Tuesday, March 22, 2016

இலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது


ஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் "வாழைப்பழக் குடியரசுகள்" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்கள், அந்த நாடுகளில் வாழைமர பெருந் தோட்டங்கள் அமைத்திருந்தன. அவை தேசத்திற்குள் இன்னொரு தேசமாக இயங்கின. தொழிலாளர்களை சுரண்டுவது மட்டுமல்லாது, ஊழல்களில் ஈடுபட்டு வந்தன.

உள்நாட்டுப் போர்கள், சர்வாதிகார ஆட்சி, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, இப்படியான பொதுத் தன்மைகளை கொண்டிருக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் சார்பாக, அமெரிக்க அரசு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும்.

அதே மாதிரி, இலங்கையும் வாழைப்பழக் குடியரசு என்று அழைக்கப் படும் பெருமையை பெற்றுவிட்டது. ஈழப்போர் முடிந்த கையோடு மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள், இலங்கையில் கால்பதித்து வருகின்றன. அவர்கள் வர்த்தகம் செய்வதற்கு இவ்வளவு காலமும் தடையாக இருந்த புலிகளின் அழிவைக் கொண்டாடுகின்றன. (இது ஒன்றும் இரகசியம் அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அஞ்சிய காலம் ஒன்றிருந்தது.)

தமிழ்ப் பிரதேசங்களில் நடக்கும் நில அபகரிப்புகள் பற்றி மட்டுமே தெரிந்த நமக்கு, இலங்கை முழுவதும் நடக்கும் நில அபகரிப்புகள் தெரிவதில்லை. நமது தமிழ் ஊடகங்களும் அதைப் பற்றிச் சொல்வதில்லை. இன்று இராணுவம் அபகரிக்கும் தமிழரின் நிலங்கள் கூட, நாளைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வலதுசாரி அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், தமிழ் மக்கள் மத்தியில் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மறுத்து வருகின்றன.

ஈழப்போர் முடிந்த அடுத்த வருடமே, உலகின் பிரபலமான வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனமான Dole இலங்கையில் காலூன்றியது. ஏக்கர் கணக்கில் நிலங்களை அபகரித்து வாழைமர பெருந் தோட்டங்களை அமைத்தது. தடைசெய்யப் பட்ட பூச்சி கொல்லி மருந்துக்களை பாவித்து சர்ச்சைக்குள் மாட்டியது. ஒரு தடவை, விலங்குகள் சரணாலயத்தில் நிலம் ஆக்கிரமித்த குற்றச்சாட்டில், அந்த நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு வென்றதால், டோல் நிறுவனம் மன்னிப்புக் கோரியது.

ஆயினும், மைத்திரியின் நல்லாட்சிக் காலத்தில், மீண்டும் நில அபகரிப்பு தொடங்கியுள்ளது. பல நிலங்களை அரசே தாரை வார்த்து வருகின்றது. ஏற்கனவே, டோல் நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசை கைக்குள் போட்டுக் கொண்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வரலாற்றை இன்று அனைவரும் மறந்து விட்டார்கள்.

ஏகாதிபத்தியம், இலங்கையில் இனப்பிரச்சினைகளை தூண்டி விட்டு, அந்த நெருப்பில் குளிர் காய்கின்றது. எதற்காக? டோல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையை மறுகாலனிப் படுத்துவதற்கு வழி சமைப்பதே அதன் நோக்கம். ஈழப்போரில் மிகப்பெரிய அழிவை சந்தித்த மக்கள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கத் துணிய மாட்டார்கள். தமிழர்களான நாங்கள்,   இந்த உண்மையை  கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, காலம் முழுவதும் தமிழீழக் கனவு காண்போம். ஆமென்!

மேலதிக தகவல்களுக்கு:
US multinational Dole scraps Sri Lanka banana plans
http://www.bbc.com/news/world-asia-15845457
Doling Out State Land To MNCs!
http://www.thesundayleader.lk/2015/07/12/doling-out-state-land-to-mncs/

1 comment:

jayarani said...

Idhu. Sariyana news