Monday, August 06, 2012

இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - 
பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
(பகுதி -  3) 

க்மெர் ரூஜ் கால படுகொலைகளை விசாரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவென, ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று பெரும் பொருட்செலவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. "கம்போடியாவில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்" என்று இதற்கு தலைப்பிடப் பட்டுள்ளது. இது சர்வதேச அரசியலில் இன்னொரு கேலிக்கூத்து! க்மெர் ரூஜ் தலைவர்கள், உறுப்பினர்கள் மனிதப் படுகொலைகளை புரிந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவற்றை "இனப்படுகொலை" என்று வரையறுக்க முடியுமா? "இன்னொரு இனம், மொழி, மதத்தை சேர்ந்த மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையே, இனப்படுகொலை" என்று நம்பப் படுகிறது. இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுக்கும் அனைத்து ஆவணங்களிலும், அப்படி தான் கூறப்பட்டுள்ளது.  ஆனால், பொல் பொட், மற்றும் க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், வேண்டுமென்றே இன்னொரு இனத்தை அழித்தொழிக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 

இதனால், ஐ.நா. நீதிமன்ற வழக்கறிஞர்கள், "வியட்நாமிய மக்களை படுகொலை செய்த சம்பவங்களை" உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால், அவை எல்லாம், வியட்நாம் என்ற அண்டை நாட்டுடனான பரம்பரை பகை காரணமாக நடந்த படுகொலைகள். (கம்யூனிச சர்வதேசியத்திற்கு முரணாக, க்மெர் ரூஜ் முன்னெடுத்த க்மெர் தேசியவாதம், இனக்குரோதத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.)  க்மெர் ரூஜ் ஆட்சிக்கு வந்தவுடனேயே, பெருமளவு வியட்நாமியர்கள் வெளியேற்றப் பட்டனர், அல்லது தாமாகவே வெளியேறிச் சென்றனர். ஆனால், அந்தக் காலத்தில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்ததையும், இலட்சக்கணக்கான வியட்நாமிய அகதிகளும், போராளிகளும் கம்போடியாவில் புகலிடம் கோரி இருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதைத் தவிர, கம்போடியாவின் பூர்வீக வியட்நாமியர்கள், பல தடவைகள்  அடக்குமுறைக்கு ஆளானார்கள். ஆனால், எந்தவொரு தருணத்திலும், அது ஒரு இனப்படுகொலையாகவோ, அல்லது இனச் சுத்திகரிப்பாகவோ நடந்ததற்கான தகவல் எதுவுமில்லை. கம்போடியாவின் இன்னொரு சிறுபான்மையினமான காம் (Cham) மக்கள் மீதான அடக்குமுறையும், இனப்படுகொலை என்ற அளவுக்கு செல்லவில்லை. அந்த சம்பவங்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம். 

கம்போடியாவில் இனப்படுகொலை குற்றம் புரிந்தமைக்காக, யாரையாவது தண்டிக்க வேண்டுமானால், அது அமெரிக்க அரசாகத் தான் இருக்கும்! அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், அரசு செயலாளர் கிசிங்கர், மற்றும் பல அமெரிக்க அதிகாரிகள், விமானமோட்டிகள், போர்வீரர்கள், குறைந்தது  ஆறு  இலட்சம் கம்போடிய மக்களை இனப்படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் தாராளமாக குவிந்து கிடக்கின்றன. [Problems of Communism Jan-Feb 1979, p. 40 col. 2 & note 35] (Year Zero: The Silent Death Of Cambodia, http://vimeo.com/17634265 )  ஆனால், "கடவுளுக்கு நிகரான மன்னர் சட்டத்திற்கு மேலே உள்ளவர்" என்ற மத்திய கால விதி போன்று, அமெரிக்காவும் சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டது. அமெரிக்கர்கள் இனப்படுகொலை செய்தால், அதற்காக நோபல் பரிசு கொடுத்து பெருமைப் படுவோமே தவிர, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் தைரியம் எமக்கு கிடையாது. அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பேசவும் மாட்டோம்.(Nobel Hypocrisy, Peace Prize Awards to War Criminals, http://www.globalresearch.ca/index.php?context=va&aid=7118) வியட்நாம் போரில் அமெரிக்கா தலையிட்டிருக்கா விட்டால், க்மெர் ரூஜ் என்ற இயக்கமே உருவாகி இருக்காது. அது மட்டுமல்ல, க்மெர் ரூஜ் அரசு கலைக்கப்பட்ட பின்னரும், இன்னொரு பத்து வருடங்கள், கெரில்லா இயக்கமாக போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம், அமெரிக்க அரசு க்மெர் ரூஜுக்கு பக்க பலமாக நின்று உதவிக் கொண்டிருந்தது. (On the side of Pol Pot: U.S. supports Khmer Rouge, http://msuweb.montclair.edu/~furrg/pol/polpotnus.pdf) 

1979 ம் ஆண்டு, கம்போடியா மீது படையெடுத்த வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகள் தான், முதன்முதலாக "இனப்படுகொலை" என்ற வார்த்தையை பயன்படுத்தின. அப்பொழுதெல்லாம், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், ஐ.நா.சபையில், க்மெர் ரூஜ் தூதுவரை கம்போடிய அரச பிரதிநிதியாக அங்கீகரித்திருந்தனர். வியட்நாமிய ஆக்கிரமிப்பை சீனா மட்டுமே எதிர்த்து வந்தது. பிற நாடுகள் எல்லாம் மௌனமாக இருந்து சம்மதம் வழங்கிக் கொண்டிருந்தன. அன்றிருந்த பனிப்போர் அரசியல், பூகோள அரசியல் எல்லாம் வேறு. இருந்தாலும், வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகள் ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்தன. 

S - 21  என்று க்மெர் ரூஜ் பரிபாஷையில் அழைக்கப்பட்ட Tuol Sleng சிறைக்கூடத்தை அருங்காட்சியகமாக மாற்றி விட்டார்கள். குறைந்தது நாற்பதாயிரம் பேராவது, அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர் என்று நம்பப் படுகின்றது. உண்மையில் அந்தக் கைதிகள் எல்லோரும், க்மெர் ரூஜ் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.)  Tuol Sleng சிறைக்கூடம், மேலைத்தேய மக்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப போதுமானதாக இருந்தது. இன்றைக்கும், பொல் பொட், க்மெர் ரூஜ் புரிந்த அக்கிரமங்களை காட்டும் ஆவணப் படங்களில், இந்த சிறைக்கூடம் தவறாமல் இடம்பெறும். 

ஒரு பக்கம், இனப்படுகொலை செய்த குற்றவாளிகள், ஐ.நா. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகளாக அமர்ந்திருக்கின்றனர். மறு பக்கம், முன்னை நாள் க்மெர் ரூஜ் குற்றவாளிகள், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றனர். இந்த வேடிக்கையான முரண்நகையை கம்போடிய மக்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? 1997 ம் ஆண்டு நடந்த சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய ஹூன் சென், ஒரு முன்னாள் க்மெர் ரூஜ் மாவட்ட கமாண்டர். ஒரே தடவையில் பல ஆயிரம் பேரை, களையெடுப்பு என்ற பெயரில் "இனப்படுகொலை" செய்த, க்மெர் ரூஜ் பிராந்திய தளபதி, இன்றைய கம்போடிய தேசிய இராணுவத்திலும் பதவி வகித்தார். அவர்கள் யாரும், தமது க்மெர் ரூஜ் கடந்த காலத்திற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. 

இன்று அவர்களது ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகார அடக்குமுறை, எங்கும் எதிலும் ஊழல், தேசத்தின் வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு விற்று தமது பைகளை மட்டுமே நிரப்புவோர், ஏழைச் சிறுமிகளை பாலியல் இச்சைக்காக நுகர படையெடுக்கும் மேலைத்தேய உல்லாசப் பயணிகள்.... இவற்றைப் பற்றி எல்லாம், சர்வதேச சமூகம் அறிந்தும் அறியாதது போல நடந்து கொள்கின்றது. இவை எல்லாம் எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், பொல் பொட், க்மெர் ரூஜுக்கு எதிரான இனப்படுகொலைப் பிரச்சாரங்கள், நீதிமன்ற விசாரணைகள் எல்லாம், ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.நா. நீதிமன்ற விசாரணைகள் எந்தக் காலத்திலும் முடியப் போவதில்லை என்பதும், குற்றவாளி என்று யாரும் தண்டிக்கப் படப் போவதில்லை என்பதும் பலரது சந்தேகமாகும்.  

1979 ல், க்மெர் ரூஜ் அரசு கவிழ்க்கப் பட்ட பின்னர், பொல் பொட்டும், பிற தலைவர்களும், தாய்லாந்து எல்லையோரம் முகாம் அமைத்து இருந்தனர். குறைந்தது பதினைந்து வருடங்களாவது, அவர்கள் அங்கே மறைந்திருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்கள், மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் தாய்லாந்தில் இருந்து சென்று கொண்டிருந்தன. தாய்லாந்து இராணுவத்திற்கு பொல் பொட்டின் மறைவிடம் எங்கே உள்ளது என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. அது மட்டுமல்ல, பொல் பொட் கடும் சுகயீனமுற்றிருந்த காலத்தில் எல்லாம், தாய்லாந்து மண்ணில் வைத்து, இராணுவ வைத்தியர்களால் பரிசோதிக்கப் பட்டார். அப்பொழுதெல்லாம், இனப்படுகொலை குற்றவாளிகளை பிடித்து, ஐ.நா. விடம் ஒப்படைக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லையா? 

"க்மெர் ரூஜ் நடத்திய இனப்படுகொலை, சர்வதேச சமூகத்திற்கு தாமதமாகத் தான் தெரிந்தது." என்று யாரும் சிறுபிள்ளைத்தனமாக வாதாட நினைக்க வேண்டாம். க்மெர் ரூஜ்  ஆண்ட 1976 அல்லது 1977 காலப்பகுதியில், கம்போடியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் அலறிக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில், கம்போடியாவிற்கு விஜயம் செய்த சுவீடனை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் யான் மிர்தல், அங்கு தங்கியிருந்த காலத்தில், "எங்கேயும் இனப்படுகொலையை கண்ணால் காணவில்லை" என்று தெரிவித்தார். அவரது பயணக்குறிப்புகள், "Kampuchea mellan två krig" (இரண்டு யுத்தங்களுக்கு இடையிலான கம்பூச்சியா) என்ற நூலாக வெளிவந்தது. இது பற்றி, சுவீடனின் Aftonbladet நாளேட்டில் வந்த கட்டுரையை இந்த இணைய இணைப்பில் வாசிக்கலாம். ( Jag såg inget massmord , JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja,  http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab )

"கம்போடியாவின் கொலைக்களம்" என்ற பெயரில், பல்வேறு நூல்கள், ஆவணப்படங்கள், சினிமாப் படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால், அவற்றில் எந்த ஒரு இடத்திலும், "க்மெர் ரூஜ் எதற்காக இருபது இலட்சம் சொந்த மக்களை படுகொலை செய்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. ஒரு விடுதலை இயக்கம், தாம் யாருக்காக போராடுகிறோம் என்று கூறுகின்றதோ, அந்த மக்களையே படுகொலை செய்து குவித்துக் கொண்டிருக்காது. அதன் அர்த்தம், ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த இன மக்களுக்கு எதிராக துப்பாக்கியை திருப்பாது என்பதல்ல. எண்ணிக்கை மாறு பட்டாலும், உலகில் உள்ள அனைத்து விடுதலை இயக்கங்களும் சொந்த இனத்தை சேர்ந்தவர்களை கொலை செய்துள்ளன. ஆனால், மொத்த சனத்தொகையில் கால் வாசியை தாமே அழித்தொழிக்க மாட்டாது. 

"க்மெர் ரூஜ் தலைவர்கள் மனித குலத்திற்கு எதிரான படுகொலைகள் புரிந்தவர்களாக கருதப் படுவார்களானால்", அதே கோட்பாடு உலகின் பிற விடுதலை இயக்கங்கள் மீது சேறு பூசவும் பயன்படுத்தப் படலாம். "தமது சொந்தப் பலத்தில் வெற்றி பெற்று, அந்நிய  உதவி  எதுவுமின்றி, தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நிர்வகிக்கும் வாய்ப்புப் பெற்ற விடுதலை இயக்கங்கள் எதுவும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது," என்பது தான் ஏகாதிபத்தியத்தின் நோக்கமாகும். அது மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கறை படிந்த கடந்த காலத்தை மறைக்கவும் முடியும். ஒரு காலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த, அமெரிக்கா, வியட்நாம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், "கம்போடியாவுக்கான ஐ.நா. நீதிமன்றத்தை" ஒன்று சேர்ந்து ஆதரிக்கின்றன. 

கம்போடியாவின் அண்மைக்கால வரலாற்றில், அந்நிய நாடொன்றிற்கு அடிமைப் பட்டிராத காலம் மிகக் குறைவு. அங்கர் வாட் கோயிலைக் கட்டிய சுதந்திர கம்போடிய ராஜ்ஜியம் இன்று ஒரு கனவு மட்டுமே. 16 ம் நூற்றாண்டில் இருந்து,  சக்தி வாய்ந்த அயல் நாட்டினரான, தாய்லாந்தும், வியட்நாமும், கம்போடியாவை ஆக்கிரமிப்பதற்கு போட்டி போட்டார்கள். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனிய ஆதிக்கவாதிகளான பிரெஞ்சுக் காரரின் உதவியுடன் தான் அவர்களை தூர நிற்க வைக்க முடிந்தது. க்மெர் மன்னர் பரம்பரையில் வந்த சிஹானுக், 1970 ம் ஆண்டு வரையில் பிரான்ஸின் பாதுகாப்பில் ஆட்சி நடத்தினார். அந்த வருடம் வலதுசாரிகள் ஆதரவுடன், சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த லொன் நொல், அமெரிக்கா உதவியுடன் சர்வாதிகார ஆட்சி நடத்தினார். 1979 முதல் 1989 வரையில், பத்தாண்டுகளாக வியட்நாமிய துருப்புகள் நிலைகொண்டிருந்தன. 

ஆக மொத்தம், மூன்றரை ஆண்டுகள் மட்டுமே, அதாவது க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்தில் மட்டுமே, கம்போடியா பூரண சுதந்திரமடைந்த  நாடாக இருந்துள்ளது! க்மெர் ரூஜ் சொந்த மக்கள் மீது திணித்த கட்டுப்பாடுகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அந்தக் காலங்களில் எந்தவொரு அந்நிய நாட்டினதும் உத்தரவு அங்கே செல்லுபடியாகவில்லை. "இலவச ஆலோசனை"  பெறுவதற்கு கூட மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. நம்பிக்கைக்குரிய நண்பனாக கருதப்பட்ட சீனாவை கூட, நாட்டு நிர்வாகத்தில் மூக்கை நுளைக்க விடவில்லை. க்மெர் ரூஜ் அரசுக்கு சொல்லிக் கொள்ளும் படியான நண்பர்கள் யாரும் இருக்கவில்லை, அல்லது நண்பனாக இருக்கக் கூடியவர்களையும் சந்தேகப் பட்டார்கள். பிற சோஷலிச நாடுகளுடனும், இராஜதந்திர மட்டத்திலான உறவுகள் மட்டுமே வைத்துக் கொள்ளப்பட்டன. நட்பு நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகளும், தூதுவராலயங்களுக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருந்தது. 

வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்கும் அது தான் நிலைமை. போர் முடிந்தவுடன், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக, தாய்லாந்தில் தொண்டு நிறுவனங்கள் காத்து நின்றன. "பட்டினி கிடந்தது செத்தாலும் பரவாயில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் உணவை உண்டு, எமது மக்கள் அன்னியருக்கு அடிமைப் பட வேண்டாம். நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்து கொள்வோம்." என்பதுவே க்மெர் ரூஜின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், அந்தப் பிடிவாதத்திற்காக கம்போடிய மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்தார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, அனைத்து பிரஜைகளும் வயலில் இறங்கி வேலை செய்தார்கள். ஒரு நாட்டின் ஓட்டு மொத்த மனித உழைப்பையும் விவசாயத்தில் ஈடுபடுத்தியிருந்தால், அந்த நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தும், சில இடங்களில் பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? 

Saturday, August 04, 2012

கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்


"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு 

(பகுதி - 2)
க்மெர் ரூஜ் இயக்கமானது, உலகிலேயே மிகவும் இரகசியமான அமைப்பாகும். நீண்ட காலமாக அதன் தலைவர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பொல் பொட்டும் பிற தலைவர்களும், இரகசியத்தை பேணுவதில் காட்டிய அதீத அக்கறை, சில நேரம் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. உதாரணத்திற்கு, வியட்நாமிய படையெடுப்பின் பொழுது, அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களின் மிகை மதிப்பீடு காரணமாக, பல ஆவணங்களை, சாட்சியங்களை அழிக்காமலே சென்று விட்டனர். அவை எல்லாம் எதிரிகளின் கைகளில் சிக்கி, "இனப்படுகொலை சாட்சியங்களாக" இன்றைக்கும் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்காக, பொல் பொட், க்மெர் ரூஜ் மேல் வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்று கூறி விட முடியாது.

 "தீவிர கம்யூனிச வெறி காரணமாக", சியாம் ரீப்பில் உள்ள அங்கர் வாட் கோயிலை உடைத்தார்கள், க்மெர் கலைப் பொக்கிஷங்களை அழித்தார்கள், என்றெல்லாம் மேற்குலகில் பரவிய வதந்திகளில் உண்மை கிடையாது. தலைநகர் ப்னோம் பென் கைப்பற்றப் பாட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்ட காலங்களிலும், பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப் பட்டு வந்தன. யாரும் பயன்படுத்தா விட்டாலும், பொது நூலகம், அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு எந்த சேதமும் நடக்க விடவில்லை. ஆனால், வியட்நாமிய படையெடுப்பின் பின்னர், பலஅரிய கலைப் பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, வியட்நாம் கொண்டு செல்லப்பட்டன. க்மெர் ரூஜ் இயக்கத்தினர், ஓரளவு க்மெர் தேசியவாத கொள்கையையும் கொண்டிருந்தனர். அங்கார் வாட் கோயில் போன்ற பண்டைய க்மெர் நாகரிக சின்னங்களை பாதுகாப்பதால், க்மெர் தேசியத்தை கட்டியெழுப்ப நினைத்தார்கள். உண்மையில், பொல் பொட் தலைமையிலான தனித்துவமான கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்கு, க்மெர் தேசிய உணர்வு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

க்மெர் மன்னன் ஜெயவர்மனால் கட்டப்பட்ட, உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டு ஸ்தலமான அங்கர் வாட் கோயில் பற்றி, ஏற்கனவே பல தமிழர்கள் கேள்விப் பட்டிருப்பார்கள். ஜெயவர்மன் என்ற பெயர் தமிழ்பெயர் போன்று ஒலிப்பதாலும், அது ஒரு இந்துக் கோயில் என்பதாலும், "அங்கர் வாட் கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள்"  என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரையில், கம்போடியாவில் க்மெர் நாகரீகம் சிறந்து விளங்கியது. அன்றைய க்மெர் சாம்ராஜ்யம், வியட்நாம், தாய்லாந்தின் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது. இன்றைக்கும் இவ்விரு அயல் நாடுகளிலும், க்மெர் மொழிச் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். குறிப்பாக, தென் வியட்நாமிய பகுதி, அதாவது ஹோசிமின் (சைகோன்) நகரும், அதைச் சூழவுள்ள பிரதேசமும் ஒரு காலத்தில் க்மெர் மக்களின் நாடாக இருந்தது. வந்தேறுகுடிகளான வியட்நாமியர் இன்று அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். அந்தப் பகுதியில், க்மெர் நாகரீகத்திற்கு முந்திய "பூனான்" (Funan) நாகரீகம் நிலவியது. அந்த நாகரீகத்தின் நிஜப் பெயரும், மக்கள் பேசிய மொழி பற்றியும் இன்று யாருக்கும் தெரியாது. எமக்குத் தெரிந்ததெல்லாம், அரச கரும மொழியாக சமஸ்கிருதம் இருந்துள்ளது என்பது மட்டுமே.

ஆகவே, கம்போடியாவை சேர்ந்த க்மெர் மொழி பேசும் மக்கள், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியவர்கள் என்பது, மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் மூலம் நிரூபிக்க முடியும். "இந்திய கலாச்சாரம்" என்றால், நாங்கள் புரிந்து கொள்வது என்ன? உலக வரைபடத்தில், தலை கீழ் முக்கோணம் போன்ற வடிவில் இருக்கும் இந்தியா என்ற தேசம் உங்கள் மனக்கண்ணில் தோன்றினால், அது தவறாகும். சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னர் தான், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், ஒரே மாதிரியான ஐரோப்பிய கலாச்சாரம் பரவியது. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, ஆப்கானிஸ்தான் முதல் இந்தோனேசியா வரையில் இந்தியக் கலாச்சாரம் பரவி இருந்தது. ஆனால் அது இந்தியாவில் இருந்து பரவிய கலாச்சாரமா, என்பது கேள்விக்குறி தான்.

இது குறித்து இது குறித்து இங்கே மேலும் ஆராய்வது எமது நோக்கமல்ல.க்மெர் மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை பற்றி புரிந்து கொண்டால் போதும். கலாச்சாரம் மட்டுமல்ல, கருமையான தோல் நிறமும் க்மெர் இனத்திற்கு உரிய விசேட அம்சம் தான். கம்போடியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஒருவர் அந்த வித்தியாசத்தை தனது கண்ணால் பார்க்கலாம். நாட்டுப்புறங்களில்,கிராமங்களில் விவசாயம் செய்து வாழும் மக்கள், கருப்பாக இருப்பார்கள். அதே நேரம், பெரு நகரங்களில், வசதியாக வாழும் மக்கள் சிவப்பாக இருப்பார்கள். தமிழ் நாட்டை போன்ற வரட்சியான காலநிலை கொண்ட கம்போடியாவில், வயலில் வேலை செய்யும் மக்கள், சூரிய வெப்பம் காரணமாக கருத்து விட்டதாக நினைப்பார்கள். அதற்கு மாறாக, நகரங்களில் சொகுசாக வாழும் மக்கள், எப்பொழுதும் நிழலுக்குள் வாழப் பழகி இருப்பார்கள்.

பழம் பெருமை வாய்ந்த  அங்கர் வாட் கோயிலை கட்டியவர்கள் யார் என்று, அருகே உள்ள கிராங்களில் வாழும் மக்கள் அறிந்திருக்கவில்லை. கடவுளரும், பூத கணங்களும் கட்டியதாக, அவர்கள் நம்பினார்கள். பொல்பொட் நிலப்பிரபுத்துவ அமைப்பை நிராகரித்த போதிலும், ஒரு காலத்தில் அதி உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட,க்மெர் மக்கள் சக்தியை வியந்து பாராட்டிக் கொண்டிருந்தார். "ஜெயவர்மன் அங்கர் வாட் கோயிலை அடிமைகளைக் கொண்டு கட்டியது போன்று, கம்போடியாவின் அபிவிருத்தி என்ற குறிக்கோளுக்காக, பொல்பொட் தனது மக்களை அடிமைகளாக வேலை வாங்கியதாக,"மேற்கத்திய எழுத்தாளர்கள் குறிப்பிடுவதுண்டு. பொல்பொட்டின் நோக்கம், ஒன்று திரட்டப் பட்ட மனித உழைப்பின் மூலம், புதிய உலகம் ஒன்றை சிருஷ்டிப்பதாக இருந்தது. சுருக்கமாக சொன்னால், பின்தங்கிய ஏழை நாடான கம்போடியா, இருபதாண்டில் முதலாம் உலகின் தரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக, அனைத்து பிரஜைகளும் பொது இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். ஒரு வேளை, பொல்பொட்டின் கனவு நிறைவேறி இருந்தால், "நவீன க்மெர் நாகரீகம்" உருவாகி இருக்கலாம். ஆனால், பண்டைய க்மெர் நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு என்ன காரணமோ, அது பொல்பொட்டின் மூன்றரை வருட ஆட்சியில் நடந்தது. மன்னர் காலத்தில் நடந்ததைப் போன்று, இரத்தம் உறிஞ்சும் கடின உழைப்பு, மற்றும் சக்திக்கு மீறிய கட்டுமானப் பணிகளும், பஞ்சத்தால் பலர் மடிவதற்கு காரணமாக அமைந்தன. ஆனால், அது கம்போடியா முழுவதற்கும் பொதுவான அம்சமாக இருக்கவில்லை.

கம்போடியா நீண்ட காலமாக, நிலப்பிரபுத்துவ சமுதாயமாக காணப்பட்டது. மார்க்ஸ் எதிர்வு கூறிய, முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி எதுவும் அங்கே நடக்கவில்லலை. தலைநகரான ப்னோம் பென் மட்டுமே தொழிற்துறை வளர்ச்சி கண்டிருந்தது. தலைநகரத்தில் மட்டுமே தொழிற்சாலைகள் இருந்ததால், பாட்டாளி மக்களும் மொத்த சனத்தொகையில் மிகக் குறைவாகவே இருந்தனர். தொண்ணூறு வீதமான கம்போடியர்கள், விவசாயிகளாக அல்லது விவசாயக் கூலிகளாக நாட்டுப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆகவே, கார்ல் மார்க்ஸ் முன்மொழிந்த பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு, கம்போடியா ஏற்ற இடமாக இருக்கவில்லை. பொல் பொட்டிற்கும் பிற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும், இந்த உண்மை நன்றாகத் தெரியும்.

பொல்பொட் முன்மொழிந்த "மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்" பின்வரும் தர்க்கவாதத்துடன் நியாயப் படுத்தப் பட்டது. "ஒவ்வொரு நாட்டு மக்கள் இயக்கமும் அதற்குரிய மார்க்சிய-லெனினிசத்தை கொண்டுள்ளது. கம்போடியாவில் வேர் விட்ட, க்மெர் சித்தாந்தம் ஒன்றை வகுப்பதே எமது இலக்கு ஆகும். ஆகவே, கட்சி உறுப்பினர்கள் மார்க்சிய நூல்களை படிக்க வேண்டியதில்லை, அந்த நூல்களை க்மெர் மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை." உலகில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும், தனது உறுப்பினர்கள் மார்க்சிய நூல்களை படிக்கத் தேவையில்லை என்று கூறியதில்லை. அந்த வகையில், பொல்பொட்டும், க்மெர் ரூஜும் தனித்துவமானவர்கள். அவர்கள் புரட்சியாளர்கள் தான்.  ஆனால், நிச்சயமாக மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்கள் அல்ல.பொல்பொட் முன்மொழிந்த புதிய சித்தாந்தப் பிரகாரம், நாட்டுப்புற விவசாயிகள், கம்போடியாவின் பாட்டாளி வர்க்கமாக கருதப் பட்டனர். கம்போடியாவின் பொதுவுடமைப் புரட்சிக்கு, அந்த வர்க்கத்தினரே தலைமை தாங்க வேண்டும் என கற்பிக்கப் பட்டது.க்மெர் ரூஜ் என்ற விடுதலைப் படையில் போராளிகளாக சேர்பவர்கள், மார்க்சிய லெனினிசம் படிக்க வேண்டிய கடமை இருக்கவில்லை. அவர்களது வர்க்கப் பின்னணியே போதுமானது.

கம்போடிய கம்யூனிஸ்டுகள், சர்வதேச கம்யூனிச அமைப்புடன் சேராமல் தனியாக பயணித்தனர். பிற்காலத்தில், அதிகாரத்திற்கு வந்த பின்னர் தூர கிழக்காசிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உறவு ஏற்பட்டது. பிற சோஷலிச நாடுகளின் இராஜதந்திர உறவும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்தோனேசிய, தாய்லாந்து கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அவை எல்லாம் சர்வதேச தனிமைப் படுத்தலில் இருந்து தப்புவதற்காக தேவை கருதி உருவான தொடர்புகள். பொல்பொட் கம்போடியாவில் நடைமுறைப் படுத்தியது, ஒரு மார்க்சியப் புரட்சி அல்ல. ஆனால், 19 ம் நூற்றாண்டு ஐரோப்பிய சோஷலிச சிந்தனையாளர்கள் சிலரது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் பொதுவுடமைப் புரட்சியாகும். அந்த தத்துவ அறிஞர்கள் கைகளில் அதிகாரமும், ஆயுதங்களும் இருக்கவில்லை. பொல்பொட்டின் கைகளில் அவை இரண்டும் தாராளமாக இருந்தன. அது மட்டுமே வித்தியாசமாகும். மேலும், கூட்டுறவுப் பண்ணைகளும், பொதுவுடைமை பொருளாதாரமும், மார்க்சியத்திற்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் அல்ல. ஆதி கால கிறிஸ்தவ சமூகங்களும் அவ்வாறு தான் தம்மை நிலைநிறுத்திக் கொண்டன. 


பிற்காலத்தில், கம்போடிய மேட்டுக்குடியினரை படுகொலை செய்து, அந்த வர்க்கத்தின் இருப்பையே இல்லாதாக்கிய, பொல்பொட் ஒரு நிலவுடமையாளரின் மகன் என்பது அதிர்ச்சியான தகவல் தான். சாலோத் சார் என்ற இயற்பெயரைக் கொண்ட பொல்பொட்டின் நெருங்கிய உறவினர்கள், ஒரு அண்ணன் கூட, அரச மாளிகையில் பதவி வகித்தவர்கள். பாடசாலைக் கல்வியை முடித்த சாலோத் சார், பிரான்ஸ் சென்று உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கம்போடியா பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. பொல் பொட்டும் வேறு சில மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளும், பிரான்ஸ் சென்று கல்வி கற்க தெரிவான முதலாவது கம்போடிய பிரைஜைகள் என்ற பெருமையை பெறுகின்றனர்.

உயர் கல்வி கற்று, பதவி வகிக்கும் திறமை கொண்ட புத்திசாலிப் பிள்ளைகள், பிற்காலத்தில் க்மெர் ரூஜ் இயக்கத்திற்கு தலைமை தாங்கப் போகிறார்கள் என்று, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய பின்னர், பொல்பொட் ஒரு பாடசாலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் எல்லோருக்கும் பிடித்த, இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவர். எளிதில் உணர்ச்சி வசப் படாதவர், கோபத்தை வெளிக்காட்டாதவர், சத்தம் போட்டு பேசாதவர், எந்த தருணத்திலும் கேட்ட வார்த்தை பேசாதவர்.... என்றெல்லாம் நண்பர்களால் புகழாரம் சூட்டப் பட்ட, நல்ல குணங்களைக் கொண்ட மனிதர். பிற்காலத்தில், நான்கு மில்லியன் மக்களை இனப்படுகொலை செய்த கொலைவெறியனாக உலகம் முழுவதும் தூற்றப் படப் போகிறார் என்று, யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

உலகம் முழுவதும், ஐரோப்பிய காலனியாதிக்க எஜமானர்கள், காலனிய நாடுகளில் உள்நாட்டு சேவகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். பொல்பொட் குழுவினர் உயர்கல்வி கற்க பிரான்ஸ் சென்ற காரணமும் அதுவாகத் தான் இருக்க முடியும். ஆனால், அன்று நடந்து கொண்டிருந்த அமெரிக்க-வியட்நாம் யுத்தம், ஐரோப்பிய கம்யூனிச சக்திகளுக்கு புத்துயிர்ப்பை வழங்கி இருந்தது. விரும்பியோ விரும்பாமலோ, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கம்போடிய மாணவர்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. அன்று வரையில், மார்க்சிய நூல்கள் எதுவும் க்மெர் மொழியில் மொழிபெயர்க்கப் படவில்லை. பொல்பொட்டும், சக மாணவர்களும், பிரெஞ்சு மொழியில் தான் அவற்றை படித்தார்கள். கம்போடிய மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து, "மார்க்சிய கற்கை வட்டம்" ஒன்றை உருவாக்கி கொண்டார்கள். 

மார்க்சிய கற்கை வட்டத்தை சேர்ந்த மாணவர்கள், பிற்கால க்மெர் ரூஜ் தலைவர்களாக உருவானார்கள். Cercle Marxiste  என்ற மார்க்சிய வட்டத்தில் உருவான நட்பு, கொள்கைப்பற்று, நீண்ட காலமாக இயக்கத்திற்கு விசுவாசமானவர்களாக தொடரச் செய்தது. இருப்பினும், களத்தில் மாறிய சூழ்நிலை காரணமாக, அவர்களில் சிலர் பொல்பொட் டின் கட்டளையின் பேரில் கொல்லப் பட்டனர். (க்மெர் ரூஜ் மொழியில்: மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.) பொல்பொட்டின் அதிகார வேட்கை மட்டுமே அதற்கு காரணமாக கூற முடியாது. தான் கொண்ட கொள்கையில் தளராத மனவுறுதியும், தன்னலத் துறவும், பொதுநலம் மட்டுமே முக்கியமாகக் கருதும் மனப்பான்மையும், பொல்பொட்டிடம் அளவுக்கதிகமாகவே காணப்பட்டன.

பொல்பொட் பிற தலைவர்களைப் போல, தனது உறவினர்கள், நண்பர்களைக் கொண்ட ஆதரவுத் தளத்தை வைத்திருக்கவில்லை. கம்போடியா என்ற நாட்டின் நிறைவேற்று அதிகாரம் வாய்ந்த அதிபராக பொல் பொட் இருந்த காலத்தில், அவரது சொந்த சகோதரர்கள் சாதாரண மக்களாக கூட்டுறவுப் பண்ணைகளில் வேலை செய்தனர். (தமது சகோதரன் தான் தேசத்தின் சக்தி வாய்ந்த தலைவன் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.) அதே போன்று, க்மெர் ரூஜ் தலைவர்களாக இருந்தவர்கள், சிறு பராயம் முதலே பழக்கமான நண்பர்களாக இருந்த போதிலும், அவர்களது கட்சி மீதான விசுவாசம் கேள்விக்குட்படுத்தப் பட்ட பொழுது, ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டப் பட்டனர்.

க்மெர் ரூஜ் புரிந்த "இனப்படுகொலை"யின் பெரும் பகுதி, இயக்கத்தை தூய்மைப் படுத்தும் நடவடிக்கையான களையெடுப்பு காரணமாக நடந்துள்ளது. அனைத்துக் கொலைகளையும், இயக்கத்திற்காக, இலட்சியத்திற்காக என்று நியாயப் படுத்த முடிந்தது. "பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு, களையெடுப்பு அவசியம்". எண்பதுகளில்  ஈழ விடுதலை இயக்கங்கள் கூறிய அதே காரணத்தை தான், எழுபதுகளில் க்மெர் ரூஜ் தலைமையும் கூறி வந்தது. களையெடுப்பு என்ற பெயரில் கொல்லப்பட்டவர்கள் செய்த குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப் பட்டனவா? துரோகிகளின் பட்டியல் நீண்டு சென்று, இறுதியில் பொல்பொட் மீதும் துரோகிப் பட்டம் சூட்டப் பட்டது. புறக் காரணிகளை தவிர்த்து, எல்லை மீறிப் போன "துரோகிகள் அழிப்பு" க்மெர் ரூஜ் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. "பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு



Friday, August 03, 2012

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு

பகுதி - 1 : க்மெர் ரூஜ், ஓர் அறிமுகம்
"பொல்பொட்", "க்மெர் ரூஜ்", இனப்படுகொலையின் ஒத்த கருத்துள்ள சொற்களாக, இன்றைக்கும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன. நாம் எல்லோரும், இந்த சொற்களை எதிர்மறையான அர்த்தம் தரும் வண்ணம், பேசக் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் மறுபக்கத்தை பார்க்குமாறு யாராவது கோரினால், "கம்போடிய இனப்படுகொலையை விசாரிக்கும் ஐ.நா. நீதிமன்றத்தை" காட்டி அவர்களின் வாயை அடைக்கலாம். ஆனால், ஐ.நா. நீதிமன்ற விசாரணை கூட, (போரில்) வென்றவர்களின் நீதியாகவே நடத்தப் படுகின்றது. அதாவது தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிகளாக இனங் காணப்பட்டு தண்டனை வழங்கப் படுவார்கள். அவர்கள்  நடத்திய படுகொலைகள் பற்றிய தகவல்கள் கூட மூடி மறைக்கப் படும். வென்றவர்கள், "இனப்படுகொலைக்கான நோபல் பரிசு" கொடுத்து கௌரவிக்கப் படுவார்கள்!

பொல்பொட்டும், க்மெர் ரூஜும் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கம்போடியாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் பணிப்புரையின் பெயரில்  விமானக் குண்டுவீச்சுகள் நடத்தப் பட்டன. பல கிராமங்கள் இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப் பட்டன. குறைந்தது, "மூன்று இலட்சம் கம்போடிய மக்களை இனப்படுகொலை செய்தமைக்காக", நிக்சனுக்கு அரசு செயலாலராகவிருந்து, அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற கிசிங்கருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது!  நயவஞ்சகத் தனமாக, நிக்சன் படுகொலை செய்த மக்களின் எண்ணிக்கை, பொல்பொட்டின் கணக்கில் சேர்க்கப்பட்டது. அது போன்றே, இன்னொரு நாட்டின் மீது அத்துமீறிப் படையெடுத்த வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கொள்ளப் பட்டது.

இவ்வாறு தான், "பொல்பொட் நான்கு மில்லியன் கம்போடிய மக்களை இனப்படுகொலை செய்ததாக", இன்றளவும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அதன் அர்த்தம், பொல்பொட் படுகொலை செய்யவில்லை என்பதல்ல. சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை நிறுவனங்களும், பக்கச்சார்பற்று ஆய்வு செய்த ஊடகவியலாளர்களும், "குறைந்தது ஒரு மில்லியன், அதிக பட்சம் இரண்டு மில்லியன் மக்கள், பொல் பொட்டினால் கொல்லப் பட்டிருக்கலாம்" என்கின்றனர். இரகசியமாக நடந்த கொலைகள் பலவற்றின் சரியான எண்ணிக்கை ஒருக்காலும் தெரியாமல் போகலாம்.

பொல்பொட்டினால் அங்கீகரிக்கப் படாத, வெற்றிக் களிப்பில் மிதந்த க்மெர்ரூஜ் உறுப்பினர்களால் புரியப்பட்ட படுகொலைகள் போன்றவை, உலகில் எந்த நாட்டிலும் நடக்கலாம். குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த படுகொலைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் பொழுது, கம்போடியாவில் நடந்தது அதிகமல்ல. ஆயினும், கம்போடிய மக்களின் பழமைவாத மனோபாவமும், படுகொலைகளை தீர்வாக கருதுவதற்கு காரணமாக அமைந்தது. பொல்பொட், க்மெர்ரூஜ், கம்போடிய புரட்சி பற்றி எந்த ஒரு ஆய்வையும் செய்யாது, எழுந்தமானமாக படுகொலைகளை பற்றி மட்டுமே பேசுவது உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக, கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பூர்சுவா அறிவுஜீவிகளும், இதனை தமது வர்க்க நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரமாகவே முன்னெடுத்து வருகின்றனர். மேற்கத்திய, மேட்டுக்குடி பிரச்சாரங்களுக்கு அப்பால், கம்போடியாவில் நடந்தவற்றை பக்கச் சார்பற்று ஆய்வு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கம்போடியாவில் நடந்தது ஒரு புரட்சி. ஆனால், அது அது ஒரு மார்க்சிய புரட்சி அல்ல. பொல்பொட்டின்  கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது. ஆனால் பொல்பொட், மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தின் வழி நடக்கவில்லை. அந்தக் கொள்கைக்கு மாறாக, கம்போடிய மண்ணின் தன்மைகளுக்கேற்ற தனித்துவமான சித்தாந்தம் ஒன்றை வரித்துக் கொண்டார். கம்போடியாவை தவிர, வேறந்த நாட்டிலும் அந்த சித்தாந்தம் எடுபடவில்லை. கம்போடியப் புரட்சியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அவா, பொல்பொட்டிற்கு இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்,கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் அமைப்பான மூன்றாம் அகிலத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. அது குறித்து அவர்கள் அக்கறைப் படவுமில்லை. பொல்பொட் அதிகாரத்தில் இருந்த மூன்றரை வருடங்களாக, கம்போடியா வெளியுலக தொடர்புகளை துண்டித்துக் கொண்டது. சீனாவைத் தவிர, வேறந்த நண்பனும் இருக்கவில்லை. அதனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, சீனா ஊடாகத் தான் பயணம் செய்ய முடிந்தது. இத்தகைய காரணங்களால், வெளியுலகத்தவரால் கம்போடியா ஒரு மர்ம தேசம் போன்று பார்க்கப் பட்டது. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே, இனப்படுகொலை பற்றிய செய்திகள் மேற்கத்திய நாடுகளில் பரவிக் கொண்டிருந்தன.

சீனாவின் ஆலோசனையின் பேரில், க்மெர்ரூஜ் அரசாட்சியின் இறுதிக் காலங்களில் சில வெளிநாட்டு தொடர்புகள் ஏற்பட்டன. சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து நண்பர்கள் குழு, கம்போடியாவிற்கு விஜயம் செய்தது. இந்திய நக்சலைட் புரட்சி பற்றி எழுதிய பிரபல சுவீடிஷ் எழுத்தாளரான யான் மிர்தால் அவர்களில் ஒருவர். யான் மிர்தால் எழுதிய குறிப்புகளுடன், சில அமெரிக்க ஊடகவியலாளர்களின் குறிப்புகளையும் இந்தக் கட்டுரை எழுதுவதற்கு உசாத்துணையாக எடுத்துக் கொண்டுள்ளேன். அத்துடன், பொல்பொட்டின் வரலாற்று நூல்களும், படுகொலைகளுக்கு தப்பியவர்களின் நினைவுக் குறிப்புகளைக் கொண்ட நூல்களும், மேலும் கம்போடிய வரலாற்று நூல்களும், இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைத் தொடரின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள உசாத்துணைப் பட்டியலை, வாசகர்கள் தாமாகவே தேடி எடுத்து வாசித்து அறிந்து கொள்ளலாம். ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்களைக் கொண்ட, பிரச்சார நோக்கில் எழுதப் பட்ட நூல்களை பெரிதும் தவிர்த்திருக்கிறேன். உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக, பொல் பொட்டையும், க்மெர் ரூஜையும் எதிர்த்ததாக நினைப்பது தவறு. கம்போடியாவில் பொல் பொட்டின் புரட்சியை, உலகம் முழுவதும் இருந்த,சீன சார்பு "மார்க்சிய-லெனினிசக் கட்சிகள்" ஆதரித்திருந்தன. அது மட்டுமல்ல, அமெரிக்காவை சேர்ந்த ஊடகவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் சிலர், நிபந்தனைகளுக்குட்பட்டு ஆதரித்திருந்தனர். ஆனால், பழியை தோற்றவர்கள் மீது போட்டு சுகம் காணும் உலகில், அவற்றை ஆராய்பவர்கள் மிகக் குறைவு.

கம்போடியாவில் நடந்தது ஒரு மார்க்சியப் புரட்சி அல்ல என்பதால், கம்போடியா மக்களின் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கம்போடியாவில் பேசப் படும் க்மெர் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. அதனால் க்மெர் மக்களின் சரித்திர கலாச்சாரப் பின்னணியை அறிவது அவசியமானது. பொல்பொட்டின் இயக்கத்தை "க்மெர் ரூஜ்" என்றே உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அது பிறரால் சூட்டப் பட்ட குறியீட்டுப் பெயர் என்பது பலருக்கு தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தை, மேற்கத்திய நாடுகளில் "தமிழ்ப் புலிகள்" (Tamil Tigers) என்று தான் அழைப்பார்கள். அது போன்றது தான் இதுவும். அதாவது, ஒரு மொழியைப் பேசும் மக்கள் இனத்துடன்,வெளிநாட்டவர்கள் அந்த இயக்கத்தை சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்கின்றனர். "க்மெர் ரூஜ்" (Khmer Rouge) என்பதை, க்மெர் மொழி பேசும் மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக கருதியதால் தான், அவர்களுக்கு அந்தப் பெயர் நிலைத்தது. உண்மையிலேயே, அந்த நாட்டில் ஒரு ஜனநாயக க்மெர் தேசியவாத அமைப்பு இருந்தது. அன்றைய ஆட்சியாளரான மன்னர் சிஹானுக், மிதவாத தேசியவாதிகளை "க்மெர் ரோஸ்" என்றும், தீவிர தேசியவாதிகளை "க்மெர் ரூஜ்" என்றும் அழைத்தார். மக்கள் வாயிலும் அந்தப் பெயர் நுழைந்து விட்டது. (பிரெஞ்சு மொழியில் ரூஜ் என்றால் சிவப்பு என்று அர்த்தம்.)

க்மெர் ரூஜ் உறுப்பினர்கள், தமது அமைப்பை "அங்கர்" (Angkar) என்று தான் மக்களிடம் அறிமுகம் செய்தனர். க்மெர் மொழியில் அங்கர் என்றால், இயக்கம் என்று அர்த்தம். இது நமக்கு ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களை நினைவு படுத்துகின்றது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்தியிருந்த அமைப்புகளை, ஈழத் தமிழ் மக்கள் "இயக்கம்" என்று தான் அழைத்தனர். க்மெர் மக்களின் கலாச்சாரமும், தமிழ் மக்களின் கலாச்சாரமும் பல அடிப்படை ஒற்றுமைகளை கொண்டிருப்பதால், அந்த மக்களின் மன நிலையை புரிந்து கொள்வது கடினமானதல்ல. கம்போடியா அமைத்துள்ள இந்தோ-சீன நிலப்பரப்பு, இந்திய உப கண்டத்தில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் அமைந்திருப்பதால், இவ்விரண்டு இன மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் எப்பொழுதோ அறுந்து விட்டது. நாம் பல தகவல்களை மேலைத்தேய அறிஞர்களிடம் இருந்து தான் அறிந்து கொள்கின்றோம். அதனால், நாங்களும் ஐரோப்பியர்கள் போன்று சிந்திக்கப் பழகி விட்டோம். க்மெர் ரூஜ், மற்றும் கம்போடிய புரட்சி பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான அணுகுமுறைக்கு அதுவும் ஒரு காரணம்.

கம்போடிய புரட்சி பற்றி ஆய்வு செய்வதும், அறிந்து கொள்வதும், இந்திய உப கண்டத்தை சேர்ந்த மக்களுக்கு அவசியமானது. குறிப்பாக மூன்றாம் உலகை சேர்ந்த மக்கள், கம்போடிய புரட்சியின் தன்மையைகளை அறிந்து கொள்ளக் கூடாது என்பதில், மேலைத்தேய கொள்கை வகுப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். அதற்கு காரணம் என்ன? இந்தியாவில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நான் உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரத்தில் வாழும் உயர் சாதியை சேர்ந்த, மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை முறை எப்படி அமைந்துள்ளது? அவர்களது சிந்தனையோட்டம் எவ்வாறு காணப்படுகின்றது? அதற்கு மாறாக, நாகரீகம் எட்டிப் பார்க்காத கிராமங்களை சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சாதி ஏழை மக்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் நீங்கள் அறிந்தவை தான். குறிப்பாக நகர்ப்புற பணக்காரர்களுக்கு, நாட்டுப்புற ஏழைகளின் இருப்பு பற்றிய அக்கறை கிடையாது.

திடீரென ஒரு நாள், அரசு இயந்திரம் இயங்காமல் ஸ்தம்பித்து விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். கிராமத்து இளைஞர்களின் பட்டாளம், ஆயுதங்களுடன் நகரங்களுக்குள் நுழைகின்றது. அங்கே அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இந்தக் கோணத்தில் இருந்து தான், நாம் "பொல்பொட், க்மெர் ரூஜ், கம்போடிய புரட்சியை" புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும் )

Thursday, July 19, 2012

மியான்மர் : உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு

மியான்மர் தேச, வங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும், சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள், மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது.

மியான்மரின், பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்ட, மிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும், பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும், இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.


இந்தியா மட்டுமல்ல, பர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால், நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில், வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடி, அல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும், அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது. 

"தேசிய அரசுகளின் உருவாக்கம், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர், ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள், மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. 

இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும், தேசியவாத கதையாடலுக்கு அப்பால், உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், பர்மிய மன்னனுடன் நடந்த போரில், சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால், மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. 

ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாக, மொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்து, அங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவே, மேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம். 

மேலும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில், தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன், ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவே, பிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாக, வங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். 

ஒரு தேசிய இனம், தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விட, அந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால், காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள், ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.

உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு, பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேலோ, அல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.

ஐ.நா., பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால், ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால், ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. 

மேற்கத்திய நாடுகளினால் மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட, ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால், அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும், சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.

பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டு, ரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு, ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூட, பறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய, ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். 

இவர்களே இப்படிப் பேசினால், தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுது, ஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில், ஜனநாயகம் என்றால், மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.

ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காக, அனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. 

வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள், பர்மிய மொழி போன்ற, ஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும், பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின், அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான Altsean அனுப்பி வைத்த செய்தி, நிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)

ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடிய, ராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில், வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும், இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.

"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில், வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். 

உலகில் ஒவ்வொரு தேசிய இனமும், தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும், சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர், ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.

வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம், இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள், இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும், பாலங்கள் போடவும், வேறு பல கட்டுமானப் பணிகளிலும், வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. 

ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும், பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.

கடந்த பத்தாண்டுகளாகவே, ரோஹிங்கியா வங்காளிகள், மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள், அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள், சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை. 

1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர், பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை, பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். 

பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட, ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி, பங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை, தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோ, அதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.

வதந்திகள், திரிபுபடுத்தல், இவற்றை தவிர்த்து விட்டு, உண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில், பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து, படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால், எது சரி? அதை எப்படி உறுதிப்படுத்துவது? ரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றி, பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்ல, வளைகுடா அரபு நாடுகள், பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள், இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்து, சர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறை, தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. 

இனவாதம், மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில், ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும், மியான்மார், பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றி, வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.


மேலதிக தகவல்களுக்கு:
1.Burma: Why Such Silence Over Muslim Genocide?
2.Ethnic Cleansing in Myanmar
3.Ethnic violence mars transition to democracy for Rohingya in Burma
4.'De Burmese Rohingya's worden langzaam weggezuiverd'
5.Arakan Journal
6.மியான்மர்: கலவரமும் நிலவரமும்
7.பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

------------------------------------------------------------------------------------
மியான்மர் பற்றிய முந்திய பதிவுகள்:

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

Friday, July 06, 2012

இந்தியாவில் சிதம்பரம் தலைமையில் தொடரும் படுகொலைகள்


கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.  இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார்  ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.


நடந்தது என்ன?  
பழங்குடியினரது  வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் - ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.

சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில்  பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.


கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள், ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே  கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்தது.


எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள். 

கொலைகாரன் விஜயகுமார்
இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும்  பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.

இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும்  நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர். அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.
பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.


இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.

கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால்  வெளியில் சொல்கிறேன்” என்றார்.
சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.

போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?
மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.
சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார்.
கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.

ஏன் இந்தக் கொலைகள்?
சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650  கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10  லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.
இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்
இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.

கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!
அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.

கொலை செய்யப்படதில் பெரும் பகுதி சிறுவர்கள்:

http://www.ndtv.com/video/player/news/6-minors-killed-in-Chhattisgarh-encounter-congress-report/238237
கொல்லப்பட்டவர்களின் பிணாங்களைக் கூட கொடுக்க மறுக்கும் சிதம்பரத்தின் நிர்வாகம்:


(--------ராமசாமி----------------)