பிடல் காஸ்ட்ரோ கடும்சுகவீனமுற்று அரசியலை கை விட்டு விட்டு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த நேரம். கியூபாவின் நீண்ட கால ஆட்சித்தலைவர் மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். காஸ்ட்ரோவிற்கு பின் கியூபா , ஜன நாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும் கதவுகளை திறந்து விடும், என்று மேற்கத்திய ஊடகங்கள் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம்.
இப்படி ஒரு திருப்புமுனையை வெளி உலகம் எதிர்பார்த்திருந்த நேரம் தான், எனது கியூபா பயணம் அமைந்தது. ஏற்கனவே பல்வேறு அரசியல் சார்புடையவர்களின் பரிச்சயம் இருந்தாலும் , தினந் தோறும் வந்து குவியும்
ஆயிரக் கணக்கான உல்லாச பிரயாணிகளில் ஒருவனாக நானும் போயிருந்ததால் இந்த கியூபா பயணக்கட்டுரை ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலேயே விரிகின்றது.
"வரதேரோ" தலைநகர் ஹபனவில் இருந்து 100 கி.மி. கிழக்கே உள்ள குடாநாடு. அங்கே அழகான நீண்ட கடற்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஹோடேல்களில் தான், குறிப்பாக மேற்கைரோபிய மற்றும் கனடாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள் தங்கவைக்கப்படுகின்றனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், அன்னிய செலவாணியை ஈட்டும் நோக்குடன் ஆரம்பிக்கபட்ட உல்லாச பிரயாண துறை வருடம்தோறும் ஈட்டும் நிகர லாபம் அதிகரித்து கொண்டே போகின்றது.
மேலைத்தேய முகவர்களால் அனுப்பப்படும் வாடகை விமானங்களே பெரும்பாலும் வரதேரோ விமானநிலையத்தில் வந்திறங்குகின்றன. விசா விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும், பயணிகள் அனைவரும் டிஜிட்டல் படம் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வெளியே "கியூபா டூர்" (Cubatour) என்ற அரசாங்க நிறுவன பேருந்து வண்டிகள் ஹோடேல்களுக்கு அழைத்து செல்ல காத்து நின்றன. விமானநிலையத்தில் இருந்து ஹோட்டல் வரையிலான அரை மணி நேர பயணத்தில், வழியில் எந்தவொரு விளம்பர தட்டியையும் காணமுடியவில்லை. அதற்கு மாறாக, "புரட்சியை தொடர்வோம்" போன்ற வாசகங்களே கண்ணில் பட்டன.
வரதேரோ நகரிற்கு அருகில் வாழும் கியூபா மக்கள் பெரும்பாலும் உல்லாசபிரயான துறையில் தொழில் புரிகின்றனர். இவர்கள் பிற தொழிலாளரை விட அதிக சம்பளம் எடுத்து சற்று வசதியாக வாழ்கின்றனர். இருப்பினும் அவர்களது சம்பளம் அரசால் மட்டுப்படுத்த பட்டிருப்பதால்; டிப்ஸ் பணம், சில்லறை வியாபாரம், அல்லது விபச்சாரம்(தடை செய்யபட்டுள்ளது) ஆகியவற்றில் ஈடுபடுவோர் மட்டும் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். உல்லாசப் பிரயாணிகளின் வருகையின் பின்னர், ஓரளவு வசதிபடைத்த வர்க்கம் உருவாகியுள்ளது. பிற முதலாளித்துவ நாடுகளின் வர்க்கநிலையோடு ஒப்பிடமுடியவிட்டாலும், இருவேறு சமுக படிநிலை இருப்பது புலனாகும்.
Cuba வருபவர்கள் எல்லோரும் "பெசொவிற்கு மாற்றீடன நாணயம்" (Pesos Convertibles) என்றளைக்கபடும் நாணயத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இது கியூபாவின் தேசிய நாணயமான பெசோ அல்ல! பெறுமதி குறைந்த அதை கியூபா பிரசைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். (25 peso = 1 peso convertible). இந்த மாற்று peso அமெரிக்க டாலரின் பெறுமதிக்கு இணையானது.
அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு தேவைப்படும் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த peso நாணயதாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஏனெனில் நாம் ஒரு அமெரிக்கா டாலரை வங்கி அன்னிய நாட்டில் வைத்திருக்கும் பட்சத்தில், அமெரிக்கா மத்திய வங்கி இன்னொரு டாலரை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றது. பொருளாதாரத்தில் நாணயத்தின் பெறுமதி மட்டுமே முக்கியம் என்பதால், கியூபா மக்கள் இந்த peso convertible ஐ "கியூபா டாலர்" என்று அழைகின்றனர்.
கியூபாவில் சாதாரண தொழிலாளர்கள் சுமார் 200 peso சம்பளம் பெறுகின்றனர். அதாவது 8 அமெரிக்கா டாலர்கள். உல்லாசபிரயான துறையில் வேலை செய்வோர் 350 peso சம்பளம் பெறுகின்றனர். அனைத்து தொழிலாளரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லை. Joint Venture எனப்படும், வெளிநாட்டு நிறுவனங்களுடன், பங்கு போட்டு நிர்வகிக்கப்படும் ஹோடேல்களில் மாத்திரம் 450 peso சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் யாவும் 1990க்கு பிறகு வந்தவை. சோவியத் உதவி கிடைப்பது நின்று விட்ட காலத்தில், வர்த்தக கூட்டாளிகள் இன்றி தனிமைப் பட்ட கியூபா பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருந்த காலம் அது. கம்யுனிசத்தை கைவிட விரும்பாமல், அதேநேரம் முதலாளித்துவத்தை தழுவ விரும்பாமல், இறுதியில் Joint Venture திட்டத்திற்கு சம்மதித்தது.
அமெரிக்கா தவிர்ந்த, கனடிய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உல்லாசபிரயான துறையில் முதலீடு செய்ய முன்வந்தன. கடற்கரையோரமாக கட்டப்பட்ட ஹோடேல்களில், கியூபா அரசாங்கம் 51% பங்குகளையும், அன்னிய நிறுவனங்கள் 49% முதலீடு செய்தன. கிடைக்கும் லாபத்தை இந்த வீதப்படியே பிரித்து கொண்டன. இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட வருடங்களே செல்லும். இதனால் தற்போது 10 வருடங்களுக்கு பின்பு பல ஹோட்டல்கள் கியூபா அரசாங்கத்தின் சொந்தமாகி வருகின்றன.
அன்னிய நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 450 peso வுக்கு மேலே போகக்கூடாது. அப்படி போனால் மிகுதி தொகையை கியூபா அரசாங்கம் பிடித்துகொள்ளும். அப்படி எடுக்கும் பணம் பிற சேவைத் துறைகளில் பயன்படுத்த படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் நாட்டில் பிறரை விட அதிகமாக சம்பாதிக்கும் வசதிபடைத்த வர்க்கத்தை உருவாக விடாமல் இது தடுக்கின்றது. இதனால் சமத்துவம் ஓரளவுக்கேனும் பேணப்படுகின்றது. இருப்பினும் உயர்ந்து வரும் வாழ்கை செலவை ஈடுகட்ட போதுமானதாக சம்பளம் இல்லை.
உல்லாசப் பிரயாணிகள் தமது செலவுகளுக்கு உயர்ந்த விலைகளை (திறந்த பொருளாதாரம் இல்லாததால், அரசாங்கம் விரும்பியபடி விலை நிர்ணயிக்கின்றது) கொடுக்க வேண்டியிருப்பதால், கிடைக்கும் லாபத்தில் பெரும் பகுதி காஸ்ட்ரோ குடும்பத்திற்கு போவதாக முறையிடுகின்றனர். அங்கே மேலைத்தேய பாணி பல்பொருள் அங்காடிகள் உள்ளன. தேவையான எல்லாம் அங்கே கிடைகின்றன. உண்மையில் விலைகள் செயற்கையாக, அமெரிக்காவை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
காஸ்ட்ரோவின் கியூபா அரசாங்கத்தை ஊழல் ஆட்சி என்று குறை கூறுபவர்கள், இன்னொரு பக்கத்தை பார்ப்பதில்லை. பொதுமக்களுக்கு அத்தியாவசியமான சேவை துறைகளான வைத்தியம், கல்வி, போக்குவரத்து ஆகியன பெருமளவு நிதியை வேண்டி நிற்கின்றன. மேலும் ஊழலை தடுக்கும் நோக்கில் பாராளுமன்ற, நகர சபை உறுப்பினர்கள், பிற அரச அதிகாரிகள், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு, சாதாரண தொழிலாளரை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்வோர் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஆனால் தேசத்திற்கு முக்கியமானவர்கள். இவற்றை விட ஐ.எம்.எப்., உலகவங்கி போன்ற எதுவும் கடன் வழங்குவதில்லை, என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்த எண்ணெய் பற்றாக்குறை, தற்போது சாவேசின் வெனிசுவேலாவின் நட்பினால் ஈடுகட்டப்படுகின்றது.
நாம் நின்ற இடத்திலிருந்து பல சுற்றுலாக்கள் "கியூபா டூர்" றினால் ஒழுங்கு பண்ண படுகின்றது. இது ஒரு அரச நிறுவனம். அதிலே வேலை செய்பவர்கள் அனைவரும் அரச ஊழியர்கள். முதலில் மூன்று நகரங்களின் சுற்றுலா, என்றழைக்கப் படும் "சாண்டியாகோ ", "டிரினிடாட் ", "சாந்த கிளாரா" போன்ற நகரங்களை பார்க்க போனோம். சாண்டியாகோ, டிரினிடாட் என்பன காலனிய கால நகரங்கள். சாந்த கிளாரா மாபெரும் புரட்சியாளர் சே குவேராவினால் பிரபலமானது. கியூபாவின் கிழக்கு பகுதியில் இருந்து தனது ஆயுத போராட்டத்தை தொடங்கிய புரட்சிப் படை, மத்தியில் இருக்கும் சாந்த கிளாரா வந்து சேர்ந்த போது வெற்றி உறுதியானது. அங்கே தற்போது சே குவேரவிற்கு நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது.
அங்கே பொலிவியாவில் கொல்லப் பட்ட சேயினதும், அவரது தோழர்களினதும் எலும்புகள் பாதுகாக்கப் படுகின்றன. மேலும் சே யின் வரலாற்றை கூறும் புகைப் படங்கள், பாவித்த உபகரணங்கள் என்பன காட்சிப் படுத்தப் பட்டுள்ளன . அந்த இடத்தினுள் மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியில் சே யின் சிலை இருக்கும் மைதானத்தில் சில பேரணிகளும், காஸ்ட்ரோவின் உரையும் இடம் பெரும்.
கியூபா தலைநகர் ஹவானா போகாமல், சுற்றுலா பூர்த்தியடையாது . அது இன்னொரு காலனிய காட்சிகூடம். நகரின் மத்தியில் கியூபாவின் 19 ம் நூற்றாண்டு தேசிய போராட்ட வீரர், "ஹோசே மார்ட்டி" யின் உருவசிலையும் அதனோடு உயர்ந்த கோபுரமொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் பரந்து விரிந்த மைதானத்தில் தான் கியூபா தேசிய தினம் மற்றும் மே தினம் போன்ற நாட்களில் மாபெரும் பேரணிகள் இடம் பெறும். இந்த மைதானத்திற்கு எதிர் பக்கத்தில் உள்ள அமைச்சு கட்டிட சுவரில் மிகப் பெரிய சே யின் முகம் காணப் படுகின்றது.
கியூபா மக்கள் காஸ்ட்ரோவை பற்றி சில வேளை குறை சொன்னாலும் சே பற்றி நல்லதாக தான் சொல்வார்கள். மேலும் அர்ஜென்டினாவில் பிறந்து தமது நாடு விடுதலைக்காக போராடிய சே பற்றி உயரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். இதனால் கியூபாவில் காணும் இடமெல்லாம் சே யின் உருவப் படங்கள் காட்சி தருகின்றன. பாடசாலைகளில் மாணவர்கள் சே போல வாழ்வோம் என்று உறுதிமொழி எடுக்கிறார்கள். கியூபா விற்கு ஆரம்ப காலத்தில் அதிகம் வந்த உல்லாச பிரயாணிகள் இடதுசாரிகள். இதனாலும் சே படம் பொறித்த டி- சேர்ட்கள் , கை பைகள், பிற நினைவு சின்னங்கள் என்று வியாபாரம் களை கட்டுகிறது.
இதை தவிர "ஹவானா கிளப்" என்ற ரம் உலகப் புகழ் பெற்றது. அரச நிறுவனமான அது மில்லியன் கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டி தருகின்றது. அது போல பெருமளவு லாபம் பெற்று தரும் கியூபா சுருட்டுகள் உற்பத்தி இப்போதும் முன்னணியில் இருக்கிறது. உலகில் சிறந்த சுருட்டுகள் என்று பெயர் பெற்ற அவை, முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடியினதும் மனம் கவர்ந்திருந்தது. இதனால் தானே கியூபா மீது பொருளாதார தடை போட்டு விட்டு, தானே பழக்கத்தை விட முடியாமல் கஷ்டப் பட்டாரம். வீதியில் உல்லாச பிரயாணிகளிடம் சட்ட விரோதமாக சிலர் சுருட்டுகளை விற்கிறார்கள். இவற்றின் தரம் கேள்விக்குரியது.
பொது மக்கள் சில வியாபார முயற்சிகளை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உல்லாச பிரயாணிகளுக்காக நினைவு பொருட்களை விற்கும் கடைகள், சிற்றுண்டி விடுதிகள், டாக்சி ஓடுதல், மற்றும் வீட்டு அறையை வாடகைக்கு விடுதல் போன்றவற்றை செய்யலாம். அனால் இவற்றில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்யலாம். இத்தகைய முயற்சிகளால் கிடைக்கும் வருமானம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில் புரியும் உறவினர்கள் அனுப்பும் பணம் என்பனவற்றால், சில கியூபா மக்களின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளது.
கியூபா பொருளாதாரம் எப்போதும் ஒரேமாதிரி இருந்ததில்லை. முன்பு சோவியத் யூனியனின் உதவி கிடைத்து வந்த காலத்தில் மக்கள் வசதியாக வாழ்ந்து வந்தனர். அது ஒரு பொற்காலம் என்று கூறலாம். பின்னர் கம்யூனிச நாடுகள் இல்லாமல் போய் எந்த வித வர்த்தக தொடர்பும் இல்லாத காலத்தில், பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. வறுமையில் இருந்து தப்ப மக்கள் தோணிகளில் கடல் கடந்து அமெரிக்கா போய் கொண்டிருந்தனர். உல்லாச பிரயாணிகளின் வருகை, ரம், சுருட்டு போன்றவற்றை சர்வதேச சந்தையில் விற்க கூடியதாகவிருந்தது, மேலும் புதிதாக கிடைத்த சில நாடுகளின் வர்த்தக உறவுகள் போன்றவற்றால்; பொருளாதாரம் ஸ்திரப் படுத்த பட்டு, தற்போது வளர்ந்து வருகின்றது.
இருப்பினும் அமெரிக்கா இன்னமும் பொருளாதார தடையை கடை பிடிப்பதும், அதை மீறும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய முடியாது என்ற சட்டத்தையும் மீறி பல நாடுகள் உறவை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டினுள் நிலவும் தட்டுபாடுகளுக்கு கியூபா அரசாங்கம் எப்போதும் இந்த பொருளாதர தடையையே குற்றம் கூறி வருகின்றது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கியூபா மக்களுக்கு வழங்கப்படும் இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பன் இன்றும் தொடர்கின்றன.
மூன்றம் உலக நாடான கியூபா வில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு என்பதும், இது மேற்கத்தைய நாடுகளுக்கு இணையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு வாடகை கூட மிக குறைவே. மக்களின் போக்குவரதிற்கென அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் வண்டிகள், சைகிள் உற்பத்தி என்பனவற்றை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது. மேலும் கார் வைத்திருப்போர் போகும் வழியில் பிறரையும் ஏற்றி செல்லுமாறு வற்புறுத்த படுகின்றனர்.
நாட்டை தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு வருகின்றது. ஊராட்சி மட்டத்தில், "புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி " என்னும் அமைப்பு பல்வேறு அரசியல் பொருளாதார முடிவுகளை எடுக்கின்றது. இதில் வீட்டுக்கு ஒருவராவது வருகை தருவதும் கருத்து கூறுவதும் கட்டாயமாக்க பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவோர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியை விட, பிற கட்சிகள் இயங்குவது தடை செய்ய பட்டுள்ளது. பொது மக்கள் அது குறித்து அதிகம் அலட்டி கொள்வதாக தெரியவில்லை. (வெளிநாட்டினர் மட்டுமே கவலைபடுகின்றனர்) அவர்களை பொறுத்த வரை இருக்கும் அரசாங்கம் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தால் போதுமானது. கியூபா மக்களும், பிறரை போல உணவு, உடை, உறையுள் இவை குறித்து மட்டுமே அதிகம் கவலைபடுகின்றனர்.
அவர்களும் உலகில் பிற நாடுகளில் நடப்பதை அவதானிக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசல் படி போல பிற நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது, தமது நாடு பரவாயில்லை என்று பெரு மூச்சு விடுகின்றனர். மக்களின் இத்தகைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளததாலேயே அமெரிக்கா போன்ற நாடுகள், கியூபா மக்கள் "ஜனநாயக விடுதலை" க்காக காத்திருப்பதாக மாயையை தோற்றுவித்து வருகின்றனர்.
அவர்களும் உலகில் பிற நாடுகளில் நடப்பதை அவதானிக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசல் படி போல பிற நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது, தமது நாடு பரவாயில்லை என்று பெரு மூச்சு விடுகின்றனர். மக்களின் இத்தகைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளததாலேயே அமெரிக்கா போன்ற நாடுகள், கியூபா மக்கள் "ஜனநாயக விடுதலை" க்காக காத்திருப்பதாக மாயையை தோற்றுவித்து வருகின்றனர்.
காஸ்ட்ரோ மரணமடைந்தால், அமெரிக்கா படை எடுக்கலாம் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் உள்ளது. அப்படி நடந்தால் கியூபா இராணுவமும் எதிர்த்து சண்டை பிடிக்கும், பெரும் போர் மூளும் என்று எம்மோடு கதைத்த மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். "நீங்கள் எமது நாட்டிற்கு வந்தால், நாங்கள் உமது நாட்டிற்கு வருவோம்." என்று கியூபா அரசாங்கம் முன்பிருந்தே அமெரிக்காவிற்கு எதிராக பேசி வருகின்றது.
அமெரிக்காவிற்கு அருகில் ஒரு சின்னஞ்சிறு நாடாக இருந்து கொண்டு, ஒரு சர்வதேச வல்லரசை எதிர்த்து பேசும் துணிவு உலகில் வேறு பல பெரிய நாடுகளுக்கே கூட இல்லை. ஹவானா நகர தெருக்களில் இப்போதும் அமெரிக்கா ஜனாதிபதி புஷ், டிரகுலவாக ( போர் வெறியனாக ) சித்தரிக்கும் விளம்பரதட்டிகள் வைக்க பட்டுள்ளன. அமெரிக்கா கியூபா மீது இராணுவ நடவடிக்கை எடுக்காததற்கு பல காரணங்கள் கூறபடுகின்றன. குருஷ்ஷேவின் அணு ஆயுத சர்ச்சை ஏற்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடக்கம், ஈராக் போர் வரை எத்தகைய காரணம் இருந்தாலும், கியூபா உலகில் தனது தனித்துவத்தை தொடர்ந்து பேணி வருகின்றது.