கலாச்சாரப் புரட்சி பற்றிய அறிவிப்பு |
சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்த காலத்தில், விவசாயிகள், தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இலகுவாக்கப் பட்டன, அல்லது இல்லாதொழிக்கப் பட்டன.
அதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க முன்னர், இரண்டு, அல்லது மூன்று வருடங்கள் ஒரு தொழிற்சாலையில் (அல்லது வயலில்) வேலை செய்திருக்க வேண்டும். அவரது சக தொழிலாளிகளால் முன்மொழியப் பட வேண்டும் என்று மாற்றியமைக்கப் பட்டது.
அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள், தொழிலகங்களில் இருந்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புரட்சிகர கமிட்டியின் தலைமைத்துவத்தை கொண்டு வந்தார்கள்.
தொழிற்சாலைகளில் இருந்த ஒரே நிர்வாகி முறை ஒழிக்கப் பட்டு, அந்த இடத்தில் புரட்சிகர தொழிலாளர்கள், கட்சி உறுப்பினர்களின் கூட்டுத் தலைமைத்துவம் கொண்டு வரப் பட்டது.
நாட்டுப்புறங்களுக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் |
சீனப் புரட்சியின் பின்னர், நகர்ப்புற மாணவர்கள் நாட்டுப்புறங்களுக்கு சென்று, நடைமுறை சோஷலிச கல்வி கற்க வேண்டுமென பணிக்கப் பட்டது. கிராமங்களில் சாதாரண விவசாயிகளின் குடிசைகளில் தங்கியிருந்து, அவர்கள் தரும் உணவை சாப்பிட்டு, பகலில் வயல்களில் வேலை செய்ய வேண்டும்.
நாடுமுழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினர் தவிர்ந்த அனைவருக்கும் இந்த விதி கட்டாயமாக்கப் பட்டிருந்தது.
வசதியான மத்தியதர வர்க்க குடும்பங்களில் பிறந்த இளைஞர்கள், வசதியற்ற குடிசைகளில் செங்கல் அடுக்கப் பட்ட படுக்கையில் பாய் விரித்துப் படுத்தனர். உழவர்கள் காய்ச்சும் கஞ்சியோ, கூழோ வாங்கிச் சாப்பிட்டனர். வாரத்தில் ஒரு நாள் தான் இறைச்சி கிடைத்தது.
எல்லா இளைஞர்களும் அதை மனம் கோணாமல் வாங்கிச் சாப்பிட்டனர் என்று சொல்ல முடியாது. வாய்க்கு ருசியாக உண்ண வேண்டுமென்ற ஆசையில், அருகில் இருந்த சிறிய நகரங்களுக்கு சென்று, கையில் இருந்த பணத்தை கொடுத்து உணவுவிடுதியில் சாப்பிட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் அகப்பட்டால் "மேட்டுக்குடி கலாச்சாரத்தை பின்பற்றியதற்காக" அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்டனர்.
அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள், மக்களை நசுக்கினார்கள் என்று தான் கேள்விப் படுகிறோம். அதற்கு மாறாக, மக்கள் ஆட்சியாளர்களை நசுக்கியது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோமா? அதற்குப் பெயர் "மக்கள் அதிகாரம்". சீனாவில் கலாச்சாரப்புரட்சி நடந்த பத்தாண்டுகளாக அது தான் நடந்தது.
சீனா முழுவதும் சிறிய, பெரிய நகரங்கள் எங்கும், செம்காவலர்கள் உருவானார்கள். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில்லாத மாணவர்களும், மக்கள் திரளும் அதில் அங்கம் வகித்தனர். தமது ஊரில் இருந்த அதிகார வர்க்கத்தை குறி வைத்து தாக்கினார்கள். மிகவும் பலம் வாய்ந்த ஆளுநர்கள், மேயர்கள், கட்சித் தலைவர்கள் யாரும் தப்பவில்லை.
இங்கேயுள்ள படங்களில், கவர்னர், மேயர், மற்றும் கட்சித் தலைவர்கள், மக்கள் முன்னிலையில் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்த குற்றங்கள் கழுத்தில் எழுதிக் கட்டப் பட்டுள்ளன. பெருந்திரளான மக்களின் முன்னிலையில், ஒரு கதிரையில் ஏறி நின்ற படி, மணிக் கணக்காக தலை குனிந்திருக்க வேண்டும். குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்ட பின்னர், தெருத்தெருவாக ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டனர்.
பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட, தமது மேலதிகாரிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். தலையில் உள்ள கடதாசித் தொப்பியில் குற்றச்சாட்டுகள் எழுதப் பட்டுள்ளன. |
பத்திரிகை நிறுவன ஊழியர்கள் கூட, தமது மேலதிகாரிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். தலைமை நிர்வாகிகள் பெரிய வீடுகளில் வசித்துக் கொண்டு, வேலைக்கு ரஷ்ய கார்களை ஓட்டி வந்தனர். அவை பூர்ஷுவா (முதலாளிய) கலாச்சாரம் என்று ஊழியர்கள் குற்றஞ் சாட்டினார்கள். அதற்குப் பிறகு சிறிய வீடுகளுக்கு மாறிய நிர்வாகிகள், பொதுப் போக்குவரத்து வண்டிகளை பயன்படுத்தினார்கள்.
மேற்கத்திய "ஜனநாயக" நாடுகளில் வாழும் மக்கள் இது போன்ற காட்சிகளை நினைத்துப் பார்க்க முடியுமா? தமது ஊரில் உள்ள அதிகாரம் படைத்த மேயர், கவர்னர்களை அவர்களால் கிட்ட நெருங்கக் கூட முடியாது.
"பல கட்சி ஜனநாயகம்" நிலவும் நாடொன்றில், குறைந்த பட்சம் ஆளும்கட்சி உறுப்பினரை இவ்வாறு நிறுத்த முடியுமா? அவர்கள் குற்றம் இழைத்தால், நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்வார்கள். பணபலம், அதிகார பலம் உள்ளவன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியும்.
இது தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாட்டாளிவர்க்க ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசம். பலர் தவறாக நினைப்பது போன்று, சோஷலிச நாடுகளில் "ஒரு கட்சி" ஆட்சியில் இருப்பதில்லை. மாறாக ஒரு வர்க்கம், அதாவது பாட்டாளி வர்க்கம் ஆட்சியில் அமர்ந்திருக்கும். ஒருவர் கட்சி உறுப்பினராவதற்கும், கட்சிக்குள் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்கும், பாட்டாளி வர்க்க சமூகப் பின்னணி அவசியமானது.
மிகவும் சக்திவாய்ந்த மனிதராக இருந்த, கட்சியின் பிராந்திய தலைமைச் செயலாளர் Wang Yilun, பல்கலைக்கழக மாணவர்களினால் திரிபுவாதியாகவும், எதிர்ப்புரட்சியாளராகவும் குற்றம் சாட்டப் பட்டார்.
|
அரசு நிறுவனங்களுக்குள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே கூட வர்க்கப் போராட்டம் நடக்கலாம், நடந்துள்ளது. இதைத் தான் "ஸ்டாலினின் சர்வாதிகாரம்", "மாவோவின் சர்வாதிகாரம்" என்று மேற்குலகில் பிரச்சாரம் செய்தனர்.
மாவோ சிந்தனைகளை படித்து விவாதிக்கும் மக்கள் திரள் |
19 மே 1966 ம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியிடம் இருந்து "மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி" பற்றிய அறிவித்தல் வெளியானது. பெய்ஜிங் பாடசாலைகளில் தொடங்கிய "செம் காவலர்கள்" இயக்கம், நாடு முழுவதும் இருந்த கல்வி நிலையங்களில் பரவியது.
உண்மையில் அது மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய இயக்கம். அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணிக்கும் தொடர்பு இருக்கவில்லை. அதனால் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப் படாதவர்களாக இருந்தனர்.
உண்மையில் அது மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய இயக்கம். அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணிக்கும் தொடர்பு இருக்கவில்லை. அதனால் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப் படாதவர்களாக இருந்தனர்.
ஆரம்பத்தில் பிரதமர் லியூ சொக்கி செம் காவலர் இயக்கத்தை அடக்க விரும்பினார். மாணவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருந்தன. ஆனால், மாவோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
5 ஆகஸ்ட் 1966 அன்று, "தலைமையகத்தை தாக்குங்கள்" என்று மாவோ அறிவித்தார். மாவோ செம்காவலர் பாணியில் கையில் செந்நிறப் படி அணிந்து, தானே கைப்பட எழுதிய சுவரொட்டியுடன் மக்கள் முன்னால் தோன்றினார். (கம்யூனிஸ்ட்) கட்சியின் தலைமைப் பீடம் "பூர்ஷுவா தலைமையகம்" என்று அதில் குற்றம் சாட்டப் பட்டிருந்தது.
செம் காவலர் இயக்கத்திற்கு மாவோவின் ஆதரவு கிடைத்து வந்ததால், அவர்கள் துணிச்சலுடன் ஆளும் கட்சி தலைவர்களைக் கூட தாக்கத் தொடங்கினார்கள். திரிபுவாதிகள் என்று இனங்காணப்பட்ட பலர் மக்கள் முன்னால் நிறுத்தப் பட்டனர். பிரதமர் லியூ சொக்கி கூட குற்றம் சாட்டப் பட்டார். பலர் முன்னிலையில் அவமானப் படுத்தப் பட்டார்.
மியூசியமாக மாறிய ஒரு நிலப்பிரபுவின் வீடு. பாவித்த ஆடம்பரப் பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டிருக்கின்றன. |
அதிகார வர்க்கத்தில் இருந்த கட்சித் தலைவர்களைத் தவிர, செல்வந்தர்கள், நிலப்பிரபுக்கள், வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், வியாபாரிகளும் "துர் நடத்தை" கொண்டவர்களாக குற்றம் சாட்டப் பட்டு, மக்கள் முன்னால் அவமானப் படுத்தப் பட்டனர்.
கிராமங்களில் ஆடம்பரமாக வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகளின் வீடுகள், அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களுடன் கைப்பற்றப் பட்டன. அவை மக்கள் பார்வையிடுவதற்காக அருங்காட்சியமாக மாற்றப் பட்டன.
கிராமங்களில் ஆடம்பரமாக வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகளின் வீடுகள், அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களுடன் கைப்பற்றப் பட்டன. அவை மக்கள் பார்வையிடுவதற்காக அருங்காட்சியமாக மாற்றப் பட்டன.
இவற்றைத் தவிர, ஒவ்வொரு ஊரிலும், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொது வெளியில், மாவோவின் சிந்தனைகளை படிப்பதும், அதை நடைமுறைப்படுத்துவதும் பற்றி விவாதிக்கப் பட்டது. அனேகமாக, இந்தக் காட்சிகள் மட்டுமே மேற்கத்திய ஊடகங்களினால் மிகைப் படுத்தி தெரிவிக்கப் பட்டன.
படங்கள், தகவல்களுக்கு நன்றி:
Red- Color News Soldier, Li Shenzheng
Rode Morgen, 1 mei 2016
Red- Color News Soldier, Li Shenzheng
Rode Morgen, 1 mei 2016
No comments:
Post a Comment