Monday, March 05, 2012

முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

முற்குறிப்பு: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நெதர்லாந்து நாட்டில் தீவிரமான சோஷலிச அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சியர்கள் போன்று, அவர்களும் கம்யூனிச சமுதாயம் அமைப்பதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் தம்மை அராஜகவாதிகள் (அரசு எதிர்ப்பாளர்கள்) என்று அழைத்துக் கொள்வதையே பெரிதும் விரும்பினார்கள். ஹெர்மன் ஸ்ஹியூர்மன் (Herman Schuurman) என்ற சோஷலிசப் புரட்சியாளர் எழுதி வெளியிட்ட (1924), "வேலை செய்வது குற்றம்" என்ற துண்டுப்பிரசுரம் அண்மையில் சில இடதுசாரி ஆர்வலர்களால் மறுபதிப்புச் செய்யப் பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். பிரபலமான மார்க்சிய அறிஞர்கள் தவிர்ந்த, பிற இடதுசாரி புத்திஜீவிகளின் எழுத்துக்கள், தமிழில் மிகவும் அரிதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி இது. நமது அன்புக்குரிய தோழர்கள், இத்தகைய வெளிவராத ஐரோப்பிய புரட்சிகர சிந்தனைகளை, தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
_______________________________________________________________


வேலை செய்வது குற்றம்
நமது மொழியில் வழமையாக பாவிக்கும் சொற்கள், சொற்பதங்கள் சில ஒழிக்கப் பட வேண்டும். ஏனென்றால், அந்தச் சொற்களின் உள்ளடக்கம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை அடிப்படியாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, வினைச் சொல்லான "வேலை செய்தல்", மற்றும் அதனோடு தொடர்புடைய பிற சொற்கள்": வேலை ஆள், வேலை நேரம், வேலைக்கான ஊதியம், வேலை நிறுத்தம், வேலையில்லாதவர், வேலை செய்யாதவர்.

வேலை செய்வது என்பது, இதுவரை மனித குலத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய ஆபத்து, அவமானம் ஆகும். முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பு, வேலை செய்தலை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவம் எனப்படும் இந்த அமைப்பு, வேலை செய்வதன் மேல் கட்டப் பட்டுள்ளது. அது ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள மனிதர்களின் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. மறு பக்கத்தில், வேலை செய்யாத மனிதர்களின் வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அல்லாவிட்டால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும். "ஏனென்றால்", (உற்பத்தி சாதனங்களின்) உரிமையாளர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள்: "வேலை செய்யாதவர்கள், சாப்பிட மாட்டார்கள்." மேலும், இலாபத்தை கணக்கிடுவதும், பாதுகாப்பதும் கூட "வேலை" என்று தான் அவர்கள் கூறுகின்றார்கள்.

வேலையில்லாதவர்கள், வேலையே செய்யாதவர்கள் என்று இரண்டு வகை உண்டு. அகராதியில் அவற்றிற்கு என்ன அர்த்தம் எழுதியிருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். "வேலை செய்யாதவர்": வேலை இருந்தும் செய்ய மறுப்பவர். "வேலையில்லாதவர்": அவரது முயற்சிக்கு அப்பாற்பட்ட விதத்தில் வேலை செய்யும் வாய்ப்பற்றவர். வேலை செய்யாதவர்கள், சுரண்டல் காரர்கள், உழைப்பாளிகளின் உழைப்பில் வாழ்பவர்கள். வேலையில்லாதவர்கள் எனப்படுவோர் உழைக்கும் மக்கள், வேலை செய்யும் அனுமதி மறுக்கப் பட்டவர்கள், ஏனென்றால், அவர்களை வைத்து இலாபம் சம்பாதிக்க முடியாது.

உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர்கள், உழைப்பாளிகள் வேலை செய்ய வேண்டிய நேரத்தை தீர்மானித்துள்ளனர். தொழில் செய்யும் இடங்களையும் நிறுவியுள்ளனர். உழைப்பாளிகள் பட்டினி கிடந்தது சாகாமல், உயிர் பிழைப்பதற்கு போதுமான அளவு கூலியைப் பெறுகின்றனர். அது அவர்களது பிள்ளைகளின் போஷாக்கை நிவர்த்தி செய்யக் கூட போதுமானதல்ல. பாடசாலை செல்லும் பிள்ளைகள், அங்கே வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி படிக்கிறார்கள். தொழிலாளர்களை எவ்வாறு வேலை வாங்குவது என்று படிப்பதற்காக, முதலாளிகள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள்.

வேலை செய்வது ஒரு சாபம். அது மனிதர்களை ஆன்மாவற்றவர்களாக, ஆத்மா அற்றவர்களாக்குகின்றது. வேலை செய்வதற்காக, ஒருவர் தனது அடையாளத்தையே இழக்கிறார். தவழுவது, சுத்துமாத்துகள் செய்வது, காட்டிக் கொடுப்பது, ஏமாற்றுவது, நேர்மையற்ற செயல் எல்லாவற்றையும் வேலைக்காக செய்கின்றீர்கள். உழைப்பாளிகளின் உழைப்பு, வேலை செய்யாத பணக்காரர்களுக்கு இலகுவான வாழ்க்கையை வழங்குகின்றது. உழைப்பாளிகளுக்கு அது ஒரு அவலத்தின் சுமை, பிறப்பிலிருந்து தொடரும் கெட்ட தலைவிதி. அது உழைப்பாளிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாழ்க்கையை தடுக்கின்றது.

வேலை செய்வது (மனித) வாழ்வுக்கு விரோதமானது. "நல்ல வேலையாள்" எனப்படுபவன், வாழ்விழந்த, களையிழந்த முகத்தைக் கொண்ட சுமை தூக்கும் விலங்கினம். எப்போது மனிதன் வாழ்வைப் புரிந்து கொள்கிறானோ, அன்றில் இருந்து வேலை செய்ய மாட்டான். நாளைக்கே ஒருவர், தான் வேலை செய்யும் முதலாளியை விட்டு விலத்திச் சென்று, வேலை இன்றி தெருவில் நிற்க வேண்டுமென்று நான் கூறவில்லை. யாராவது அவ்வாறு நிர்ப்பந்திக்கப் பட்டாலும், அது ஒரு துரதிர்ஷ்டமாகும். பல சந்தர்ப்பங்களில், வேலையின்றி இருப்பவர்கள், வேலை செய்யும் தோழர்களின் செலவில் தங்கியிருக்கின்றனர். நேர்மையான குடிமக்கள் கூறுவதைப் போல, ஒரு முதலாளியினால் சுரண்டப் படுவதை தவிர்த்து, (அவனிடமே) திருடவும், கொள்ளையிடவும் தெரிந்தால் நல்லது. அதைச் செய்யுங்கள். ஆனால், அதனால் ஒரு மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள்.

வேலை செய்வது ஒரு சமூக நோய். (இன்றுள்ள) சமூகம் எமது வாழ்க்கைக்கு விரோதமானது, அதனை அழிப்பதன் மூலம் மட்டுமே, அதாவது புரட்சிகளை நடத்துவதன் மூலமே, வேலை மறைந்து விடும். அப்போது மட்டுமே (நிஜமான) வாழ்க்கை உதயமாகும். முழுமையான, செழுமையான வாழ்வு கிடைக்கும். அங்கே அழைத்து வரப்படும் ஒவ்வொருவரும், தமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்வார்கள். அந்த மக்கள் இயக்கத்தில், ஒவ்வொருவரும் உற்பத்தியாளர் தான். அவர்கள் விசேடமாக, அவசியமான, அழகான, தரமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள். அப்பொழுது, தொழிலாளிகள் என்ற வகை மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் மனிதனாக மட்டுமே இருப்பார்கள். மனிதனது வாழ்வாதாரங்களுக்காக, சொந்த தேவைகளுக்காக, சோர்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவிதமான உறவுகளுக்குமான காரண காரியங்களுக்காகவும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அப்போது அங்கே வாழ்க்கை இருக்கும், அற்புதமான வாழ்க்கை, தூய்மையானதும் உலகத்தரமானதாகவும் இருக்கும்.

உற்பத்தி செய்யும் வலுவானது, மனிதர்களின் வாழ்வில் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த உழைப்பானது, நேரம், இடம், சம்பளம், பசி போன்றவற்றால் நிர்ப்பந்திக்கப் பட்ட வேலையாக இராது. ஒட்டுண்ணிகளால் அந்த உழைப்பு சுரண்டப் படாது. உற்பத்தி செய்வது, வாழ்வின் மகிழ்ச்சியான அனுபவம், வேலை செய்வது வாழ்வின் வேதனையான அனுபவம். தற்கால மாசடைந்த சமூக உறவுகளில், அத்தகைய வாழ்வை உருவாக்க முடியாது. நமது காலத்தில் எல்லா வகையான தொழில்களும் குற்றமாகும். எமக்கு வேலை வேண்டுமென்பதற்காக முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறோம். இலாபம் சம்பாதிப்பதிலும், சுரண்டுவதிலும் கூட்டுச் சேர்கின்றோம். ஏமாற்றுவதில், பொய்யுரைப்பதில், நஞ்சூட்டுவதில், மனித குலத்தை படுகொலை செய்வதில், யுத்தத்திற்கு தயார்படுத்துவதில், எல்லாவற்றிலும் (முதலாளிகளுடன்) கூட நின்று உதவுகின்றோம்.

இவற்றை எல்லாம் நாங்கள் புரிந்து கொண்டால், எமது வாழ்க்கைக்கு வேறு அர்த்தம் கிடைக்கும். நாம் எமது உற்பத்தி திறனை உணர்ந்து கொண்டால், இந்த வில்லத்தனமான, கிரிமினல் சமுதாயத்தை தகர்க்க முனைவோம். ஆனால், பசியால் சாகும் நிலை வராமல் தடுப்பதற்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை நிர்ப்பந்திக்குமேயானால்,இந்த வேலையின் ஊடாக, முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். நாங்கள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்காக வேலை செய்யவில்லை என்றால், மனிதநேயத்தின் வீழ்ச்சியை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமாகும். அதனால், நாம் ஒவ்வொரு முதலாளித்துவ நிறுவனத்தையும் வேண்டுமென்றே நாசப் படுத்துவோம். ஒவ்வொரு முதலாளியும் எமது செயலால் எதையாவது இழக்க வேண்டும். எழுச்சியுற்ற இளைஞர்களாகிய நாம், மூலப்பொருட்கள், இயந்திரங்கள், விளைபொருட்களை பாவனைக்கு உதவாதவையாக ஆக்க வேண்டும். எந்த நிமிடமும், இயந்திரங்களின் பாகங்கள் கழன்று போகும், கத்திகளும் கத்திரிக் கோள்களும் உடைந்து விடும், மிகவும் அத்தியாவசியமான கருவிகள் மறைந்து விடும். இந்த செய்முறை விளக்கங்களை, வழிவகைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்.

முதலாளித்துவத்தினால் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால், நாங்கள் முதலாளித்துவத்தை அழித்து விட வேண்டும். நாங்கள், அடிமைகள் போன்று வேலை செய்ய விரும்பவில்லை. நாங்கள், சுதந்திரமான மனிதர்களையே உருவாக்க விரும்புகின்றோம். உழைப்பாளிகளின் உழைப்பினால் தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் வேலையாட்களாக வாழ விரும்பவில்லை, வேலை செய்வதை நாசமாக்குவோம்.

********************************************
Herman Schuurman (1897 – 1991), "வேலை செய்வது குற்றம்" (Werken is Misdaad) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதியவர். "Mokergroep" என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். (Moker என்ற சொல், நெதர்லாந்து பாட்டாளிகளின் மொழியில் முஷ்டியைக் குறிக்கும்.) புரட்சியில் ஈடுபாடு கொண்ட இளம் பாட்டாளிகளை அந்த அமைப்பு கவர்ந்திருந்தது. 1923 முதல் 1928 வரையில், அந்த அமைப்பு நெதர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள, De Dolle Hond என்ற பதிப்பகம், 1999 ம் ஆண்டு, அந்த துண்டுப் பிரசுரத்தை மறுபதிப்புச் செய்தது.

பதிப்பகத்தின் முகவரி:

De Dolle Hond,
p/a Koffieshop Bollox,
1ste Schinkelstraat 14 – 16
1075 Amsterdam


டச்சு மொழியில் எழுதப்பட்ட மூலப் பிரதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம்: Werken is misdaad

6 comments:

மதுரை அழகு said...

என்னைப் போல் 12 மணி நேர வேலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு ஆறுதலான பதிவு!

சிவக்குமார் said...

இது வெறும் துண்டறிக்கையா ? ஒரு சிறுநூலாக எழுதுமளவுக்கு கருத்துச் செறிவுடையதாகத் தோன்றுகிறது. போராடுவதற்கு அறைகூவும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

//பிரபலமான மார்க்சிய அறிஞர்கள் தவிர்ந்த, பிற இடதுசாரி புத்திஜீவிகளின் எழுத்துக்கள், தமிழில் மிகவும் அரிதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சி இது.//

தொடர்ந்து எழுதுங்கள்.

சிவக்குமார் said...

கலையரசன் எனக்கொரு ஐயம். இப்போது தொழிலாளிகள் என்று பார்த்தால் அவர்கள், பாட்டாளி வர்க்க அதிகாரம், விடுதலை, ஆட்சி பேசுவதற்கென்று ஒரு நேர்மை இருக்கிறது. ஆனால் தற்போதுள்ள சூழலில எண்ணிக்கையில் பாட்டாளிகளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களில் வேலைக்குச் செல்பவர்கள் தவிர ஒரு பிரிவினர் சொந்தத் தொழில் செய்பவர்கள், அதாவது சிறு முதலாளிகள். பெருமுதலாளிகள் சில ஆயிரம், சில நூறு பேர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனரென்றால், சிறுமுதலாளிகள் 5 அல்லது 10 பேர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்களல்லவா ?(எடுத்துக்காட்டாக தேநீர்க்கடைகள், உணவகங்கள் போன்றவற்றை நடத்துகிறவர்கள்) இந்த நிலையில் சிறுமுதலாளியாக இருப்பவன் ஒரு மார்க்சியனாக இருக்க முடியுமா ? இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? அல்லது கம்யூனிஸ்ட் எனபதற்கான தகுதியாவது அவனுக்கு இருக்கிறதா ? முதலாளித்துவம் எனற வரையறைக்குள் சிறுமுதலாளிகளும் வருகிறார்கள் இல்லையா ? இது போன்ற அற்பமான கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை இவை அங்கங்கே வைக்கப்படுகிறது பின்னூட்டங்களாக. அதனால்தான் கேட்டேன்.

Kalaiyarasan said...

//பெருமுதலாளிகள் சில ஆயிரம், சில நூறு பேர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனரென்றால், சிறுமுதலாளிகள் 5 அல்லது 10 பேர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்களல்லவா ?(எடுத்துக்காட்டாக தேநீர்க்கடைகள், உணவகங்கள் போன்றவற்றை நடத்துகிறவர்கள்) இந்த நிலையில் சிறுமுதலாளியாக இருப்பவன் ஒரு மார்க்சியனாக இருக்க முடியுமா ? இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? அல்லது கம்யூனிஸ்ட் எனபதற்கான தகுதியாவது அவனுக்கு இருக்கிறதா ? முதலாளித்துவம் எனற வரையறைக்குள் சிறுமுதலாளிகளும் வருகிறார்கள் இல்லையா ? //

முதலாளித்துவம் என்பது, மூலதனம் அதிகம் வைத்திருப்போரின் பொருளாதாரம். அதற்குள் சிறு முதலாளிகள் அடங்க மாட்டார்கள். முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பில், அவர்களுடையவை ஒன்றில் "தனிநபர் கம்பெனி, அல்லது சிறு/நடுத்தர கம்பனி" என்று வகைப் படுத்துவார்கள்.

சிறு முதலாளிகளின் மனதிற்குள் தாங்களும் ஒரு முதலாளி என்றொரு எண்ணம் இருக்கும். ஆனால், அரசும், பெரு முதலாளிகளும் அவர்களை கணக்கு எடுப்பதில்லை. அரசு அவர்களிடம் அதிக வரி அறவிடுகின்றது. பெரு முதலாளிகள் அவர்களை பிடித்து விழுங்க காத்திருக்கிறார்கள்.
முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பில், சிறு வணிகர் கூட தன்னை ஒரு "முதலாளியாக" கருதிக் கொள்வார். 5 , 10 பேர்களை வைத்து வேலை வாங்கினாலும், அவர்களின் உழைப்பை எவ்வளவு தான் சுரண்டினாலும், பெரிய முதலாளியாக வரும் பேராசை நிறைவேறப் போவதில்லை. ஏனெனில், பெரிய மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளுடன் இவர்களை ஒப்பிட்டால், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தெரியும். அந்த உண்மையை இவர்கள் உணராதது மட்டுமல்ல, இறுதியில் பெரிய முதலாளியின் வலைக்குள் விழுந்து விடுவார்கள். 5 ,10 பேர்களை சுரண்டி சேர்த்த பணம், இறுதியில் பெரிய முதலாளிகளின் காலடியில் கொட்டப் படுகின்றது.

மார்க்ஸியம் இவர்களை குட்டி பூர்ஷுவா வர்க்கம் என்று அழைக்கின்றது. சிறு முதலாளிகளை அல்லது சிறு வணிகர்களை வர்க்க எதிரிகளாக பார்ப்பது தவறு. ஏசு நாதர் கூறியது போல, "தாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை அறியாதவர்கள்". அவர்களை பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் வென்றெடுப்பது அவசியமானது. ஒரு சிறு வணிகர்/ சிறு முதலாளி மார்க்சியவாதியாக இருக்கலாம், இருக்கிறார்கள். ஆனால், அவர் தொழிலாளிகளை எவ்வாறு நடத்துகின்றார் என்பது அவதானத்திற்குரியது. அதாவது தொழிலாளர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய சம்பளத்தை கொடுக்கிறாரா? தொழிலாளர் நல சட்டங்களுக்கு மதிப்பளிக்கிறாரா? இலாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு (போனஸ்) கொடுக்கிறாரா? சோஷலிச நாடுகளில் கூட சிறு வணிகர்கள், தொழில் முனைவோர் (சிறு முதலாளிகள்) அனுமதிக்கப் பட்டனர்.

சிவக்குமார் said...

குட்டி பூர்ஷுவா வர்க்கம் - என்பதற்கான வரையறையையும் தெரியாமல் இருந்தேன். தற்போது விடை கிடைத்தது. பொறுமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி கலையரசன்.

ramalingam said...

Thanks