Friday, March 18, 2016

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்

விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழினியை மோசமாக சித்தரிக்கும் ஆபாசக் கதையை ஒரு புலி ஆதரவாளர் எழுதி இருக்கிறார். "சாகாள்" என்ற தலைப்பின் கீழ் அகரமுதல்வன் என்பவர் எழுதிய கதையை பலரும் விமர்சித்து விட்டார்கள். அந்தக் கதை எழுதியவரின் இனவெறி, பிரதேசவாதம், வர்க்க வெறுப்பு பற்றி இன்னமும் யாரும் விமர்சிக்கவில்லை.

புலி எதிர்ப்பாளர்கள் வன்மையான கண்டனங்களையும், புலி ஆதரவாளர்கள் மென்மையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். அகரமுதல்வன் என்ற "புலி ஆதரவாளரே" ஒரு "புலி எதிர்ப்பு இலக்கியம்" எழுதும் அளவிற்கு, அவருக்கு நேர்ந்த மனப்பிறழ்வு என்ன? ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத் தமிழர்களை வெறுக்கும், மேட்டுக்குடி வர்க்கத் திமிரைத் தவிர இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்? 

அகரமுதல்வனின் ஆபாசக் கதை தொடர்பாக பலர் கவனிக்கத் தவறுகின்ற விடயங்கள் இவை:


 • புலிப் போராளிகளை புனிதர்கள் என்று கொண்டாடும் அதே தமிழ்ச் சமூகம் தான், போர் முடிந்த பின்னர் முன்னாள் போராளிகளை கைகழுவி விட்டது. ஒரு சிலருக்கு, அதாவது தமிழ் மேட்டுக்குடியினருக்கு புலிகள் எப்போதும் கருவிகள் தான். தேவை முடிந்த பின்னர் வீசி எறிந்து விட்டார்கள்.

 • புலிகள் இருந்த காலத்தில் அகரமுதல்வன் இப்படி ஒரு கதை எழுதத் துணிந்திருக்க மாட்டார். எழுதி இருந்தால், புலிகளின், அல்லது புலி ஆதரவாளர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி இருப்பார். அந்தக் காலங்களிலும் எத்தனையோ பெண் போராளிகள், சிறிலங்கா படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டனர்.

 • தமிழினி எழுதிய நூல் (ஒரு கூர்வாளின் நிழலில்), புலிகள் அமைப்பின் மீதும் பாரபட்சமற்ற விமர்சனம் வைத்துள்ளது. அதனை பல புலி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்பதால், தனிப்பட்ட முறையில் தமிழினிக்கு எதிராக பேசி வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே அகரமுதல்வன் இந்த அவதூறுக் கதையை எழுதி இருக்கிறார். இந்தக் கதை மூலம், புலி ஆதரவாளர்கள் மத்தியில் தனது மதிப்பை உயர்த்திக் கொள்வது அவரது நோக்கம்.

 • அகரமுதல்வன், ஒரு சிங்கள இராணுவவீரனின் இனவெறிக் கண்ணோட்டத்தில் அந்தக் கதையை எழுதி இருக்கிறார். இதன் மூலம் இனவெறி என்பது மொழி வேற்றுமை கடந்த உணர்வு என்பதை நிரூபித்துள்ளார். பெண் போராளிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் சிங்களப் படையினருக்கும், அகரமுதல்வனுக்கும் இருப்பதும் ஒரே (இன) வெறி உணர்வு தான். அது பெண்களை பாலியல் பண்டங்களாக மட்டும் பார்க்கின்றது. 

 • அகரமுதல்வனின் கதை முழுவதும், கேட்பதற்கு நாதியற்ற ஏழைப் பெண் போராளிகளை, சிங்களப் படையினருடன் சேர்ந்து புணரும் வக்கிரமான எழுத்துக்களை கொண்டுள்ளது. அதற்குக் காரணம்? அகரமுதல்வனின் அடிமனதில் உள்ள வர்க்கத் துவேஷம்

 • புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இராணுவக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். அகரமுதல்வன் மதிவதனியை மையமாக கொண்டு சாகாள் என்ற கதையை எழுதி இருக்க முடியுமா? இந்நேரம் புலி ஆதரவாளர்கள் வீடு தேடி வந்து அடித்திருப்பார்கள்.

 • அகரமுதல்வன் தமிழினிக்கு பதிலாக மதிவதனியை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்க மாட்டார். அதற்குக் காரணம், மதிவதனியின் ஊர்க்காரர்கள் தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். புலிகளுக்கு தாராளமாக நிதி வழங்கும் அளவிற்கு வசதியானவர்கள் பலர். மதிவதனி பற்றி கதை எழுதி இருந்தால், அகரமுதல்வன் மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் பயமுறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பார்.

 • தமிழினி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக வன்னியில் வாழ்ந்த வறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். தமிழினி புலிகள் இயக்கத்தில் இருந்த காலங்களிலும், யுத்தம் முடிந்த பின்னரும் தனது உழைக்கும் வர்க்க அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்தவர். குரலற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். இதற்கு அவரது கூற்றுக்களே சாட்சியமாக உள்ளன. இறப்பதற்கு முன்னர் தனது முகநூலில் அத்தகைய கருத்துக்களை எழுதியுள்ளார். 

 • இன வாதிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், "தமிழர்கள் ஓர் இனம் என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றனர்" என்று தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், உண்மையான ஒடுக்கப்பட்டவர்கள் தமிழ் இனத்திற்குள் உள்ள ஏழை பாட்டாளி வர்க்கத்தினர் தான் என்ற உண்மையை மறைப்பார்கள். 

 • யுத்தம் முடிந்த பின்னர், வன்னியில் எஞ்சிய அத்தனை மக்களும் சிறிலங்கா இராணுவத்தால் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அப்போது பலர், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து விட்டு, முகாமை விட்டு தப்பியோடினார்கள். அவர்கள் எல்லோரும் வசதி படைத்தவர்கள். சில புலி இயக்க தலைவர்கள், உறுப்பினர்களும் அதில் அடங்குவார்கள்.

 • பண வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களை சேர்ந்த போராளிகள் தான், சிறிலங்காப் படையினரின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையும் அனுபவித்தனர். அவர்களை சுட்டுக் கொன்றாலும் கேட்க ஆளிருக்கவில்லை. அப்படியான இழப்பதற்கு எதுவுமற்ற மக்களைத் தான் அகரமுதல்வன் தனது கதையில் குரூரமாக சித்திரவதை செய்து இரசிக்கிறார். ஏனென்றால் அவர்களுக்காக வாதாட யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியம்.

ஈழப்போரானது எத்தனையோ தடவைகள் வர்க்க வேற்றுமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. உண்மையில், இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தால், சமூகம் அதை மூடி மறைக்கும். அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி யாரோ ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள். சிங்கள அரசு அதிகாரிகளிடம் சோரம் போன தமிழ் மேட்டுக்குடிப் பெண்களும் உண்டு. அவர்களைப் பற்றிய கதைகளை எழுதும் தைரியம், அகரமுதல்வன் போன்ற மேட்டுக்குடி அடிவருடிகளுக்கு கிடையாது.


No comments: