Friday, June 22, 2018

NGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை

NGO Sector, The Trojan horse of capitalism - ஒரு துண்டுப்பிரசுரம்
------------------

"அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்?

நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக:

தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன?

NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை. தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது.

NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் வகிப்பதாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் கோபங்களை தணிக்க உதவுகிறது. அரச எதிர்ப்பு சக்திகளை சட்டபூர்வமான, அமைதியான, கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுகின்றது. 

இதன் மூலம், மக்களை முதலாளித்துவ ஆதரவாளர்களாக மாற்றுவதுடன், ஆளும் வர்க்க கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் NGO க்களின் தாக்கம் மிகக் குறைவாக இருந்த போதிலும், பிற உலக நாடுகளில் அவற்றின் ஆதிக்கம் அளவிட முடியாதது.

அரசு சாரா நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவற்றிற்கு கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி அரசிடம் இருந்து வருகின்றது. பல வகையான NGO க்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதிகாரத்தை கட்டமைப்பவை, உள்நாட்டு, சர்வதேச NGO க்கள் என்று பல வகையானவை. 

NGO என்றால் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" என USAID கூறும் வரைவிலக்கணம் சர்ச்சைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணம், அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றிற்கு உதவுவதால் மட்டும் அல்ல. ஒரு NGO அமைப்பு, மனேஜர்கள் போன்ற சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களையும், இலவச தொண்டு வேலை செய்யும் களப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு எழுதப் பட்ட ஐ.நா. சாசனத்தில் தான் NGO பற்றிய குறிப்புகள் வருகின்றன. இருப்பினும், உலகில் மிகப் பழமையான NGO, 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.

இந்த NGO க்களுக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? உலகளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுகளும் நிதி கொடுக்கின்றன. அதே நேரம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மத அமைப்புகளும் சிறியளவில் நிதி வழங்குகின்றன. முதலாளிகளையும், அரசையும் பின்பற்றி, மத நிறுவனங்களும் தமது செல்வாக்கை பயன்படுத்த விரும்புகின்றன.

சர்வதேச மட்டத்தில், அநேகமாக நீங்கள் கேள்விப் பட்ட எல்லா பெரிய நிறுவனங்களும், NGO க்களுக்கு நிதி வழங்கும் அமைப்புகளை கொண்டுள்ளன. Microsoft, Monsanto, Nike, Ford, Starbucks... இது போன்ற பெரும் முதலாளிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட செல்வந்தர்களும் நிதி வழங்குகின்றனர். பில் கேட்ஸ், ஜோர்ஜ் சோரோஸ், ரொக்கபெல்லர் என்று பலரைக் குறிப்பிடலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழைகள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்துவதன் நோக்கம் என்ன?  சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்கின்றன. இந்த நற்பெயர், மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களை பெருமளவில் வாங்க வைக்கும். அதனால் அதிக இலாபம் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை சுரண்டுகின்றது. அவர்களை நாளொன்றுக்கு பதினான்கு மணித்தியாலம் வேலை செய்ய வைத்து கசக்கிப் பிழிகிறது. ஒரு ஐபோனின் விலை தான், அதைச் செய்யும் தொழிலாளியின் ஒரு வருடச் சம்பளமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் மலேரியா தடுப்பு மருந்துக்கு கொஞ்சப் பணத்தை நன்கொடை வழங்குவதால், இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால உதவிகள் மூலம், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதனால் அவை என்றென்றும் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்த நாடுகளின் வளங்களை இரக்கமற்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அபிவிருத்தி தடைப் படுவதுடன், NGO நிறுவனங்களின் கருணையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன. இதனால்,வறுமை, பட்டினி, நோய்கள், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான மக்களின் போராட்டத்தை தகர்க்கின்றன.

எதற்காக முதலாளிகள் NGO நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார்கள்? முதலாளித்துவ பொருளாதார விதியின் படி பார்த்தால் இது ஒரு "மீளப் பெறப் படாத செலவு". அதாவது, ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு பகுதி உற்பத்தி செலவுக்கும், இன்னொரு பகுதி மீள் முதலீட்டுக்கும் செலவாகிறது. இதில் இலாபம் தனியாக ஒதுக்கப் படுகின்றது. அப்படியானால், எதற்காக முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறார்கள்?

தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முதலாளிகள் கொடை வள்ளல்கள் என்று சமூகத்தில் படம் காட்டப் படுகின்றது. ஆனால், இது ஒரு கொடை அல்ல. அவர்களது வர்த்தகத்தை உறுதிப் படுத்தவும், எதிர்கால இலாபத்தை நிச்சயப் படுத்துவதற்குமான முதலீடாக அந்தப் பணம் செலவிடப் படுகின்றது. இதனால் கிடைக்கும் இலாபம் நீண்ட கால நோக்கிலானது.

NGO நிறுவனங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான நன்மதிப்பை உருவாக்கி, முதலாளித்துவத்தை நிலைநிறுத்துகின்றன. ஜனநாயகமயப் படுத்தலுக்காக, பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடும் NGO க்களுக்கு கார்பரேட் முதலாளிகள் அள்ளிக் கொடுப்பதும் காரணத்தோடு தான். பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வதன் அர்த்தம், உற்பத்தி, தொழிலாளர் உரிமைகள், ஏகபோகம் போன்ற விடயங்களில் மிகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தான். இதனால், பெரும் முதலாளிகளுக்கு மிகப் பெரும் செல்வம் செல்வம் சேர்வதுடன், உழைக்கும் வர்க்கத்திற்கு அவலங்களும் உண்டாகும்.

அரசு எதற்காக NGO க்களுக்கு உதவுகின்றது? நடைமுறையில் உள்ள அரசு, பணக்காரர்களை பாதுகாப்பதையும் அவர்களது நலன்களை உறுதிப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது, வன்முறை மீது ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது. இன்றுள்ள முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு NGO க்களுக்கு நிதி வழங்குகின்றது. அரசு உறுதியாக இருந்தால் தான், அது பணக்காரர்களுக்கு சேவை செய்ய முடியும்.

NGO க்கள் முன்னெடுக்கும் "போராட்டம்" என்றைக்குமே அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. வன்முறை பிரயோகிப்பதில்லை. அத்துடன், மையப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. பாராளுமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு கோபத்துடன் இருப்பவர்களை, NGO க்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அஹிம்சா வழியில் போராடுமாறு சொல்லிக் கொடுக்கின்றன. அவர்களை கோட்டு சூட்டு போட்ட அலுவலகப் பணியாளர்களாக, அறிக்கைகள் எழுத வைக்கின்றன.

எந்த NGO வும் புரட்சிகரமாக செயற்பட முடியாது. அது தனது கணக்கு அறிக்கைகளை தயாரிப்பதிலும், அடுத்த வருடத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. நிதியின்றி எந்த NGO வும் இயங்க முடியாது. அரசும், கார்பரேட் முதலாளிகளும் புரட்சிகர NGO வுக்கு நிதி வழங்க மாட்டார்கள். சுருக்கமாக, ஒரு NGO வின் செயற்பாடுகளும், போராட்டங்களும், அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

சட்டங்களுக்குள் அனுமதிக்கப் பட்ட போராட்டம் வெற்றி காண முடியாது. அது எப்போதும் அதிகார வர்க்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் முடியும். அரசாங்கத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்கும் NGO போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், அது அதிகாரத்தை முழுமையாக கேள்விக்குட்படுத்த மாட்டாது. அரசைக் கவிழ்க்க நினைக்கும் NGO சட்டப் படி பதிவு செய்ய முடியாது. சமூகத்தில் NGO எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் அமைதியாக ஆட்சி செய்கின்றது.

பிற்குறிப்பு: 
துண்டுப்பிரசுரம் போன்ற இந்த சிறு நூல், (முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான) மசிடோனியாவில் உள்ள Crn Blok என்ற இடதுசாரி (Anarchist) அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

1 comment:

Thamilan said...

சுருக்கமாக பதிவிட்டமைக்கு நன்றி