Saturday, April 05, 2008

திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு சில மாதங்களே இருந்த நேரம், திபெத் மாநிலம் சீனாவினால் இணைக்க பட்ட பிறகு ஏற்பட்ட எழுச்சியின் 49 ம் ஆண்டு நிறைவுதினம், மீண்டும் கலகங்களையும், திபெத் சுதந்திர கோரிக்கையையும் கிளப்பி விட்டது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சீன பாதுகாப்பு படைகள் கலைத்தத்தில் முப்பது அல்லது நாற்பது பேர் இறந்ததாகவும், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், சீன வர்த்தக நிலையங்கள் திபெதியர்களால் தாக்கப் பட்டு, சில சீனர்களும் கொல்லப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய ஊடகங்களுக்கு இவை போதாதா? தொடர்ந்து சில நாட்கள், திபெத் தலைப்பு செய்தியாகியது. மனித உரிமை நிறுவனங்கள், சீன அரசிற்கு சர்வதேச நெருக்கடி கொடுக்குமாறு கூற, அரசியல் தலைவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்க யோசிப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படி நடக்குமா என்று இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

முன்பு என்பதுகளில் சோவியத் யூனியனில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது, அமெரிக்கா உட்பட மேற்கு ஐரோப்பிய நாடுகள் விளையாட்டுகளை பகிஷ்கரித்தன. சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானில் இருப்பதை அதற்கு காரணமாக கூறின. தற்போது அதே நாடுகளின் இராணுவங்கள், அதே ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளன! அதே சமயம், அமெரிக்காவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள நடந்த போது, யாரும் பகிஷ்கரிக்கவில்லை. இரண்டாயிரமாம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்ற போது, அங்கு பூர்வீக குடிகளான "அபோரிஜினர்கள்" சம உரிமை கேட்டு கலகம் செய்தனர். அப்போது இந்த மனித உரிமைவாதிகளோ, மேற்கத்திய அரசியல்வாதிகளோ ஆஸ்திரேலியாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. ஊடகங்களும் அதைப்பற்றி ஒரு நாள் செய்தியுடன் முடித்துகொன்டன.

ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு. பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை தமது எதிரிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தும் மேலைத்தேய அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். இது போன்ற விடயங்களை பொது மக்கள் கவனிக்க தவறுகின்றனர். திபெதியரின் சுயநிர்ணய உரிமைகளை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் நியாயமானது. சீன அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. இதைப்பற்றி இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. அதே நேரம், இந்த விடயத்தை ஒரு சிலர் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தி கொள்வதை அனுமதிக்க முடியாது. ஒரு பக்கம் சீன அரசாங்கமும், மறுபக்கம் இந்தியாவில் இயங்கும் தலாய் லாமா தலைமையிலான புகலிட திபெத் அரசாங்கமும், செய்திகளை திரிபுபடுத்தி அல்லது மிகைப்படுத்தி வெளியிடுவதிலும், வதந்திகளை கிளப்பி விடுவதிலும் மும்முரமாக இருக்கையில்; மேற்கத்தைய ஊடகங்கள், திபெத் சார்பு நிலை எடுத்தன. இருப்பினும் திபெத்தில் உள்ள சீனர்களின் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் தாக்கி எரிக்கப் பட்டத்தை, ஊடகங்கள் எதுவும் மறைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சார்பான கோணத்தில் இருந்தே இதை பார்த்தனர். சீன ஊடகங்கள், திபெதியரை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும், உண்மையில் சீன இனத்தவர்களே பாதிக்கப்படுகின்றனர், என்பதைக் காட்டத்தான் அவற்றை வெளியிட்டன. மேற்கத்திய ஊடகங்களோ, இது திபெத்திய மக்களின் அடக்குமுறையாளருக்கு எதிரான தன்னெழுச்சி, ஆகவே நியாயமானது என்ர கருத்துப்பட செய்தி வெளியிட்டன. இதிலே ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இன்னொரு உதாரணமாக இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையை எடுத்து கொள்வோம் . திபெத் சீனாவின் இறைமைக்கு உட்பட்ட மாநிலம் என்று, அனைத்து சர்வதேச நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே நேரம் பாலஸ்தீனம் தனியான நாடாக இருக்க தகுதியுள்ளதாக ஐ.நா. அமைப்பு முதல், அமெரிக்கா உட்பட சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அப்படியிருக்கையில், பாலஸ்தீனியர்கள், யூத வர்த்தக நிலையங்களை, வாகனங்களை தாக்கி எரியூட்டினால், அதை இந்த ஊடகங்கள் எப்படி விவரிக்கும்? பாலஸ்தீனியர்கள் வெறிபிடித்த வன்முறையாளர்கள் என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கோடு அந்தக் காட்சிகளை காட்டுவார்கள். இங்கே தான் "நடுநிலை" ஊடகங்களின் பக்கச்சார்பு தன்மை தெளிவாகின்றது.

திபெத் பிரச்சினையை வரலாற்று ரீதியாகவும் பார்க்க வேண்டும். சீன படையெடுப்பு வரும் வரை இருந்த, "சுதந்திர திபெத்" அன்றைய காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த, மக்களை அடிமைத்தளையில் வைத்திருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை கொண்டது. "லாமாக்கள்" என்றழைக்கப்படும் பௌத்த மதகுருக்கள், அரசியல் நிர்வாகம் செய்யும் பிரபு குலமாக இருந்தனர். மதமும், அரசியலும் ஒரே ஸ்தாபனமாக இருந்த அன்றைய காலம், லாமாக்கள் அதிகாரம் படைத்த செல்வந்தர்களாகவும், பிற மக்கள் அவர்களுக்கு சேவகம் செய்யும், அல்லது விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் வறியவர்களாகவும் இருந்தனர். கடன்களை திருப்பி கொடுக்க முடியாதவர்கள், அடிமைகளாக சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். இந்தக் குறிப்புகள் அப்போது திபெதிற்கு பயணம் செய்த சில ஐரோப்பியரின் எழுத்துகளிலும் பார்க்கலாம். இவர்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நபரும் இருந்தார். அவரின் கதையை ஹோலிவூட் "திபெத்தில் எழு வருடங்கள்" என்ற பெயரில் படமாக தயாரித்தது. ஹிட்லரால் அனுப்பப்பட்ட அந்த ஜெர்மன்காரர், நாசிசத்தின் அச்சாணியான நிறவாத சித்தாந்தத்தின் தோற்றுவாய் திபெத் ஆக இருக்கலாம், என்ற கருத்தை கொண்டிருந்தார்.

ஐம்பதுகளில் சீனாவில் ஏற்பட்ட மாவோ தலைமையிலான கம்யூனிச புரட்சி, திபெத்தின் சுதந்திரத்திற்கு, அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு முடிவு கட்டியது. கம்யூனிஸ்டுகள் தமது சித்தாந்தத்தின் படி, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என நம்பினர். சீன பொதுமக்களோ, மிகவும் பின்தங்கிய காட்டுமிராண்டி கால திபெத்தை நாகரீகப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக கருதினர். இதனை பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க காலனிய வாதிகள், கலிபோர்னியா போன்ற மேற்கு மாநிலங்களின் மீது படையெடுத்த காரணங்களோடு ஒப்பிடலாம். அப்போது மேற்கு அமெரிக்க பகுதிகள், "மேற்கு காடுகள்" என வர்ணிக்கப்பட்டன. அங்கிருந்த செவிந்திய சமூகத்தை காட்டுமிராண்டி கால மனிதர்களாக பார்த்து, அவர்களை நாகரீகப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக ஆங்கிலேய காலனியவாதிகள் கருதினர். மேலும் மெக்சிகோவின் பகுதியாக இருந்த, ஸ்பானிய மொழி பேசும் மக்கள் வாழ்ந்த, கலிபோர்னிய மாநிலம், யுத்தம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே ஆங்கிலம் பேசும் மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது அங்குள்ள ஸ்பானிய மொழி பேசும் மக்கள், கலிபோர்னியாவை சுதந்திர நாடாக்க கோரி, ஆர்ப்பாட்டம் செய்தால், அதற்கு அமெரிக்க அரசு எப்படி பதிலளிக்கும்? பல தசாப்தங்களாக சுதந்திரமடையும் நோக்கோடு போராட்டங்கள் நடத்தும் "புவேர்டோரிகோ" என்ற சிறு தீவை கூட விட்டுக்கொடுக்க மறுக்கும் அமெரிக்க அரசு, கலிபோர்னியவை தனி நாடாக்க முன்வருமா? அப்படி இருக்கையில் சீன-திபெத் பிரச்சினையில் மட்டும், ஏன் எல்லோரும், வேறொரு கருத்தை கொண்டுள்ளனர்?

சீனாவில் பெரும்பான்மையாக உள்ள "ஹான்" என்ற சீன இனத்தவர்கள், சீனா முழுக்க வசிக்கின்றனர். மன்னர் காலத்தில் நடந்த இந்த குடியேற்றங்கள், தற்போதும் தொடர்கின்றது. வியாபாரம் செய்யும் நோக்கோடும், தொழில் தேடியும் ஹான் சீனர்கள் திபெத் வந்து குடியேறுகின்றனர். இது பல திபெத்தியருக்கு எரிச்சலூட்டும் விடயம் தான். உண்மையில் சீன படையெடுப்புக்கு பின்னர் தான், திபெத் பொருளாதார வளர்ச்சி கண்டது. பல நவீன நகரங்கள் உருவாகின. ஒரு காலத்தில், மதகுருக்கள் மட்டுமே எழுத, வாசிக்க கற்றிருந்தனர். தற்போது பொது பாடசாலைகள் கட்டப்பட்டு, அனைத்து திபெத்தியருக்கும் கல்வியூட்டப்படுகின்றது. லாமக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மக்கள் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், தற்போது பலர் கல்வியறிவு பெற்றோ, அல்லது வியாபாரம் செய்தோ தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ள, பெரும்பான்மையான திபெத்தியர்கள், தலாய் லாமாவின் பின்னால் நிற்கவில்லை. உண்மையில் அதிகாரம் இழந்த லாமாக்களும், சில திபெத்திய தேசியவாதிகளும் தான், திபெத் சுதந்திர நாடாக வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்க சி.ஐ.எ. மறைமுக உதவி வழங்கி வருகின்றது. பனிப்போர் காலத்தில் இருந்து இந்த உறவு இருந்து வருவது இரகசியமல்ல. பௌத்த மதகுருக்களும், காவி உடை தரித்த அஹிம்சாவாதிகள் இல்லை. முந்தின எழுச்சியின் போது கூட மடாலயங்களில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். முன்பு தனி நாடாக இருந்த போது நன்கு பயிற்சி பெற்ற இராணுவ மதகுருக்கள் இருந்தனர். தற்போது இந்தியாவில் இருக்கும் தலாய் லாமா, ஒரு பக்கம் வன்முறையற்ற போராட்டம் பற்றி கதைத்தாலும், மறுபக்கத்தில் வன்முறையில் நம்பிக்கை கொண்ட திபெத்தியரும் உள்ளனர்.

திபெத் சுதந்திரப் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவு, ஒரு கட்டத்திற்கு அப்பால் போகாது. ஒரு காலத்தில், சீனா தனது எதிரி நாடு என்ற காரணத்தால், திபெதியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா, தற்போது மாறிவரும் உலகில், சீனாவுடனான வர்த்தக உறவுகளுக்காக, திபெத்திய போராட்டத்தை நசுக்கி வருகின்றது. அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய நாடுகளும் தமது வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை விரும்பப் போவதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி, சீனாவின் பெயரை கெடுத்து, மறைமுக அழுத்தங்கள் மூலம் சீனாவை தமது நிபந்தனைகளுக்கு பணிய வைத்து, மேலும் பல வியாபார ரீதியிலான சலுகைகளை பெற்றுக் கொள்வது தான்.

இது தொடர்பான வேறு பதிவுகள் :
தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?


________________________________________________

கலையகம்

No comments: