Wednesday, June 20, 2018

இரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே!

முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களே பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரித்து திசைதிருப்பி விடுகின்றது. எந்த இடத்திலும் முதலாளித்துவம் மீதான விமர்சனம் கிடையாது.

பேஸ்புக் "இலவசமாக" கிடைப்பதற்குக் காரணம் தகவல் திருட்டு என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க், அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. கூகிள் கூட தகவல் திருட்டில் ஈடுபடும் நிறுவனம் தான். இவ்வாறு பல பன்னாட்டு IT நிறுவனங்கள் சட்டபூர்வமான தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தத் தகவல் திருட்டு, சட்டபூர்வமான வழிகளில் நடக்கிறது. உதாரணத்திற்கு நாம் புதிதாக பேஸ்புக் கணக்கு திறக்கும் பொழுது, அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பாவிக்க முடியும். பேஸ்புக் நிறுவனம் நமது தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு அனுமதிப்பதும் நிபந்தனைகளில் ஒன்று.

நமது தகவல்களை திருடி விற்காமல், மார்க் சுக்கர்பெர்க் உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக வந்திருக்க முடியுமா? அமெரிக்க பங்குச் சந்தையில் குறிப்பிடும் அளவிற்கு பேஸ்புக் நிறுவனம் கோடிக் கணக்கான இலாபம் சம்பாதிக்க முடியுமா? சுருக்கமாக, இரும்புத்திரை திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரமான சத்தியமூர்த்தியின் (அர்ஜுன்) இடத்தில் மார்க் சுக்கர்பெர்க்கை வைத்துப் பார்த்தால் தவறேதும் இல்லை.

ஆனால், இரும்புத்திரை திரைப்படம் அதைப் பற்றிப் பேசாமால், ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்யும் கிரிமினல் கும்பல்கள் பற்றி மட்டுமே பேசுகின்றது. இது படத் தயாரிப்பாளர், இயக்குனரை பொறுத்தவரையில் "பாதுகாப்பான அரசியல்". இப்படித் தான், இது போன்ற பல அரசியல் படங்கள், மக்களை அரசியல் மயப் படுத்தாமல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருப்திப் பட வைக்கின்றன.

ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 1984 நாவலில், மக்கள் அனைவரையும் கண்காணித்து, அவர்களது சிந்திக்கும் திறனையும் மாற்றும் சக்திவாய்ந்த அரசு பற்றி எழுதி இருந்தார். இன்று அந்த நாவலில் கற்பனை செய்ததை விட பல மடங்கு அதிகமாக கண்காணிக்கப் படுகிறோம். "பெரியண்ணன் கண்காணிக்கிறான்" (Big brother is watching) என்று நாவலில் ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய வாசகம் உண்மையாகி உள்ளது.

ஒரு வீட்டிற்குள், நான்கு சுவருக்குள் என்ன நடக்கிறது என்பதை மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி என்பன மூலம் இலகுவாக உளவறிய முடியும். இதற்காகவே எல்லா ஸ்மார்ட் போன்களிலும் அமெரிக்கா ஒரு மென்பொருளை பொருத்தி விட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் கூட அமெரிக்காவினால் ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியாகியது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து மக்களின் வாழ்க்கையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,அது மக்களை நுகர்வோர் எனும் விலங்குகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எமது விருப்பங்களை துல்லியமாக அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள்.

நூறு வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளிகளுக்கு, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மக்களின் விருப்பங்கள் மாறும் பொழுது, அல்லது குறையும் பொழுது நட்டம் ஏற்பட்டு, மூடப் பட்ட வணிக நிறுவனங்கள் பலவுண்டு. இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை. 

தகவல் தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவரதும் மூளைகளை கட்டுப்படுத்துகின்றது. உலகில் மிகவும் சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களே இந்தக் குற்றங்களில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. அதை அமெரிக்கா உட்பட உலகில் எந்த அரசும் கட்டுப்படுத்துவதில்லை. தாராளமாக திருடலாம் என வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.

இரும்புத்திரை திரைப்படத்தில் கடன் எனும் அடிமை விலங்கு, அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் விரிவாக காட்டப் படுகின்றது. இன்றைய காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் முழுவதும் கடனை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பை தீர்மானிப்பது தங்கம் அல்ல, கடன் என்பது பலர் அறியாத தகவல். 

"பணக்கார நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை மக்கள், கடந்த பல தசாப்த காலமாக கடனில் தான் வாழ்கிறார்கள். வெளிநாட்டு மோகத்தில் மேற்குலகு செல்லும் நம்மவர்கள், இந்த உண்மையை அங்கு சென்ற பின்னர் தான் அறிந்து கொண்டனர்.

கடன் விடயத்தில் வங்கிகள் நேர்மையாக நடந்து கொள்வது போலவும், இடைத் தரகர்களான கிரிமினல்கள் ஏமாற்றுவது போலவும், இரும்புத்திரை திரைப்படத்தில் காட்டுவது மாதிரி எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. பத்திரங்களை பார்க்காமல் இலகு கடன் கொடுக்கும் விடயத்தில் வங்கிகளிலும் ஊழல் நடக்கிறது. 

இதற்கு சிறந்த உதாரணம், அமெரிக்காவில் 2008 ம் ஆண்டு ஏற்பட்ட சப் பிரைம் மோசடியும், அதனால் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியும் ஆகும். தகுதி இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்த மோசடி காரணமாக, Lehman Brothers போன்ற அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கிகள் கூட திவாலாகின. இதே பிரச்சினை காரணமாக, ஒரு குட்டி ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் வங்கிகள் திவாலான படியால், அந்த நாட்டுப் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடைந்தது.

தற்போது வரும் பல தமிழ்த் திரைப்படங்கள், மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன. அந்தளவுக்கு ஒரு குறைந்த பட்ச விழிப்புணர்வு உருவாகி உள்ளது. இருப்பினும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், தனி நபர்களை வில்லன்களாக காட்டுவதாலும், திரைப்படம் சொல்ல வரும் செய்திகளை மக்கள் கவனத்தில் எடுக்காமல் விடுகின்றனர்.

இறுதியாக, இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து அல்லது வாங்கி வெளியிட்டுள்ளமை ஒரு வேடிக்கையான முரண்நகை. மொபைல் போன் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது முதல், கிரிமினல்களின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தது வரையில், லைக்கா நிறுவனம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இரும்புத்திரை படத்தில் காட்டப்படும் தகவல் திருட்டை லைக்கா நிறுவனமே செய்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் லைக்கா சிம் கார்ட் "இலவசமாக" கொடுக்கும் பொழுது, அதில் ஒரு கவர்ச்சியான விளம்பரம் இருக்கும். லைக்காவின் இணையப் பக்கத்தில், மொபைல் போன் இலக்கத்துடன், எமது பெயர், முகவரி போன்ற விபரங்களை பதிவு செய்தால் 5-10 யூரோ/பவுன்ஸ் "இலவசமாக" கொடுக்கிறார்கள்.

இந்த "இலவச" சலுகைக்கு ஆசைப்பட்டு, பல பாவனையாளர்கள் தமது பெயர் விபரங்களை பதிவு செய்வார்கள். லைக்கா நிறுவனம் அவற்றை ஏதாவதொரு கால் சென்டருக்கு நல்ல விலைக்கு விற்று விடும். லைக்கா விற்பனை செய்யும் ஒரு தகவலின் விலை நூறு யூரோ/பவுன் என்று வைத்துக் கொண்டாலும், நமக்கு "இலவசமாக" தரும் பணம் அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இந்த விபரங்களை லைக்காவில் வேலை செய்த ஒருவரே என்னிடம் தெரிவித்திருந்தார்.

சுருக்கமாக, இரும்புத்திரை படத்தில் சொல்லப்படும் குற்றச் செயலை, அதைத் தயாரித்த லைக்கா நிறுவனமே செய்கிறது. அந்தத் திரைப்படத்தின் கதை தனது நிறுவனத்தின் மோசடிகளை அமபலப் படுத்துகிறது என்று தெரிந்து கொண்டே, லைக்கா நிறுவனம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட, இந்த முதலாளித்துவ எதிர்ப்புத் திரைப் படத்தை இரசித்து பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள்! இதிலிருந்தே, தமிழ் மக்களின் அரசியல் அறிவு எந்தளவு மந்தமாக இருக்கிறது என்பது புரியும். மக்களின் அறியாமை தான் அரசியல்வாதிகளின் முதலீடு என்று சொல்வார்கள். லைக்கா வெளியிட்ட  இரும்புத்திரையும் அந்த ரகம் தான். 

No comments: