Sunday, May 08, 2016

அரசியல் பழகு, அபத்தங்களுக்கு பதிலளி: எது புரட்சி? எது ஜனநாயகம்?

"புர‌ட்சி செய்யாதே! பூப் ப‌றித்து பூஜை செய்!" - இது க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ஸ் போதிக்கும் ஜ‌ன‌நாய‌க‌ பாட‌ம். முத‌லில், இந்தியாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லில் ஒரு "இந்திய‌ சாவேஸ்" தேர்ந்தெடுக்க‌ப் ப‌டும் நிலைமை வ‌ர‌ட்டும். அப்போது தெரியும் இந்தப் போலி ஜ‌ன‌நாய‌க‌ம் என்ன‌ பாடுப‌ட‌ப் போகிற‌தென்று.

தி இந்து பத்திரிகையில், புரட்சிகர அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல் பழகு: எது நவயுக புரட்சி? என்ற அந்தக் கட்டுரையில், அரசியல் மயப்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான புத்திமதிகள் கூறுகின்றார்.

"ஆயுதப்புரட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்கும் வயதில் புரட்சியை பற்றி நினைக்காதீர்கள். படித்து உத்தியோகம் பார்த்து சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்..." இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.

புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, இதுவும் காலம் காலமாக "பெரியவர்களினால்" சொல்லப் பட்டு வரும் அறிவுரை தான். நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்த காலத்தில் தான் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அப்போதும் நமது பெற்றோர்கள், நம்மூர் பெரியவர்கள் சமஸ் மாதிரி அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "அந்த இளைஞர்களைப் பாருங்கள்... எந்தவித அரசியல் நாட்டமும் இன்றி படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்..." என்று சிலரை உதாரண புருஷர்களாக சுட்டிக் காட்டினார்கள்.

அன்று ஈழப்போராட்டம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், கவனமாகப் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்தவர்கள் பலருண்டு. அதே நேரம், படிப்பை பாதியில் விட்டு விட்டு முழுநேர ஈழ அரசியலில் ஈடுபட்ட இளைஞர்களும் உண்டு. தமது உயிர், உடைமைகளை பணயம் வைத்து, அத்தகைய இளைஞர்கள் செய்த தியாகத்தினால் நன்மை அடைந்தவர்கள் சிலருண்டு. அவர்கள் தான், சமஸ் கூறும் "சமர்த்துப் பிள்ளைகள்"! தமது உத்தியோகத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, ஜனநாயக வழியில் கட்சி அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ் கூறும் அறிவுரைகள், எவ்வாறு ஈழப் போராட்டத்தில் "பரீட்சித்துப்" பார்க்கப் பட்டன என்பதற்கு இதுபோன்ற ஆயிரம் உதாரணங்களைக் காட்டலாம். தற்போது சமஸ் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய காரணம் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள், "கம்யூனிசம் கல்லறைக்குள் போய்விட்டது" என்று புளுகித் திரிந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் கம்யூனிச புரட்சிகர அரசியல் சக்திகள் நலிவடைந்த நிலையில் இருந்தன. ஏற்கனவே இருந்த ஆதரவாளர்களே காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், இனிவரும் புதிய தலைமுறை அதில் நாட்டம் கொள்ளாது என்று நம்பினார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கலின் தாக்கமும், தீர்க்கப் படாத மனித அவலங்களும், மீண்டும் ஒரு புரட்சிகர அரசியலின் தேவையை உணர்த்தின. இன்று உலகம் முழுவதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புரட்சிகர கம்யூனிச அரசியல் பேசுமளவிற்கு காலம் மாறி விட்டது. சமஸ் அதையெல்லாம் கண் முன்னால் கண்டு வந்துள்ளார். ஒருவகையில், சமஸ் எழுதியுள்ள கட்டுரையானது ஒரு நிகழ்கால யதார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது.

இந்த உண்மையை சமஸ் தனது கட்டுரையில் பிரதிபலிக்கிறார்: 
//சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.//

குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, தமிழ் இளைஞர்கள் அரசியல் நீக்கப் பட்ட சமூகமாக இருந்தனர். மத்தியதர வர்க்கத்தினர் மேற்கத்திய கலாச்சாரத்தை போட்டி போட்டுக் கொண்டு பின்பற்றினார்கள். "எனக்கு அரசியல் தெரியாது... அதில் நாட்டமும் இல்லை." என்று சொல்வதே நாகரிகம் என்று கருதப் பட்டது. அரசியல் நீக்கம் செய்யப் பட்ட இளைஞர் சமுதாயத்தில், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசும் இளைஞர்களும் இருப்பார்கள் என்பதை சமஸ் போன்றவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவர்கள் பயந்து கொண்டிருந்த கெட்ட கனவு பலித்து விட்டது. அரசியல்மயப் பட்ட இளைஞர்களுக்கு, ஜனநாயக விழுமியங்களை கற்றுக் கொடுப்பதால், எதிர்காலத்தில் புரட்சியை தவிர்க்கலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

சமஸ்: //நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது?//

முதலில் புரட்சி என்பதை "ஆயுதக் கிளர்ச்சி" என்று புரிந்து கொள்வதே அபத்தமானது. "முதலாளிய வர்க்கம் அமைதியான வழியில் அதிகாரத்தை மாற்றித் தந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அப்படி நடக்குமா என்பதே கேள்விக்குறி." இது 150 வருடங்களுக்கு முன்னர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய வாசகம்.

சமஸ் கூறுவது போல, "ஜனநாயக யுகத்தில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை" தவிர்க்க முடியாதா? இந்திய முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இந்திய முதலாளிகளும், அமைதியான முறையில் நாட்டின் அரசியல் - பொருளாதார அதிகாரம் முழுவதையும், கம்யூனிசப் புரட்சிகர இயக்கங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஏதாவதொரு கரீபியன் தீவுக்கு சென்று ஓய்வெடுக்கட்டுமே? யார் வேண்டாம் என்றார்கள். அப்படி நடக்குமா என்பது தான் கேள்வி. அந்த இடத்தில் தான் புரட்சியின் தேவை எழுகின்றது. 

அது சரி, கடந்த நூற்றாண்டில் உலகில் எந்த நாட்டிலும் அமைதி வழிப் புரட்சி நடக்கவில்லையா? 1974 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் நடந்த சோஷலிசப் புரட்சியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. 1918 ம் ஆண்டு, ஹங்கேரி சோவியத் அரசு ஜனநாயக வழியில் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தப் புரட்சி ஆயுதக் கிளர்ச்சியாக நடக்கவில்லை.

சிலி நாட்டில் ஜனநாயக தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் தான் புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இறுதியில் சிலியின் அமைதியான ஜனநாயகப் புரட்சி நசுக்கப் பட்டது ஏன்? சமஸ் பெருமையுடன் குறிப்பிடும் அதே ஜனநாயக தேர்தலில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, சதிப்புரட்சியாளர்களினால் ஆயுதமுனையில் நசுக்கப் பட்டது. 

சிலியில் நடந்த சதிப்புரட்சிக்கும், அதைத் தொடர்ந்த இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்கா உதவியது எல்லோருக்கும் தெரியும். சமஸ் பயமுறுத்தும் புரட்சிகர கம்யூனிச/சோஷலிச சக்திகளின் ஆட்சிக் காலத்தில் சிலியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. ஆனால், சமஸ் போற்றும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக் காலத்தில் இருபதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் (இனப்)படுகொலை செய்யப் பட்டனர்.

சமஸ்: //இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக் கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.//

லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த மேற்குலகம் ஆதரித்த "புரட்சிப் படைகள்", அஹிம்சைப் போராட்டமா நடத்தின? லிபிய ஜிகாதியக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதை மேற்கத்திய நாடுகள் பெருமையோடு சொல்லிக் கொண்டன. சிரியாவிலும் சுதந்திர சிரிய இராணுவம் என்ற புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தன. சமஸ் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பார்: "மேற்குலக எதிரி நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது நல்லது. மேற்குலக நட்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது கூடாது."

சமஸ்: //ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.... பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது.//

மேற்குறிப்பிட்ட மூன்று புரட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நோக்கங்களுக்காக நடந்தவை. அவற்றை, ஒரே தட்டில் வைத்து ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அபத்தமானது. "ரஜனிகாந்த், விஜயகாந்த் அண்ணன் தம்பி" என்பது போன்ற பாமரத்தனமான கூற்று. 

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சிக்கு எதிராகத் தான் நடந்தது. ஆனால், அதற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த நெப்போலியன் போர்களினால் மன்னர்களின் அதிகாரம் கணிசமான அளவு குறைந்து போனது. வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியுற்றாலும், அவன் கொண்டு சென்று பரப்பிய "லிபரலிசம், தேசியம், முதலாளித்துவம்" போன்ற புதிய அரசியல்-பொருளாதார சித்தாந்தங்கள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி விட்டன. 

பல ஐரோப்பிய நாடுகளில், பூர்ஷுவா வர்க்கம் (அல்லது முதலாளித்துவவாதிகள்) அதிகாரத்திற்கு வந்தது. லிபரல்வாதிகள் என்று அழைத்துக் கொண்ட பூர்ஷுவா வர்க்கம், அரச பரம்பரையுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது. பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளில் அந்த அமைப்பை "பாராளுமன்ற சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி" (Constitutional Monarchy)  என்று அறிவித்துக் கொண்டனர்.

அந்தக் கால ரஷ்யா இரண்டு புரட்சிகளை கண்டிருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த புரட்சியில், சார் மன்னனின் அதிகாரம் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. அது லிபரல்வாதிகளின் புரட்சி. அதற்குப் பிறகு தான் ரஷ்யாவில் பல கட்சிகள் பங்குபற்றும் பாராளுமன்ற அமைப்பு வந்தது. முதலாளித்துவமும் கணிசமான அளவு வளர்ச்சியைக் கண்டிருந்தது. உண்மையில் போல்ஷெவிக்குகள் நடத்திய புரட்சி, லிபரல் அரசுக்கு எதிராகவே நடந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு போல்ஷெவிக் புரட்சியாளர்களினால் கவிழ்க்கப் பட்ட லிபரல் அரசு தான், இன்றைக்கு இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் உள்ளது. அதைத் தான் சமஸ் "ஜனநாயக அரசு" என்று சொல்கிறார். அனேகமாக, முதலாம் உலகப்போர் வரையில், உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல்கள் நடக்கவில்லை. அதனால் ஜனநாயக நாடுகளும் இருக்கவில்லை. ஏனென்றால், அன்று அனைத்து குடி மக்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப் படவில்லை. பெருமளவு சொத்து வைத்திருந்த மேட்டுக்குடியினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.

1949 ம் ஆண்டு நடந்த சீனப் புரட்சி காலனித்துவத்திற்கு எதிரானது. அப்போது சீனாவில் மன்னராட்சி இருக்கவில்லை. சீனப் புரட்சி நடப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே, சீனா பிரிட்டனின் அரைக் காலனியாக மாறிவிட்டது. சீன சக்கரவர்த்தி பொம்மையாக வைக்கப் பட்டிருந்தார்.

சன்யாட்சன் தலைமையில் லிபரல்களான சீன தேசியவாதிகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சீனா ஜப்பானின் காலனி நாடாகி விட்டிருந்தது. மாவோவின் கம்யூனிசப் படைகள், ஒரு புறம் ஜப்பானிய காலனியாதிக்கப் படைகளையும், மறுபுறம் சீனத் தேசியவாத படைகளையும் எதிர்த்துப் போராடினார்கள்.

சமஸ்: //2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக் கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!//

பனிப்போர் காலத்தில் உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்தது. ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்கு கட்டுப்பட்டது. 2001-க்குப் பிறகு, அது மென்மேலும் உறுதியாக்கப் பட்டது. 

2001-க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றமானது, ஆயுதக் குழுக்களுக்கு மட்டும் எதிரானது என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பெரிய நாடுகள் கூட எதிரிகளாக்கப் பட்டன. லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தமும், 2001 நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடந்தது.

ஆகவே, ஒரு சிறிய ஆயுதக் குழு அரசை எதிர்க்கிறதா இல்லையா என்பதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக, ஒரு சிறிய இயக்கம் அல்ல, ஒரு பெரிய அரசு இருந்தாலும் அகற்றப் பட்டு விடும் என்பது தான் யதார்த்தம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் கூட அவ்வாறு தான் "சமநிலைப்" படுத்தப் பட்டனர்.

சமஸ்: //பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.//

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? "ஜனநாயகம்" என்றால் என்ன?

முதலில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இது தான் ஜனநாயகம் என்ற வரையறை இருக்கிறதா? பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஜனநாயக  அமைப்பில் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. அதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். வாக்குரிமை பெற்ற மக்கள் தமக்குப் பிடித்த ஒருவரை தெரிவு செய்வார்கள். ஆயினும், அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 

இன்றைக்கு நாம் காணும் முதலாளித்துவ - ஜனநாயகத்திற்கும், கிரேக்க ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் உருவான நவீன ஜனநாயகம் இது. இதற்குப் பெயர் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்".  பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் அழைக்கலாம். ஆனால் அது மட்டும் தான் ஜனநாயகம் அல்ல. 

பாராளுமன்றத் தொகுதிகளுக்கு, ஐந்து வருடங்களுக்கொரு தடவை நடக்கும் தேர்தலில், மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதுவும் பெரும்பாலான நாடுகளில் கட்சிகளுக்கு மட்டும் தான் ஓட்டுப் போடலாம். அதிலும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, எப்போதும் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன, அல்லது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. 

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்த போதிலும், இந்தியா இன்னமும் ஒரு வறிய நாடாகவே இருப்பது எதைக் காட்டுகின்றது? எந்தக் கட்சியிடமும் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான திட்டம் கிடையாது. அப்படி ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அப்படி இருந்திருந்தால் இந்தியா இன்றைக்கு மேலைத்தேய நாடுகளின் தரத்திற்கு நிகராக வந்திருக்குமே? இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பது சாதாரண பாமர மக்களுக்கும் தெரியும்.

பல கட்சி ஜனநாயகம் நிலவும் நாடுகளில், கட்சிகள் பணத்தை அள்ளியெறிந்து தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. பணபலம் இல்லாத கட்சி, குறைந்தது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. அது மட்டுமல்ல, மக்களை இனம், மதம், சாதி அடிப்படையில் பிரித்து அரசியல் செய்வதால் தான், பெரும்பான்மைக் கட்சிகள் தேர்தல் களத்தில் நின்று பிடிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கட்சி மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்டிருக்கிறது? அப்படியே முயற்சித்தாலும் அது நடக்கிற காரியமா?

சோஷலிச புரட்சி நடந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று சமஸ் எங்கே படித்தார்? அந்த நாடுகளில் அரசு அதிகார நிறுவனங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. பாடசாலைகள், தொழிற்சாலைகள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் நடந்தன. வேட்பாளராக நிற்பவர் ஆளும் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏராளமான பணம் செலவளித்து பரப்புரை செய்வதில்லை. அவர்கள் தங்களது கொள்கைகள், திட்டங்களை பற்றி மட்டுமே தெரிவிப்பார்கள். 

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் அனைத்து ஜனங்களும் சமமாக நடத்தப் படுகின்றனரா? பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஏழைகளுக்கு கிடைக்கின்றதா? உயர் சாதியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கிடைக்கின்றதா?

"ஜனங்களுக்குள்" ஏனிந்த பிரிவினை? இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் ஒடுக்கப் பட்ட நேரம், ஒரு "ஜனநாயக" அரசு அவர்களை ஜனங்களாக கருதவில்லையா? அதே மாதிரி, இந்தியாவில் உள்ள "ஜனநாயக" அரசு, காஷ்மீர், அசாம் மக்களை ஒடுக்கிய நேரம், அவர்கள் "ஜனங்கள்" என்ற பிரிவுக்குள் அடங்கவில்லையா?

ஒரு முதலாளித்துவ நாட்டில், சிறுபான்மை மேட்டுக்குடியினர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். மத்தியதர வர்க்க மக்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். அதன் அர்த்தம் அந்த நாடுகளில் வர்க்கப் பாகுபாடு உள்ளது என்பது தானே?

சோஷலிசப் புரட்சி நடந்த நாடுகளில் அந்த நிலைமை தலைகீழாக மாற்றப் பட்டது. அதாவது ஏழைகள், அடித்தட்டு ம‌க்க‌ள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி இருந்தனர். காலங்காலமாக ஆண்டு அனுபவித்து வந்த நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர் சமூகத்தில் கீழ் நிலைக்கு வந்தனர். அதாவது, "தாழ்த்தப் பட்டவன் உயர்த்தப் பட்டான். உயர்த்தப் பட்டவன் தாழ்த்தப் பட்டான்." இதைத் தான் "ஜனங்களை காலில் போட்டு நசுக்கினார்கள்" என்று சமஸ் குறைப் படுகின்றார்.

அரசியல் பழகுவோம்....

No comments: