(எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், தொடர்ச்சி...)
கேள்வி 13: மீண்டும் மீண்டும் நிகழும் பொருளாதார நெருக்கடிகளை டொடர்ந்து என்ன நடக்கும்?
பதில்:
முதலாவதாக;
- பெரும் தொழிற்துறை தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஆரம்ப காலங்களில் சுதந்திரமான போட்டியை கொண்டு வந்திருந்த போதிலும், தற்போது அதைக் கடந்து வந்து விட்டது.
- சுதந்திரமான போட்டியும், ஒரு சில தனி நபர்களால் நிர்வகிக்கப் படுவதும் தொழிற்துறை உற்பத்தியை பொறுத்தவரையில் ஒரு சிறைக்கூடமாக மாறி விட்டது. இதை அவர்கள் உடைக்க வேண்டும் அல்லது உடைப்பார்கள்.
- பெரும் தொழிற்துறை இதே நிலைமையில் சென்று கொண்டிருந்தால், ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மீண்டு வரும் பொதுக் குழப்பம் மூலம் மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
- இது மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த நாகரிகத்தையும் அச்சுறுத்துவதுடன், பாட்டாளிகளை துன்பத்தில் தள்ளுவது மட்டுமல்லாது பெருமளவு முதலாளிகளயும் அழிக்கிறது.
- அதனால் பெரும் தொழிற்துறை முற்றாக கைவிடப் பட வேண்டும். ஆனால் இது சாத்தியமற்ற விடயம். - அதனால் அவர்கள் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பை அவசியமாக்குகிறார்கள். இதன் மூலம் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் தனிப்பட்ட தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, சமுதாயம் முழுவதும் ஒரு நிரந்தரமான திட்டத்தின் கீழ் அனைவருக்குமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்துறை உற்பத்தியை வழி நடத்தும்.
இரண்டாவதாக;
- பெரும் தொழிற்துறையும் அதனால் சாத்தியமாக்கப் பட்ட உற்பத்தியின் முடிவுறாத விரிவாக்கமும், வாழ்வாதாரத்திற்கு அவசியமான அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்யும் சமுதாயத்தை உருவாக்கி உள்ளது.
- அதனால் ஒவ்வொரு சமூக உறுப்பினரும் தனது சக்தியை ஆற்றலையும் பூரண சுதந்திரத்துடன் பயன்படுத்த முடியும்.
- இன்றைய சமூகத்தில் துன்பங்களயும், வர்த்தக நெருக்கடிகளையும் உருவாக்கிய அதே பெரும் தொழிற்துறை, இன்னொரு சமுதாயக் கட்டமைப்பையும் உருவாக்கி துன்பங்களையும் நெருக்கடிகளயும் அழித்தொழிக்கும்.
இதனால் தெளிவாக நிரூபிக்கப் படுவதானது:
1. இன்று முதல் இந்தத் தீமைகள் அனைத்தையும், இனிமேலும் சாத்தியமில்லாத ஒரு சமூக அமைப்பின் தன்மைகள் என்று குறிப்பிடப் பட வேண்டும்.
2. இந்த தீமைகளை முற்றாக அகற்றுவதற்கான, ஒரு புதிய சமுதாய அமைப்பை உருவாக்குவதற்கான வழிகளும் இங்கே உள்ளன.
கேள்வி 14: இந்த புதிய சமுதாயம் எத்தகைய அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும்?
பதில்:
- அவர்கள் அனைத்து தொழிற்துறை நிர்வாகத்தையும், உற்பத்திப் பிரிவுகளையும் தமது கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தனிப்பட்ட முறையில், ஒருவரோடொருவர் போட்டியிடும் தனிநபர்களுக்கு பதிலாக, ஒரு பொதுச் சமூகம் உற்பத்திப் பிரிவுகளை பொறுப்பெடுக்க வேண்டும்.
- அதன் அர்த்தம், பொதுச் சமூகத்தின் கணக்கில், ஒரு சமூகத் திட்டத்தின் கீழ் அனைத்து சமூக உறுப்பினர்களும் பங்கெடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
- அதாவது தனி நபர் போட்டியை இல்லாதொழித்து விட்டு, அதற்குப் பதிலாக அனைவரதும் கூட்டு ஒத்துழைப்பை வேண்டி நிற்கும்.
- இன்று நாம் நேரில் காணக் கூடியவாறு, தொழிற்துறை நிர்வாகம் தனி நபர்களின் கைகளில் இருப்பதால் அதன் விளைவாக தனியுடைமையும் உள்ளது.
- போட்டி என்பது, தனிப்பட்ட தனியார் உரிமையாளர்கள் தமது தொழிற்துறையை நிர்வகிக்கும் முறையாகிறது.
- அதனால் தொழிற்துறையின் தனி நபர் நிர்வாகம், போட்டிகளில் இருந்து, தனியார் சொத்துடைமையை பிரிக்க முடியாது.
- தனியார் சொத்துடைமை இல்லாதொழிக்கப் பட வேண்டும்.
- அந்த இடத்தில் அனைத்து உற்பத்திக் கருவிகளையும் பொதுச் சமூகத்தின் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
- எல்லா உற்பத்திப் பொருட்களையும் பொதுச் சமூக உடன்பாட்டின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
- இன்னொரு விதமாக சொன்னால் "பொது உடைமைச் சமுதாயம்"* வர வேண்டும்.
(*எனது குறிப்பு: மூல நூலில் "பொருட்களின் சமூகம்" என்று உள்ளது. இது பொது உடைமை என்ற அர்த்ததில் எழுதப் பட்டிருக்க வேண்டும். எங்கெல்ஸ் இந்த நூலை வெளியிட முன்னர் தயாரித்து வைத்த "கம்யூனிச வாக்குமூலத் திட்டம்" என்ற பிரதியிலும் அந்தச் சொல் அடிக்கடி பயன்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன், கம்யூனிசம் என்பது ஒரு பிரெஞ்சு சொல் ஆகும்.)
- தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஒரு சமூகப் புரட்சிக்கான மிகவும் சுருக்கமான குறிப்பிடத் தக்க தொகுப்புரை ஆகும்.
- இது தொழிற்துறை வளர்ச்சியில் இருந்து தோன்றும் அவசியமான கோரிக்கை என்பதால், கம்யூனிஸ்டுகளின் முன்நிபந்தனையாக உள்ளது.
இன்று நாம் காணும், "தனியார் சொத்துடைமை" வரலாற்றில் முன் எப்போதும் இருக்கவில்லை. அது முதலாளித்துவத்தின் விளைவு.
கேள்வி 15: அப்படியானால் தனியார் சொத்துடைமை ஒழிப்பு கடந்த காலங்களில் சாத்தியமற்றதாக இருந்ததா?
பதில்:
ஆம். சமூக ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளின் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளை கொண்டு வருவதற்கு தேவைப் பட்டன. இவை பழைய சொத்துடைமை உறவுகளுடன் பொருந்த விரும்பவில்லை. தனியார் சொத்துடைமை அவ்வாறு தான் பிறந்தது. ஏனென்றால் தனியார் சொத்துடைமை எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கவில்லை.
மத்திய காலத்தின் இறுதிக் காலத்தில் பட்டறைத் தொழில் மூலம் புதிய உற்பத்திமுறைகள் உருவாக்கப் பட்ட போது, அது முன்பிருந்த நிலப்பிரபுத்துவ, கைவினைஞர் உரிமத்தின் கீழ் அடிபணிய விரும்பவில்லை. பழைய சொத்துடைமை உறவுகளில் இருந்து உற்பத்தித் துறையானது புதிய சொத்துடைமை வடிவத்தை கொண்டு வந்தது. அதுவே தனியார் சொத்துடைமை ஆகும். உற்பத்தி துறைக்கும், பெரும் தொழிற்துறையின் ஆரம்பகால வளர்சிக் கட்டத்திலும், தனியார் சொத்துடைமை தவிர்ந்த வேறெந்த சொத்துரிமை முறையும் சாத்தியமாக இருக்கவில்லை. இந்த சமூக அமைப்பை தவிர வேறெதுவும் தனியார் சொத்துரிமையில் தங்கி இருக்கவில்லை.
(எனது விளக்கவுரை: நிலப்பிரபுத்துவ காலத்தில் சொத்துக்கள் வாரிசுரிமை அடிப்படையில் கிடைத்தன. அவற்றை பெரும்பாலும் வாங்குவதும் விற்பதும் சாத்தியமற்றது. முதலாளித்துவ காலத்தில் தான் காசுள்ள யாரும் வாங்கலாம் என்ற உரிமை கிடைத்தது. எங்கெல்ஸ் இதைத் தான் தனியார் சொத்துரிமை என்கிறார்.)
- போதுமான அளவு உற்பத்தி செய்யப் படாத காலம் வரையில்...
- அதாவது எல்லோருக்கும் போதுமான அளவு இருக்கவில்லை என்றால்...
- அதே நேரம் சமூக மூலதனத்தை பெருக்கவும் உற்பத்தி சக்தியை அதிகரிக்கவும் போதுமான அளவுக்கு
மிதமிஞ்சிய பொருட்கள் எஞ்சி இருக்குமானால்...
- இவை காலம் முழுவதும் சமூக உற்பத்திகளில் மேலாதிக்கம் செலுத்தும் என்றால், ஒடுக்கப் பட்ட வறுமையான வர்க்கமும் இருக்கவே செய்யும்.
இந்த வர்க்கங்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டம் தான் தீர்மானிக்கும்.
விவசாயத்தை நம்பி இருந்த மத்தியகால கட்டம் எமக்கு பிரபுக்களையும், பண்ணையடிமைகளையும் கொடுத்தது.
பிந்திய மத்திய காலகட்டம் எமக்கு கைவினைத் தொழிலதிபர்களையும், கூலியாட்களயும் காட்டியது.
17ம் நூற்றாண்டு எமக்கு உற்பத்தி தொழில் முனைவோரையும், அது சார்ந்த தொழிலாளர்களையும் காட்டியது.
19ம் நூற்றாண்டு பெரும் தொழில் அதிபர்களையும், பாட்டாளிகளயும் காட்டியது.
இதில் தெளிவான விடயம் என்னவெனில், எல்லோருக்கும் போதுமான அளவு உற்பத்தி செய்யப் பட்டிருந்தால், உற்பத்திச் சக்திகள் அந்தளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது.
அதனால், தனியார் சொத்துரிமை இந்த உற்பத்தி சக்திகளுக்கு ஒரு கூண்டாகவும், தடையரணாகவும் இருந்திருக்கும்.
தற்போது பெரும் தொழிற்துறை வளர்ச்சி காரணமாக;
1. மூலதனமும், உற்பத்தி சக்தியும் முன்னொருபோதும் அறிந்திராத அளவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளதுடன், குறுகிய காலத்தில் இவற்றை முடிவுறாத அளவு பெருக்குவதற்கு தேவையான வளங்களும் உள்ளன.
2. இந்த உற்பத்தி சக்திகள் குறைந்தளவு முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ளன. அதே நேரம் பெரும்பான்மை மக்கள் பாட்டாளிகள் ஆகிறார்கள். முதலாளிகளின் செல்வம் பெரிதாகும் பொழுது, பாட்டாளிகளின் நிலைமை அதே அளவுக்கு துன்பகரமானதாகவும், சகிக்க முடியாததாகவும் மாறுகிறது.
3. சிறப்பாகவும், இலகுவாகவும் பெருக்க முடிந்த தனியார் உடைமைகளும், முதலாளித்துவமும் தலைக்கு மேலே வளர்ந்து விட்டன.
ஒவ்வொரு தடவையும் சமூக ஒழுங்கில் வியக்கத் தக்க தடங்கல்களை உண்டாக்குகின்றன.
அதனால் இப்போது தனியார் உடைமையை ஒழிப்பதை சாத்தியமாக்குவது மட்டுமல்லாது, அதை முற்றுமுழுதான தேவையாகவும் மாற்றியுள்ளது.
****
முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
புலம்பெயர்ந்த தமிழருக்கு பொருந்தும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (பகுதி - 2)
இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1
No comments:
Post a Comment