக்களை இணைக்க, பல முயற்சிகள் நடக்கின்றன. .

மேற்குலக ஊடகங்களின் பிரச்சாரம் முழுக்க, பிற தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பற்றியே இருக்கிறது. தமது அரசியல் எதிரிகளை சிறையில் போடும் விடயம், எந்த நாட்டில் இல்லை? அமெரிக்கா தமது அரசியல் எதிரிகளை "குவந்தனமோ" வில் வைத்து சித்திரவதை செய்ததை, மக்கள் அதற்கிடையில் மறந்து விட்டார்களா? வட கொரியாவிலும், அரச எதிரிகள் சிறையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், பெரும்பான்மை மக்கள் அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாலேயே, மேற்குலகம் எதிர்பார்க்கும் "புரட்சி" எதுவும் அங்கே நடக்கவில்லை. இந்த விவரணப் படத்தை தயாரித்தவர்கள் கூட, அமெரிக்காவுடன் யுத்தம் வந்தால், வட கொரிய அணு ஆயுதம் பயன் படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்க கூட, வட கொரியா மீது கை வைக்க தயங்குவதற்கு, அணு ஆயுதம் தான் காரணம்.

இந்த விவரணப் படங்களைப் பார்க்க கீழே உள்ள தொடுப்பை அழுத்துங்கள் :








_____________________________________________

கலையகம்


1 reacties:

K.R.அதியமான் said...

The few people who crossed over do not tell the true story of N.Korea now. Crazy.

Pls try this objectively :

http://en.wikipedia.org/wiki/Human_rights_in_North_Korea

Living in a paradise called Netheralands is different.

:))))