Friday, September 23, 2016

ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்


பிரபலமான சிங்கள இனவாதி விமல் வீரவன்ச பிறப்பால் ஒரு தமிழர்! அதுவும் தமிழ்நாட்டுத் தமிழர்!! தமது தொப்புள்கொடி உறவுக்காக தமிழினவாதிகள் பெருமைப் படலாம். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் பலரின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், அவர்களது முன்னோர் தமிழர்களாக இருந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்.

விமல் வீரவன்ச பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் நம்பிக்கைக்குரிய அடியாள். தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை உதிர்த்து பிரபலம் தேடி வந்தார். அவரது முன்னோர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறினார்கள்.

விமல் வீரவன்ச "பெறவா" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு. சிங்களத்திலும் பெற என்பது பறை மேளத்தை குறிக்கும் சொல் தான். (ஆதாரம்: Caste And Exclusion In Sinhala Buddhism)

சிங்களப் பிரதேசங்களில் முதலியார்கள், கொவிகம (தமிழில்:வெள்ளாளர்) போன்ற ஆதிக்க சாதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு அதிகாரத்தையும், விவசாய நிலங்களையும் பகிர்ந்தளித்து இருந்தனர். இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.

கொவிகம நிலவுடைமையாளர்களின் அடியாட்களாகவும் பெறவாக்களே இருந்தனர். மகிந்த ராஜபக்சே (கொவிகம), விமல் வீரவன்சவை (பெறவா) அடியாளாக வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இலங்கையில் சிங்களவர்களும் இன்னமும் சாதிய சமூகமாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள், பெரும்பாலும் கொவிகம சாதியினர் தான்.

இராணுவத் தளபதிகளாக ஒன்றில் கொவிகம அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள கரவா (கரையார்) சாதியினராக இருப்பார்கள். உதாரணத்திற்கு கோத்தபாய ராஜபக்சே ஒரு கொவிகம. சரத் பொன்சேகா ஒரு கரவா. ஆனால், இராணுவத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதாரணமான போர்வீரர்கள் பெரும்பாலும் பெறவாக்கள் அல்லது பிற தாழ்த்தப் பட்ட சாதியினர். ஈழப்போரில் பலி கொடுக்கப் பட்டவர்களும் அவர்கள் தான்.

"இனவெறியூட்டப் பட்ட சிங்கள இராணுவம்" என்று அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிராமப்புறங்களை சேர்ந்த படிப்பறிவில் குறைந்த பெறவா மற்றும் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை இனவாதிகளாக மூளைச்சலைவை செய்வது இலகு. அவ்வாறான ஒருவர் தான் விமல் வீரவம்ச.

உயர்த்தப் பட்ட சாதி சிங்களவர்கள், தமக்கு கீழே உள்ள தாழ்த்தப் பட்ட சாதியினரை இனவெறியூட்டி போரில் பீரங்கிக்கு தீனியாக பயன்படுத்தி வந்தனர். அதே நேரம், கொவிகம உயர்சாதியினர் பதவிகளை தக்கவைத்துக் கொண்டது மாத்திரமல்லாது, தமிழ் பேசும் வெள்ளாளர்களுடன் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டனர். ராஜபக்சே குடும்பமே அதற்கு சிறந்த உதாரணம்.

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் தமிழ் உறவினர்கள் ப‌ற்றிய விப‌ர‌ம்: 
1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண். 
2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன். 
3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.) 
4. ம‌கிந்த‌வின் மூத்த‌ ச‌கோத‌ரியின் ம‌கள் அனோமா, ஃப‌ஸ்லி ல‌பீர் என்ற‌ முஸ்லிமை ம‌ண‌ம் முடித்திருந்தார். இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றியவர், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கொல்லப் பட்டார்.
(ஆதாரம்: Gota's War, C.A. Chandraprema)

இல‌ங்கையில், சிங்க‌ள‌ - த‌மிழ் மேட்டுக்குடியின‌ருக்கு இடையில், திருமண‌ ப‌ந்த‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து புதின‌ம் அல்ல‌. அது ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். ஏனென்றால் அவ‌ர்க‌ள் ஒரே வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். ச‌ந்திரிகா குமார‌துங்க‌வின் குடும்ப‌த்திலும் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் திருமணம் முடித்துள்ள‌ன‌ர். விக்கினேஸ்வ‌ர‌னும், வாசுதேவா நாண‌ய‌க்கார‌வும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ ப‌ந்த‌ம் மூல‌மாக‌ உற‌வின‌ர்க‌ள் ஆன‌வ‌ர்க‌ள். இந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே செல்லும்.

பார்த்தீர்க‌ளா ம‌க்க‌ளே! மேட்டுக்குடியின‌ர் என்ன‌ மொழி பேசினாலும், அவ‌ர்க‌ள் த‌ம‌க்குள் உற‌வின‌ர்க‌ளாக‌ ஒற்றுமையாக‌ வாழ்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்குள் எந்த‌ முர‌ண்பாடும் கிடையாது. ஒரே சாதி, ஒரே வ‌ர்க்க‌ம் என்ப‌ன‌ அவ‌ர்க‌ளை இன‌ம் க‌ட‌ந்து ஒன்றிணைக்கின்ற‌ன‌. இதே ந‌ப‌ர்க‌ள், அர‌சிய‌ல் என்று வ‌ரும் பொழுது இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி ம‌க்க‌ளை பிரித்து வைப்பார்க‌ள். "சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் சேர்ந்து வாழ‌ முடியாது" என்றுரைப்பார்க‌ள்.

த‌மிழ் ம‌க்களே உங்க‌ளது எதிரி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அல்ல‌. சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்களின் பொது எதிரி இந்த‌ மேட்டுக்குடி வ‌ர்க்க‌ம் தான். அவ‌ர்க‌ள் இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி, ம‌க்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்வார்க‌ள். இர‌ண்டு இன‌ங்க‌ளையும் மோத‌ விட்டு வேடிக்கை பார்ப்பார்க‌ள். இந்த‌ அயோக்கிய‌ர்க‌ளை அடித்து விர‌ட்டாம‌ல் விடுத‌லை சாத்திய‌மில்லை.

1 comment:

Unknown said...

இன்றளவும் அறியப்படாத புதிய தகவல். ”சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்களின் பொது எதிரி இந்த‌ மேட்டுக்குடி வ‌ர்க்க‌ம் தான்” - என்பது சரியான சிந்தனை.