Thursday, August 11, 2016

கொழும்புத் தமிழர்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள் : இனப்பிரச்சினையின் இரண்டு பரிமாணங்கள்


அறியாமையும் ஒரு ஒடுக்குமுறை ஆயுதம் தான். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளும், அதன் விளைவான முஸ்லிம் மக்களுக்கெதிரான அரச அடக்குமுறையும் அனைவரும் அறிந்ததே. 

ஐரோப்பிய வெள்ளையின இனவெறியர்கள், ஐரோப்பிய முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலங்கையில் அதே மாதிரியான இனவெறியர்களினால் ஒடுக்குமுறைக்குள்ளான ஈழத் தமிழர்களில் சிலரும், அதே கருத்துக்களை எதிரொலிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இதை அறியாமை என்பதா? முட்டாள்தனம் என்பதா?

பிரான்ஸில் நடந்த தாக்குதல் ஒன்றின் பின்னர், ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு எழுதினார்: "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து முஸ்லிகள் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." அதே மாதிரி, அவுஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலின் பின்னர், இன்னொருவர் எழுதினார்: "நிலைமை இப்படியே தொடர்ந்தால், உலகம் முழுவதும் இஸ்லாம் என்ற மதத்தையே தடைசெய்து விடுவார்கள்." இப்படி எழுதும் பலர் "தீவிர தமிழ் தேசியவாதிகள்"(?), அல்லது "தீவிர புலி ஆதரவாளர்கள்"(?)

இப்படியானவர்கள் கொழும்பு நகரில் தாக்குதல்கள் நடந்த நேரம் என்ன சொல்லி இருப்பார்கள்? "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், இலங்கையில் தமிழ் மொழியை தடை செய்து, அங்கு வாழும் தமிழர் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." என்று சொல்வார்களா? இன்றைக்கு ஐரோப்பாவில் நடக்கும் தாக்குதல்களை சாட்டாக வைத்து அங்கு வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் மட்டும் "நடுநிலைமை" வகிக்கப் போகிறார்களா?

1998 ம் ஆண்டு, இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருந்த டச்சுப் பெண்மணி ஒருவர், நெதர்லாந்தில் வெளியான Sri lanka veslaggever என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன். Cornelie Quist எனும் அந்தப் பெண்மணி, தான் நேரில் கண்ட உண்மைகளை கட்டுரையில் எழுதி இருக்கிறார். அந்தத் தகவல்கள், ஏற்கனவே அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் பலருக்கு பரிச்சயமான விடயங்கள்.

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு சென்ற அவர், நகரில் செல்வந்தர்கள் வாழும் பகுதி ஒன்றில் வாழ்ந்து வந்த தமிழ் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது கொழும்பில் தமிழர்கள் வீடு வாடகைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமானது என்பதை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுக்காரரின் பெயர் ராஜசிங்கம். அவர்கள் வீடு தேடிய பொழுது, சிங்கள வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு சொல்லி மறுப்பார்கள்: "உங்கள் பெயர் ராஜசிங்கவா, ராஜசிங்கமா?" "மன்னிக்கவும், நாங்கள் சிங்களவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுப்போம்."

வாடகைக்கு வீடு எடுப்பது தொடர்பாக, தற்போது ஐரோப்பிய நகரங்களில் உள்ள நிலைமையும் அது தான். ஐரோப்பிய வீட்டு உரிமையாளர்கள் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். வீடு தேடும் முஸ்லிம் நபர், அந்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, உத்தியோகம் பார்த்தாலும், வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை.

கொழும்பில் வாழும் படித்த, மத்தியதர வர்க்க நண்பர்கள் கூட, தற்போது தமிழர், சிங்களவர் என்று முரண்பாடுகளுடன் பிரிந்து வாழ்வதை காணலாம். இந்தக் கட்டுரையை எழுதிய டச்சுப் பெண்மணி, இருபது வருடங்களுக்கு முன்னர் (எழுபதுகளில்) இலங்கையில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். அதனால் நிறைய சிங்கள, தமிழ் நண்பர்கள் இருந்தனர். இந்த தடவை கொழும்பில் தமிழர் வீட்டில் தங்கியிருந்து, சிங்கள நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களது உரையாடல்களில் தவிர்க்கவியலாது இன முரண்பாடு அரசியலும் இடம்பெற்றுள்ளது. இவரது சிங்கள, தமிழ் நண்பர்கள் கடந்த பல வருடங்களாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தளவுக்கு இன முரண்பாடு அவர்களது நட்பில் விரிசலை உண்டாக்கி இருந்தது. அந்தளவுக்கு இருதரப்பு பதற்றம், நம்பிக்கையின்மை, முரண்பட்ட கருத்து மோதல்கள். இது தொடர்பாக, தங்களது சிங்கள நண்பர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று இவருடன் பேசிய தமிழ் நண்பர்கள் விளங்கப் படுத்தினார்கள்.

பெரும்பாலான சிங்கள நண்பர்களின் எதிர்வினைகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரு சிலர் கடுமையாக நடந்து கொள்வார்கள்: "நீங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால், ஏன் அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை?" என்று கேட்பார்கள். அது குறித்து பதிலளித்த தமிழ் நண்பர்கள் சொன்னார்கள்: "பாருங்கள்! இது தான் பிரச்சினை. தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு நிபந்தனையாக, தமிழர்களான நாங்கள் எல்லோரும் புலிகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது எல்லாத் தமிழர்களும் புலிகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள்."

எந்த வித்தியாசமும் இல்லாமல், அதே கதை தான் ஐரோப்பாவிலும் நடக்கிறது. கொழும்பில் நடந்த ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும், அங்கு வாழும் தமிழர்கள் புலிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று சிங்களத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப் படுகின்றது. அதே மாதிரியான அழுத்தம் தான் ஐரோப்பிய முஸ்லிம்கள் மீதும் பிரயோகிக்கப் படுகின்றது. 

ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னரும், அனைத்து முஸ்லிம்களும் ஐ.எஸ். (அல்லது அல்கைதா) தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான் முஸ்லிம்கள் தாமும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளலாம். ஐரோப்பிய முஸ்லிம்கள் எல்லோரும் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதில்லை. ஐரோப்பியர்களுக்கு அதைப் பற்றி கவலையும் இல்லை.

கட்டுரையாசிரியர் கொழும்பு நகரில் தங்கியிருந்த நேரம், மருதானையில் புலிகள் வைத்த குண்டு வெடித்து நிறையப் பேர் பலியானார்கள். அப்போது அந்தத் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளையும், வேறு சில குழுக்கள் சிங்கள முற்போக்குவாதிகளையும் கொண்டிருந்தன. ஆனால், ஆர்ப்பாட்டங்கள் முழுவதும் புலிகளுக்கு எதிராக இருந்தன. ஒரு சில தமிழர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். இவ்வாறு அன்று கொழும்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளார். 

அதே நிலைமை தான் ஐரோப்பாவிலும். ஐரோப்பிய நகரம் ஒன்றில் குண்டு வெடித்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். ஒரு சில முஸ்லிம்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். ஒடுக்குமுறையின் வீரியம், ஐரோப்பாவை விட இலங்கையில் அதிகமாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை.

இலங்கையில் நடந்தது மாதிரி, ஐரோப்பாவிலும் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் சிலநேரம் அப்பாவிகளும் கைது செய்யப் படுவதுண்டு. ஆனால், இலங்கையில் நடந்தது போன்ற சித்திரவதைகள், சட்டத்திற்கு முரணான படுகொலைகள், காணாமல்போதல்கள், ஐரோப்பாவில் நடப்பதில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, ஐரோப்பாவில் உள்ள பேரினவாதிகளை குறைவாக எடைபோட முடியாது. ஏற்கனவே நாஸிகளின் காலத்தில், ஐரோப்பா பெருமளவு மனித உரிமை மீறல்களையும், இனப் படுகொலைகளையும் கண்டிருந்தது. அப்படியான நிலைமை இனிமேலும் வராது என்று யாரும் உறுதியிட்டுக் கூற முடியாது.


1 comment:

காரிகன் said...

I can understand Mr. Kalaiyarasan,

You are terribly getting scared of the rising Far Right feelings in Europe. Get somewhere else like the Gulf countries or Northern African countries. All is well there as you wish. Worried about leaving your comfort zone?