Saturday, September 17, 2016

அரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே! இதோ ஆதாரம்!!


இந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. "தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்..." இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.

 2003 ம் ஆண்டு, இந்தியா சுற்றுலா சென்றிருந்த நேரம், குடகு மலைப் பிரதேச தலைநகரான மடிக்கேரிக்கும் சென்றிருந்தேன். மடிக்கேரி மியூசியத்தில் இருந்தவர்களிடம் குடவா இனத்தவர் பற்றிக் கேட்டேன். அப்போது அங்கிருந்த அலுவலர் "குடவா என்று தனியான இனம் எதுவும் இல்லை. அவர்களும் கன்னடர்கள் தான்." என்றார். அந்த ஊரை சுற்றிக் காட்டிய ஆட்டோக் காரரிடம் பேச்சுக் கொடுத்த பொழுது, அவர் தான் துளு மொழி பேசுவதாக கூறினார். எனது நேரம் போதாமை காரணமாக, அங்கே தங்கி இருந்து ஆராயாமல், மைசூர் ஊடாக கோயம்புத்தூருக்கு சென்று விட்டேன்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து "நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அது தொடர்பாக பண்டைய அரேபியர்கள் பற்றியும் ஆராய வேண்டியிருந்தது. அப்போது அரேபியருக்கும், சேர நாட்டுக்கும், இடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றிய தகவலும் கிடைக்கப் பெற்றன.

அரேபியருக்கும், தமிழருக்கும் இடையிலான அறுந்து போன தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு குடகு மலைக்கு செல்லுங்கள். புராதன திராவிட மொழியான குடகு மொழி, தமிழும், மலையாளமும் கலந்தது போன்றிருக்கும். குடகு மக்கள், கர்நாடகாவில் காவிரிநதி ஊற்றெடுக்கும் இடத்தில் வாழ்கின்றனர். காவிரி நதி நீருக்காக சண்டை பிடிக்கும் கன்னடர்களும், தமிழர்களும், குடகு மக்கள் குறித்து அக்கறைப் படுவதில்லை.

குடவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இன்றைக்கும் பழங்குடிகள் மாதிரி இயற்கைத் தெய்வங்களை வழிபடுகின்றனர். காவேரி அவர்களுக்கு குல தெய்வம். காவேரி சங்கிரிந்தி என்பது அவர்களுக்கு முக்கியமான பண்டிகைத் தினம். காவேரி நதி ஊற்றெடுக்கும் இடம் தலைக்காவேரி என்று அழைக்கப் படுகின்றது. அதை "இந்துக்களின் புனித ஸ்தலமாக" விளம்பரம் செய்வது ஒரு மோசடி. சுற்றுலாப் பயணிகள், "இந்துக்களுக்கு புனிதமான" தலைக்காவேரியை பார்ப்பதற்கு படையெடுக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் சுற்றுச் சூழல் அசுத்தமடைவதாக குடவர்கள் குறை கூறுகின்றனர்.

குடகு இன மக்கள், பிற இந்தியர்கள் மாதிரி நாகரிகமடைந்த சமூகம் தான். நவநாகரிக உடை அணிந்து, நவீன நுகர்வுக் கலாச்சாரத்தை அனுபவிப்பவர்கள் தான். இருப்பினும், தமது மரபை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. தாலி கட்டுவதில்லை. ஐயர் மந்திரம் ஓதுவதில்லை. மூத்தோர் கூடி மணம் முடித்து வைக்கிறார்கள்.

பழங்குடியின மக்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதுடன், தம்மினப் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பது வழமை. குடவர் இனப் பெண்களை குடத்திகள் என அழைப்பர். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் சேலை அணிகிறார்கள். இருப்பினும், சேலைத் தலைப்பை முதுகைச் சுற்றி எடுத்து செருகுவது ஒரு வித்தியாசமான பாணி.

குடவர் ஆண்களது பாரம்பரிய உடையும் வித்தியாசமானது. தலைப்பாகை கட்டி, இடுப்பில் பட்டாக் கத்தி செருகி இருப்பார்கள். குடவர் ஆண்களின் பாரம்பரிய நடனம் கிட்டத்தட்ட அரேபியரின் நடனம் போன்றிருக்கும். அது போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இன்றைக்கும் குடவர்கள் தம்மை சிறந்த போர்வீரர்களாக கருதிக் கொள்கிறார்கள். இந்திய இராணுவத்திலும் பணி புரிகிறார்கள்.

அரேபியா தீபகற்பத்தில், ஒமான், யேமன் நாடுகளில் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது. அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தே பிற அரேபியர்களிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்கலாம். அவர்கள் இந்திய பாணியில் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். அத்துடன் இடுப்பில் பட்டாக் கத்தியை செருகி இருப்பார்கள். அந்தப் பிரதேச அரேபியரையும், கத்தியையும் பிரிக்க முடியாது. கூடப் பிறந்த உடல் உறுப்பு மாதிரி அந்தக் கத்தியை எப்போதும் வைத்திருப்பார்கள்.



ஒமான், யேமன் அரேபியரின் கத்தி பற்றி மேலும் ஆராய்ந்து பார்ப்போம். அதன் முனை அரிவாள் மாதிரி வளைந்து இருக்கும். தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான "திருப்பாச்சி அரிவாள்", "வீச்சு அரிவாள்" போன்றன அரேபியாவில் இருந்து வந்த கத்திகள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அரிவாள் இன்று குடவா இனத்தவரின் தேசிய சின்னமாக மாறி விட்டது. அந்தளவுக்கு அவர்கள் தமது அரிவாளை எண்ணி பெருமை கொள்கின்றனர்.

பண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்று வாழை வெட்டுதல். இன்றைய தமிழர்களுக்கு அந்த சம்பிரதாயம் பற்றி எதுவும் தெரியாது. சூரன் போர் திருவிழாக்களில் மட்டும் வாழை வெட்டுவதை காணலாம். குடவா மக்கள், இன்றைக்கும் வாழை வெட்டும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றார். திருமண சடங்குகளில் வீச்சரிவாளால் வாழை வெட்டும் சடங்கு நடக்கும். இதை நீங்களாகவே இணையத்தில் உள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.

சங்க கால தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சிப் பூ பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும். எத்தனை தமிழர்கள் குறிஞ்சிப் பூவை பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. குடவா மக்கள் இன்றைக்கும் குறிஞ்சிப் பூவில் இருந்து சாறு எடுத்து வருகின்றனர்! அவர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் காணப்படும் குறிஞ்சிப் பூ, மருத்துவத்திற்கு இன்றியமையாதது. அதன் சாறு பல நோய்களை குணப் படுத்த உதவுகின்றது.

குடவர்கள் இன்று அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகி விட்டனர். குறைந்தது ஒன்றரை மில்லியன் குடவர்கள் மட்டுமே மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநில அரசு அவர்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து வருகின்றது. மருத்துவ வசதிகளுக்கும், கல்வி கற்பதற்கும் மைசூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

அது மட்டுமல்ல. கர்நாடகா அரசு, குடவர்களை சிறுபான்மை மொழி பேசும் இனமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. புள்ளிவிபரக் கணக்கெடுப்பில், கன்னடர்களாகவும், இந்துக்களாகவும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்து வைத்துள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், குடவர்கள் பெரிய ராஜ்ஜியம் ஒன்றை கட்டி ஆண்டார்கள். இன்றைய குடகு மலை மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள கண்ணனூர், கொடுங்கொள்ளூர் பகுதிகளும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், கொங்கு நாட்டுப் பகுதிகளும், குடகு மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ளன. 

கோயம்புத்தூரை அண்டிய கொங்கு நாட்டுப் பகுதிகளில்,ஒரு காலத்தில் "கங்கீ" என்ற வட்டாரத் தமிழ் பேசப் பட்டது. அந்த வட்டாரத் தமிழ், குடகு மொழிக்கு நெருக்கமானது. இன்றைக்கும் தமிழர்கள் குடகு மொழியை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஐம்பது சதவீதமாவது எமக்குப் புரிந்து கொள்ள முடியும்.

குடகு இனத்தவரின் பூர்வீகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் படி மேற்கே உள்ள நாடொன்றில் இருந்து கடல் கடந்து வந்ததாக தெரிகின்றது. அதாவது, அவர்களது முன்னோர்கள் ஒமான் - யேமன் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.

குடவர்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் யாவும் சேர நாட்டுடன் தொடர்பு கொண்டவை. குடாக்கடல் அருகில் உள்ள தீவை சேர்ந்த குடவர்கள், ஆரம்ப காலங்களில் கடற்கொள்ளையர்களாக சேர நாட்டு மன்னனுக்கு தொந்தரவாக இருந்து வந்தனர். பிற்காலத்தில் மன்னனுடன் இணக்கமாக சென்று, சேர நாட்டிற்கு உட்பட்ட சிற்றரசை ஆண்டு வந்தனர். பண்டைய குடவர்கள் தமது பிரதேசத்தை குடா நாடு என்றும் அழைத்தனர்.

குடவர்கள் இன்று, மலை வாழ் மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு காலத்தில் வட கேரள கரையோரப் பிரதேசங்களிலும் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். குடவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. குடா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலா? அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா? இன்றைக்கும் அது குறித்து மானிடவியல் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை.

குடகு மொழியானது, நவீன தமிழுக்கு முந்திய புராதன திராவிட மொழிப் பிரிவை சேர்ந்தது. மானிடவியல் அறிஞர்கள் அதனை மலையாளத் தமிழ் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, மலையாளமும், தமிழும் கலந்த மொழி போன்றிருக்கும். "மாப்பிளை பாஷா (அல்லது பியாரி பாஷே)" அந்தப் பிரிவை சேர்ந்தது. 

இன்றைக்கும் கேரளா மாநிலத்தில், முஸ்லிம்களை "மாப்பிள்ளைகள்" என்றும் அழைக்கிறார்கள். அது எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள கேரளா மாப்பிள்ளை மார், எப்போதுமே முஸ்லிம்களாக இருந்தவர்கள் அல்ல. பல்வேறு மதங்களை பின்பற்றியவர்கள்.

ஒரு காலத்தில், அதாவது சேர மன்னன் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும் மாப்பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. இன்று அவர்கள் "சிரிய கிறிஸ்தவர்கள்" என்று தனியான பிரிவாகி விட்டனர். கேரளாவை சேர மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே, அங்கு குடியேறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், உள்ளூர் மக்களில் சிலரை மதம்மாற்றி இருந்தனர். சேர மன்னன் அதைத் தடுக்கவில்லை.

அரேபியா தீபகற்பம் இஸ்லாமிய மயமாகிய காலத்தில், பெருமளவு அரேபிய அகதிகள் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அல்லது பாரம்பரிய சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றிய அரேபியர்கள் ஆவர். அரேபியர்கள் மட்டுமல்ல, துருக்கி, பார்சி, கிரேக்க மொழி பேசும் மக்களும் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

சேர நாடான கேரளாவில் குடியேறிய மேற்காசிய அகதிகள் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர். தமிழில் மாப்பிள்ளை என்றால் என்ன அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மகளை மணம் முடிக்கும் மருமகன். அது ஒரு மரியாதைக்குரிய சொல். சேர நாட்டில் குடியேறிய அரேபியா அகதிகளும், உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்த படியால் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர்.

மாப்பிளைகள் குறைந்தது 1500 வருட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால், குடவர்கள் அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறி விட்டனர். அதனால், இன்றைக்கும் இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இனத்தவராக அடையாளப் படுத்தப் படுகின்றனர். 

இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருவதால் தான் இந்த விபரம் எல்லாம் தெரிய வந்துள்ளன. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து, பிற்காலத்தில் தமிழர், மலையாளிகள், கன்னடர்கள் என்று (இனம்) மாறியவர்கள் ஏராளம் பேருண்டு.

அந்நிய குடியேறிகளான மாப்பிள்ளைகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் உள்ளனர். அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். மதத்தால் இஸ்லாமியரான அவர்கள், தோற்றத்தில் ஐரோப்பியர் மாதிரி இருப்பார்கள். ஆனால், பேசும் மொழி தமிழ் மாதிரி இருக்கும்!

கேரளாவில் வாழ்பவர்கள், மாப்பிளை பாஷா (மலையாள கிளை மொழி) பேசுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் வாழ்பவர்கள், அதையே "பியாரி பாஷா" என்ற பெயரில் பேசுகின்றனர். அதை எழுதும் போது கன்னட எழுத்துக்களை பாவிக்கிறார்கள். 

எம்மை எல்லாம் ஆச்சரியப் படுத்தும் விடயம் என்னவெனில், மாப்பிள்ளை/பியாரி பாஷாவில் 75% தமிழர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்! சந்தேகமிருந்தால் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும். 

பண்டைய காலத்தில், ஐரோப்பியரும், அரேபியரும், தென்னிந்திய அரசுக்களுடன் வர்த்தகம் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பட்டுள்ள ரோமர் காலத்து நாணயங்கள் அதற்கு ஆதாரம். பாண்டிய நாட்டில் ஏராளமான ரோமானியர்கள் குடியேறி இருந்தனர். 

ரோமானியர்கள், பாண்டிய மன்னனின் கூலிப்படையாகவும் இருந்துள்ளனர். (அந்தக் காலங்களில் "தேசிய இராணுவம்" கிடையாது.) பாண்டியர்களின் வீழ்ச்சியுடன் அவர்களும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். ஒன்றில் தாயகம் திரும்பி இருக்கலாம், அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கலாம். இரண்டாவது  தெரிவுக்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.

தென்னிந்தியாவில் குடியேறிய ரோமர்கள், உண்மையில் கிரேக்க மொழி பேசுவோர் ஆவர். அதனால், அவர்கள் "யவனர்கள்" என்று அழைக்கப் பட்டனர். இன்றைய கிரேக்க தேசத்தில் "இயோனியா" என்ற மாகாணம் உள்ளது. அவர்களும் கடலோடிகள் சமூகம் தான். இயோனியர்கள் என்பது தமிழில் யவனர்கள் என்று திரிபடைந்து இருக்கலாம். சேர நாட்டில் (கேரளா) அவர்கள் "ஜோனகர்கள்" என்று அழைக்கப் பட்டனர்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் "சோனகர்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். இலங்கையில் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த இந்த விபரம், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த யவனர்கள், சோனகர்களாக மாறி இருக்கலாம். அது இன்று எல்லா முஸ்லிம்களையும் குறிப்பிட பயன்படுத்தப் படும் சொல்லாகி விட்டது. 

இன்றைய இலங்கை முஸ்லிம்கள் தம்மை தனியான இனமாக காட்டிக் கொள்வதற்கு, சோனகர்கள் வரலாற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது தற்கால தேசியவாத அரசியல். பண்டைய காலத்து மக்களினதும், நவீன காலத்து மக்களினதும், சமூக - அரசியல் கருத்தியலில் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

உசாத்துணை மேலதிக தகவல்களுக்கு:


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tracing The Exotic Kodavas

5 comments:

Anonymous said...

கொங்கு பகுதியில் வாழும் கொங்கு வெள்ளாளர்களுக்கும் குடவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா..???

கிருஷ்ணஸ்வாமி said...

குடகு மக்களுக்கும் அலக்சாண்டர் வருகைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் படை எடுக்கும் முன்னரே அரேபியர்கள் நம் நாட்டுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர்.அப்படி வந்தவர்கள் சிலர் மலையாளம் மற்றும் கன்னடம் பேசும் பெண்களுடன் திருமண உறவு கொண்டு இங்கேயே தங்கிவிட்டதாலும் அவர்கள் கொடகு மலை பிரதேசத்தில் பரவி வாழ்ந்ததாலும் கூர்கிஸ் - குடகு மக்கள் என்று அடையாள படுத்தப்பட்டனர். அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. இதைப்பற்றி மறைமலை அடிகளார் ஆதார பூர்வமாக தனது நூல்களில் விவரித்துள்ளார்.

Unknown said...

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்க 100% வாய்ப்புண்டு ஏனென்றால் எனது மேலாளர் ஒரு கூர்கி/குடவர் முதல் முறையாக அவரை பார்தபோது அரேபியர் அல்லது வடநாட்டவர் என்றே நினைத்தேன், பின்னர் தான் அவர் ஒரு கூர்கி என்று தெரியும்,நீங்கள கூறியதுபோல் கேரள தமிழ் கண்ணட அரபுவம்சத்தவரே தற்போதைய மலையாள மாப்பிள்ளை,தமிழக படுகர் மற்றும் கண்ணட குடவர்/கூர்க்கி யாக இருக்க வாய்ப்புண்டு,இவர்களது மொழி கலாச்சாரம் உடை மட்டுமல்ல வாழ்விடமும் தொடர்புடையதே, கேரளத்தின் வயநாடு பகுதியில் ஆரம்பித்து தமிழக உதகை கூடலூர் வழியாக குடகு மலை வரையில் பரவியிருக்களாம் ,ஏனென்றால் இவை மூன்றும் அடுத்தடுத்த மலைதொடர்களே ,எமக் எமபடுகர் இனத்திலும் நிறையவே நண்பர்கள் உண்டு, அவர்களது மொழியை குறைந்தபட்சம் 50% எம்மால் புரிந்துகொள்ள முடியும், படுகர் மொழிக்கு பேச்சு வழக்கு மட்டுமே உண்டு கூர்கிகள் கண்ணட எழுத்தை கையாள்கிறார்கள், மாப்பிள்ளை முஸ்லிம்கள் மலையாளம்/அரபிக் இதில் முரண் நகை என்னவென்றால் குடவர்/கூர்கிகளும் படுகர்களும் தங்கள் உயர்ந்த சாதி இந்துக்களாகவே கருதுகின்றனர்,திருமணம் மற்றும் இதர சமயங்களில் பெண்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு இன்னமும் வரதட்சணை கொடுமை அந்த சமூகங்களில் இல்லை

Kalaiyarasan said...

மேலதிக தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி Vimal Sekar.

Unknown said...

thank you sir,
மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.