"பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது."
மத்தேயு 19:24
ஏழைகளை சுரண்டிக் கொழுத்த, இனப்படுகொலைக்கும் அஞ்சாத சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா. ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய பணத்தை நன்கொடை என்ற பெயரில் வாங்குவதற்கு கூச்சப் படாதவர். இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்றால், விவிலிய நூல் சொல்வதன் படி அவருக்கு பரலோகத்திலும் இடம் கிடைக்காது.
அன்னை தெரேசா 1981 ம் ஆண்டு, ஹைத்திக்கு சென்று “Légion d’Honneur” என்ற கௌரவப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்தது, அப்போது ஹைத்தியை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட சர்வாதிகாரி டுவாலியர். ஹைத்தி இன்றைக்கும் உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அன்று கோடிக்கணக்கான ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய இரத்தக் காட்டேரி தான் இந்த டுவாலியர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட படுகொலைகளுக்கு அஞ்சாத கொடுங்கோலன். இவர் தான் அன்னை தெரேசாவின் நண்பர்!
1979 ம் ஆண்டு, அன்னை தெரேசா குவாத்தமாலாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. குவாத்தமாலா ஏழைகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். "பயங்கரவாத ஒழிப்பு" என்ற பெயரில், குவாத்தமாலா படையினர் ஏழை மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அது குறித்து குவாத்தமாலா சென்ற அன்னை தெரேசாவிடம் கேட்கப் பட்ட பொழுது, தான் அப்படி எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.
முப்பது வருடங்களுக்குப் பிறகு, அன்று நடந்த போர்க்குற்றங்கள் குவாத்தமாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டன. அப்போது அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதும் நிரூபிக்கப் பட்டது. இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து, அவர்கள் கொடுத்த பணத்தை மனவுவந்து ஏற்றுக் கொண்ட அன்னை தெரேசா ஒரு புனிதரா?
அமெரிக்காவில் ஊழல் செய்வதில் பேர் போன நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், அன்னை தெரெசாவுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு தாராளமாக அனுமதி வழங்கிய அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் கௌரவிக்கப் பட்டார். ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏழைகளுக்காக சேவை செய்யக் கிளம்பிய அன்னை தெரேசா, ஏழைகளை உருவாக்கும் பிசாசுகளுடன் கூடிக் குலாவினார். இது அவரது இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது.
உலகம் முழுவதும் கிடைத்த கோடிக் கணக்கான நிதி, இந்திய ஏழைகளுக்காவது போய்ச் சேர்ந்ததா? அதுவும் இல்லை. அவரால் நிர்வகிக்கப் பட்ட கிளினிக்குகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அன்னை தெரெசாவின் தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாது. ஒரு தடவை இந்திய ஊடகவியலாளர்கள், கணக்குகளை ஆராயக் கேட்ட நேரம் மறுத்து விட்டார். அப்படிப் பட்ட அயோக்கியர் எப்படிப் புனிதராக முடியும்?
மேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம், அன்னை தெரேசா உயிரோடு இருக்கும் காலத்தில், எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தெரிய விடாமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமும் இன்றி குற்றங்களை புரிவதற்கு, அன்னை தெரேசா போன்றவர்களும் காரணம்.
கீழே உள்ள குறிப்புகள் நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டன. Anton Mullink ஒரு முன்னாள் பாதிரியார். தற்போது நாஸ்திக எழுத்தாளர். புனிதர் என்று அழைப்பதற்கு தகுதியற்ற அன்னை தெரேசாவை, வத்திகான் புனிதராக பிரகடனப் படுத்தியுள்ளது தொடர்பாக எழுதப் பட்ட கட்டுரை அது.
அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில குறிப்புகள்:
1. ஏழைகளுக்கு உதவுவதை விட கத்தோலிக்க மதம் பரப்புவதே அவரது நோக்கமாக இருந்தது.
2. மருத்துவமனைகளில் நோயாளிகள் மோசமாக நடத்தப் பட்டனர். மருந்துக்களுக்கு தட்டுப்பாடு. எப்போதாவது ஒரு நாள் வரும் வைத்தியர். சுத்திகரிக்கப் படாத ஊசிகள். சுகாதாரமற்ற இடம். இவை சர்வசாதாரணம்.
3. பெரும்பாலும் தொண்டர்களே நோயாளிகளுக்கு உதவினார்கள். ஒரு தடவை நோயாளியை அவசர சிகிச்சைக்கு கொண்டு போக டாக்சியை வரச் சொன்னார்கள். அன்னை தெரேசா தடுத்து விட்டார். காரணம்? பிறகு எல்லோரையும் டாக்சியில் கொண்டு போக வேண்டி இருக்கும்!
4. அன்னை தெரேசாவுக்கு நிதிப் பிரச்சினை இருந்ததாக சொல்ல முடியாது. அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க கோடீஸ்வரர்கள் அள்ளிக் கொடுத்தனர். ஹைத்தி சர்வாதிகாரி டுவாலியேர் கூட இலட்சக்கணக்கான டாலர் நிதி வழங்கினார். அந்தப் பணம் எல்லாம் எங்கே போனது? யாருக்கும் தெரியாது.
5. போபால் Union Carbide நிறுவனத்தின் நச்சுவாயு கசிவில் 2500 பேர் பலியானார்கள். பாதிக்கப் பட்ட மக்கள் அமெரிக்காவிடம் நஷ்டஈடு கோரினார்கள். அன்னை தெரேசா அவர்களை "மன்னித்து விடுங்கள்" என்று மன்றாடினார்!
6. யூகோஸ்லேவிய போர்கள் நடந்த காலத்தில், வன்புணர்ச்சிக்கு பலியான பெண்கள் கர்ப்பமாக இருந்தனர். அவர்கள் வேண்டாத கர்ப்பத்தை கலைக்க முயன்ற பொழுது அன்னை தெரேசா தடுத்தார். "கருக்கலைப்பு சமாதானத்திற்கு விரோதமானது. தாய்மாரே கொலை செய்கின்றனர்....!" இது தான் "புனிதர்" தெரேசாவின் வாதம்.
(நன்றி: NRC Handelsblad, 6 sep. 2016)
No comments:
Post a Comment