வரலாறு திரும்புகிறது.
அன்று வரதராஜப் பெருமாள், இன்று விக்கினேஸ்வரன்.
அன்று EPRLF. இன்று TNA.
அன்று இந்திய இராணுவம், இன்று அமெரிக்க இராணுவம்.
முப்பது வருடங்களுக்கு முன்னர், அன்றைய வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், இந்திய விமானப் படை விமாத்தில் வந்திறங்கினார். இன்று அதே பலாலி விமான நிலையத்தில், இன்றைய வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அமெரிக்க விமானப் படை விமானத்தில் வந்திறங்கி உள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தடம் மாறுகின்றதா? என்று ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் சந்தேகம் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒரே தடத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சேர். பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம் காலத்திலிருந்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எப்போதும், பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்ததாக, வலதுசாரிய தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறன. அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும்
விதிவிலக்கல்ல.
விதிவிலக்கல்ல.
விடுதலைப் புலிகளும், மற்றும் பல ஆயுதபாணி இயக்கங்களும் தோன்றிய ஆரம்ப காலத்தில், அவை தீவிர இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஆட்பலம், ஆயுதபலம் குன்றியிருந்த படியால், பொதுத் தேர்தல்களை நடக்க விடாமல் குழப்புவதன் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட நினைத்தன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சுட்டுக் கொன்றது. தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது. இது போன்ற பல நடவடிக்கைகளை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் எல்லோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தனர். இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோரும் அவர்களில் சிலர்.
புலிகளைத் தவிர மற்றைய இயக்கங்கள் யாவும் இராணுவப் பிரிவு, அரசியல் பிரிவு என்ற கட்டமைப்பை கொண்டிருந்தன. புலிகள் அரசியலை புறக்கணித்து, இராணுவவாத கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் வரையில் புலிகளுக்கு அரசியலில் ஈடுபடும் அக்கறை எதுவும் இருக்கவில்லை. அன்று இந்தியா மாகாண சபையை ஒரு தீர்வாக திணித்ததும், புலிகளால் மறுக்க முடியவில்லை. மாகாண சபைக்கு தமக்கு சார்பான அறிவுஜீவிகளின் பெயர்களை சிபாரிசு செய்தனர். இருப்பினும், இரண்டொரு மாதங்களில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட படியால், அரசியலில் ஈடுபடும் யோசனையையும் அத்துடன் கைவிட்டு விட்டனர்.
யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் பொதுத் தேர்தல் வந்தது. இம்முறை புலிகள் தமக்கு ஆதரவான ஈரோஸ் கட்சியை ஆதரித்தனர். எதிர்பார்த்த படியே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட ஈரோஸ் அதிக ஆசனங்களை கைப்பற்றியது. ஆயினும், ஈரோஸ் இயக்கத்திற்கென தனியான அரசியல் கொள்கைகள் இருந்தன.
பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் "பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்" என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் பிரிவினை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க மறுத்து பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்தனர். அதனால் அந்த இடங்கள் காலியாகக் கிடந்தன.
காலப்போக்கில் ஈரோஸ் தலைவர் பாலகுமார் உட்பட பெருமளவு உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து விட்ட படியால், அரசியல் அபிலாஷைகளும் கைவிடப் பட்டன. சங்கர் ராஜி தலைமையில் ஒரு குழு தொடர்ந்தும் அரசியல் கட்சியாக இயங்கி வந்தது. ஆனால், அதற்கு போதிய அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் "பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்" என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் பிரிவினை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க மறுத்து பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்தனர். அதனால் அந்த இடங்கள் காலியாகக் கிடந்தன.
காலப்போக்கில் ஈரோஸ் தலைவர் பாலகுமார் உட்பட பெருமளவு உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து விட்ட படியால், அரசியல் அபிலாஷைகளும் கைவிடப் பட்டன. சங்கர் ராஜி தலைமையில் ஒரு குழு தொடர்ந்தும் அரசியல் கட்சியாக இயங்கி வந்தது. ஆனால், அதற்கு போதிய அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
ஈழப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களில், தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு கிடைத்து வந்தது. சமூகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் மிகக் குறைந்த சதவீதமாக இருந்தாலும், போர் நடக்கும் போது சிங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் கருதினார்கள். அதற்காக விரும்பியோ விரும்பாமலோ புலிகளை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடு. புலிகளும் அதை இழக்க விரும்பவில்லை. அதனால் தொடர்ந்தும் யுத்தத்தில் கவனம் செலுத்தி வந்தனர்.
மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்ததும், போர்நிறுத்தம் வருடக் கணக்காக நீடித்ததும், புலிகள் திரும்பவும் அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், புலிகள் ஒரு அரசியல் கட்சியை தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என்ற பெயரில் மாத்தையா தலைமையில் சிறிது காலம் இயங்கியது. ஆனால், மீண்டும் போர் வெடித்த படியால் அந்தக் கட்சியும் செயலிழந்து போனது. சிறிலங்கா அரசும், போர்நிறுத்த கண்காணிப்பாளர்களும் அந்தக் கட்சியை மீண்டும் புதுப்பிக்கலாம் என ஆலோசனை கூறினார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களுக்காக அதை விரும்பாத புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒரு காலத்தில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தர், ஈபிஆர்எல்எப் சுரேஷ் பிரேமச் சந்திரன், டெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையில் புலிகளுக்கு ஆதரவாக மனம் மாறிய, முன்னாள் புலி எதிர்பாளர்களை கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அதில் பத்மினி, கஜேந்திரன் போன்ற சிலர் புலிகளால் நியமிக்கப் பட்டிருந்தனர். அதாவது, முன்னாள் புலி எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் கடிவாளம் புலிகள் நியமித்த முகவர்களின் கைகளில் இருந்தது.
2009 ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் காலமாற்றத்தினால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னாள் புலி எதிர்பாளர்கள் கட்சியின் அதிகாரத்தை தமதாக்கிக் கொண்டனர். புலிகளின் முகவர்கள் ஓரங் கட்டப் பட்டனர். அவர்கள் பிரிந்து சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்று தனிக் கட்சி ஆரம்பித்தனர். இருப்பினும் தமிழ் பூர்ஷுவா வர்க்கமும், தமிழ் முதலாளிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதினார்கள். அதனால் அதற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்தனர்.
பாராளுமன்ற அரசியல் களத்தில் நின்று பிடிப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் TNA க்கு இருந்தன. அதாவது பண பலம், அடியாட்கள் படை, வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்பு, வணிக ஊடகங்களின் ஆதரவு இருந்தால் போதும். TNA மட்டுமல்ல, சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளான SLFP, UNP என்பனவும் அதே அடிப்படையில் இயங்கும் கட்சிகள் தாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்றவற்றை ஒப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில் வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று அமெரிக்காவின் காலில் அடிபணிந்ததில் எந்த அதிசயமும் இல்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். இந்திய பிராந்திய வல்லரசையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஆதரிப்பதை அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்ட கட்சியிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது பாராமுகமாக இருந்த அமெரிக்கா, இப்போது தான் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கான அமெரிக்க நிவாரணப் பொருட்களை சம்பந்தரும், விக்கினேஸ்வரனும் பெற்றுக் கொண்டனர். "இறுதி யுத்தத்தில் எங்கள் மக்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருந்த நேரம் இந்த அமெரிக்கா எங்கே போனது?" இப்படிக் கேட்பதற்கு ஒரு தமிழ் தேசியவாதிக்கும் தைரியமில்லை. அடிமைகளிடம் தன்மான உணர்வை எதிர்பார்க்க முடியுமா?
தமிழினப் படுகொலையில் பங்காளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து கூழைக் கும்பிடு போடும் "தமிழ்த் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு"!
இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்" என்று அன்றைய அமெரிக்க தூதுவர் சூளுரைத்தார். (http://tamilnation.co/intframe/us/060110ugly.htm) இனப்படுகொலைக்கும் பச்சைக்கொடி காட்டினார்.
புலிகளின் ஆயுதக் கப்பல்களையும், புலிகளின் மறைவிடங்களையும் அமெரிக்க செய்மதிகள் தான் காட்டிக் கொடுத்தன. முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்ட புலிகளையும், மக்களையும், காப்பாற்றுவதற்கு, அமெரிக்க மரைன் படைக் கப்பல் அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய துரோகத்தை தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. எதிர்காலத்தில், இலங்கையில் அமெரிக்கப் படைத் தளம் அமைக்கப் படும் பொழுது தமிழ் மக்கள் விழித்துக் கொள்வார்கள். அப்போது, "தமிழ் தேசிய துரோகிகளின் கூட்டமைப்பு", தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு ஒதுக்கப் படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment