வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்(Strategy and Tactics in the Class Struggle)
பாடம் ஒன்று : வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?
இன்று வரையிலான வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறே ஆகும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி உள்ளனர். வர்க்கப் போராட்டம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைய முடியாத இரண்டு பகைச் சக்திகளுக்கு இடையிலான போர் ஆகும்.
அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனம் என்ற பிரசுரத்தில் மார்க்ஸ் எழுதிய முன்னுரையில் இருந்து, வர்க்கப் போராட்டம் பற்றிய சுருக்கமான முக்கிய குறிப்புகள்:
- சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து வர்க்கப் போராட்டம் உருவாகின்றது.
- ஆரம்பத்தில் மனிதர்களின் சுய விருப்புகளுக்கு அப்பாற்பட்டு வர்க்கப் போராட்டம் பரிணமிக்கிறது. இருப்பினும் தற்போதுள்ள சமூக அமைப்பின் இந்த தீவிர மாற்றமானது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உணர்வு பூர்வமான புரட்சிகர நடைமுறையை கோரி நிற்கிறது.
- இரு துருவங்களான சக்திகளுக்கு இடையிலான பகை முரண்பாடுகளை உண்டாக்கும் தோற்றுவாயை ஒழித்துக் கட்டுவதற்கு வர்க்கப் போராட்டம் முயல்கின்றது. காலத்திற்கு ஒவ்வாத உற்பத்தி உறவுச் சங்கிலியில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்வதை குறிக்கோளாக கொண்டது.
- பழைய சமுதாயத்திற்கு உள்ளேயே புதிய பொருளாதார சமூக அடிப்படை தயார் படுத்தப் படுகின்றது.
இன்றைய காலத்தில், ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் இரண்டு பிரதானமான வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. ஒன்று, ஏகபோக முதலாளிகளால் தலைமை தாங்கப் படும் முதலாளித்துவ வர்க்கம். இரண்டு, உழைக்கும் வர்க்கம். இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையில் வர்க்கப் போராட்டம் நடக்கிறது.
"முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கொல்வதற்கான ஆயுதங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவற்றை இயக்குவதற்காக நவீன உழைக்கும் வர்க்கம் அல்லது பாட்டாளிகளையும் உருவாக்கியது." - மார்க்ஸ்/எங்கெல்ஸ் (தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்)
ஆகையினால், வர்க்கப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சங்களாக பின்வரும் தோற்றப்பாடுகளை கருதலாம். முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இது வாழ்வா, சாவா போராட்டம். உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் அடிமைத்தளை அல்லது விடுதலைக்கான போராட்டம்.
மேற்படி காரணத்தால், முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறையை கையில் எடுக்கிறது. உழைக்கும் வர்க்கம் ஒரு கொடூரமான எதிரியை தூக்கி எறியப் பார்க்கிறது.
இந்த இரண்டு பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையிலான போர் தான் வர்க்கப் போராட்டம் ஆகும். அமைதியான காலத்தில் அது மறைமுகமாக நடக்கிறது. ஆனால், ஆயுதமேந்திய எழுச்சியின் பொழுது, அது தீவிரமடைந்து உச்சத்தை தொடுகின்றது.
மனித விருப்புக்கு மாறாக, அன்றாட வாழ்வில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையில் வர்க்கப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து அரசியல் வியூகமும், உத்திகளும் பிறக்கின்றன. இருப்பினும் அது ஒரு புறவயமான தோற்றப்பாடு ஆகும். மறுபக்கத்தில், தற்சார்புடைய உணர்வு பூர்வமான போர்களும் நடக்க வாய்ப்புண்டு.
இது குறித்து ஸ்டாலின் கொடுத்த விளக்கம் :
"வர்க்கப் போராட்டத்திற்கான புறவயமான காரணிகளை விட, உழைப்பாளர்களின் உணர்வுபூர்வமான தன்னெழுச்சி எமக்கு முக்கியமானது. அதற்குக் காரணம், இந்த இயக்கமே வியூகத்தையும், உத்திகளையும் வகுக்கின்றது. புறவயமான சக்திகள் தாக்கம் செலுத்தும் சூழலில் எந்த வியூகமும் இருப்பதில்லை. ஆனால், அகவயமான இயக்கத்தில் வியூகமானது பரந்துவிரிந்துள்ளது. அங்கு வியூகமானது இயக்கத்தின் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது பின்தள்ளவோ உதவுகின்றது. அந்த இயக்கத்தின் திறன்மிக்க செயற்பாடுகள் அல்லது குறைபாடுகள் அதைத் தீர்மானிக்கிறது." -ஸ்டாலின், (ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் வியூகமும், உத்திகளும் பற்றிய ஆய்வுகள்)
இராணுவ அறிவியலில் இருந்து தான் வியூகமும், உத்திகளும் தோன்றின. பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டமும் ஒரு போர் தான். அந்த வகையில், அதுவும் போர்க்கலைக்கு நெருக்கமானது. அரசியல் உத்திகளும், போர் உத்திகளும் பற்றி பேசிய லெனின், தனது கட்சி ஊழியர்கள் கிளவுஸ் விட்ஸ் எழுதிய நூல்களை படிக்குமாறு கோரினார்.
கிளவுத்ஸ்விட்ஸ் பிரஷிய (ஜெர்மன்) படையில் ஜெனரலாகவும், இராணுவக் கல்லூரி அதிபராகவும் இருந்தார். அவர் 1832 ம் ஆண்டு எழுதிய போரியல் பற்றிய நூலில் எழுதிய வாசகங்கள் உலகப் புகழ் பெற்றன. அதை பல தடவைகள் லெனின் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார்.
அதாவது, "யுத்தம் என்பதும் ஒரு வகையில் அரசியல் கொள்கையின் தொடர்ச்சி. அந்த வகையில், போர் கூட ஒரு அரசியல் செயற்பாடு தான்." என்பது அவரது கூற்று. போரும் அரசியலும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன. ஆகையினால், வர்க்கப் போராட்டத்திற்காக போர்க்கலையின் விதிகளை பற்றி அறிந்து கொள்வதும் "சமாதான" காலத்தில் முன்னெடுக்கப் படும் அரசியல் தான்.
கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய போர்க்கலை இந்தக் காலகட்டத்திற்கு ஏற்றது அல்ல என்று ஸ்டாலின் அதைப் புறக்கணித்து வந்தார். இந்தக் காலத்தில் இராணுவ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்ட நவீன காலத்தில், இயந்திரங்கள் போர்க்கலையை தீர்மானிக்கிறது என்பது ஸ்டாலினின் வாதமாக இருந்தது.
லெனினிடம் அத்தகைய கருத்துக்கள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய இராணுவ போதனைகளில் உள்ள அரசியல் முக்கியமானது என்று கருதினார். இராணுவ தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி பற்றி மட்டுமே ஸ்டாலின் சிலாகித்து பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை. ஏனெனில், இன்றைய போர்க்கருவிகள் முன்பிருந்ததை விட பல மடங்கு திறன் வாய்ந்ததாகவும், போரின் வியூகங்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தனவாகவும் உள்ளன.
"தாக்குதல்களில் ஈடுபடுத்தப் படும் இராணுவ சக்திகளின் கோட்பாடு உத்திகள் எனப்படும். அந்தத் தாக்குதல்களை போர் எனும் இறுதி இலக்கை நோக்கி பாவிக்கும் கோட்பாடு வியூகம் எனப்படும்." - கிளவுத்ஸ்விட்ஸ்
அந்த வகையில் வியூகம் முதன்மையானது. அது போர் முழுவதினதும் குறிக்கோள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. அத்துடன், ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னால் உள்ள அடிப்படை நோக்கம் என்னவென்பதையும் சொல்கின்றது. உத்திகள் இரண்டாம் பட்சமானவை. ஒவ்வொரு தாக்குதலும், சமர்களும் எவ்வாறு நடத்தப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
வியூகம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட நிபந்தனை. சக்திக்கு மீறிய அழுத்தங்கள் வந்தால் அன்றி, அது போரின் திசையை மாற்றுவதில்லை. ஆனால், சண்டை நடந்து கொண்டிருக்கும் சூழலில் புதிய புதிய உத்திகள் எழலாம். அவை நிபந்தனைக்கு உரியவை அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியவை. வியூகம் வகுப்பதற்கு ஒரு நீண்டகால திட்டமும், அது பற்றிய தொலைநோக்கும் அவசியம். ஒவ்வொரு சமரிலும் பயன்படுத்தப் படும் உத்திகள் முக்கியத்துவம் குறைந்த குறுகிய கால திட்டங்கள் ஆகும்.
இராணுவ அறிவியலில் பின்பற்றப்படும் அதே வகையான வியூகமும், தந்திரோபாயமும், மார்க்சிய லெனினிச கோட்பாட்டிலும் பிரயோகிக்கலாம். அதற்காக உழைக்கும் வர்க்கம் தனது இலக்கை தீர்மானித்துக் கொள்வதுடன், அது சார்ந்த வியூகத்தையும், உத்திகளையும் பின்பற்ற வேண்டும்.
"பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்றிருப்போரின் அறிவியலை, மார்க்சிய லெனினிச வியூகமும், உத்திகளும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன." - ஸ்டாலின்
இந்த சமூகத்தின் புறவயமான காரணிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, உழைக்கும் வர்க்கத்தின் இறுதி இலக்கு எதுவென்பதை மார்க்சிய லெனினிசம் தீர்மானிக்கிறது. மார்க்சிய லெனினிச வியூகங்களும், உத்திகளும் சமூக அசைவியக்கத்தில் பலவிடங்களிலும் பிரயோகிக்கப் படலாம். அது பிரச்சார வேலைத் திட்டங்களை வளர்க்கிறது. போராட்ட சக்திகளையும், உறங்குநிலையில் உள்ள ஆதரவு சக்திகளையும் இனங் காண்கின்றது. போர்க் களம், ஆதரவுத் தளங்களை தீர்மானிக்கிறது. சிறிய சிறிய சண்டைகள், பெரியதொரு போருக்கு இட்டுச் செல்கின்றன.
வர்க்கப் போரில், முன்னணி அரங்கில் நின்று போரிடும் பிரதானமான இராணுவம் உழைக்கும் வர்க்கம் ஆகும். நாட்டுப்புற விவசாயிகள் ஆதரவு சக்திகள். உழைக்கும் மக்களின் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போரை வழிநடத்தும் தளபதிகள் ஆகும்.
உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர குறிக்கோள் எதுவென கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம் ஒன்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்:
"நவீன சமுதாயத்தில் இருக்கும் வர்க்கங்களை கண்டுபிடித்ததாக நான் பிரகடனப் படுத்தவில்லை. எனக்கு முன்னரே, பல வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளித்துவ வரலாற்று அறிஞர்கள் சரித்திர காலத்தில் வர்க்கங்களுக்கு இடையில் நடந்த போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். பொருளாதார கட்டமைப்புகளை பற்றி எழுதிய முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் அது பற்றி சொன்னார்கள். எனது பங்களிப்புகள்:
1.உற்பத்தி வளர்ச்சியில் வர்க்கங்களின் உந்துசக்தியை எடுத்துக் காட்டியது.
2.வர்க்கப் போராட்டமானது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் அவசியத்தை உண்டாக்கும் என்றது.
2.வர்க்கப் போராட்டமானது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் அவசியத்தை உண்டாக்கும் என்றது.
3.அது வர்க்க வேற்றுமைகளை ஒழித்து, வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் இடைநிலைப் பாத்திரம் வகிக்கும் என்றது."
- Karl marx letter to Joseph Weydemeyer on March 5, 1852
(பிற்குறிப்பு: Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle நூலில் இருந்து எடுக்கப் பட்ட பகுதிகள். இந்நூலானது ஜெர்மன் மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான தத்துவார்த்த வழிகாட்டியாக உள்ளது.)
No comments:
Post a Comment