Saturday, April 21, 2018

நிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்

நிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்டுள்ள இந்தக் கலவரத்தில், இது வரையில் ஐந்து பேர் கொல்லப் பட்டுள்ளனர். மேற்கத்திய ஊடகங்கள் இதை ஓய்வூதிய குறைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்று செய்தி தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையான பிரச்சினை அதுவல்ல. அது இரண்டு பகைமை கொண்ட வர்க்கங்களின் மோதல் என்ற விடயம், மேற்கத்திய ஊடகங்களால்  திட்டமிட்டு மறைக்கப் படுகின்றது.

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் நடந்த ஜனநாயகப் பொதுத் தேர்தலில், பெரும்பான்மை மக்களின் வாக்குளை வென்று அரசமைத்த FSLN (சன்டினிஸ்டா) கட்சி, மக்கள் நலன் கருதி சில பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டில் தீவிர இடதுசாரிக் கட்சி பெரும்பான்மை வாக்காளர்களால் ஆதரிக்கப் படுவது அரிதானது. அந்தக் கட்சி மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நடைமுறைப் படுத்தத் துணிவது அதை விட அரிதானது. வெனிசுவேலா, பொலீவியா வரிசையில், நிக்கராகுவாவில் அந்த அதிசயம் நடந்துள்ளது.

ஒரு காலத்தில் ஆயுதப்போராட்டம் மூலம் அதிகாரத்திற்கு வந்த FSLN என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் சன்டினிஸ்டாக்கள் என்று அழைக்கப் பட்டனர். டானியல் ஒட்டேகா தலைமையிலான FSLN, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக, நிக்கராகுவாவில் பத்தாண்டுகள் சோஷலிச ஆட்சி நடத்தி வந்தது. அப்போது சோவியத் யூனியன், கியூபா ஆகிய பிற சோஷலிச நாடுகளின் உதவியும் கிடைத்திருந்தது.

தொண்ணூறுகளுக்கு பிறகு நடந்த சுதந்திரமான பொதுத் தேர்தலில், மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு அமெரிக்க ஆதரவு இருந்த போதிலும், மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முடியவில்லை. ஒரு பக்கம் பணக்காரர்கள் பெருகுவதற்கும், மறுபக்கம் ஏழைகள் அதிகரிப்பதற்குமே ஜனநாயக தேர்தல் அமைப்பு உதவுகின்றது என்பதை மக்கள் உணர அதிக காலம் எடுக்கவில்லை.

நிகராகுவா ஏற்கனவே ஒரு வறிய நாடாக இருந்த போதிலும், சோஷலிச நாடாக இருந்த காலத்தில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு இருந்தது. அது மீண்டும் முதலாளித்துவ நாடான பின்னர், பொதுத் துறைக்கான அரச செலவினம் வெகுவாக குறைக்கப் பட்டது. வரிப் பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட வேண்டிய அரசு நிறுவனமான INSS என்ற "சமூகப் பாதுகாப்பு நிலையம்" (Institute of Social Security (INSS)), மக்களுக்கு செய்த சேவைகளை விட, அரசியல்வாதிகள் ஊழல் செய்ய உதவியதே அதிகம்.

இன்றைய முதலாளித்துவ கால அவலங்களுடன் ஒப்பிட்டால், கம்யூனிச கடந்த காலம் ஒரு பொற்காலம் என்று மக்கள் உணர்ந்து கொண்டனர். அதனால், சில வருடங்களுக்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் கம்யூனிச கட்சியான FSLN க்கு பெருமளவு வாக்குகள் போட்டு தெரிவு செய்தனர். முந்திய காலத்தில் "கம்யூனிச சர்வாதிகாரி" என்று சொல்லப்பட்ட டானியல் ஒட்டேகா, தற்போது பெரும்பான்மை வாக்குகள் பெற்று மக்கள் ஜனாதிபதியாக தெரிவானார்.

மீண்டும் சன்டினிஸ்டா ஆட்சி வந்தாலும், அவர்கள் சோஷலிச கடந்தகாலத்திற்கு திரும்பிச் செல்வார்கள் என்று அர்த்தம் அல்ல. FSLN தற்போது ஒரு சமூக ஜனநாயகக் கட்சி. அதாவது, தேர்தலில் போட்டியிட்டு கிடைக்கும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, தம்மால் முடிந்தளவு சமூக மாற்றங்களை கொண்டு வருவது தான் நோக்கம். முதலாளிகள் தமது வர்த்தகத்தை தொடரலாம். அரசு மக்களுக்கான கடமையை செய்யும்.

வட ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருப்பதைப் போன்ற சமூக பொருளாதாரத் திட்டத்தை தான், இன்று வெனிசுவேலாவும், நிகராகுவாவும் பின்பற்ற விரும்புகின்றன. ஆனால், ஒரு பிரச்சினை. மேற்கு ஐரோப்பாவில் சாத்தியமான திட்டம், இலங்கை, இந்தியா போன்ற மூன்றமுலக நாடுகளில் நடைமுறைச் சாத்தியமில்லை. அது ஏன் என்பதற்கு தற்போது நிகராகுவாவில் நடக்கும் அரச எதிர்ப்புக் கலவரம் ஒரு சிறந்த உதாரணம்.

உண்மையில், மேற்கு ஐரோப்பிய அரசுகள் மாதிரித் தான், நிகராகுவாவில் சன்டினிஸ்டா அரசும் நடந்து கொண்டது. அதாவது, பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் முதலாளிகளையும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, ஒரே மேசையில் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு முன்மொழிந்த திட்டம் இது தான். உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகளும், தொழிலாளர்களும் தமது வருமானத்தில் குறிப்பிட்டளவு தொகையை சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு (INSS) செலுத்த வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வந்தது. இந்த நடைமுறை ஏற்கனவே இருந்து வருவது தான். ஆனால், முதலாளிகளின் பங்களிப்பை ஐந்து சதவீதத்தால் (தற்போது 22.5%) அதிகரித்தது தான் அவர்களது சீற்றத்திற்கு காரணம். இதன் விளைவு தான் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு மூலகாரணம். இதே நேரம், தொழிலாளரின் பங்களிப்பும் சிறிதளவு (6.25% இலிருந்து 7%)கூடியுள்ளது.

வரி அதிகரிப்பின் மூலம், சமூகப் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் தலையிடுவதை தடுப்பதும் அரசின் குறிக்கோளாக இருந்தது. ஏனெனில், அரசு சேவைகளை தனியாரிடமும் கொடுத்ததால் தான், முந்திய அரசாங்கங்கள் ஊழல் செய்ய வசதியாக இருந்துள்ளது. மேலும், சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கான கொடுப்பனவு அதிகரித்தால், எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்க முடியும் என்பதும் அரசின் திட்டம். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பாவில் நடப்பதைப் போன்று, மக்களின் வரிப் பணத்தை மக்களுக்கு பிரயோசனமான வழிகளில் செலவிட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இதெல்லாம் நல்ல திட்டம் தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால், முதலாளிகள் அப்படி நினைப்பதில்லை. அரசு மக்களின் வரிப் பணத்தில் ஊழல் செய்வது அவர்களுக்கு சாதகமான விடயம். அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடக் கூடாது. அப்போது தான் பொதுத் துறைகளின் சீர்கேடுகளை காரணமாகக் காட்டி, தனியார் நிறுவனங்கள் நுழைய முடியும். அரசு தனது கடமையை சரிவரச் செய்தால், அது முதலாளிகளின் நலன்களை பாதிக்காதா?

ஓய்வூதியம் குறைக்கப் பட்டது தான் கலவரத்திற்கு காரணம் என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிக்கராகுவாவில் ஓய்வூதியம் பெறும் வயது இப்போதும் அறுபது தான். அது கூட்டப் படவில்லை. (மேற்கு ஐரோப்பாவில் ஏற்கனவே அது 67 வயதாக தீர்மானிக்கப் பட்டு விட்டது.) ஓய்வூதியம் பெறுவோரும் குறிப்பிட்டளவு வரிப்பணம் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ஒதுக்க வேண்டும். மேற்கு ஐரோப்பாவிலும் ஓய்வூதியம் பெறுவோரின் பணத்தில் இருந்து சமூகப் பாதுக்காப்பான வரிப்பணம் அறவிடுகிறார்கள். இதனால் முதியோரின் ஓய்வூதியத் தொகை குறைகின்றது. அப்படிப் பார்த்தால், மேற்கு ஐரோப்பாவிலும் ஓய்வூதிய குறைப்பை காரணமாகக் காட்டி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்க வேண்டும்.

இன்று கலவரத்தில் ஈடுபடுவோர் இளைஞர்கள், மாணவர்கள். அவர்கள் ஓய்வூதியக் குறைப்பை முன்னிட்டு போராடுவதாக சொல்வது நகைப்புக்குரியது. கலவரம் முதலில் தலைநகரத்தில், மனாகுவா பல்கலைக்கழகத்தில் தான் ஆரம்பமானது. "கம்யூனிஸ்டுகள் ஒன்றுகூடும் இடமாக" கருதப்படும் கலாச்சார நிலையக் கட்டிடம் மாணவ கிளர்ச்சியாளர்களால் தீக்கிரையாக்கப் பட்டது. வீதித் தடையரண்கள் அமைத்து, பொலிசுக்கு எதிராக கற்களை வீசினார்கள். பொலிஸ் பதிலுக்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரங்களை அடக்க முயன்றது. இதுவரையில் ஐந்து அல்லது பத்துப் பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இதனால், அடுத்து வரும் நாட்களுக்கும் கலவரங்கள் தொடரும்.

வெனிசுவேலாவில் நடந்த வரலாறு நிக்கராகுவாவில் திரும்பியது. அதாவது, முதலாளிய ஆதரவாளர்களான மத்திய தர வர்க்கத்தினர் தான் அரசுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டனர். சன்டினிஸ்டா ஆதரவு மாணவர்கள், கலவரக் காரர்களுடன் மோதினார்கள். எல்லா இடங்களிலும் கலவரத்தில் ஈடுபடுவோர் முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவாளர்கள் தான். போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் பல இடங்களில் பதுக்கி வைக்கப் பட்டிருந்தன. இதனால், ஒரு குறிப்பிட்ட அரசியல் சக்தி, முன்கூட்டியே கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருவது தெளிவாகும்.

முன்னொரு காலத்தில், நிகராகுவா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், ஒரு முதலாளித்துவ ஆதரவுப் பத்திரிகை சுதந்திரமாக வெளிவந்து கொண்டிருந்தது. அது எப்போதும் கம்யூனிச எதிர்ப்பு மனநிலையில் இருந்து சன்டினிஸ்டா அரசின் குறைகளை பற்றி எழுதிக் கொண்டிருந்தது. இருப்பினும், ஒரு பத்திரிகையால் கம்யூனிச அரசை அசைக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அப்போது மக்கள் அதிகாரம் இருந்தது. முதலாளிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை. முதலாளிகளால் மக்களை மூளைச்சலவை செய்ய முடியவில்லை.

இன்றைய நிலைமை வேறு. நிகராகுவா பொருளாதாரத்தில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் ஊடகங்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். கலவரங்களை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஐந்து தொலைக்காட்சி நிலையங்களின் ஒளிபரப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக, மேற்குலகு இதை சுட்டிக் காட்டி "கருத்துச் சுதந்திர மறுப்பு", "மனித உரிமை மீறல்" என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும். அவர்கள் முதலாளிகளின் கருத்துக்களை மக்களின் கருத்துக்களாகவும், முதலாளிகளின் உரிமைகளை மக்களின் உரிமைகளாகவும் திரிக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு இந்த வித்தியாசம் புரிவதில்லை.

No comments: