Showing posts with label நிலப்பிரபுத்துவம். Show all posts
Showing posts with label நிலப்பிரபுத்துவம். Show all posts

Wednesday, February 07, 2018

"தோழர் பிரபு": ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு


நம்மூரில் பண்ணையார்கள், நிலவுடைமையாளர்கள் போன்றோர், சொத்துக்களை ஆண்டு அனுபவிப்பவர்கள், ஏன் கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்ற காரணம் தெரிய வேண்டுமா? இலங்கையிலோ, இந்தியாவிலோ கம்யூனிச ஆட்சி வந்தால், தமது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இதற்கு முன்னர் சோஷலிச நாடுகளில் தமது வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அஞ்சி நடுங்குகிறார்கள்.

ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் சொகுசாக வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம் (கவனிக்கவும்: "வர்க்கம்", மனிதர்கள் அல்ல.), எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப் பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு). இதை எழுதிய டச்சு எழுத்தாளர் Jaap Scholten, பல மாதங்களாக ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் நபர்களை சந்தித்துப் பேசி, அவர்களது கதைகளை எழுதி உள்ளார்.

இந்தப் புத்தகமானது நிலப்பிரபுக்கள் மீதுள்ள கரிசனையால், ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் சாதாரண மக்களாக தெருவுக்கு வந்து விட்டார்களே என்ற சுய கழிவிரக்கம் காரணமாக எழுதப் பட்டது.  கம்யூனிஸ்டுகளால் பிரபுக் குடும்பத்தினருக்கு நடந்த கொடுமைகளை விவரித்துக் கூறுவது தான் நூலின் நோக்கம். ஆனால், நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழே வேலை செய்த பண்ணையடிமைகளுக்கு செய்த கொடுமைகள் பற்றி ஒரு வரி கூட  இல்லை. (ஆண்டாண்டு காலம் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை, கம்யூனிஸ்டுகள் ஒரே நாளில் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டார்கள் என்ற உண்மையை மறைக்க வேண்டுமே?)

இன்றைக்கும் வாழும்  முன்னாள் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தமது வாழ்க்கைக் கதைகளை கூறுகின்றனர். தமது பிரபுக் குடும்பத்தினரின் அருமை பெருமைகளை, சிறுவயதில் அனுபவித்த ஆடம்பரங்களை மட்டுமே நினைவுகூருகின்றனர். கிழக்கில் இருந்து மேற்கு வரையிலான, ஐரோப்பிய மன்னர் குடும்பங்களுக்குள் நடந்த கலப்புத் திருமணங்கள், பன்மொழித் தேர்ச்சி இவை போன்ற பழம் பெருமைகளை சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்றைக்கு ருமேனியாவுக்கு சுற்றுலா செல்வோர், ஐரோப்பாவிலேயே அழகான கோட்டைகள், மாளிகைகளை கண்டு களிக்கலாம். மன்னர் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நேரில் பார்க்கலாம். அவை இன்று சுற்றுலா மையங்களாக அனைவருக்கும் திறந்து விடப் பட்டாலும், 1949 ம் ஆண்டு வரையில் அங்கு உள்ளூர் நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.

இரண்டு உலகப் போர்களை கண்ட போதிலும், நிலப்பிரபுக் குடும்பங்கள் எந்தக் குறையும் இல்லாமல் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தன. இதிலே குறிப்பிடத் தக்கவர்கள் ஹங்கேரிய நிலப்பிரபுக்கள். ஏனெனில், முதலாம் உலகப் போர் நடக்கும் வரையில், ருமேனியாவின் பெரும் பகுதி, குறிப்பாக மத்திய டிரான்ஸ்சில்வேனியா பிரதேசம், ஹங்கேரி சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியது. ருமேனியாவின் வட மேற்குப் பகுதியில் ஹங்கேரி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவில், சோவியத் செம்படைகளால் விடுதலை செய்யப் பட்ட ருமேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளை வர்க்க எதிரிகளாக பிரகடனம் செய்தனர். இதிலே இன்னொரு பிரச்சினையும் சேர்ந்து ஹங்கேரி நிலப்பிரபுக்களை ஒடுக்கியது. அவர்கள், முன்னை நாள் ஆஸ்திரிய - ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் என்பதால், பெரும்பாலான ருமேனிய மக்களால் வெறுக்கப் பட்டு வந்தனர்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாளிகைகளில் வசித்து வந்த நிலைப்பிரபுக் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒரே இரவில் வெளியேற்றப் பட்டனர். அரை மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கி, உடுப்புகள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மட்டுமே ஒரு பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். எல்லோரையும் டிரக் வண்டியில் ஏற்றி தடுப்பு முகாம்களுக்கு அனுப்பினார்கள்.

பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக, "ஆண்ட பரம்பரை" என்ற மிதப்பில், செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், ஒரே நாளில் "அடிமைப் பரம்பரையாக" வறுமைக்குள் தள்ளப் பட்டனர். ஆடம்பரமான மாளிகைகளில் வசதியாக வாழ்ந்த பணக்காரக் குடும்பங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சிறை முகாம்களில் அடைக்கப் பட்டன. ஒரு நாள் கூட உடல் வருந்தி உழைத்திராத அரச வம்சத்தினர், இளவரசர்கள், நிலவுடைமையாளர்கள், வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். கட்டாய வேலை முகாம்களில் கால்வாய் தோண்டுவது போன்ற கடின உடல் உழைப்பை செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

ருமேனியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில், நிலப்பிரபுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்க்க எதிரிகளாகவோ, அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்ததாகவோ குற்றம் சாட்டப் பட்டவர்கள். அதே நேரம், சித்திரவதை தாங்க முடியாமல், அல்லது பொருள் இழப்புகளால் மனமுடைந்து  தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

அதற்காக, ருமேனியாவின் எல்லா நிலப்பிரபுத்துவக் குடும்பங்களும் கொல்லப் பட்டனர் என்று கூறுவது ஒரு மிகைப் படுத்தல். கைது செய்யப் படுவதற்கு முன்னரே ஆஸ்திரியாவுக்கு தப்பியோடியவர்கள் பலருண்டு. அவர்கள் பின்னர் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரி அங்கேயே தங்கி விட்டனர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிச ஆட்சி கவிழும் வரையில் நாடு திரும்பவில்லை.

சுற்றிவளைப்பில் பிடித்துச் செல்லப் பட்டவர்களும், சில வருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டவர்கள் ஏராளம் பேருண்டு.விடுதலை செய்யப் பட்ட பின்னர், ஒவ்வொரு வாரமும் போலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. 

இருப்பினும் "செகுரிதாத்தே" (Securitate) என்ற உளவுப் பிரிவு அவர்களை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டன. இப்படியானவர்கள் அரசில் உள்ளவர்களை குறை கூறினாலும், சந்தேகத்தில் திரும்பவும் கைது செய்யப் பட்டனர். ஒரு தடவை, பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய ஒருவர் ஸ்டாலினை பற்றி அவதூறு செய்த குற்றத்திற்காக சக ஆசிரியரால் காட்டிக் கொடுக்கப் பட்டார். நல்ல வேளையாக, அந்த ஆசிரியையின் பிரியத்துக்குரிய வகுப்பு மாணவியின் தந்தை உளவுப்பிரிவில் வேலை செய்த படியால் தண்டனையில் இருந்து தப்பினார்.

பெரும்பாலும் எந்தக் குற்றமும் இல்லாமல் விடுதலை செய்யப் பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பத்தினர், சாதாரண மக்களைப் போன்று ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.  அவர்களது பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் காலத்தில், தமது நிலப்பிரபுத்துவ பின்னணியை மறைத்து வந்தனர்.

முன்னாள் நிலப்பிரபுக்களின் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப் பட்டாலும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் உரிமை பாட்டாளிவர்க்க குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே உண்டு. (புரட்சிக்கு முன்னர் இது நேர்மாறாக இருந்ததை இங்கே சொல்லத் தேவையில்லை.) "நிலப்பிரபுவின் பிள்ளைகள்" என்றால் அது சமூகத்தில் தாழ்வானவர்கள் என்ற அர்த்ததில் பார்க்கப் பட்டது. அதனால், தமது குடும்பம் பற்றிய உண்மை ஏனைய பிள்ளைகளுக்கு தெரிய விடாமல் மறைத்தனர். சிலநேரம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி இருப்பார்கள்.

முன்பு மாளிகையில் வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்கள், தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இருப்பினும், வீடுகளில் தமது நிலப்பிரபுத்துவ கடந்த காலத்தை நினைவுபடுத்தும் படங்கள், நினைவுச் சின்னங்களை வைத்திருந்தனர். சிலநேரம், முன்னாள் நிலப்பிரபுக்கு விசுவாசமான சாமானியர்கள் அவற்றை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.

நிலப்பிரபுக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படையாக நடந்தன. அந்தக் காலத்தில் ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் Wilfred G. Burchett அவற்றை நேரில் கண்டு குறிப்பெடுத்துள்ளார். அந்தக் கட்டுரைகள் 1951 ம் ஆண்டு வெளியான Peoples Democracies சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டன. 

அதில் அவர் முன்னாள் நிலப்பிரபுக்களின் அவல நிலை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர்கள் தாம் ஏழ்மையில் வாடுவதாக குறைப் படுகின்றனர். எந்தக் காலத்திலும் கஷ்டப் பட்டு உழைத்து வாழாதவர்கள், இப்போதும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, தம்மிடம் இருந்த நகைகளை விற்று சாப்பிடுகிறார்கள் அல்லது சட்டவிரோத சந்தைகளில் பொருட்களை விற்றுப் பிழைக்கிறார்கள்."

இன்றைக்கு எஞ்சியிருக்கும் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தாம் "கம்யூனிச கொடுங்கோன்மைக்கு" அடிபணியாமல் தப்பிப் பிழைத்து விட்டதாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். "கொலை செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள், சிறுமைப் படுத்தினார்கள், ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், ருமேனிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் எதுவுமே கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை..." என்று இறுமாப்புடன் கூறுகின்றனர். 

இந்த நூலை எழுதியவரும் அது உண்மை என்றே நம்பி இருக்கிறார். ஆனால், நாடு முழுவதும் பலரது சாட்சியங்களை கேட்டு பதிவு செய்த பின்னர், எல்லாமே கருப்பு, வெள்ளை இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. பலர் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டனர். ருமேனியாவில் புதிய கம்யூனிச ஆட்சியாளர்களை ஆதரித்த முன்னாள் நிலப்பிரபுக்களும் இருந்தனர்.

பாட்டாளிவர்க்கத்தின் பக்கம் நின்ற ஒரு "கம்யூனிச இளவரசி" இன் கதை பிரபலமானது. மார்கிட் (Margit Odescalchi), ஒரு குறுநில மன்னர் குடும்பத்தில் இளவரசியாக பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஸிகள் இவரது சகோதரனை சித்திரவதை செய்ததை கண்டதில் இருந்து தீவிர பாசிச எதிர்ப்பாளராக மாறியவர். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் தனது பரிபூரண ஆதரவை வழங்கினார். 

அதற்காக, கம்யூனிச ஆட்சியாளர்கள் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 150 ஹெக்டேயர் நிலத்தை வைத்திருக்க அனுமதித்து இருந்தனர். இருப்பினும், அவர் அந்த நிலங்களை தானாகவே ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வாழ்ந்தார். ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாட்டாளிவர்க்கத்தில் ஒருவராக மாறிய இளவரசி மார்கிட், சோஷலிச ஹங்கேரி நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

(நன்றி: Kameraad Barron, Jaap Scholten நூலில் இருந்து சில பகுதிகள்.) 


ருமேனியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, September 27, 2016

தோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்!


புலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.

"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது(?)" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்! நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.

1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.

சுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.

ஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, "பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

தமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.

ப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் "தோழ‌ர்க‌ள்" என்று அழைக்கும் வழமை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.

தந்தையை "ஐயா" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா? ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.

தாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.

ஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

புலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.

விடுதலைப் புலிகள் "தோழர்" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன்! அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.

இந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

அதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதிலீடாகக் கருதுவது அறிவீனம்.

அநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் "தேசியவாதம்". ஆகவே, தமிழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
"தோழர் பிரபாகரன்!" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை

Sunday, October 09, 2011

இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பத்து)


பண்டாரநாயக்காவின் தேர்தல் கால வாக்குறுதியான, "24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டம்," அமுல்படுத்துவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 24 மணிநேரமும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த இலங்கை வானொலியில் சிங்களத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப் பட்டது. ஆனால், தமிழ் புறக்கணிக்கப் பட்டது. இவை போன்ற செயல்கள், தமிழர் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தின. இருப்பினும், நிர்வாகச் சிக்கல் காரணமாக, சிங்களத்துடன், தமிழும், ஆங்கிலமும் பாவனையில் இருக்கும் என்று சட்டம் இயற்ற வேண்டியிருந்தது. இது கட்சிக்குள்ளேயிருந்த மொழித் தீவிரவாதிகளை உசுப்பி விட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தில், தமிழுக்கும் உரிமை வழங்கும் பகுதியை நீக்க வேண்டுமென கோரினார்கள். இறுதியில் கடும்போக்காளர்களுக்கு விட்டுக் கொடுத்து, 5 ஜூன் 1956 ல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

மறுபக்கத்தில், தமிழ் சமஷ்டிக் கட்சியினர், சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளன்று, தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலம் முழுவதும், சமநிலை பேணுவது இயலாத காரியமாக இருந்தது. ஒரு பக்கம் சிங்கள மொழித் தீவிரவாதிகளை திருப்திப் படுத்தினால், மறுபக்கம் தமிழ் மொழித் தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்தார்கள். அவர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால், சிங்கள பேரினவாதிகள் கடுமையான எதிர்ப்புக் காட்டினார்கள். பண்டாரநாயக்கவை பொறுத்த வரையில், பிரதமருக்கான முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கத் தயங்கினார். பதவிக் காலம் முழுவதும், கடும்போக்காளர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து போனார். அந்தக் கோரிக்கைகள், சில சமயம் பிரதமரையும், அவரது கட்சியையும் அவமதிப்பதாக அமைந்திருந்ததன.

தமிழ் மக்களின் தலைவர்கள், சாத்வீக வழியில் போராடிய போதிலும், சிங்கள பேரினவாதிகள் அதைக் கூட பூதாகரமான விடயமாக்கினார்கள். தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவற்றையும், "சிங்களவர்களை இனவழிப்பு செய்ய தமிழர் தயாராகி வருவதாக" பயமுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள். சிங்களம் மட்டும் சட்ட மசோதாவை எதிர்த்து, காலிமுகத் திடலில் தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது. அதற்கு எதிர்வினையாக, கொழும்பில் இருந்த தமிழரின் கடைகள் கல் வீசித் தாக்கப் பட்டன. ஒரு சில நாட்களில், கலவரம் கிழக்கு மாகாணத்திற்கு பரவியது. சமஷ்டிக் கட்சியினர் ஒழுங்கு படுத்திய ஊர்வலத்தில் போலீசார் சுட்டதில், இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர். சுதந்திர இலங்கையில், முதன் முறையாக பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதமும் அப்போது தான் நிகழ்ந்தது.

கிழக்கு மாகாணத்தில், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திற்கு நடுவில் "கல் ஓயா குடியேற்றக் கிராமம்" அமைந்திருந்தது. டி.எஸ்.சேனநாயக்க காலத்தில், மின்னேரியா அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற முதலாவது சிங்களக் குடியேற்றம் அதுவாகும். அந்தக் காலத்தில், நிலமற்ற சிங்கள விவசாயிகளுக்கு தமிழர்களின் நிலங்களை பறித்தெடுத்துக் கொடுத்தார்கள். இதன் மூலம், சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களை எதிரெதிரே நிறுத்தி விடுவதும் அரசின் நோக்கமாக இருந்தது. உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அடிதடியில் இறங்கி விடும் உதிரிப் பாட்டாளி வர்க்க சிங்களவர்களையே குடியேற்றக் கிராமங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

"சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் நோக்கோடு தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்..." என்பன போன்ற வதந்திகளை கேள்விப்பட்ட கல்லோயா குடியேற்றவாசிகள், அயல் கிராமங்களில் இருந்த தமிழர்களை தாக்கினார்கள். குறைந்தது நூறு தமிழர்களாவது, இனவெறித் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கல்லோயா கிராமத்தின் அமைவிடம் காரணமாக, செய்தியின் வீரியம் பிற பகுதிகளில் அறியப் படவில்லை. கொழும்பு ஊடகங்களும், அரசும், அதனை தற்செயலாக நடந்த அசம்பாவிதமாக பார்த்தன. அந்த எண்ணம் எவ்வளவு தூரம் தவறானது என்பதை, அடுத்து வரும் ஆண்டுகள் நிரூபித்தன.

சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையில், முதலாவது தமிழினப் படுகொலைகள், கிழக்கு மாகாணத்தில் தான் அடுத்தடுத்து இடம்பெற்று வந்தன. அவை பெரும்பான்மை தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பதால், தமிழர்களின் பதில் வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஏற்படுத்தப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள், அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. தரகு முதலாளித்துவ சார்புக் கட்சியான, முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசு, கம்யூனிச அபாயத்தை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அது. தேசிய வளங்களை அபிவிருத்தி செய்வது பெயரில், தரிசான பூமியில் விவசாயக் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் இனத்தின் பெயரில் அறிமுகப் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை திசைதிருப்பல், மின்னேரியா குளம் புனரமைப்பு போன்ற பெயரில் நடந்த குடியேற்றங்களுக்கு தமிழர்கள் யாரும் செல்லவில்லை. அரசும் அதனை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது.

இதே நேரம், வட மாகாணத்தில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. வவுனியாவுக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான வன்னிப் பகுதி பெருமளவு காடுகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று குடியேறிய விவசாயக் குடும்பங்கள், காட்டை அழித்து பயிர் செய்யவாரம்பித்தன. வன்னிக் குடியேற்றங்களும், அரசினால் ஊக்குவிக்கப் பட்ட திட்டங்கள் தான். (தமிழ்க் காங்கிரசின் தலையீடு காரணமாக ஆதிக்க சாதி வேளாளர் தான் பெருமளவில் குடியேறி இருந்தனர்.)

வன்னி தமிழ்க் குடியேற்றங்களுக்கும், கிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருந்தது. வன்னியில் காடுகளே அதிகமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே குடியிருந்தவர்களும் தமிழர்கள் தான். ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறு. தமிழர்கள் நெருக்கமாக வாழ்ந்த பிரதேசத்தின் நடுவில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் அமைக்கப் பட்டன. தமிழரின் நிலங்களும் ஆடாவடித்தனமாக பறிக்கப் பட்டன. பாலஸ்தீனப் பிரதேசத்தில் நடந்த யூதக் குடியேற்றங்களின் பாணியில், இலங்கையில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டனர். உண்மையில், ஐரோப்பிய காலனியக் கொள்கையின் பிராந்திய வெளிப்பாடு அது. பலவீனமான மக்களின் நிலங்களை பறித்தெடுத்து, தன்னின மக்களை வாழ வைக்கும் "இனவாத-பொருளாதாரக் கொள்கை" தான் அமெரிக்காவையும் உருவாக்கியது.

பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்து நிறுத்தப் பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த குடியேற்றங்களை அகற்றாமல் விட்டது பாரிய தவறு என்பதை அப்போது உணரவில்லை. உண்மையில் பண்டாரநாயக்க, தனது கட்சிக்கு ஆதரவளித்த பிக்குகளின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முன்வரவில்லை. "மேலைத்தேய சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிரான, சிங்களக் கலாச்சாரக் காவலர்களாக" காட்டிக் கொள்வதே பிக்குகளின் முதன்மையான அரசியல் செயற்பாடாகவிருந்தது. (தமிழ் கலாச்சாரக் காவலர்களான, தமிழ் உணர்வாளர்களின் அரசியலும் ஒன்று தான்.)

பௌத்த பிக்குகள் முன்மொழிந்த, கலாச்சார விழுமியங்கள் எதையும் பண்டாரநாயக்க அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பிக்குகள் கோரிய மதுபான தடைச் சட்டம் பற்றி பாராளுமன்றம் விவாதிக்கவே இல்லை. அதே போன்று, பௌத்த மத உயர்கல்வி நிறுவனமான பிரிவேனாக்களை, பல்கலைக்கழகத்திற்கு நிகராக தரமுயற்றும் கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. பிக்குகளின் அபிலாஷைகளுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட நில உச்சரவம்புச் சட்டம், பௌத்த மடாலயங்களின் பொருளாதாரத்தை பாதித்தது. இதை விட, வேறு சில முற்போக்கான மாற்றங்களும் பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டன. 1957 ல் நிறைவேற்றப் பட்ட, "சமூகக் குறைபாடுகள் ஒழிப்பு சட்டம்", முதன் முதலாக சாதிய தீண்டாமையை சட்டவிரோதமாக்கியது. இவற்றை விட, அரசின் வெளிவிவகாரக் கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சோஷலிச நாடுகளுடன் உறவு ஏற்படுத்தப் பட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படை முகாம்கள் மூடப் பட்டன. பொருளாதார ரீதியாக, தேசியமயமாக்கல் கொள்கைக்கு உள்நாட்டில் ஆதரவு பெருகியது.

பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில், பிலிப் குணவர்த்தன என்றொரு மார்க்சிய அறிவுஜீவி இருந்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கொவிகம சாதியில் பிறந்தவர் என்ற போதிலும் வர்க்க சிந்தனை கொண்டவராக இருந்தார். 1935 ல், இங்கிலாந்து கல்லூரிகளில் பயிலும் காலத்தில் மார்க்ஸியம் குறித்து அறிந்து கொண்டு நாடு திரும்பிய இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். இருப்பினும் பிற்காலத்தில் இடதுசாரித் தேசியவாதியாக மாறி விட்டார். அவரது தந்தையும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசியவாத எழுச்சியில் பங்குபற்றியமைக்காக சிறை சென்றவர். அந்தக் காலத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மார்க்சியர்கள் மத்தியில், பிலிப் குணவர்த்தன வித்தியாசமானவராக திகழ்ந்தார்.

1956 ல் கூட, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சிங்களம் படிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதே நேரத்தில், பிலிப் குணவர்த்தனவின் வீட்டில் சிங்களம் பேசப்பட்டது குறிப்பிடத் தக்கது. இன்று "தமிழ் தேசியத்துடன் ஒத்துழைப்பது, தமிழ் இடதுசாரிகளின் தார்மீகக் கடமை" என்று நம்பப் படுவது போன்று, அன்று சில சிங்கள இடதுசாரிகள் நம்பினார்கள். உண்மையில், பண்டாரநாயக்க போன்ற தூய சிங்கள தேசியவாதிக்களுக்கும், குணவர்த்தன போன்ற மார்க்சிய மேதைகளின் ஆலோசனைகள் தேவைப்பட்டன. சிங்கள மக்களை, வர்க்க ரீதியாக பிளவு படுத்துவது குணவர்த்தன கொண்டுவந்த பொருளாதார திட்டங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், பண்டாரநாயக்க அந்த நோக்கம் நிறைவேற அனுமதிக்காதது மட்டுமல்ல, இறுதியில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். இவையெல்லாம் பண்டாரநாயக்கவின் கொள்கை மாற்றத்தில் ஏற்பட்ட பாரிய தவறு மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளின் தவறும் இதில் அடங்கியுள்ளது. அதற்கு காரணம், தமிழ் தேசியவாத தலைவர்கள் முதலில் பூர்ஷுவா வர்க்கத்தினர், அதற்குப் பிறகு தான் அவர்கள் தமிழர்கள்.

நில உச்சவரம்புச் சட்டம், நெல் பயிரப்படும் வயல் நிலங்களை மட்டுமே இலக்கு வைத்தது. அதனால், தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட முதலாளிகளை பாதிக்கவில்லை. புதிய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் வயல் நிலங்களை அரசு பறித்தெடுத்து, உழுபவருக்கு சொந்தமாக்க விரும்பியது. இலங்கை காலனிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், நிலப்பிரபுத்துவ சமுதாய முறை தொடர்ந்தது. நாட்டின் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரரான நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டிருந்தனர். பயிரப்படும் நெல்லில் பெரும்பகுதி நிலப்பிரபுக்கு சொந்தமாகையால், குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலின் பலன்கள் கிடைப்பதில்லை.

நிலப்பிரபுக்கள் எப்போதும் உயர்சாதியினராக இருந்தனர். குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் பிற்படுத்தப் பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விவசாயம் செய்யும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது. அரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்டமும், அதன் விளைவுகளும், சாதிய சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெருமளவு தாழ்த்தப் பட்ட சாதியினர் விவசாயக் கூலிகளானது மட்டுமல்ல, சிறிதளவு நிலங்களையும் பெற்றுக் கொண்டனர். உண்மையில், அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க நினைத்த, நிலப்பிரபுக்களின் செயல்பாடுகள் தோற்றுவித்த எதிர்பாராத சமுதாய மாற்றம் அது.

உண்மையில் குணவர்த்தன இயற்றிய நில உச்சவரம்புச் சட்டம், உள்ள படியே நடைமுறைக்கு வந்திருந்தால், அது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். நிலவுடமையாளர்களின் நிலங்களும், அறுவடையில் பெரும் பகுதியும், அவற்றை பயிர் செய்த குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாகி இருக்கும். நிலப்பிரபுக்களுக்கு சிறிதளவு தொகையை நஷ்டஈடாக அரசு வழங்கும். உழவர்களின் கமிட்டிகள் உருவாக்கப் பட்டு, விவசாயக் கூலிகளின் ஊதியமும் அதிகரிக்கப் பட்டிருக்கும். முன்னாள் குத்தகை விவசாயிகளைக் கொண்ட உழவர் குழுக்கள், நிலமற்ற விவசாயக் கூலிகளையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் இதனால் இலாபமிருந்தது. முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்த விவசாய உற்பத்தி அரசமயமாகும். இருப்பினும், அரசாங்கத்திற்குள்ளேயே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிராளிகள் இருந்ததால், சட்டத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே அமுல்படுத்த முனைந்தார்கள். அதற்குக் காரணம், பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர், நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் ஏராளமான நிலங்களை, சிங்களப் பகுதிகளிலும் சொந்தமாக வைத்திருந்தனர். பண்டாரநாயக்கவின் குடும்பத்தின் உள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது வேடிக்கையானது. அவரது துணைவியார் சிறிமாவோவின் குடும்பத்தினர், கண்டி மாகாணத்தின் பெரிய நிலவுடமையாளர்கள். நில உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய்யுமாறு, சிறிமா ஊடாக பண்டாரநாயக்கவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதியாக சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அது நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அசைக்கவில்லை. ஆயினும், சட்டம் அமுலாக முன்னரே, குத்தகை விவசாயிகளுக்கு பதிலாக, பெருமளவு விவசாயக் கூலிகள் வயல்களில் வேலை செய்ய வைக்கப் பட்டனர். குத்தகை விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்தை சொந்தமாக்குவதாக சட்டம் கூறியதால், விவசாயக்கூலிகளை பணிக்கு அமர்த்தியதன் மூலம், மறைமுகமாக நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.

நிச்சயமாக, நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கண்டியில் நடந்த எதிர்ப்பியக்கத்திற்கு, சிறிமாவின் சகோதரர் பார்னஸ் ரத்வத்த தலைமை தாங்கினார். என்ன பாடுபட்டாவது சட்டத்தை நடைமுறைக்கு வர விடாமல் தடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டனர். புத்த பிக்குகளும் நிலவுடமையாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர். நிலப்பிரபுத்துவத்திற்கும், மதத்திற்கும் இடையிலான பொருளாதார உறவு உலகம் முழுவதும் உள்ளது தான். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பௌத்த மடாலயங்களுக்கு சொந்தமாகவும் பல ஏக்கர் நெல் வயல்கள் இருந்தன. மடாலயங்களில் வசித்த பிக்குகளின் முக்கிய வருமானமும் அது தான். நிலவுச்சவரம்பு சட்டம் தமது அடிமடியிலேயே கை வைப்பதை உணர்ந்த புத்த பிக்குகள், பண்டாரநாயக்க அரசுக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால், இந்த விடயத்தில் அரசை விமர்சித்தால், சிங்கள உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பொருளாதாரப் பிரச்சினையை, இனப்பிரச்சினையாக திசை திருப்பி விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இது போன்ற அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட விரும்பாத எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இனவாத அரசியலுக்குள் நுழைந்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்கள், 1957, 1958 ஆகிய வருடங்களில் இடம்பெற்றன. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. இயல்பாகவே வர்க்க சிந்தனை கொண்ட உழைக்கும் மக்களின் மனதில் இனவாதக் கருத்துகளை பரப்ப வேண்டும். அதுவே மேட்டுக்குடி வர்க்க நலன்களை காப்பாற்ற உதவும். சிங்கள பேரினவாதிகள், இனவாத பௌத்த பிக்குகள், தமிழ் குறுந் தேசியவாதிகள், இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளியும் அது தான். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தினரின் நலன்களுக்காக, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களை நீண்டதொரு இனக்குரோத போருக்குள் தள்ளி விட்டனர்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்