Tuesday, September 09, 2014

மதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உறவுகள்


தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமிழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங்கள் உருவாகி இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அதற்கு முன்னர் இருந்த சமுதாயங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நாகரிகமடைந்து வந்துள்ளன.

மகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு, விஜயனின் வருகையுடன் ஆரம்பமாகின்றது. வட இந்தியாவில் இருந்து கப்பலில் வந்திறங்கிய விஜயனும், அவன் தோழர்களும் சிங்களவர்கள் அல்ல. அவர்கள் சிங்களம் பேசியதாக மகாவம்சமும் குறிப்பிடவில்லை. ஆனால், வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தவறான தகவல். பௌத்த மத மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த பிக்குகளால் மகாவம்சம் எழுதப் பட்டது. அதனால், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, விஜயனின் பூர்வீகம் வங்காள தேசம் என்று எழுதினார்கள். ஏனெனில், வங்காள தேசத்தில் இருந்து தான் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப் பட்டது.

அப்படியானால், விஜயனின் தாயகம் எது? சரித்திர அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியாளர்களின் நீண்ட கால ஆய்வுக்குப் பின்னர், அது குஜராத் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. கி.மு. 5௦௦ ஆண்டளவில் குஜராத் கடலோடிகள் தெற்காசியாவின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இலங்கைத் தீவுக்கு செல்லும் கடல் பாதையில் உள்ள மாலைதீவிலும் அவர்கள் குடியேறி இருக்கலாம். ஜாதக, புராணக் கதைகளில் அது தொடர்பான குறிப்புகள் உள்ளன. சிங்களவர், குஜராத்திகளின் படகு கட்டும் பாணியும் ஒரே மாதிரி உள்ளது. அது மட்டுமல்லாது, இலங்கையிலும், குஜராத்திலும் ஒரே மாதிரியான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே, சிங்களவர்களின் மூதாதையர் குஜராத்தில் இருந்து வந்திருக்கலாம்.

சிங்கள மொழி கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய புதிய மொழி. பாளி,சமஸ்கிருதம்,தமிழ் ஆகிய மொழிகள் ஒன்று கலந்து உருவானது. விஜயனின் கதை உண்மையா என்பது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. அனேகமாக, குஜராத்தில் இருந்து அந்நிய நாடொன்றுக்கு வாணிபம் செய்வதற்கு சென்ற கடலோடிகளின் கப்பல் உடைந்து, இலங்கைக் கரையை வந்து சேர்ந்திருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், விஜயன் வந்த காலத்தில், தென்னிந்தியாவில் பாண்டியர்களின் நாடு இருந்திருக்கிறது. குவேனி உள்நாட்டு ஆதிவாசிப் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்ற விஜயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணம் முடித்திருக்கிறான். பாண்டிய மன்னனும் பல நூறு பெண்களை இலங்கைக்கு அனுப்பி, விஜயனின் தோழர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிய வருகின்றது. விஜயனும் அவன் தோழர்களும் ஆரம்பத்தில் குஜராத் மொழி பேசி இருக்கலாம். ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு வகையில் பாண்டியர்களாக அல்லது தமிழர்களாக மாறி விட்டனர். இதற்குப் பல ஆதாரங்களைக் காட்டலாம். பாண்டிய நாட்டின் தலைநகராக மதுரை இருந்தது. தென்னிலங்கையில் உள்ள மாத்தறை நகரம், மதுர என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், மாத்தறையிலும், அம்பாந்தோட்டையிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று பாழடைந்து போயுள்ள இந்துக் கோயில்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன.

பாண்டிய நாட்டின் நாகரிகம் வளர்ந்த நதியின் பெயர் தாமிரபரணி ஆறு. விஜயனும் தோழர்களும், தம்பபண்ணி எனும் இடத்தில் வந்திறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது. தம்பபண்ணி என்பது இலங்கையின் புராதன காலப் பெயர். அத்தோடு, இன்றைய புத்தளம் பகுதியில் இருந்த பழைய நகரம். கிரேக்கர்கள் தப்ரோபானே(Tabrobane) என்று அழைத்தார்கள்.

அனேகமாக, தப்ரபேன், தம்பபண்ணி ஆகிய சொற்கள் தாமிரபரணி என்ற பெயரின் திரிபாக இருக்கலாம். இலங்கையில் நடந்த சம்ஸ்கிருதமயமாக்கலை தொடர்ந்து, பௌத்த பிக்குகள் சிஹலம், சீலம் போன்ற சொற்களை விரும்பிப் பாவித்தனர். வெனிஸ் நாட்டு கடலோடியான மார்க்கோ போலோ, அதனை செய்லான் என்று குறிப்பிட்டார். அதனால் தான் போர்த்துக்கேயர்கள் செய்லோன் என்றும், ஆங்கிலேயர்கள் சிலோன் என்றும் அழைத்து வந்தனர்.

கிறிஸ்துவுக்கு முந்திய காலகட்டத்திலேயே, இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்துள்ளது. அதற்கு காரணம், நீரைத் தேக்கி வைக்க கட்டப்பட்ட அணைக் கட்டுகள், மற்றும் பல நாடளாவிய நீர்ப்பாசன திட்டங்கள். ஆங்கிலத்தில் "Anicut" என்றால், தமிழில் அணைக்கட்டு. ஆங்கிலம் கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் அதுவும் ஒன்று. இந்தியாவின் மிகப் பழைய அணைக்கட்டு, தாமிரபரணி ஆற்றை மறித்துக் கட்டப் பட்டது. அநேகமாக, அணைக்கட்டு கட்டும் தொழில்நுட்ப அறிவு, அன்றைய பாண்டிய நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் பரிமாறப் பட்டு வந்துள்ளது.

மகாவம்சம் குறிப்பிடும், விஜயனின் வம்சாவளியில் வந்த முக்கியமான அரசன் ஒருவனின் பெயர் "பண்டுகாபயன்." பண்டு என்பது பாண்டியர்களைக் குறிக்கும் சொல். உண்மையில், பண்டு அல்லது பண்டைய என்ற சொல் தான் பாண்டியர்கள் என்று மருவி வந்திருக்க வேண்டும். அனேகமாக, பாண்டியர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் அரச வம்சமாக, இன்னும் சொல்லப் போனால் புராதன தமிழ்க் குடியாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில், பாண்டிய மன்னர்களும், மக்களும் ஆதி கால வரலாற்றில் மறவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். இன்றைக்கும் ராமேஸ்வரம் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள மறவர் சாதியினர் அந்த தொடர்பை நினைவுபடுத்தலாம். காலனிய காலத்திற்கு சற்று முந்திய நாயக்கர் ஆட்சிக் காலம் வரையில், மறவர்கள் போர்க்குணாம்சம் மிக்க தென்னிந்திய சத்திரியர்கள் போன்று கருதப் பட்டனர்.

பாண்டியர்கள் என்பது சம்ஸ்கிருதமயமாகிய பெயர்ச் சொல். ரோம சாம்ராஜ்யத்திற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்துள்ளன. ரோமர் காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான பிளினி, பாண்டிய நாட்டைப் பற்றிப் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாண்டியர்களை "பாண்டியோனிஸ்" என்று கிரேக்க மயப் படுத்தி உள்ளார். மதுரை நகரம் "மெதூரா" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இன்றைய ராமேஸ்வரம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ஏனெனில், பிளினியின் வரலாற்று நூலில் அது பாம்பன் தீவு என்று எழுதப் பட்டுள்ளது. மேலும், பாண்டிய நாட்டின் வரலாற்றையும் பிளினி கிரேக்க கண்ணோட்டத்துடன் எழுதி உள்ளார். (இந்திய) ஹெர்குலஸ் தெய்வத்தின் ஒரே மகளான பாண்டியா அரசி ஆட்சி செய்த படியால், அதற்கு பாண்டிய நாடு என்று பெயர் வந்த கர்ண பரம்பரைக் கதையை கூட எழுதி இருக்கிறார்.

சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் சமூகத்தில் மூவேந்தர்கள் என்று கொண்டாடப் படுகின்றனர். ஆனால், அன்றைய காலத்தில் அந்த மன்னர்களுக்கு இடையில், ஓர் "இன அடிப்படையிலான ஒற்றுமை உணர்வு" இருந்திருக்கவில்லை. உண்மையில் மொழி உணர்வு, தேசியவாதம் என்பன இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களினால் அறிமுகப் படுத்தப் பட்ட அரசியல் கொள்கைகள் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களிடம் அப்படி எந்த உணர்வும் இருக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இருக்கவில்லை. ஆகவே, பண்டைய சமூகங்களின் வரலாற்றை, மொழி அடிப்படையில் பார்ப்பது எமது தவறு.

சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள், கிட்டத்தட்ட தமிழ் போன்று ஒலிக்கும் பல வட்டார மொழிகளைப் பேசி இருப்பார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய மொழிகளாக இருக்கலாம். ஆனால், இன்றிருப்பதைப் போன்று, அன்றைய மக்கள் எல்லோரும் ஒரே பொது மொழியை பேசியதாக கூற முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.

சங்க காலத்தில் இலக்கியங்கள் புனைவதற்கும், செய்யுள்கள் இயற்றுவதற்கும் தமிழ் மொழி பயன்பட்டது. சமுதாயத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிரபுக்களும், புலவர்களும் செம் மொழியான தமிழைப் பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதற்காக, பண்டைய காலங்களில் வாழ்ந்த "தமிழர்கள்" செந்தமிழ் பேசினார்கள் என்று நாம் நினைத்துக் கொள்வது அறியாமை.

சிங்களமும் பல நூறாண்டுகளாக பிரபுக்களாலும், பிக்குகளாலும் மட்டுமே பேசப் பட்டது. பண்டைய காலங்களில் வாழ்ந்த "சிங்களவர்கள்" எல்லோரும் சிங்களம் பேசினார்கள் என்று நினைத்துக் கொள்வது அவர்களது அறியாமை. சாதாரண மக்களும் சிங்களம் படிக்கும் உரிமை, சாதியின் பெயரால் மறுக்கப் பட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் கோலோச்சிய காலங்களில் சூத்திரர்கள் அதனைப் படிப்பது தடுக்கப் பட்டது. அமெரிக்கக் கண்டங்களில், கருப்பின அடிமைகள் ஐரோப்பியரின் மொழிகளை கற்பது தடை செய்யப் பட்டிருந்தது.

உலகில் பல நாடுகளில், அரசர்களின் மொழியும், குடிமக்களின் மொழியும் வேறு வேறாக இருந்துள்ளன. அதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். இங்கிலாந்து அரச வம்சத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். நோர்வீஜிய பிரபுக்கள் டேனிஷ் மொழி பேசினார்கள். ஹங்கேரி நாட்டு மேட்டுக்குடியினர் ஜெர்மன் மொழி பேசினார்கள். இந்தியாவில் மொகலாயர்கள் பாரசீக மொழி பேசினார்கள். இவை எதுவும் அவர்களின் சொந்த மொழியும் அல்ல, அதே நேரத்தில் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களாலும் பேசப் படவில்லை.

ஐரோப்பாவில்,19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட, அரசியல் பொருளாதார மாற்றங்களின் காரணமாகத் தான், உலகம் முழுவதும் தேசிய மொழிகளின் அவசியம் உணரப் பட்டது. ஆனால் அந்த தேசிய மொழிக் கொள்கை, வட்டார மொழிகளின் அழிவின் மேல் நிலைநாட்டப் பட்டது.


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்: 
1.The International Institute for Asian Studies (IIAS) 
2.A History of Tinnevelly, Bishop R. Caldwell 
3.The Hindus: An Alternative History, Wendy Doniger


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: