Showing posts with label ஐரோப்பிய இடதுசாரிகள். Show all posts
Showing posts with label ஐரோப்பிய இடதுசாரிகள். Show all posts

Tuesday, March 21, 2017

மக்கள் நல வாதம் (Populism) என்றால் என்ன? - ஓர் அரசியல் ஆய்வு


ஐரோப்பிய அரசியல் அரங்கில் பொப்புலிசம் (Populism) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றது. அண்மைக் காலத்தில் வளர்ந்து வரும் தீவிர வலதுசாரிக் கட்சிகளை குறிப்பதற்கு அந்தச் சொல்லை பயன்படுத்திகிறார்கள். அந்தச் சொல்லை உருவாக்கியவர் யார் என்று தெரியாது.ஆனால், ஊடகங்களால் பிரபலமானது என்பது மட்டும் நிச்சயம். அதை தத்துவார்த்த நோக்கில் அலசுவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் பொபுலிசம் என்ற வார்த்தை தமிழில் பெரியளவில் பயன்பாட்டில் வரவில்லை. அதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன என்று முகநூல் நண்பர்களிடம் கேட்ட பொழுது, "ஜனரஞ்சகவாதம், பெருந்திரள்வாதம்..." என்று பலவற்றை சொன்னார்கள். அவற்றில் மக்கள் நலவாதம் பொருத்தமானதாகப் படுகின்றது. அதனால் அதையே கட்டுரை முழுவதும் பயன்படுத்துகிறேன். மொழிபெயர்ப்பில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான ஐரோப்பிய அரசியலில், பாரம்பரிய கோட்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தின. இனவாதம் பேசிய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு பரந்தளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. மிகச் சிறிய கட்சிகளான அவை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. எந்த நாட்டிலாவது ஒரேயொரு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் தோன்றிய, மக்களைக் கவர்ந்த வசீகரமான, ஜனரஞ்சகத் தலைவர்கள், தீவிர வலதுசாரி அரசியலுக்கு உந்துசக்தியாக இருந்தனர். ஆஸ்திரியாவில் ஹைடர், பிரான்ஸில் லெ பென், நெதர்லாந்தில் வில்டர்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களால் தலைமை தாங்கப் பட்ட கட்சிகள் யாவும் தனிமனித வழிபாட்டைக் கொண்டிருந்தன. அதாவது, கட்சிக்கென கொள்கை இருந்த காலம் மாறி, கட்சித் தலைவர் சொல்வெதெல்லாம் கொள்கை என்ற நிலைமை தோன்றியது.

புதிதாகத் தோன்றிய ஜனரஞ்சகத் தலைவர்கள், பாரம்பரிய தீவிர வலதுசாரிகள் மாதிரி வெளிப்படையாக இனவாதம் பேசவில்லை. அலங்காரச் சொற்களை பயன்படுத்தி, மக்கள் நலன் என்ற பெயரில், நாகரிகமாக, நாசூக்காக இனவாதம் பேசினார்கள். இதிலே முக்கியமானது என்னவெனில், அரசாங்கத்தில் இருந்த ஆளும் கட்சிகள் பொதுவாக இனவாதம் வெறுக்கத் தக்க விடயம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தன. அல்லது அப்படி காட்டிக் கொண்டன. ஆனால், ஜனரஞ்சக அரசியல்வாதிகள் பேசிய "நாகரிகமான இனவாதம்" ஏற்றுக் கொள்ளத் தக்கது போன்று நடந்து கொண்டன. காலப்போக்கில் அவர்களே அவற்றைப் பேசத் தொடங்கினார்கள்.

இந்திய, இலங்கை நிலைமைகளுடன் ஒப்பிட்டு சொன்னால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்து மதவெறிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மிகவும் குறைவு. அதனால், தேர்தலில் போட்டியிட்டாலும் பெருமளவில் ஜெயிப்பதில்லை. அதே நேரம், இந்து மதவெறியை நாகரிகமாக, நாசூக்காக பேசினால் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றியதும் அப்படித் தான்.

இனி ஐரோப்பாவுக்கு வருவோம். மக்கள் நலவாதக் கட்சிகள் எப்போதும் வலதுசாரிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகளும் உள்ளன. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் பற்றி ஆழமாக ஆராய்வது முக்கியமானது. ஏனெனில் அவை தான் பொதுத் தேர்தல்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக வருகின்றன. ஒரு காலத்தில் அரசாங்கம் அமைக்கலாம் என்ற நிலைமையில் உள்ளன.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, பாரம்பரிய நாஸிகள், பாசிஸ்டுகளுடன் தொடர்பு கொண்ட கட்சிகள். இரண்டு, அப்படி எந்தத் தொடர்பும் இல்லாத "தூய்மையான" கட்சிகள். முதலாவது வகைக்குள் ஆஸ்திரியாவின் FPÖ, மற்றும் பெல்ஜியத்தின் Vlaams Blok/belang ஆகிய கட்சிகள் அடங்குகின்றன. இரண்டாவது வகைக்குள் நெதர்லாந்தின் PVV, ஜெர்மனியின் AfD ஆகிய கட்சிகள் அடங்குகின்றன.

ஐரோப்பாவில் இன்றைக்கும் நாசிஸம், அல்லது பாஸிசம் வெறுக்கத் தக்க கொள்கையாக, சிலநேரம் தடைசெய்யப் பட்டதாக உள்ளது. உதாரணத்திற்கு, பெல்ஜியத்தில் Vlaams Blok மீது நாசிஸ தொடர்பு, இனவாதம் பேசிய குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டதால், அது தடை செய்யப் பட்டது. அது பின்னர் Vlaams Belang புதிய பெயரில் தோன்றிய போதும் பெருமளவு வளர்ச்சி பெற முடியவில்லை. அதே நேரம் Nieuw-Vlaamse Alliantie (N-VA) என்ற புதிய கட்சி அதே அரசியலை முன்னெடுத்து பெல்ஜியத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றானது. N-VA நாகரிகமாக, நாசூக்காக இனவாதம் பேசத் தெரிந்த மக்கள் நலக் கட்சி என்பதால் தான் அதன் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்தன.

இனி தத்துவத்திற்கு வருவோம். மக்கள் நலவாதம் என்றால் என்ன? ஆளும் கட்சிகளுக்கு மாற்றீடாக, ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதாக, பொது மக்கள் நலனில் இருந்து பேசுவதாக காட்டிக் கொள்ளும் தத்துவம் அது. உண்மையில் ஐரோப்பிய அரசியல் சூழல் ஒரு நெருக்கடிக்குள் சிக்கி உள்ளதை அது எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, இது வரை காலமும் மாறி மாறி ஆண்டு வந்த பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் நலனை கணக்கெடுக்காத ஆளும் வர்க்கத்தை தேர்தலில் தண்டிக்க நினைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு நெதர்லாந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த சமூக ஜனநாயகக் கட்சியை எடுக்கலாம். ஒவ்வொரு தடவையும் நடக்கும் தேர்தல்களில் முப்பது ஆசனங்களுக்கு குறையாமல் வென்று வந்த டச்சு தொழிற்கட்சி (PvdA), இந்தத் தடவை ஒன்பது ஆசனங்களை மட்டுமே எடுத்திருந்தது. 

நெதர்லாந்து வரலாற்றில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சமூக ஜனாயகக் கட்சி இத்தகைய அவமானகரமான தோல்வியை சந்திக்கவில்லை. பாரம்பரிய சமூக ஜனநாயகவாத, இடதுசாரிக் கட்சியான PvdA, ஆட்சியில் அமர்ந்ததும் ஒரு வலதுசாரிக் கட்சியாகி சீரழிந்தது. அதனால் பெருமளவு ஆதரவாளர்களை இழந்து விட்டது.

சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவுத் தளமாக இருந்த உழைக்கும் வர்க்க வாக்காளர்களில் ஒரு பகுதி SP என்ற புதிய இடதுசாரிக் கட்சிக்கும், இன்னொரு பகுதி PVV என்ற புதிய வலதுசாரிக் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர். SP (சோஷலிஸ்ட் கட்சி), PVV (சுதந்திரக் கட்சி) இரண்டுமே கொள்கை அடிப்படையில் எதிரெதிர் நிலையில் நிற்கும் கட்சிகள். ஆனால் இரண்டுமே ஆளும் வர்க்கத்திற்கு எதிரானதாகவும், ஆளும் கட்சிகளுக்கு மாற்றாகவும் தம்மை காட்டிக் கொள்கின்றன. 

இடதுசாரி வெகுஜனம் SP யையும், வலதுசாரி வெகுஜனம் PVV யையும் ஆதரிக்கின்றது. அதனால் தான் அத்தகைய கட்சிகளை நாங்கள் மக்கள் நலவாதக் கட்சிகள் என்று அழைக்கிறோம். நெதர்லாந்தின் SP மட்டுமல்ல, ஜெர்மனியின் Die Linke, கிரேக்கத்தின் Syriza போன்ற இடதுசாரிக் கட்சிகளையும் மக்கள் நலவாதக் கட்சிகள் என்று தான் அழைக்கிறார்கள். ஆகவே, இந்த சொற்பதம் தனியே வலதுசாரிகளை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகும்.

மக்கள் நலவாதம் என்றால் என்ன? சுருக்கமாக சொன்னால், அது பனிப்போருக்கு பிந்திய "பின் நவீனத்துவ அரசியல் போக்கு"! பனிப்போர் காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தமது மக்களை அரசியல் நீக்கம் செய்யும் பணியை திறம் பட செய்து வந்தன. நீண்ட காலமாக அரசியல் ஆர்வமற்று ஒதுங்கியிருந்த மக்கள், 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்கள்.

அதற்குக் காரணம், அதுவரை காலமும் மக்கள் அனுபவித்து வந்த சலுகைகளை அரசு வெட்டத் தொடங்கியது. குறிப்பாக புதிதாக உருவான மத்திய தர வர்க்கம் எண்ணிக்கையில் பெருகி இருந்தது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பின்னர் உருவான புதிய மத்தியதர வர்க்கத்துடன் இதனை ஒப்பிடலாம். தொண்ணூறுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்து வந்த பொருளாதார நெருக்கடிகளால் அந்தப் புதிய மத்தியதர வர்க்கமும் பாதிக்கப் பட்டது.

உலகமயமாக்கல் இன்னொரு முக்கியமான காரணம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ள பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களின் சம்பளம் குறைவு என்ற காரணத்தால், மேற்கு ஐரோப்பிய முதலாளிகள் தமது தொழிற்சாலைகளை கிழக்கு ஐரோப்பா நோக்கி நகர்த்தினார்கள். இதனால் மேற்கு ஐரோப்பாவில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழந்தனர். 

அதே நேரம், விசாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதால் கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகள் வேலை தேடி மேற்கு ஐரோப்பாவுக்கு வந்தனர். இத்தகைய அரசியல் - பொருளாதாரப் பின்னணியில் தான் மக்கள் நலவாதக் கட்சிகள் தோன்றின. 

இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் தொழிற்சாலைகளை மூடி வேலையில்லாப் பிரச்சனைகளை உருவாக்கும் முதலாளிகளை நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றன. பெரும் வணிக நிறுவனங்கள், செல்வந்தர்களிடம் அதிக வரி அறவிட்டு, அந்தப் பணத்தை ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த  பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் உலகமயமாக்கலுக்கு காரணமான முதலாளிகளை குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக, அகதிகள், குடியேறிகள் உள்ளூர் மக்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அது மட்டும் தான் பிரச்சினை என்று பிரச்சாரம் செய்கின்றன.

மேற்குலக அரசியல் அவதானிகளும், ஊடகங்களும் மக்கள் நலவாதம் என்ற புதிய அரசியல் தத்துவம் இருப்பதாக சொல்வதற்கு, பலரும் கவனிக்காத காரணம் ஒன்றுள்ளது. இன்றைய அரசியல் சூழலில், பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் தோற்று விட்டதாக கருதப் படுகின்றது. 

பொபுலிசம் என்பது ஐரோப்பாவில் உருவாக்கப் பட்ட  ஒரு பின்நவீனத்துவ சொல்லாடல். பனிப்போர் முடிவுடன் சோஷலிசம் மட்டுமல்லாது, முதலாளித்துவம், லிபரலிசம், ஜனநாயகம் போன்றனவும் காலாவதியாகி விட்டன என்று இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வந்தவை தான் மக்கள் நலவாதக் கட்சிகள். அதாவது, எந்த கோட்பாட்டையும் பின்பற்றாத அரசியல் கட்சிகள்.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள், பழமைவாதம், தேசியவாதம், இனவாதம், கலந்த கலவையாக உள்ளன. புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்வார்கள். அதே தான். மறுபக்கத்தில் இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் மார்க்சியத்திற்கு புதிய விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு மார்க்சியக் கருத்தை கட்சியின் கருத்தாக தெரிவித்து விட்டு, தமது கட்சி மார்க்சியத்தை பின்பற்றவில்லை என்று காட்டிக் கொள்வார்கள். சீட்டாட்டம் மாதிரி எல்லோரும் தமது துருப்புச் சீட்டுக்களை ஒளித்து வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.

பொதுவாக மக்கள் நலவாதக் கட்சிகள் எதுவும் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரிக்கவில்லை. தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், அவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் பெரிய மாற்றம் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணரவில்லை.

உதாரணத்திற்கு, வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அகதிகள், குடியேறிகள் வருகையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், உலகின் மறு பக்கத்தில் யுத்தங்கள் நடப்பது குறையவில்லை. வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும், சுரண்டலும் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் வரையில் ஐரோப்பாவை நோக்கி குடியேறிகள் படையெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதே மாதிரி, இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், செல்வத்தை எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியாது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து தமது பைக்குள் போடும் முதலாளிகள் அந்தளவு இலகுவாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி முதலாளித்துவத்தை தூக்கி எறிவது தான். பாராளுமன்றத்திற்கு அந்தளவு சக்தி கிடையாது.

Thursday, March 16, 2017

நெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் "தேசிய வீழ்ச்சி"! இடதுசாரிகளின் எழுச்சி!!

நெதர்லாந்து பொதுத் தேர்தல்: இனவாதம் தோற்கடிக்கப் பட்டது!
15-3-2017 ல் நடந்த நெதர்லாந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் உலகளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், பிரித்தானியாவின் Brexit வாக்கெடுப்பு, அமெரிக்காவில் டிரம்பின் தெரிவுக்குப் பிறகு நடந்த பிரதானமான தேர்தல் இது. அந்த நிகழ்வுகள் நெதர்லாந்தின் இனவாத அரசியல்வாதி வில்டர்சின் வெற்றி வாய்ப்புக்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப் பட்டது.

ஊடகங்களால் ஊதிப் பெருக்கப் பட்ட இனவாத அரசியல் எழுச்சி இறுதியில் நடக்கவேயில்லை. வில்டர்சின் சுதந்திரக் கட்சி (PVV) 20 ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை விட ஐந்து ஆசனங்கள் அதிகமாக எடுத்துள்ளது. இருப்பினும் அதை ஒரு வெற்றியாக கருத முடியாது. உண்மையில் வில்டர்சின் இனவாத அரசியலுக்கு கிடைத்த தோல்வியே அது.

உண்மையில் சுதந்திரக் கட்சி முழுக்க முழுக்க தனிமனித வழிபாட்டைக் கொண்டுள்ளது. அதன் தலைவர் வில்டர்ஸ் மட்டும் தான் எல்லாமே. அவரது வாயில் இருந்து வருவது தான் அரசியல். தன்னை ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டிருந்தார். மசூதிகளை மூட வேண்டும், குரானை தடை செய்ய வேண்டும் என்று தீவிர அரசியல் பேசினார். அதே நேரம், அகதிகள், குடியேறிகள் வருவதை தடை செய்யவேண்டும் என்றும் பேசி வருபவர்.

வழமையாக இப்படியானவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஊடகங்கள், அமெரிக்காவில் டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் நெதர்லாந்தில் வில்டர்ஸ் வெற்றி பெறலாம் என்ற மாயையை உருவாக்கி விட்டிருந்தன. கடந்த வருடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்புகளில் கூட வில்டர்சின் சுதந்திரக் கட்சி குறைந்தது முப்பது ஆசனங்களை பெற்று முதலிடத்திற்கு வரும் என்று எதிர்வு கூறப் பட்டது. ஆனால் அந்த கணிப்புகள் இறுதியில் பொய்த்து விட்டன. அதற்கு என்ன காரணம்?

உண்மையில் வில்டர்ஸ் ஊடகங்களை நம்பி அரசியல் செய்து வந்தார். "பாதுகாப்பு குறைபாடு காரணமாக" வாக்காளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஏற்கனவே "மொரோக்கோ குடியேறிகளை குறைப்போம்" என்ற இனவாதப் பேச்சு காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருந்தார். அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.

வில்டர்ஸ் தனது எதிராளிகளுடன் விவாதிப்பதை தவிர்த்து வந்தார். ரொட்டர்டாம் மசூதியில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டும் செல்லவில்லை. அது மட்டுமல்ல, ஊடகங்கள் ஒழுங்கு படுத்திய விவாத அரங்குகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். அதே நேரம், பிரதமர் மார்க் ருத்தே ஒரு முக்கியமான அறிவிப்பை விடுத்தார். PVV பெரிய கட்சிகளில் ஒன்றாக வந்தாலும், அதனோடு கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

மார்க் ருத்தேயின் அறிவிப்பு வில்டர்சின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால், நெதர்லாந்தில் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக கூட்டு அரசாங்கம் தான் ஆட்சி அமைக்கின்றது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையில் கூட்டணியை விட மாற்று வழி இல்லை. 

அடிப்படையில், மார்க் ருத்தேயின் லிபரல் கட்சியும், வில்டர்சின் சுதந்திரக் கட்சியும் முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள் தான். ஆனால், வில்டர்ஸ் பகிரங்கமாக இனவாதம் பேசுவதால், அவரது கட்சியோடு கூட்டு அரசாங்கம் அமைப்பது சங்கடத்திற்கு உள்ளாக்கும் என்பது மார்க் ருத்தேவுக்கு தெரியும்.

தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பிரதமர் மார்க் ருத்தவும், வில்டர்சும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக் கொண்டனர். டச்சு மக்களின் மருத்துவ வசதிகளுக்கான செலவினத்தை குறைத்துள்ள அரசாங்கம், அகதிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகின்றது என்று வில்டர்ஸ் குற்றம் சாட்டினார். அகதிகளை வர விடாமல் தடுப்பதற்கு எல்லையில் மதில் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வில்டர்ஸ் அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தை வலிந்து புகுத்தினார். அகதிகளை வெளியேற்றினால், குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தால் உள்நாட்டு டச்சு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னார். பிரித்தானியா மாதிரி, நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றார்.

இவை எல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறமிருக்க, ஆளும் லிபரல் கட்சி ஏற்கனவே குடியேறிகள் விடயத்தில் கடுமையாகத் தான் நடந்து கொள்கின்றது. வில்டர்ஸ் நேரடியாக சொல்வதை, லிபரல் கட்சி சுற்றிவளைத்து சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். அகதிகள் வருகையை தடுப்பதற்காக துருக்கியுடன் ஒப்பந்தம் செய்ததை அந்த விவாதத்தில் மார்க் ருத்தே சுட்டிக் காட்டினார். அதாவது, "நாங்களும் அகதிகளுக்கு எதிரானவர்கள் தான்" என்பதை சொல்லாமல் சொன்னார்.

வீட்டுக்கு வீடு குரான் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வில்டர்ஸ் சொன்னதை நினைவுபடுத்திய மார்க் ருத்தே, "அந்த குரான் பொலிஸ் எப்படி இயங்கும்?" என்று கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் வில்டர்ஸ் தடுமாறினார். "ஓ! போலி வாக்குறுதி கொடுத்தீர்களா?" என்று மார்க் ருத்தே கிண்டலடித்தார்.

உண்மையில், வில்டர்ஸ் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. அகதிகள், முஸ்லிம்கள், குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அப்படி நடந்தால் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும். இந்த நாட்டில் துப்பரவுப் பணி போன்ற அடித்தட்டு வேலைகளை செய்வோர் அந்தப் பிரிவினர் தான்.

அகதிகள், முஸ்லிம்களை வெளியேற்றுவதால் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. முதலாவதாக, பெரும்பாலான டச்சுக் காரர்கள் அடித்தட்டு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. இரண்டாவதாக, மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வர மாட்டார்கள். மூன்றாவதாக, இன்றைய நிலையில் எந்த முதலாளியும் சம்பளம் கூட்டிக் கொடுக்க தயாராக இல்லை.

மேலும், வில்டர்ஸ் போன்ற இனவாத சக்திகளின் எழுச்சிக்கு "உலகமயமாக்கல்" காரணம் என்றும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அப்படிச் சொல்வதும் அதே இனவாத சக்திகள் தான். "தேசிய எழுச்சி" என்ற பெயரில் உலகமயமாக்கலை தடுப்பது நடைமுறைச் சாத்தியமன்று.

நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நினைத்தும் பார்க்க முடியாது. ஒருவேளை, பிரித்தானியா மாதிரி பிரிந்தாலும் உலகமயமாக்கலில் இருந்து தப்ப முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து பொருளாதாரமும் உலகமயமாக்கலால் நன்மை அடைகின்றது. பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய ஏற்றுமதி நிறுவனங்களும் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்கின்றன.

ஆகவே, வில்டர்ஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. பெரிய முதலாளித்துவ நிறுவனங்களை பகைக்க முடியாது. அதனால், அவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும், வில்டர்சின் "தேசிய எழுச்சி" எந்தளவு தூய்மையானது? இன்னொரு விதமாகக் கேட்டால், வில்டர்ஸ் உண்மையிலேயே ஒரு "தேசியவாதி" தானா? அவரது கட்சிக்கு இஸ்ரேல், அமெரிக்காவில் இருந்து நிதியுதவி கிடைப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. கடந்த வருடம், வில்டர்ஸ் இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுத்துறையால் (AIVD) விசாரணை செய்யப் பட்டார்.

எதற்காக வில்டர்ஸ் போன்ற இனவாதிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது? உண்மையில் ஊடகங்கள் இப்படியானவர்களை வளர்த்து விடுகின்றன. பல வருடங்களாக பொருளாதாரப் பிரச்சினை நிலவியது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அரசாங்கம் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், மக்கள் அனுபவித்த சலுகைகளை வெட்டியது.

காலங்காலமாக ஆண்டு வரும் பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால், மக்கள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. மக்களின் ஏமாற்றத்திற்கு வடிகாலாக, வில்டர்ஸ் போன்ற இனவாதக் கோமாளிகளை மாற்று அரசியல் சக்தியாக காட்டுகிறார்கள். இந்த நாடகம் இன்னும் சில வருடங்கள் அரங்கேறும்.

நெதர்லாந்து தேர்தல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்த தகவல் ஒன்றுள்ளது. 21 ம் நூற்றாண்டின் முற்போக்கு இடதுசாரிகள் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளனர். குறிப்பாக, இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி (Groen Links) மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. இன்னொரு இடதுசாரிக் கட்சியான சோஷலிசக் கட்சியும் 15 ஆசனங்களுடன் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.

அதே நேர‌ம், பாரம்பரிய சமூக ஜனநாயக அரசியல் வழிவந்த, வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) அவமானகரமான ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் அது பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. இந்தத் தேர்தலில் வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும்.

புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), 1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். தொண்ணூறுகளில் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் நெருக்கடிக்கு உள்ளான நெதர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN) கலைக்கப் பட்டு, இன்னும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, Groen Links என்ற புதிய கட்சி உருவாக்கப் பட்டது.

தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த சுற்றுச் சூழலியல் அரசியலுடன், செல்வத்தை பங்கிட்டு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடதுசாரி அரசியலையும் சேர்த்துக் கொண்டது. அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் இளைய தலைமுறையை சேர்ந்த இடதுசாரி என்பதால், பெரும்பாலான இளைஞர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.

Saturday, August 15, 2015

எளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின் கதை


நான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ஓர் இடதுசாரி - அனார்க்கிஸ்ட் நண்பருடன் தொடர்பேற்பட்டது. பூர்வீக டச்சுக்காரரான அவர், தமிழ் அகதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இலங்கைக்கும் இரண்டு மூன்று தடவைகள் சென்று வந்துள்ளார். தேர்தல் கண்காணிப்பாளராக கடமையாற்றி உள்ளார்.

எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய மனிதர்களில் அவரும் ஒருவர். உலகில், நாட்டில் நடக்கும் எல்லா விடயத்திற்கும் கோட்பாட்டு விளக்கம் தருவார். அவரது தெளிவான அரசியல் கண்ணோட்டமும், வர்க்கப் பார்வையும் எனது எழுத்துக்களில் பல இடங்களில் பிரதிபலித்துள்ளன. அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். குறைந்தது மூன்று வருடங்களாவது, எனது தஞ்சமனு கோரிக்கைக்கு உதவியது மட்டுமல்லாது, அரசியல் கற்பித்த ஆசானாகவும் இருந்தார்.

மேற்கு ஐரோப்பாவில், எல்லோரிடமும் "சொந்த வீடு, சொந்த வாகனம்" இருக்கும் என்று, சாதாரண தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் அதற்கு மாறானது. எனது இடதுசாரி நண்பர் போன்று பலர், தாம் நம்பும் கொள்கைக்கு ஏற்றவாறு வாழ்கிறார்கள். வசிப்பதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று இப்போதும் வாடகை வீட்டில் வாழ்கிறார்கள். வாகனமாக சைக்கிள் மட்டுமே பாவிக்கிறார்கள்.

ஒரு முதலாளித்துவ நாட்டில், மனித வாழ்க்கையில் தேவையான அனைத்து அம்சங்களும் முதலாளிகளின் இலாப நோக்கை இலக்காக கொண்டே நடக்கின்றன. "சொந்த வீடு, சொந்த வாகனம்" எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

எனது டச்சு நண்பரின் (குடும்பப்) பெயர் "கொக்". அப்போது நெதர்லாந்து பிரதமராக இருந்தவரின் பெயரும் (விம்) கொக் தான். அந்தக் கொக் பிரதமர். இந்தக் கொக் தீவிர அரச எதிர்ப்பாளர். ஒவ்வொரு வருடமும், இராணியின் தினம் என்ற பெயரில் டச்சு தேசியப் பெருமை பேசும் தினம் கொண்டாடப்படும் நாட்களில் விடுமுறையில் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். அப்போது நெதர்லாந்து இராணியாக இருந்தவர் பெயாத்ரிக்ஸ். "அவள் ஒரு கொள்ளைக்காரி. எனக்கு இராணி அல்ல!" என்று சொல்வார்.

கொக் பல வருடங்களாக, சோஷலிச பங்கீட்டு குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். அதாவது, ஒவ்வொரு மாடியிலும் உள்ள வீடுகளில், ஆளுக்கொரு அறை தனியாக வாடகைக்கு எடுத்திருப்பார்கள். சமையலறை, குளியலறை, கழிப்பறை எல்லாம் மூன்று பேருக்கு பொதுவாக இருக்கும். முன்பு சோவியத் யூனியனில் புரட்சிக்குப் பின்னர் அவ்வாறான பங்கீட்டு வீட்டுத் திட்டம் பிரபலமடைந்தது. இன்றைக்கும் நெதர்லாந்தில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.

முன்பு அந்த பங்கீட்டு குடியிருப்புகள் உண்மையிலேயே சோஷலிச கூட்டுறவு அடிப்படையில் இயங்கின. தற்போது தனியார் நிறுவனங்களாகி விட்டன. அனார்க்கிசத்தின் எதிர்மறையான விளைவுகளில் இதுவும் ஒன்று. உதாரணத்திற்கு, XS4ALL என்ற இணைய நிறுவனம் அனார்க்கிஸ்டுகளால் ஆரம்பிக்கப் பட்டது. 

அனைவருக்கும் இணைய சேவை செய்து கொடுப்பது என்ற தாரக மந்திரத்தை கூறி ஆரம்பிக்கப் பட்டது. இன்று அது பல இலட்சம் யூரோ இலாபம் சம்பாதிக்கும் பெரிய வர்த்தக நிறுவனமாகி விட்டது. ஆனால், வணிகத்தில் ஈடுபட்டாலும் பிற முதலாளித்துவ நிறுவனங்கள் மாதிரி முறைகேடுகள் செய்வதில்லை. உழைப்பாளர்களை சுரண்டுவதில்லை. அது வேறு விடயம். எனது நண்பரின் கதைக்கு வருவோம்.

ஆரம்ப காலங்களில், அந்த நண்பரின் எளிமையான வாழ்க்கை முறை என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அப்போது நான் வதிவிட அனுமதி கூட பெற்றிராத அகதி. நிச்சயமற்ற எதிர்காலம் எதைப் பற்றியும் தீர்மானிக்க விடாமல் தடுத்தது. என்னுடன் கூட இருந்த அகதிகள்,வதிவிட அனுமதி கிடைத்தவுடன் என்னென்ன செய்வோம் என்று கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய சூழலில் வாழ்ந்த எனக்கு, ஒரு பூர்வீக டச்சுகாரரின் எளிமையான வாழ்க்கை ஆர்வத்தை தூண்டியதில் வியப்பில்லை.

அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அது மட்டும் தான் அவரது வாகனம். கடைக்கு, வேலைக்கு சென்று வருவது அந்த சைக்கிளில் தான். எனக்கு அறிமுகமான, கடந்த பத்து வருடங்களாக அவர் சைக்கிளில் செல்வதை பார்த்திருக்கிறேன். கார் வைத்திருப்பது பற்றிய கதை எழுந்தால், சுற்றுச் சூழல் மாசடைவது முதல், பெட்ரோல் அரசியல் வரையில் நீண்ட விரிவுரை ஆற்றுவார். மக்கள் ஒரே நாளில் மாற மாட்டார்கள். இப்படித்தான் என்று நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார்.

நெதர்லாந்தில் அனார்க்கிஸ்ட் இடதுசாரிகள் பலர் சைக்கிள் மட்டுமே பாவிக்கின்றனர். குடும்பகாரர்களும் அப்படித்தான். சிறு குழந்தைகள் இருந்தால், அவர்களை ஏற்றிச் செல்வதற்கு "Bakfiets" வைத்திருப்பார்கள். அது கிட்டத்தட்ட ரிக்சா வண்டி மாதிரி இருக்கும். சைக்கிளின் முன்பக்கம் மரத்தால் செய்த பெட்டி ஒன்றிருக்கும். 

ஒரு மத நம்பிக்கை மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் எனது நண்பரும். ஆனால், எல்லாவிதமான கிறிஸ்தவ மத அடையாளங்களையும் கவனமாக தவிர்ப்பார். நெதர்லாந்தில் ஒரு காலத்தில் சமூகப் பிரிவினைகள் தீவிரமாக இருந்தன. அதாவது, கத்தோலிக்க குடும்பங்கள், புரட்டஸ்தாந்து குடும்பங்கள் வெவ்வேறு சமூகங்களில் வாழ்ந்தன. இரண்டுக்கும் இடையில் தொடர்புகள் குறைவாக இருக்கும். அது போன்று இடதுசாரிகள், நாஸ்திகர்கள் தனியான சமூகப் பிரிவு. அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது. இவர்களுக்கு அவர்களைப் பிடிக்காது.

இந்த நாட்டில், கல்வி, வேலை போன்றவற்றைக் கூட, முடிந்தளவு கொள்கை அடிப்படையில் தெரிவு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, தீவிர புரட்டஸ்தாந்து குடும்பப் பெற்றோர், தமது பிள்ளைகள் மதுபான சாலையில் வேலை செய்வதை விரும்புவதில்லை. அதே மாதிரி இடதுசாரிகளுக்கும் சில தெரிவுகள் உள்ளன. எனது நண்பர் வாகெனிங்கன் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்து பட்டம் பெற்றவர். அந்தக் காலத்தில், விவசாயம் இடதுசாரிகளுக்கு மிகவும் விருப்பமான கல்விகளில் ஒன்று.

பல்கலைக்கழக பட்டதாரியாக இருந்தாலும், பிறரைப் போன்று தனியார் நிறுவனம் ஒன்றில் கொழுத்த சம்பளத்திற்கு வேலை செய்யும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவு அரசாங்க நிறுவனம் ஒன்றில் வேலை தேடி இருக்கிறார். அது கிடைக்கவில்லை என்றதும், இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அவர் ஒரு தடவை அகதி முகாம் ஒன்றில் வேலை செய்யும் பொழுது, எனக்கு அறிமுகமான தமிழர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போது அந்தத் தமிழர், "கலையரசன் ஒரு கம்யூனிஸ்ட் தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். "ஆமாம், தெரியும்" என்று புன்சிரிப்புடன் பதிலளித்திருக்கிறார். "அதனால் தான் எமக்கிடையிலான புரிந்துணர்வு அதிகம்" என்றும் கூறி உள்ளார். ஆனால், அவர் என்னையும் தன்னைப் போன்று "அனார்க்கிஸ்ட்" என்று தான் அழைப்பார். இலங்கை அரசியல் சம்பந்தமான எந்த விடயத்தையும் என்னிடம் கேட்டு உறுதிப் படுத்திய பின்னர் தான், அதன் தன்மை குறித்து தீர்மானமான முடிவெடுப்பார். 

இங்கே முக்கியமானது சமூகம் தொடர்பான வர்க்கப் பார்வை. அது பெரும்பாலான தமிழர்களிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அப்போது என்னிடம் பூரணமான அரசியல் தெளிவு இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல தடவைகள், (தமிழ்) தேசியவாதக் கருத்துக்களை கூறி இருக்கிறேன். அப்போதெல்லாம், எது தேசியவாதம், எது வர்க்க சிந்தனை என்று திருத்தி விடுவார்.

16 - 17 ஜூன் 1997 அன்று, ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிகப்பெரிய உச்சி மகாநாடு நடைபெற்றது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருமளவு இடதுசாரி ஆர்வலர்கள் ஒன்று திரண்டனர். 

கம்யூனிஸ்ட் கட்சிகள், அனார்க்கிஸ்ட் அமைப்புகள், சோஷலிஸ்ட் கட்சிகள், சூழலிய வாதிகள் மற்றும் பல உதிரிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தது ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டதாக பொலிஸ் அறிக்கை தெரிவித்தது. ஆம்ஸ்டர்டாம் நகரமே ஸ்தம்பித்து விட்டது. பல மணிநேரம் எந்த வாகனமும் ஓடவில்லை.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னரான காலம் அது. "இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் பலவீனமடைந்து, அழிந்து விட்டதாக நாங்கள் கருதினோம். ஆனால், ஐரோப்பிய அளவில் பார்த்தால் அவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகம். மிகவும் பலமாக இருக்கின்றனர்." என்று வெகுஜன ஊடகங்கள் புலம்பிக் கொண்டிருந்தன. நானும் அடுத்த நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய கட்டுரை ஒன்றை, இலங்கையில் வெளிவந்த "சரிநிகர்" பத்திரிகைக்கு எழுதி அனுப்பி இருந்தேன்.

எனது டச்சு நண்பரான கொக் கூட ஊர்வலத்திற்கு சென்றிருந்தார். அந்த இடத்தில் பொலிஸ் அடக்குமுறை தீவிரமாக இருந்தது. குறிப்பாக அனார்க்கிஸ்ட் குழுக்கள் பொலிசாரால் சுற்றி வளைக்கப் பட்டன. கறுப்புச் சட்டை (அனார்கிஸ்டுகளின் நிறம்) அணிந்திருந்த எல்லோரையும் கைது செய்தார்கள். அதற்குள் எனது நண்பரும் ஒருவர். அன்று அவரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார். 

அவரை ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து, அடிக்காத குறையாக கடுமையான விசாரணை நடத்தி இருந்தார்கள். உடல் ரீதியான சித்திரவதை செய்யவில்லையே தவிர, மனத் தளர்ச்சி ஏற்படும் வகையில் மறைமுகமான சித்திரவதை செய்தார்கள். பத்துப் பதினைந்து பேரை ஒரே கூண்டுக்குள் அடைப்பது. உணவு, நீராகாரம் கொடுக்க மறுப்பது, மிரட்டல்கள் இது போன்ற பல அத்துமீறல்கள் நடந்துள்ளன.

கொக் அன்று தான் பட்ட துன்பங்களை, பின்னர் ஒரு கட்டுரையாக எழுதி இருந்தார். அதை எனக்கு வாசிக்கத் தந்தார். சிறிலங்காவில் நடக்குமளவிற்கு சித்திரவதைகள் இல்லாவிட்டாலும், "அமைதியாக" இருக்கும் மேற்கத்திய "ஜனநாயக" நாடான நெதர்லாந்தில் இவை பெரிய விடயங்கள் தான் என்றார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்த படியால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட யாரும் அடையாள அட்டையோ, பிற ஆவணங்களோ எடுத்துச் செல்லவில்லை. 

அதனால், பொலிஸ் அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்ய பெரும் சிரமப் பட்டது. தடுத்து வைக்கப் பட்ட பலர், வேண்டுமென்றே பெயர், விலாசம் பற்றிய விபரங்களை கொடுக்க மறுத்தார்கள். (நெதர்லாந்து சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறது.) இறுதியில், அவர்கள் எல்லோரும் அரசியல் கைதிகள் என்ற படியால், இரண்டொரு நாட்களில் எல்லோரையும் விடுதலை செய்து விட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தை திரும்பிப் பார்த்தால், நெஞ்சு கனக்கிறது.  அது ஒரு பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்பி வராது. தொண்ணூறுகளின் இறுதி வரையில், அரசு மக்களுக்கு சேவை செய்வதாக காட்டிக் கொண்டது. நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களுக்கு கூட, மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கொண்டிருந்தது. (அது இடதுசாரிகளின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது.) 

ஒரு தடவை, ஆம்ஸ்டர்டாம் நகர பொலிஸ் மா அதிபர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறினார்: "எமது பொலிஸ் பிரிவுக்குள் குடியேறிகள் பலர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், அவர்களைப் பிடிப்பது எங்களது வேலை அல்ல! அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தீர்த்துக் கொள்ள வேண்டும்!" பொதுவாகவே, பொலிஸ் யாரையும் தெருவில் மறித்து அடையாள அட்டை கேட்பதில்லை.  விபத்து போன்ற சில விதிவிலக்குகள் இருந்தன. ஆனால், 9/11 க்குப் பின்னரான காலப் பகுதியில் தான், அடையாள அட்டை பரிசோதிக்கும் சட்டம் வந்தது. 

ஒரு காலத்தில், நாட்டில் இருந்த அகதிகள், சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் பல்வேறு வகையான அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு அவற்றிற்கு நிதி வழங்கி வந்தது. அதனால்,இடதுசாரிகள் பலரும், தமது மனதுக்குப் பிடித்த தொழிலாக கருதி அவற்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எனது நண்பரும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசுகள், எல்லாவற்றையும் நிறுத்தி விட்டன. தஞ்சமனு மறுக்கப்பட்ட அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், பலவந்தமாக பிடித்து திருப்பி அனுப்பப் பட்டனர்.

தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வந்த நிதிகள் ஒரேயடியாக நிறுத்தப் பட்டன. அதனால் அவற்றில் வேலை செய்து வந்த டச்சு பிரஜைகள் பலர் வேலையிழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று வரையில் அந்த நிலைமை தொடர்கின்றது. ஆனால், இடதுசாரிகள் எதனை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்களோ அது இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதாவது, இன்றைக்கும் பல உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கின்றன. அங்கிருந்து பெருந்தொகை அகதிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, August 01, 2015

இலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளின் சோஷலிசம்


ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல தசாப்த காலமாகவே மக்களுக்கான இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எழுபதுகளில் எழுந்த இலவச சைக்கிள் திட்டம் உலகப் புகழ் பெற்றது. (அன்றைய பொலிஸ் நிர்வாகம், இலவச சைக்கிள்களை பறிமுதல் செய்து வந்த படியால், பின்னர் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.)

அண்மைக் காலமாக, "இலவச நூலகத் திட்டம்", ஆம்ஸ்டர்டாம் நகரின் பல பகுதிகளிலும் பரவி வருகின்றது. பலர் தமது வீடுகளுக்கு அருகில், தெருவோரமாக புத்தக அலுமாரிகளை வைக்கின்றனர். அவற்றில் பாவித்த புத்தகங்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துச் சென்று வாசிக்கலாம்.

புத்தகங்களை வாசித்து முடித்து விட்டு, திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற உணர்வில், பலர் நூல்களை திரும்பக் கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஒரு பரிமாற்றமாக நடப்பதால், எல்லோருக்கும் வெவ்வேறு தலைப்புகளினான நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. நூல்கள் மட்டுமல்ல, பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் இவ்வாறு பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலவச நூலகத் திட்டத்தின் நோக்கம் என்ன? மேலை நாடுகளிலும் மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகின்றது. அதனால், இது போன்ற திட்டங்கள் வாசிப்பை தூண்டலாம். அதை விட மிக முக்கியமானது இடதுசாரிகளின் பாரம்பரிய சிந்தனை மரபு. அதாவது, பூமியில் உள்ள அத்தனை வளங்களும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது இடதுசாரிய சிந்தனை. 

முதலாளிகள் இலாபம் கருதி, எல்லாவற்றையும் சந்தைப் படுத்தும் நடைமுறை, இன்று தண்ணீரையும், வெகு விரைவில் காற்றையும், விற்பனை செய்யுமளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதனால், முதலாளித்துவ பொருளாதாரம், பலரின் வெறுப்பை சம்பாதித்திருப்பதில் வியப்பில்லை. இருப்பினும், ஒரு சிலரே மாற்று வழி என்னவென்று தேடுகின்றார்கள்.


ஆம்ஸ்டர்டாம் நகரிலும், பிற நகரங்களிலும் வீட்டுத் தோட்டம் செய்யும் நடைமுறையும் பெருகி வருகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளிலும், (கியூபாவில் இன்றைக்கும் உள்ளது), வீட்டுத் தோட்டம் வைத்திருப்பது ஊக்குவிக்கப் பட்டது. அதாவது, நாங்களே சில காய்கறிகளை வீட்டில் வளர்க்கலாம். பூஞ்சாடிகளில் பூக்களுக்கு பதிலாக, காய்கறிகளை வளர்க்குமாறு அரச மட்டத்திலான பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஒவ்வொருவரும் தமது உணவுத் தேவையில் ஒரு பகுதியை, தாமாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பது தான் அதன் நோக்கம்.

முதலாளித்துவ நாடுகளில், பல தசாப்த காலமாக, வீடுகளுக்குள் பூஞ் செடிகளை வைப்பது தான் "வழமையாக" இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், காய்கறிகளை வைக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தான் வாழ்கிறார்கள். அதனால், தோட்டம் வைத்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. 

ஆனால், நகரசபையில் உள்ள இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் விடா முயற்சி காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் காய்கறித் தோட்டங்கள் உருவாகின. நகரசபை நிர்வாகம், அதற்கான நிலம் ஒதுக்குவதுடன், விதைகளையும் இலவசமாக வழங்கியது. யார் வேண்டுமானாலும் தோட்டம் செய்ய உரிமையுண்டு. இருப்பினும், நிலப் பற்றாக்குறை காரணமாக, முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரப் படுகின்றது. சில இடங்களில் சுழற்சி முறையில், பலருக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது.

இவற்றைத் தவிர, பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதாவது, ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவர் சிற்பக் கலைஞராக இருக்கலாம். ஒருவர் கற்பிக்கும் திறமை கொண்டவராக இருக்கலாம். எதுவும் இல்லாவிட்டாலும், உடல் ரீதியாக உழைக்கக் கூடியவராக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அதற்கு செலவிட்ட நேரத்தையும், "பணத்தையும்" குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேவையை பெற்றவர் அதற்கு உடன்பட்டு கையெழுத்திட்டு கொடுப்பார். எதிர்காலத்தில் உங்களுடைய வீடு திருத்த வேண்டியிருக்கலாம். அதற்கு அவரைக் கூப்பிடுகிறீர்கள். அவர் வந்து செய்த வேலையை, அதே மாதிரி நேரத்தையும், "பணத்தையும்" கணக்கிட்டு குறித்துக் கொள்கிறார். 

இங்கே "பணம்" என்பது, நாம் கண்ணால் காணும் பண நோட்டுக்கள் அல்ல. உழைப்பை அளவிடும் கருவி மட்டுமே. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. பரிமாற்றம் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, மனிதர்கள் தமது உழைப்பை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

இதை வாசிக்கும் பலர், "இதெல்லாம் உண்மையா?" என்று திகைப்படையலாம். நெதர்லாந்தில் பல நகரங்களில், இது பல தசாப்த காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. பணமற்ற சமுதாய அமைப்பில் யார் வேண்டுமானாலும் சேரலாம். எந்த சந்தர்ப்பத்திலும் பணம் பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. 

தவிர்க்க முடியாத சில விடயங்களுக்கு மட்டும் பணம் செலவிடப் படுகின்றது. உதாரணத்திற்கு, முன்னர் இதற்காக ஒரு மாத இதழ் வெளியிட வேண்டி இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தமக்கு என்னென்ன வேலை தெரியும் என்று விளம்பரம் செய்வார்கள். அதற்கு ஒரு சிறிய கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. மற்றும் படி, சேவைகள் யாவும் "இலவசம்". அதாவது, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கடமைப் பட்டுள்ளனர்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!
மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!
இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்

Friday, January 30, 2015

கிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்! அதிர்ச்சியில் ஐரோப்பா!!


2015 ஜனவரி 25, கிரேக்க பொதுத் தேர்தலில் வென்ற சீரிசா (Syriza) பற்றி சில குறிப்புகள்:

Syriza என்ற பெயர் எப்படி வந்தது? SYnaspismós RIZospastikís Aristerás: தீவிர இடதுசாரிகளின் கூட்டணி என்ற பெயர் சுருங்கி சீரிசா ஆனது.

மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஒரு "தீவிர" இடதுசாரிக் கட்சி என்று அழைக்கின்றன. ஏனென்றால், மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளை தான், இவ்வளவு காலமும் "இடதுசாரி" கட்சிகள் என்று கூறி வந்தனர். நம்மைப் பொறுத்தவரையில் அவை வழமையான முதலாளித்துவ கட்சிகள். அதனால், மேற்குலக ஊடகங்கள் படம் காட்டுவதற்கு மாறாக, சீரிசா ஒரு மிதவாத இடதுசாரிக் கட்சி என்று அழைப்பதே பொருத்தம்.

அதனை நாங்கள், புரட்சிகர கட்சி அல்லது திரிபுவாத கட்சி போன்ற வரையறைக்குள் அடக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனை ஒரு ஜனநாயகக் கட்சி என்று கூறலாம். பெரும்பான்மை கிரேக்க மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கி இருந்தன. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்பது போல, ஜனநாயகம் பேசும் மேற்கத்திய நாடுகளை (குறிப்பாக: ஜெர்மனி போன்றநாடுகள்) அவர்களின் வழியில் சென்று கோரிக்கைகளை வைப்பது தான் நோக்கம்.

Syriza பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதற்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டுமே? புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? Syriza தனது கடமையை செய்ய தவறினால், அல்லது தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தால், அதில் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.

கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) பதவியேற்றவுடன் முதல் வேலையாக, கிரேக்க புரட்சிக்காக போராடி மறைந்த கம்யூனிசப் போராளிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் சாத்தினார். அலெக்சிஸ் சிப்ராஸ், முன்பு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், கிரீஸ் நாஸி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கெரில்லாப் போர் ஒன்றை நடத்தியது. கம்யூனிச கெரில்லாப் படைகள், பல இடங்களில் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இருந்தன.

போரின் முடிவில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான, முன்னாள் நாஸி ஆதரவு கிரேக்க ஒட்டுக் குழுக்களுக்கு உதவினார்கள். 1946–49 காலப் பகுதியில், மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்டுகள் தோற்கடிக்கப் பட்டனர். அன்று நடந்த போரில், வீர மரணத்தை தழுவிக் கொண்ட, பல்லாயிரக் கணக்கான போராளிகளின் நினைவு ஸ்தூபி, ஏதென்ஸ் நகரில் வைக்கப் பட்டுள்ளது.

ஒரு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் கட்சியை, பொதுத் தேர்தலில் வெல்ல வைத்த, கிரேக்க வாக்காளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்:


GREECE: THE END OF AUSTERITY? from Theopi Skarlatos on Vimeo.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !
கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்

Monday, March 05, 2012

முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

முற்குறிப்பு: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நெதர்லாந்து நாட்டில் தீவிரமான சோஷலிச அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சியர்கள் போன்று, அவர்களும் கம்யூனிச சமுதாயம் அமைப்பதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தம்மை அராஜகவாதிகள் (அரசு எதிர்ப்பாளர்கள்) என்று அழைத்துக் கொள்வதையே பெரிதும் விரும்பினார்கள். ஹெர்மன் ஸ்ஹியூர்மன் (Herman Schuurman) என்ற சோஷலிசப் புரட்சியாளர் எழுதி வெளியிட்ட (1924), "வேலை செய்வது குற்றம்" என்ற துண்டுப்பிரசுரம் அண்மையில் சில இடதுசாரி ஆர்வலர்களால் மறுபதிப்புச் செய்யப் பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். பிரபலமான மார்க்சிய அறிஞர்கள் தவிர்ந்த, பிற இடதுசாரி புத்திஜீவிகளின் எழுத்துக்கள், தமிழில் மிகவும் அரிதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி இது. நமது அன்புக்குரிய தோழர்கள், இத்தகைய வெளிவராத ஐரோப்பிய புரட்சிகர சிந்தனைகளை, தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
_______________________________________________________________


வேலை செய்வது குற்றம்
நமது மொழியில் வழமையாக பாவிக்கும் சொற்கள், சொற்பதங்கள் சில ஒழிக்கப் பட வேண்டும். ஏனென்றால், அந்தச் சொற்களின் உள்ளடக்கம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை அடிப்படியாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, வினைச் சொல்லான "வேலை செய்தல்", மற்றும் அதனோடு தொடர்புடைய பிற சொற்கள்": வேலை ஆள், வேலை நேரம், வேலைக்கான ஊதியம், வேலை நிறுத்தம், வேலையில்லாதவர், வேலை செய்யாதவர்.

வேலை செய்வது என்பது, இதுவரை மனித குலத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய ஆபத்து, அவமானம் ஆகும். முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பு, வேலை செய்தலை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவம் எனப்படும் இந்த அமைப்பு, வேலை செய்வதன் மேல் கட்டப் பட்டுள்ளது. அது ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள மனிதர்களின் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. மறு பக்கத்தில், வேலை செய்யாத மனிதர்களின் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லாவிட்டால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும். "ஏனென்றால்", (உற்பத்தி சாதனங்களின்) உரிமையாளர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள்: "வேலை செய்யாதவர்கள், சாப்பிட மாட்டார்கள்." மேலும், இலாபத்தை கணக்கிடுவதும், பாதுகாப்பதும் கூட "வேலை" என்று தான் அவர்கள் கூறுகின்றார்கள்.

வேலையில்லாதவர்கள், வேலையே செய்யாதவர்கள் என்று இரண்டு வகை உண்டு. அகராதியில் அவற்றிற்கு என்ன அர்த்தம் எழுதியிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். "வேலை செய்யாதவர்": வேலை இருந்தும் செய்ய மறுப்பவர். "வேலையில்லாதவர்": அவரது முயற்சிக்கு அப்பாற்பட்ட விதத்தில் வேலை செய்யும் வாய்ப்பற்றவர். வேலை செய்யாதவர்கள், சுரண்டல் காரர்கள், உழைப்பாளிகளின் உழைப்பில் வாழ்பவர்கள். வேலையில்லாதவர்கள் எனப்படுவோர் உழைக்கும் மக்கள், வேலை செய்யும் அனுமதி மறுக்கப் பட்டவர்கள், ஏனென்றால், அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்க முடியாது.

உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்கள், உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை தீர்மானித்துள்ளனர். தொழில் செய்யும் இடங்களையும் நிறுவியுள்ளனர். உழைப்பாளிகள் பட்டினி கிடந்தது சாகாமல், உயிர் பிழைப்பதற்கு போதுமான அளவு கூலியைப் பெறுகின்றனர். அது அவர்களது பிள்ளைகளின் போஷாக்கை நிவர்த்தி செய்யக் கூட போதுமானதல்ல. பாடசாலை செல்லும் பிள்ளைகள், அங்கே வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி படிக்கிறார்கள். தொழிலாளர்களை எவ்வாறு வேலை வாங்குவது என்று படிப்பதற்காக, முதலாளிகள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்.

வேலை செய்வது ஒரு சாபம். அது மனிதர்களை ஆன்மாவற்றவர்களாக, ஆத்மா அற்றவர்களாக்குகின்றது. வேலை செய்வதற்காக, ஒருவர் தனது அடையாளத்தையே இழக்கிறார். தவழுவது, சுத்துமாத்துகள் செய்வது, காட்டிக் கொடுப்பது, ஏமாற்றுவது, நேர்மையற்ற செயல் எல்லாவற்றையும் வேலைக்காக செய்கின்றீர்கள். உழைப்பாளிகளின் உழைப்பு, வேலை செய்யாத பணக்காரர்களுக்கு இலகுவான வாழ்க்கையை வழங்குகின்றது. உழைப்பாளிகளுக்கு அது ஒரு அவலத்தின் சுமை, பிறப்பிலிருந்து தொடரும் கெட்ட தலைவிதி. அது உழைப்பாளிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாழ்க்கையை தடுக்கின்றது.

வேலை செய்வது (மனித) வாழ்வுக்கு விரோதமானது. "நல்ல வேலையாள்" எனப்படுபவன், வாழ்விழந்த, களையிழந்த முகத்தைக் கொண்ட சுமை தூக்கும் விலங்கினம். எப்போது மனிதன் வாழ்வைப் புரிந்து கொள்கிறானோ, அன்றில் இருந்து வேலை செய்ய மாட்டான். நாளைக்கே ஒருவர், தான் வேலை செய்யும் முதலாளியை விட்டு விலத்திச் சென்று, வேலை இன்றி தெருவில் நிற்க வேண்டுமென்று நான் கூறவில்லை. யாராவது அவ்வாறு நிர்ப்பந்திக்கப் பட்டாலும், அது ஒரு துரதிர்ஷ்டமாகும். பல சந்தர்ப்பங்களில், வேலையின்றி இருப்பவர்கள், வேலை செய்யும் தோழர்களின் செலவில் தங்கியிருக்கின்றனர். நேர்மையான குடிமக்கள் கூறுவதைப் போல, ஒரு முதலாளியினால் சுரண்டப் படுவதை தவிர்த்து, (அவனிடமே) திருடவும், கொள்ளையிடவும் தெரிந்தால் நல்லது. அதைச் செய்யுங்கள். ஆனால், அதனால் ஒரு மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள்.

வேலை செய்வது ஒரு சமூக நோய். (இன்றுள்ள) சமூகம் எமது வாழ்க்கைக்கு விரோதமானது, அதனை அழிப்பதன் மூலம் மட்டுமே, அதாவது புரட்சிகளை நடத்துவதன் மூலமே, வேலை மறைந்து விடும். அப்போது மட்டுமே (நிஜமான) வாழ்க்கை உதயமாகும். முழுமையான, செழுமையான வாழ்வு கிடைக்கும். அங்கே அழைத்து வரப்படும் ஒவ்வொருவரும், தமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்வார்கள். அந்த மக்கள் இயக்கத்தில், ஒவ்வொருவரும் உற்பத்தியாளர் தான். அவர்கள் விசேடமாக, அவசியமான, அழகான, தரமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள். அப்பொழுது, தொழிலாளிகள் என்ற வகை மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் மனிதனாக மட்டுமே இருப்பார்கள். மனிதனது வாழ்வாதாரங்களுக்காக, சொந்த தேவைகளுக்காக, சோர்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவிதமான உறவுகளுக்குமான காரண காரியங்களுக்காகவும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அப்போது அங்கே வாழ்க்கை இருக்கும், அற்புதமான வாழ்க்கை, தூய்மையானதும் உலகத்தரமானதாகவும் இருக்கும்.

உற்பத்தி செய்யும் வலுவானது, மனிதர்களின் வாழ்வில் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த உழைப்பானது, நேரம், இடம், சம்பளம், பசி போன்றவற்றால் நிர்ப்பந்திக்கப் பட்ட வேலையாக இராது. ஒட்டுண்ணிகளால் அந்த உழைப்பு சுரண்டப் படாது. உற்பத்தி செய்வது, வாழ்வின் மகிழ்ச்சியான அனுபவம், வேலை செய்வது வாழ்வின் வேதனையான அனுபவம். தற்கால மாசடைந்த சமூக உறவுகளில், அத்தகைய வாழ்வை உருவாக்க முடியாது. நமது காலத்தில் எல்லா வகையான தொழில்களும் குற்றமாகும். எமக்கு வேலை வேண்டுமென்பதற்காக முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறோம். இலாபம் சம்பாதிப்பதிலும், சுரண்டுவதிலும் கூட்டுச் சேர்கின்றோம். ஏமாற்றுவதில், பொய்யுரைப்பதில், நஞ்சூட்டுவதில், மனித குலத்தை படுகொலை செய்வதில், யுத்தத்திற்கு தயார்படுத்துவதில், எல்லாவற்றிலும் (முதலாளிகளுடன்) கூட நின்று உதவுகின்றோம்.

இவற்றை எல்லாம் நாங்கள் புரிந்து கொண்டால், எமது வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் கிடைக்கும். நாம் எமது உற்பத்தி திறனை உணர்ந்து கொண்டால், இந்த வில்லத்தனமான, கிரிமினல் சமுதாயத்தை தகர்க்க முனைவோம். ஆனால், பசியால் சாகும் நிலை வராமல் தடுப்பதற்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை நிர்ப்பந்திக்குமேயானால்,இந்த வேலையின் ஊடாக, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். நாங்கள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்காக வேலை செய்யவில்லை என்றால், மனிதநேயத்தின் வீழ்ச்சியை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும். அதனால், நாம் ஒவ்வொரு முதலாளித்துவ நிறுவனத்தையும் வேண்டுமென்றே நாசப் படுத்துவோம். ஒவ்வொரு முதலாளியும் எமது செயலால் எதையாவது இழக்க வேண்டும். எழுச்சியுற்ற இளைஞர்களாகிய நாம், மூலப்பொருட்கள், இயந்திரங்கள், விளைபொருட்களை பாவனைக்கு உதவாதவையாக ஆக்க வேண்டும். எந்த நிமிடமும், இயந்திரங்களின் பாகங்கள் கழன்று போகும், கத்திகளும் கத்திரிக் கோள்களும் உடைந்து விடும், மிகவும் அத்தியாவசியமான கருவிகள் மறைந்து விடும். இந்த செய்முறை விளக்கங்களை, வழிவகைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்.

முதலாளித்துவத்தினால் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால், நாங்கள் முதலாளித்துவத்தை அழித்து விட வேண்டும். நாங்கள், அடிமைகள் போன்று வேலை செய்ய விரும்பவில்லை. நாங்கள், சுதந்திரமான மனிதர்களையே உருவாக்க விரும்புகின்றோம். உழைப்பாளிகளின் உழைப்பினால் தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் வேலையாட்களாக வாழ விரும்பவில்லை, வேலை செய்வதை நாசமாக்குவோம்.

********************************************
Herman Schuurman (1897 – 1991), "வேலை செய்வது குற்றம்" (Werken is Misdaad) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதியவர். "Mokergroep" என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். (Moker என்ற சொல், நெதர்லாந்து பாட்டாளிகளின் மொழியில் முஷ்டியைக் குறிக்கும்.) புரட்சியில் ஈடுபாடு கொண்ட இளம் பாட்டாளிகளை அந்த அமைப்பு கவர்ந்திருந்தது. 1923 முதல் 1928 வரையில், அந்த அமைப்பு நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள, De Dolle Hond என்ற பதிப்பகம், 1999 ம் ஆண்டு, அந்த துண்டுப் பிரசுரத்தை மறுபதிப்புச் செய்தது.

பதிப்பகத்தின் முகவரி:

De Dolle Hond,
p/a Koffieshop Bollox,
1ste Schinkelstraat 14 – 16
1075 Amsterdam


டச்சு மொழியில் எழுதப்பட்ட மூலப் பிரதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம்: Werken is misdaad