Tuesday, September 20, 2016

ஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பாடுகள்


நடுநிலைவாதிகள் மாதிரி காட்டிக் கொள்ளும் சிலரும், "ஈழத் தமிழர் மத்தியில் சாதிய, வர்க்க முரண்பாடுகள் இல்லை" என்று கூறுவார்கள்.

ஈழத்தை சேர்ந்த ஆதிக்க சாதித் தமிழர்கள் சாதியத்தை பாதுகாப்பதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். "தமிழ்த் தேசியம் பேசுதல், சைவ மதம் பேணுதல்" என்ற பெயரின் கீழ் மறைமுகமாக சாதியத்தை காப்பாற்றுகின்றனர். அதை யாராவது கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தில் சாதியே இல்லை என்று சாதிப்பார்கள். 

"ஈழத்தில் சாதி இல்லையென்று" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:
//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//

இதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின்  சாதி அமைப்பிற்கும், ஈழத்தின்  சாதி  அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லையா?
ஈழத்தமிழர்களில் ஆதிக்க சாதியினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதே சாதி சிங்களவர்களிலும் உண்டென்பதால், காலனிய காலத்தில் இருந்து ஆதிக்க சாதியாக இருந்து வருகின்றனர். 

ஒருகாலத்தில், நிலவுடைமையாளர்கள் மட்டுமல்லாது, கல்வி கற்றவர்களும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருந்த படியால், தனியாக  சாதிச் சங்கம் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 

ஈழத்தில் சாதிக்கு என கட்சி இல்லையா?
ஈழத்தில் சாதிக்கென கட்சி இருந்தது. முதலாவது தமிழ்த் தேசியக் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆதிக்க சாதியினரான வெள்ளாளரரின் சாதிக் கட்சியாக இருந்தது. அந்த சாதியினர் மட்டுமே, கட்சி வேட்பாளர்களாகவும், வாக்காளர்களாகவும் இருந்தனர். அதிலிருந்து  தமிழரசுக் கட்சி  பிரிந்த  பின்னரும் அந்த  நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை.
//ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது தமிழ்க் காங்கிரசும் தாழ்த்தப் பட்ட மக்களையோ அல்லது அவர்களது பிரச்சனைகளையோ ஒரு பொருட்டாக ஒரு போதும் மதித்ததே கிடையாது.// (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்) 


ஈழத்தில் ஒரு சாதி தலைவர் இல்லையா?
ஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றோர் உயர்சாதித் தலைவர்களாக இருந்தனர். அவர்களாகவே அப்படிக் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சர்வசன வாக்குரிமை வந்த நேரம், அதை அனைத்து சாதியினரும் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் எதிர்த்து வந்தனர்.

சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லையா?
ஆரம்ப காலத்தில், அனைத்து பள்ளிக்கூடங்களும் அதிக்க சாதி மாணவர்களை மட்டுமே அனுமதித்து வந்தன. சில கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள், மிகக் குறைந்த அளவு தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு இடம் கொடுத்த நேரம் கலவரமே வெடித்தது. 

அதனால் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் படிப்பதற்கு தனியான பாடசாலைகள் கட்டப் பட்டன. அவை பெரும்பாலும் கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளாக இருந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சாதி பார்க்காமல் மாணவர்களை சேர்த்துக் கொண்டார்கள். 

ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லையா?
ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயில்கள் அனைத்தும், ஆதிக்க சாதியினரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தன. தாழ்த்தப் பட்ட சாதியினர் வெளியே நின்று சாமி கும்பிட வேண்டிய நிலைமை இருந்தது. ஆலய நுழைவுப் போராட்டங்களின் பிறகே எல்லோரையும் அனுமதித்தார்கள். அதே நேரம், கிராமப்புறங்களில் சிறுதெய்வ வழிபாட்டுக்காக கட்டப் பட்ட சிறிய அளவிலான கோயில்களுக்கு தாழ்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே சென்று வந்தனர். தற்போது வெளிநாட்டுப் பண வரவு காரணமாக, மறைமுகமாக சாதிக்கொரு கோயில் உருவாக்கி வருகின்றது. 

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 
யாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:

//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.

காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.

காரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.

அவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.

கல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.

இப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//


ஈழத்தமிழரின் சாதிய முரண்பாடுகள் மட்டுமல்ல, வர்க்க முரண்பாடுகளும் மூடி மறைக்கப் படுகின்றன.  அந்த "நடுநிலைமையாளர்கள்" எப்போதும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு தயங்குவதில்லை.

தமிழ்தேசிய முகமூடி அணிந்து, சொந்த இன மக்கள் மீது வர்க்கத்துவேஷம் காட்டும் ஈனப்பிறவிகள். சிறிய திருடர்களை கண்டிப்பார்கள். ஆனால், பெரிய கொள்ளையர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். தாம் சார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கவும் தயங்க மாட்டார்கள். 

கிளிநொச்சி நகர நவீன சந்தைக் கட்டிடத்தில் இருந்த புடவைக் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அருகில் இருந்த, தீப்பிடிக்கும் என எஞ்சிய கடைகளில் இருந்து பெருமளவான பொருட்கள் வெளியில் அள்ளி போடப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களை சிலர் திருடிக் கொண்டு போனார்கள்.  

அதைக் கண்டித்து ஒரு "தமிழ்த் தேசிய உணவாளர்" பின்வருமாறு திட்டித் தீர்க்கிறார். அவர் இறுதியுத்தம் நடந்த காலத்திலும், இப்போதும் வன்னி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்.
//என்ன பிறப்பு! எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு! இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)

இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர்? ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர்? நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்! இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு!

அப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் மனம் எந்தளவு மரத்துப் போயிருக்கும்? கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா?

பேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு? செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம்? நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா? அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.

இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு!

*******

No comments: