Tuesday, August 09, 2016

இனப்படுகொலை தொடர்பாக ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்க மடல்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை" என்று கூறியிருக்கிறீர்கள். ஈழத்து, தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகள் மாத்திரம் உங்களது கூற்றை மறுத்து எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று த‌மிழ்/ சிங்கள இடதுசாரிகளும், மேற்குலக நாடுகளை சேர்ந்த இடதுசாரிகளும் சொல்கிறார்கள்.  இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள்" போன்றவர்களையும் "மாற்றுக் கருத்தாளர்கள்" என்று தமிழ் தேசியவாதிகள் வசைபாடி வந்துள்ளனர். இருப்பினும் சர்வதேச அரங்கில் அத்தகைய "மாற்றுக் கருத்தாளர்கள்" தான் இனப்படுகொலை என்ற சொல்லை தொடர்ந்தும் பாவித்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தருகின்றேன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நகரமொன்றில், போலந்தை சேர்ந்த 19 வயது வாலிபனை சந்தித்தேன். அறிமுகத்தின் பின்னர் நான் ஓர் ஈழத் தமிழன் என்று தெரிந்ததும், அவனிடம் இருந்து வந்த வார்த்தைகள் பின்வருமாறு: "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்." இலங்கையில் நடந்த போர் அழிவுகள் பற்றி அனைத்து விபரங்களும் அறிந்து வைத்திருந்தான். 

நீங்கள் நினைப்பது போன்று, அவனும் ஒரு ஈழத்து/தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆனால், அவன் போலந்தை சேர்ந்த இளம் கம்யூனிஸ்டு. கடந்த ஐந்து வருடங்களில், நான் சந்தித்த ஐரோப்பிய கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் இலங்கையில் இனப்படுகொலை நடந்த விபரம் தெரிந்திருக்கிறது. அதை அவர்கள் தமது கூட்டங்களிலும், வெளியீடுகளிலும் சொல்லி வருகின்றனர். 

எதற்காக சர்வதேச இடதுசாரிகளும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்? இந்த விடயம் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மேற்குலக நாடுகளில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். 2009 ம் ஆண்டு, மேற்கத்திய நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரிகள் முன்னின்று ஒத்துழைத்தனர். 

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் புலிகளை தடை செய்து விட்டன. அதனால் பெரும்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் புலிகளை ஆதரித்து யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டியவர்கள் இடதுசாரிகள் தான். அதனால் தான் இன்று வரைக்கும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்." என்றொரு பழமொழி உண்டு. அந்த வகையில், புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினைகளை எதிர்பார்த்து, நீங்கள் இனப்படுகொலை குறித்த கருத்தை கூறியிருக்கலாம். இதுவரை காலமும் அவர்கள் சொல்லி வந்த வாதங்களும் உங்களுக்கு மனப்பாடமாக இருக்கலாம். ஆனால், இனப்படுகொலை பற்றிப் பேசும் ஈழத் தமிழர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்களும் அல்ல, தமிழ் தேசியவாதிகளும் அல்ல.

நான் பிறந்ததில் இருந்து 13 வயது வரையில் கொழும்பு நகரில் வாழ்ந்து வந்தேன். எனது வாழ்நாளில் இரண்டு "இனக் கலவரங்களை" கண்டிருக்கிறேன். 1977, 1983 கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன். 

அவை "இனக்கலவரம்" என்று அரசு சொன்னதும் இனவாத உள்நோக்கம் கொண்டது தான். பொதுவாக, கலவரங்கள் அரசுக்கு எதிரான ஒழுங்கு படுத்தப் படாத மக்கள் எழுச்சியாக அறியப் பட்டுள்ளன. ஆனால், "தமிழர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிங்கள மக்களின் எழுச்சி" என்று அரசு பிரச்சாரம் செய்தது.

சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரிகளாக காட்டுவதன் மூலம், அரசு தனக்கெதிரான கலவரங்களில் இருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 

அதை "இனக்கலவரம்" என்று அழைத்தார்கள்.  ஆனால், உண்மையில் அவை கலவரங்கள் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலைகள். அதற்கு ஆதாரம் என்ன? கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களின் பெயர் விபரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். அதன் படி தமிழர்களின் வீடுகளை தேடிச் சென்று தாக்கினார்கள். 

சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்தது யார்? அப்போது ஆளும்கட்சியாக இருந்த யு.ஏன்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள். தமிழர்களின் வீடுகள் மட்டுமல்லாது, வர்த்தக நிலையங்களும், பாடசாலைகளும், கோயில்களும் தாக்கி எரிக்கப் பட்டன. குறிப்பாக 1983 ம் ஆண்டு, தலைநகரில் இருந்த தமிழர்களின் சொத்துக்கள் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. இதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்த அதே பாணியில் தான், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையும் நடந்தது. அங்கேயும் இந்து மதவெறியர்கள், முஸ்லிம் வாக்காளர்களின் விபரங்களை கையில் வைத்திருந்தார்கள். அதுவும் குஜராத் மாநில பாஜக அரசியல்வாதிகளின் துணையுடன் நடந்தது. ஆகவே, இலங்கையில் தமிழர்கள் மாதிரி, இந்தியாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர் என்று சொல்வதற்கும் ஆதாரங்கள் பலமாக உள்ளன. 

மேலதிகமாக ஓர் உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு சிறிலங்கா அரசை சாரும்! இந்தத் தகவல் உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம். நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே, தென்னிலங்கையில் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததை அறிந்து வைத்திருக்கிறேன். அனுராதபுரத்தில் எமது உறவினர்கள் சிலர் வசித்தனர்.

"தனிச் சிங்கள மாவட்டங்கள்" என்று கருதப்படும், அனுராதபுரம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் வடக்கு, கிழக்கில் இருந்து சென்று குடியேறியவர்கள் அல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அவற்றை பூர்வீக பூமியாக கொண்டிருந்தனர். ஆனால், "இனக்கலவரங்கள்", அதாவது திட்டமிட்ட இனப்படுகொலைகளின் விளைவாக அவர்கள் அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

அவ்வாறு தான் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கென "ஒதுக்கப் பட்ட" பிரதேசமாகியது. அதை "தமிழீழம்" என்ற தனி நாடாக்க கோரியவர்கள், யாழ் மையவாத சிந்தனைக்குள் கட்டுப்பட்டவர்கள் மட்டும் தான். தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் என்று அந்தக் கொள்கை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எண்பதுகளில் ஆயுதமேந்திய இயக்கங்களில், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் ஆகியவை மலையகத்தையும் சேர்த்து ஈழம் என்று உரிமை கோரின. குறிப்பாக ஈரோஸ் மலையகப் பகுதிகளில் சில தாக்குதல்களை நடத்தி இருந்தது. அந்தளவுக்கு மலையகத் தமிழ் போராளிகளும் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

மலையகத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. கொழும்பில் மட்டுமல்லாது, மலையகத்திலும் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. அதன் விளைவாக, மலைநாட்டுப் பகுதிகளில் தமிழர்களை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குவிய வைத்தது. பெருமளவு மலையகத் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி வன்னியில் குடியேறினார்கள். இன்றைக்கும் வன்னிப் பிரதேச சனத்தொகையில் கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள். 

2009 ம் ஆண்டு நடந்த, புலிகளின் அழித்தொழிப்பிற்கு பழிவாங்குவதற்காக சிலர் இனப்படுகொலை அரசியலை முன்னெடுப்பதாக தாங்கள் கருதலாம். அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். நான் முன்னர் கூறிய படி, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்பவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள் அல்ல."

1977, 1983 இனக்கலவரங்களை இனப்படுகொலை என்று அப்போதே பலர் சொல்லத் தொடங்கி விட்டனர். தமிழர்கள் மட்டுமல்ல, இடதுசாரி சிங்களவர்களும் இனப்படுகொலை என்றே சொல்லி வந்தனர். 2009 ம் ஆண்டு இனப்படுகொலை நடக்கலாம் என்று ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தது.

சமாதான பேச்சுவார்த்தையின் போது, புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதுவர் "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்." என்று சூளுரைத்தார். போர் முடிந்த பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பத்திரிகைகள் பின்வருமாறு கூறின: "போர் தொடர்ந்திருந்தால் இதை விட பல மடங்கு இழப்புகள் வந்திருக்கும். இத்துடன் போர் முடிவுக்கு வந்ததால் இது ஒரு ஈடுகட்டக் கூடிய இழப்பு (collateral damage) தான்."

பெரும்பாலானோர் புலிகளும், புலி ஆதரவாளர்கள் சொல்வதும் தான் ஈழத் தமிழரின் அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அதற்குமப்பாலும் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இலங்கையில் நடந்தது "கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் வன்முறை" என்று நீங்கள் விளக்கம் கூறலாம். அதற்கு உதாரணமாக ஜேவிபி கிளர்ச்சியை எடுத்துக் காட்டலாம். "அதுவும் இனப்படுகொலையா?" என்று கேட்கலாம். ஆம், அதுவும் இனப்படுகொலை தான்! இந்த விடயத்தில் நான் ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளுடன் பல தடவைகள் முர‌ண்ப‌ட்டுள்ளேன். அவர்களும் உங்களைப் போன்று "அது இனப்படுகொலைக்குள் அடங்காது" என்று நம்புகிறவர்கள் தான்.

ஜேவிபி கிளர்ச்சியின் போது, சில கிராமங்கள் முற்றாக அழிக்கப் பட்டன. சில பாடசாலைகளில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டனர். "தமிழர்களை படுகொலை செய்வதற்கு காரணம் வேற்றினத்தின் மீதான வெறுப்பு. சிங்களவர்களை படுகொலை செய்வதற்கு என்ன காரணம்?" என்று கேட்கலாம். 

இந்தியாவில் நக்சலைட் ஒழிப்புப் போரில்  படுகொலை செய்யப் பட்டவர்கள் யார்? கூலி விவசாயிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர், ஆதிவாசிகள் போன்றோர் தான். இலங்கையிலும் அது தான் நடந்தது. ஒரே சிங்கள மொழி பேசினாலும், வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு காரணமாக படுகொலை செய்யப் பட்டனர். ஆகவே, அதுவும் இனப்படுகொலைக்குள் அடங்கும்.

இந்தோனேசியா, மலேசியா, போன்ற நாடுகளில் நடந்ததும் இனப்படுகொலையா? ஆம், இனப்படுகொலை தான். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் சந்தேகநபர்கள் மீது நடத்தப் பட்ட இனப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறேன். அது மட்டுமல்ல, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப் பட்ட வரலாறும் இனப்படுகொலைக்குள் அடங்கும். அவற்றைப் பற்றியும் எழுதி இருக்கிறேன்.

அன்புடன்,
- கலையரசன் 



பிற்குறிப்பு:
சிலநேரம் ஜெயமோகன் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்" என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும், ஏதாவதொரு அரசியல் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர். அவர் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. இப்போதும் அந்தக் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு தான் பேசுகின்றார்.

உண்மையில், ஜெயமோகன் மிகவும் தெளிவாக உள்ளார். ஆனால், இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள் தான் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். ஜெயமோகனுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒத்துக் கொண்டால், குஜராத், காஷ்மீர், மணிப்பூரில் நடந்ததும் இனப்படுகொலை தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதை அவரே நேரடியாக சொல்லி இருக்கிறார்.

ஜெயமோகனின் பதிலில் இருந்து சில உதாரணங்கள்: 
//பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இன அழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன்.// 
//மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இன அழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இன அழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.// 
//இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.// 
//இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை. இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை.//

ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறவர்கள், அது பற்றி சிந்திப்பவர்கள், முதலில் தமக்கான அரசியல் சித்தாந்தம் ஒன்றை தெளிவாக வரையறுக்க வேண்டும். "சிங்களப் பேரினவாதம் எமக்கு எதிரி. ஆனால், இந்து பேரினவாதம் எமக்கு நண்பன்." என்ற அளவில் தான் அவர்களது அரசியல் நிலைப்பாடு உள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுகிறவர்கள், காஷ்மீர், குஜராத், மணிப்பூரில் நடந்தவை இனப்படுகொலை இல்லை என்று வாதிடுவார்கள். அப்படியான "தமிழ் தேசியவாதிகள்" பலரை நானே சந்தித்து இருக்கிறேன்.

இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள், இப்போதாவது தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஜெயமோகன்களை கண்டிக்கும் தார்மீக பலத்தையும் இழந்து விடுவார்கள்.

இந்திய, இலங்கை பேரினவாத அரசுக்கள், எப்போதும் இனங்களை பிரித்து வைத்து, அவற்றிற்கு இடையில் பகையை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. ஜெயமோகனும் அத்தகைய பேரினவாத அரசின் நிலைப்பாடை தான் பிரதிபலித்துள்ளார்.

தேசிய இன விடுதலைக்காக போராடும் சக்திகள், இந்திய- இலங்கை அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல், சரியான அரசியல் சித்தாந்தத்தின் வழிநடத்தலின் கீழ் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே ஜெயமோகன் போன்றவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

1 comment:

Unknown said...

கலையண்ணனுக்கு , நீங்க மேல சொல்லியிருக்கற எழுத்தாளர , அவர தாங்கி நிக்கற RSS-கும்பல் மதிக்கறாங்கன்னு நீங்க நெனைச்சீங்கனா நீங்க
பாவம் . இல்ல RSS வட்டத்துக்கு வெளிய யாருக்காவது தெரியும்னு நெனைச்சாலும் நீங்க பாவம் .அதிகாரத்தையும் , பணத்தையும் எல்லா
எடத்தலயிருந்தும் , எல்லாத்துகிட்டயிருந்தும் சுருட்டி வெச்சிருக்கற இந்த சிறு கும்பல்ல ஒரு ஒப்புக்கு சப்பாணி நடிகர் அவ்வளவு தான் .

இருந்தாலும் எப்பவும் மாதிரியே உங்க பதில்ல ,

// கடந்த ஐந்து வருடங்களில், நான் சந்தித்த ஐரோப்பிய கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் இலங்கையில் இனப்படுகொலை நடந்த விபரம்
தெரிந்திருக்கிறது. அதை அவர்கள் தமது கூட்டங்களிலும், வெளியீடுகளிலும் சொல்லி வருகின்றனர். //

//1977, 1983 கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன்......
......... அதை "இனக்கலவரம்" என்று அழைத்தார்கள். ஆனால், உண்மையில் அவை கலவரங்கள் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலைகள். அதற்கு
ஆதாரம் என்ன? கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களின் பெயர் விபரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். அதன் படி
தமிழர்களின் வீடுகளை தேடிச் சென்று தாக்கினார்கள்.
சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்தது யார்? அப்போது ஆளும்கட்சியாக இருந்த யு.ஏன்.பி. பாராளுமன்ற
உறுப்பினர்கள். //

// மேலதிகமாக ஓர் உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு
சிறிலங்கா அரசை சாரும்!....
........... "தனிச் சிங்கள மாவட்டங்கள்" என்று கருதப்படும், அனுராதபுரம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் பெருமளவு தமிழர்கள்
வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் வடக்கு, கிழக்கில் இருந்து சென்று குடியேறியவர்கள் அல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அவற்றை
பூர்வீக பூமியாக கொண்டிருந்தனர். ஆனால், "இனக்கலவரங்கள்", அதாவது திட்டமிட்ட இனப்படுகொலைகளின் விளைவாக அவர்கள் அந்தப்
பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர். //


பாதிக்கபட்டவங்க பத்தி அழமும் , அவங்க மேல அக்கறயும் இருக்கு . பணி தொடரட்டும் .

ஆனா கடசியா கொஞ்சம் சிரிப்பு காட்டியிருக்கீங்க ..// இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள், இப்போதாவது தமது தவறை உணர்ந்து திருத்திக்
கொள்ள வேண்டும். // அய்யோ.. அய்யோ ... தமிழ் தேசியவாதிகனாலே இந்துத்துவா (சாதி)சார்புனு எங்க ஊர்ல( தமிழ்நாட்டல ) இருக்கற அறியா பசங்க கூட சொல்லிருவாங்கணோவ்வ்வ் .. திருந்துனுமா ..... அய்யய்யய்யய்யோ

ஒரு கோரிக்க மறுபடியும் " வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை " தொடர முழுசா வெளியிட முடியுமா .

- இள.செயக்குமரன் , சேலம் .