Saturday, August 15, 2015

எளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின் கதை


நான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ஓர் இடதுசாரி - அனார்க்கிஸ்ட் நண்பருடன் தொடர்பேற்பட்டது. பூர்வீக டச்சுக்காரரான அவர், தமிழ் அகதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இலங்கைக்கும் இரண்டு மூன்று தடவைகள் சென்று வந்துள்ளார். தேர்தல் கண்காணிப்பாளராக கடமையாற்றி உள்ளார்.

எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய மனிதர்களில் அவரும் ஒருவர். உலகில், நாட்டில் நடக்கும் எல்லா விடயத்திற்கும் கோட்பாட்டு விளக்கம் தருவார். அவரது தெளிவான அரசியல் கண்ணோட்டமும், வர்க்கப் பார்வையும் எனது எழுத்துக்களில் பல இடங்களில் பிரதிபலித்துள்ளன. அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். குறைந்தது மூன்று வருடங்களாவது, எனது தஞ்சமனு கோரிக்கைக்கு உதவியது மட்டுமல்லாது, அரசியல் கற்பித்த ஆசானாகவும் இருந்தார்.

மேற்கு ஐரோப்பாவில், எல்லோரிடமும் "சொந்த வீடு, சொந்த வாகனம்" இருக்கும் என்று, சாதாரண தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் அதற்கு மாறானது. எனது இடதுசாரி நண்பர் போன்று பலர், தாம் நம்பும் கொள்கைக்கு ஏற்றவாறு வாழ்கிறார்கள். வசிப்பதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என்று இப்போதும் வாடகை வீட்டில் வாழ்கிறார்கள். வாகனமாக சைக்கிள் மட்டுமே பாவிக்கிறார்கள்.

ஒரு முதலாளித்துவ நாட்டில், மனித வாழ்க்கையில் தேவையான அனைத்து அம்சங்களும் முதலாளிகளின் இலாப நோக்கை இலக்காக கொண்டே நடக்கின்றன. "சொந்த வீடு, சொந்த வாகனம்" எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

எனது டச்சு நண்பரின் (குடும்பப்) பெயர் "கொக்". அப்போது நெதர்லாந்து பிரதமராக இருந்தவரின் பெயரும் (விம்) கொக் தான். அந்தக் கொக் பிரதமர். இந்தக் கொக் தீவிர அரச எதிர்ப்பாளர். ஒவ்வொரு வருடமும், இராணியின் தினம் என்ற பெயரில் டச்சு தேசியப் பெருமை பேசும் தினம் கொண்டாடப்படும் நாட்களில் விடுமுறையில் வெளிநாட்டுக்கு சென்று விடுவார். அப்போது நெதர்லாந்து இராணியாக இருந்தவர் பெயாத்ரிக்ஸ். "அவள் ஒரு கொள்ளைக்காரி. எனக்கு இராணி அல்ல!" என்று சொல்வார்.

கொக் பல வருடங்களாக, சோஷலிச பங்கீட்டு குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். அதாவது, ஒவ்வொரு மாடியிலும் உள்ள வீடுகளில், ஆளுக்கொரு அறை தனியாக வாடகைக்கு எடுத்திருப்பார்கள். சமையலறை, குளியலறை, கழிப்பறை எல்லாம் மூன்று பேருக்கு பொதுவாக இருக்கும். முன்பு சோவியத் யூனியனில் புரட்சிக்குப் பின்னர் அவ்வாறான பங்கீட்டு வீட்டுத் திட்டம் பிரபலமடைந்தது. இன்றைக்கும் நெதர்லாந்தில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.

முன்பு அந்த பங்கீட்டு குடியிருப்புகள் உண்மையிலேயே சோஷலிச கூட்டுறவு அடிப்படையில் இயங்கின. தற்போது தனியார் நிறுவனங்களாகி விட்டன. அனார்க்கிசத்தின் எதிர்மறையான விளைவுகளில் இதுவும் ஒன்று. உதாரணத்திற்கு, XS4ALL என்ற இணைய நிறுவனம் அனார்க்கிஸ்டுகளால் ஆரம்பிக்கப் பட்டது. 

அனைவருக்கும் இணைய சேவை செய்து கொடுப்பது என்ற தாரக மந்திரத்தை கூறி ஆரம்பிக்கப் பட்டது. இன்று அது பல இலட்சம் யூரோ இலாபம் சம்பாதிக்கும் பெரிய வர்த்தக நிறுவனமாகி விட்டது. ஆனால், வணிகத்தில் ஈடுபட்டாலும் பிற முதலாளித்துவ நிறுவனங்கள் மாதிரி முறைகேடுகள் செய்வதில்லை. உழைப்பாளர்களை சுரண்டுவதில்லை. அது வேறு விடயம். எனது நண்பரின் கதைக்கு வருவோம்.

ஆரம்ப காலங்களில், அந்த நண்பரின் எளிமையான வாழ்க்கை முறை என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அப்போது நான் வதிவிட அனுமதி கூட பெற்றிராத அகதி. நிச்சயமற்ற எதிர்காலம் எதைப் பற்றியும் தீர்மானிக்க விடாமல் தடுத்தது. என்னுடன் கூட இருந்த அகதிகள்,வதிவிட அனுமதி கிடைத்தவுடன் என்னென்ன செய்வோம் என்று கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய சூழலில் வாழ்ந்த எனக்கு, ஒரு பூர்வீக டச்சுகாரரின் எளிமையான வாழ்க்கை ஆர்வத்தை தூண்டியதில் வியப்பில்லை.

அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அது மட்டும் தான் அவரது வாகனம். கடைக்கு, வேலைக்கு சென்று வருவது அந்த சைக்கிளில் தான். எனக்கு அறிமுகமான, கடந்த பத்து வருடங்களாக அவர் சைக்கிளில் செல்வதை பார்த்திருக்கிறேன். கார் வைத்திருப்பது பற்றிய கதை எழுந்தால், சுற்றுச் சூழல் மாசடைவது முதல், பெட்ரோல் அரசியல் வரையில் நீண்ட விரிவுரை ஆற்றுவார். மக்கள் ஒரே நாளில் மாற மாட்டார்கள். இப்படித்தான் என்று நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார்.

நெதர்லாந்தில் அனார்க்கிஸ்ட் இடதுசாரிகள் பலர் சைக்கிள் மட்டுமே பாவிக்கின்றனர். குடும்பகாரர்களும் அப்படித்தான். சிறு குழந்தைகள் இருந்தால், அவர்களை ஏற்றிச் செல்வதற்கு "Bakfiets" வைத்திருப்பார்கள். அது கிட்டத்தட்ட ரிக்சா வண்டி மாதிரி இருக்கும். சைக்கிளின் முன்பக்கம் மரத்தால் செய்த பெட்டி ஒன்றிருக்கும். 

ஒரு மத நம்பிக்கை மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் தான் எனது நண்பரும். ஆனால், எல்லாவிதமான கிறிஸ்தவ மத அடையாளங்களையும் கவனமாக தவிர்ப்பார். நெதர்லாந்தில் ஒரு காலத்தில் சமூகப் பிரிவினைகள் தீவிரமாக இருந்தன. அதாவது, கத்தோலிக்க குடும்பங்கள், புரட்டஸ்தாந்து குடும்பங்கள் வெவ்வேறு சமூகங்களில் வாழ்ந்தன. இரண்டுக்கும் இடையில் தொடர்புகள் குறைவாக இருக்கும். அது போன்று இடதுசாரிகள், நாஸ்திகர்கள் தனியான சமூகப் பிரிவு. அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது. இவர்களுக்கு அவர்களைப் பிடிக்காது.

இந்த நாட்டில், கல்வி, வேலை போன்றவற்றைக் கூட, முடிந்தளவு கொள்கை அடிப்படையில் தெரிவு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, தீவிர புரட்டஸ்தாந்து குடும்பப் பெற்றோர், தமது பிள்ளைகள் மதுபான சாலையில் வேலை செய்வதை விரும்புவதில்லை. அதே மாதிரி இடதுசாரிகளுக்கும் சில தெரிவுகள் உள்ளன. எனது நண்பர் வாகெனிங்கன் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்து பட்டம் பெற்றவர். அந்தக் காலத்தில், விவசாயம் இடதுசாரிகளுக்கு மிகவும் விருப்பமான கல்விகளில் ஒன்று.

பல்கலைக்கழக பட்டதாரியாக இருந்தாலும், பிறரைப் போன்று தனியார் நிறுவனம் ஒன்றில் கொழுத்த சம்பளத்திற்கு வேலை செய்யும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவு அரசாங்க நிறுவனம் ஒன்றில் வேலை தேடி இருக்கிறார். அது கிடைக்கவில்லை என்றதும், இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அவர் ஒரு தடவை அகதி முகாம் ஒன்றில் வேலை செய்யும் பொழுது, எனக்கு அறிமுகமான தமிழர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போது அந்தத் தமிழர், "கலையரசன் ஒரு கம்யூனிஸ்ட் தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். "ஆமாம், தெரியும்" என்று புன்சிரிப்புடன் பதிலளித்திருக்கிறார். "அதனால் தான் எமக்கிடையிலான புரிந்துணர்வு அதிகம்" என்றும் கூறி உள்ளார். ஆனால், அவர் என்னையும் தன்னைப் போன்று "அனார்க்கிஸ்ட்" என்று தான் அழைப்பார். இலங்கை அரசியல் சம்பந்தமான எந்த விடயத்தையும் என்னிடம் கேட்டு உறுதிப் படுத்திய பின்னர் தான், அதன் தன்மை குறித்து தீர்மானமான முடிவெடுப்பார். 

இங்கே முக்கியமானது சமூகம் தொடர்பான வர்க்கப் பார்வை. அது பெரும்பாலான தமிழர்களிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். அப்போது என்னிடம் பூரணமான அரசியல் தெளிவு இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல தடவைகள், (தமிழ்) தேசியவாதக் கருத்துக்களை கூறி இருக்கிறேன். அப்போதெல்லாம், எது தேசியவாதம், எது வர்க்க சிந்தனை என்று திருத்தி விடுவார்.

16 - 17 ஜூன் 1997 அன்று, ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிகப்பெரிய உச்சி மகாநாடு நடைபெற்றது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருமளவு இடதுசாரி ஆர்வலர்கள் ஒன்று திரண்டனர். 

கம்யூனிஸ்ட் கட்சிகள், அனார்க்கிஸ்ட் அமைப்புகள், சோஷலிஸ்ட் கட்சிகள், சூழலிய வாதிகள் மற்றும் பல உதிரிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தது ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டதாக பொலிஸ் அறிக்கை தெரிவித்தது. ஆம்ஸ்டர்டாம் நகரமே ஸ்தம்பித்து விட்டது. பல மணிநேரம் எந்த வாகனமும் ஓடவில்லை.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னரான காலம் அது. "இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் பலவீனமடைந்து, அழிந்து விட்டதாக நாங்கள் கருதினோம். ஆனால், ஐரோப்பிய அளவில் பார்த்தால் அவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகம். மிகவும் பலமாக இருக்கின்றனர்." என்று வெகுஜன ஊடகங்கள் புலம்பிக் கொண்டிருந்தன. நானும் அடுத்த நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய கட்டுரை ஒன்றை, இலங்கையில் வெளிவந்த "சரிநிகர்" பத்திரிகைக்கு எழுதி அனுப்பி இருந்தேன்.

எனது டச்சு நண்பரான கொக் கூட ஊர்வலத்திற்கு சென்றிருந்தார். அந்த இடத்தில் பொலிஸ் அடக்குமுறை தீவிரமாக இருந்தது. குறிப்பாக அனார்க்கிஸ்ட் குழுக்கள் பொலிசாரால் சுற்றி வளைக்கப் பட்டன. கறுப்புச் சட்டை (அனார்கிஸ்டுகளின் நிறம்) அணிந்திருந்த எல்லோரையும் கைது செய்தார்கள். அதற்குள் எனது நண்பரும் ஒருவர். அன்று அவரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார். 

அவரை ஒரு நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து, அடிக்காத குறையாக கடுமையான விசாரணை நடத்தி இருந்தார்கள். உடல் ரீதியான சித்திரவதை செய்யவில்லையே தவிர, மனத் தளர்ச்சி ஏற்படும் வகையில் மறைமுகமான சித்திரவதை செய்தார்கள். பத்துப் பதினைந்து பேரை ஒரே கூண்டுக்குள் அடைப்பது. உணவு, நீராகாரம் கொடுக்க மறுப்பது, மிரட்டல்கள் இது போன்ற பல அத்துமீறல்கள் நடந்துள்ளன.

கொக் அன்று தான் பட்ட துன்பங்களை, பின்னர் ஒரு கட்டுரையாக எழுதி இருந்தார். அதை எனக்கு வாசிக்கத் தந்தார். சிறிலங்காவில் நடக்குமளவிற்கு சித்திரவதைகள் இல்லாவிட்டாலும், "அமைதியாக" இருக்கும் மேற்கத்திய "ஜனநாயக" நாடான நெதர்லாந்தில் இவை பெரிய விடயங்கள் தான் என்றார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்த படியால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட யாரும் அடையாள அட்டையோ, பிற ஆவணங்களோ எடுத்துச் செல்லவில்லை. 

அதனால், பொலிஸ் அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்ய பெரும் சிரமப் பட்டது. தடுத்து வைக்கப் பட்ட பலர், வேண்டுமென்றே பெயர், விலாசம் பற்றிய விபரங்களை கொடுக்க மறுத்தார்கள். (நெதர்லாந்து சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறது.) இறுதியில், அவர்கள் எல்லோரும் அரசியல் கைதிகள் என்ற படியால், இரண்டொரு நாட்களில் எல்லோரையும் விடுதலை செய்து விட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தை திரும்பிப் பார்த்தால், நெஞ்சு கனக்கிறது.  அது ஒரு பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்பி வராது. தொண்ணூறுகளின் இறுதி வரையில், அரசு மக்களுக்கு சேவை செய்வதாக காட்டிக் கொண்டது. நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களுக்கு கூட, மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கொண்டிருந்தது. (அது இடதுசாரிகளின் பிரதானமான கோரிக்கையாக இருந்தது.) 

ஒரு தடவை, ஆம்ஸ்டர்டாம் நகர பொலிஸ் மா அதிபர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறினார்: "எமது பொலிஸ் பிரிவுக்குள் குடியேறிகள் பலர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், அவர்களைப் பிடிப்பது எங்களது வேலை அல்ல! அந்தப் பிரச்சினையை அரசாங்கம் தீர்த்துக் கொள்ள வேண்டும்!" பொதுவாகவே, பொலிஸ் யாரையும் தெருவில் மறித்து அடையாள அட்டை கேட்பதில்லை.  விபத்து போன்ற சில விதிவிலக்குகள் இருந்தன. ஆனால், 9/11 க்குப் பின்னரான காலப் பகுதியில் தான், அடையாள அட்டை பரிசோதிக்கும் சட்டம் வந்தது. 

ஒரு காலத்தில், நாட்டில் இருந்த அகதிகள், சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் பல்வேறு வகையான அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு அவற்றிற்கு நிதி வழங்கி வந்தது. அதனால்,இடதுசாரிகள் பலரும், தமது மனதுக்குப் பிடித்த தொழிலாக கருதி அவற்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எனது நண்பரும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசுகள், எல்லாவற்றையும் நிறுத்தி விட்டன. தஞ்சமனு மறுக்கப்பட்ட அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், பலவந்தமாக பிடித்து திருப்பி அனுப்பப் பட்டனர்.

தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வந்த நிதிகள் ஒரேயடியாக நிறுத்தப் பட்டன. அதனால் அவற்றில் வேலை செய்து வந்த டச்சு பிரஜைகள் பலர் வேலையிழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று வரையில் அந்த நிலைமை தொடர்கின்றது. ஆனால், இடதுசாரிகள் எதனை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்களோ அது இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதாவது, இன்றைக்கும் பல உலக நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் நடக்கின்றன. அங்கிருந்து பெருந்தொகை அகதிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: