Friday, March 11, 2016

தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி


பகுதி - 1

 "சிங்கள சீமான்" ராஜபக்சேயும், 
"தமிழ் ராஜபக்சே" சீமானும்


சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொண்டு வந்து கொடுத்தார்களா? புலிகளுக்காக எங்காவது வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா? 

தமது வாழ்க்கையில் இது போன்ற எதையுமே செய்யாதிராத போலிப் புலி ஆதரவாளர்கள் தான் இந்த நாம் தமிழர் கட்சியினர். ஆனால், அவ்வாறான அர்ப்பணிப்புகளை செய்தவர்களுக்கு எதிராகவே அவர்களது அரசியல் அமைந்துள்ளது. நாம் (போலித்) தமிழர் கட்சியினர், உண்மையிலேயே புலிகளுக்காக பாடுபட்டவர்களையும், ஈழப்போராட்டத்தில் பங்களித்தவர்களையும் அவமதிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈழப்போர் நடந்த முப்பதாண்டு காலத்தில், சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், ஈழத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 2009 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில், திடீரென முளைத்த நாம் (போலித்) தமிழர்கள், புலிகளின் அழிவை மூலதனமாக்கி அரசியல் செய்தனர். உண்மையாகவே புலிகளுக்கு உதவியவர்கள் மீது அவதூறு செய்வதும், வசை பாடுவதும், அவர்களது அன்றாட அரசியலாக உள்ளது. பார்ப்பன அடிவருடிக் கும்பலான சீமானும், நாம் (போலித்) தமிழர் கட்சியும், ஈழப் போராட்டத்திற்கு செய்த துரோகமும், ஏற்படுத்திய பின்னடைவுகளும் மிக மிக அதிகமாகும்.

இனிமேல் ஒரு ஈழப் போராட்டம் வர விடாமல் தடுப்பதும், தமிழ்நாட்டில் பொதுவாக உள்ள தமிழ் தேசிய உணர்வை இனவாதமாக குறுக்கி சிதைப்பதும், நாம் (போலித்) தமிழர் கட்சியின் குறிக்கோளாக உள்ளது. இந்த நுண்ணரசியலை, சீமானின் பேச்சுக்களில் இருந்தும், அவரது ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களில் இருந்தும் புரிந்து கொள்ளலாம்.

நாம் (போலித்) தமிழர் கட்சிக்கென நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாது. அது காலத்திற்கு ஏற்றவாறு அடிக்கடி மாறுபடும். சீமானின் வாயில் இருந்து என்ன வந்தாலும் அது கொள்கை தான். சீமான் யாரையாவது "ங்கோத்தா" என்று திட்டினாலும், "லூசாடா நீ" என்று ஏசினாலும், அதை நியாயப் படுத்தி வாதிட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 

சீமான் தனது முப்பாட்டன் முருகன் என்று வேல் தூக்கி ஆடினாலும் அதுவே ஒரு கொள்கையாகி விடும். உலகில் உள்ள தீவிர வலதுசாரி பாசிசக் கட்சிகளுக்கே உரிய பொதுவான குணாம்சம் அது. தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. 

சிங்கள இனவாதத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் முப்பாட்டனும் முருகன் தான்! துட்டகைமுனு கதிர்காமக் கந்தனை வழிபட்டு விட்டு, எல்லாளனுடன் போருக்கு சென்றதாக மகாவம்சம் கூறுகின்றது. அதையே "நவீன துட்டகைமுனு" ராஜபக்சேவும் பின்பற்றுள்ளார். 

"ஈழத்தில் சிங்களவர்கள் எனது இனத்தை அழிக்கிறார்கள்..." என்று அனைத்து சிங்களவர்களையும் தமிழர்களின் எதிரிகளாக காட்டி அரசியல் செய்யத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். சிங்கள மாணவர்களை படிக்க விடாமல் விரட்டினார்கள்.

இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக, இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசு சீமானுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை பற்றி எதுவும் தெரியாதவர்கள் மட்டும் தான், நாம் (போலித்) தமிழர் கட்சியினரின் செயல்களை நியாயப் படுத்துவார்கள்.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்கியதில், சிங்கள இனவாதிகள் காட்டிய வெறித்தனம் மறுக்க முடியாத உண்மை. உலகில் எந்தவொரு இனவாதியும், தான் இனவாதி தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு மாறாக எதிரி இனத்தவர்கள் தான் இனவாதிகள் என்று சொல்லிக் கொள்வார்கள். சிங்கள இனவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சே கூட, "இனவாதம் பேசாதீர்கள்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை கண்டித்து வந்தார். ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் ஒரு தடவை கூட, சிங்கள இனவாதக் கட்சிகளை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

ஒரு ஜனாதிபதிக்கே சிங்களவர்களும் இனவாதம் பேசுவார்கள் என்ற புரிந்துணர்வு இல்லை. இந்த இலட்சணத்தில் சாதாரண சிங்களவர்கள், தாங்கள் இனவாதம் பேசுவதாக ஒத்துக் கொள்வார்களா? அதெல்லாம் "இனப் பற்று" என்று தான் விளக்கம் சொல்வார்கள். அவ்வாறு தான் நாம் தமிழர் ஆதரவாளர்களும் நடந்து கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்? சிறிலங்காவில் "ராஜபக்சே ஒரு சிங்கள சீமான்". தமிழ்நாட்டில் "சீமான் ஒரு தமிழ் ராஜபக்சே" என்பது மட்டும் தான் வித்தியாசம்.

மொழி ஒரு தடையாக இருப்பதால், மற்ற இனத்தவர்களின் எண்ணம் பற்றி எதுவும் தெரிவதில்லை. தமிழர்களைப் பற்றி பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள், இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, சிறுபான்மையினரான சிங்கள இனத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில், இந்தியர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சாதாரணமான சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அந்த எண்ணம் பெருமளவு மாறி விட்டது. இருப்பினும், "தமிழர்கள் சிங்கள இனத்தை அழிக்கக் கிளம்பியுள்ளனர்..." என்ற கருத்து மட்டும் மாறவில்லை.

ஈழப்போர் காலத்தில், எல்லைப்புற சிங்கள கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை கொன்ற புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள், அவர்களது தப்பெண்ணத்தை சரியென வாதிட வைத்தன. சிங்கள பொதுமக்கள் கொல்லப் படும் ஒவ்வொரு தாக்குதலும், தென்னிலங்கையில் சிங்கள இனவாத சக்திகளின் தமிழர் விரோத பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. அதே மாதிரி, தமிழ்நாட்டில் சிங்கள சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் சிங்கள இனவாதிகளுக்கு நன்மையாக முடிந்துள்ளது.

நாம் போலித் தமிழர் கட்சி சித்தரிப்பது போல, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்களா"? சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழர்கள் எல்லோரையும் கெட்டவர்களாக சித்தரித்துக் காட்டுகின்றன. அதையே தான் தமிழ் இனவாதக் கட்சியான நாம் தமிழரும் செய்கின்றது. இனவாதிகள் பேசும் மொழிகள் மட்டுமே வேறு வேறு. கொள்கை, குறிக்கோள் ஒன்று தான். தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ, மக்கள் எல்லோரும் இனவாதிகள் அல்லர். இனவாதிகள் தம்மைப் போலவே, தம்மின மக்கள் அனைவரும் சிந்திப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். நாம் தமிழர் மட்டுமல்ல, நாம் சிங்களவரும் அப்படித் தான் கருதிக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்:
"சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொடுத்தார்களா? புலிகளுக்காக வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா?"

ஈழப்போரின் இறுதிக் காலத்தில், ஜேவிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர், அதாவது இடதுசாரி சிங்களவர்கள், புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு புலிகள் வன்னியில் வைத்து இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். குறிப்பாக வெடி குண்டு வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள், தென்னிலங்கையில் தலைமறைவாக இயங்கினார்கள். இறுதிப் போர் நடந்த காலத்தில், கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்புகள் அவர்களினால் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

இருப்பினும், புலனாய்வுத்துறை எப்படியோ துப்புத் துலக்கி சூத்திரதாரிகளை பிடித்து விட்டது. அரசு அவர்களுக்கு "சிங்களப் புலிகள்" என்று பட்டம் சூட்டியது. புலிகளுக்காக குண்டு வைத்த சிங்களவர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்கள் கூட கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, கைது செய்யப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அயலவர்களின் ஏளனப் பேச்சுகள், பழிச் சொற்களை தாங்க முடியாமல், குடியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களப் புலிகளின்" குடும்பங்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப் பட்டனர். இந்த நிலைமை சீமானுக்கோ, அல்லது நாம் தமிழர் ஆதரவாளர்களுக்கோ ஏற்பட்டிருக்கிறதா?  

ஈழப்போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களுக்கான ஆவணங்களை வெளியிட்டவர்கள் யார்? சீமானா? அல்லது யாராவதொரு நாம் தமிழர் ஆதரவாளரா? இல்லவே இல்லை. புலிகளுக்கு ஆதரவான சிங்கள ஊடகவியலாளர்கள் தான், சனல் 4 தொலைக்காட்சிக்கு அந்த வீடியோவை அனுப்பினார்கள். 

"இலங்கையின் கொலைக்களம்" என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் பேட்டி கொடுக்கும் சிங்களவரான பாசனா யார் தெரியுமா? இலங்கையில் சிங்களப் புலி குற்றம் சாட்டப் பட்டு தேடப் படுபவர்களில் முதன்மையானவர். அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு, சில தமிழ் புலி ஆதரவாளர்கள் உதவி செய்துள்ளனர். 

இதை விட, எண்பதுகளில் சட்டர்டே ரிவியூ பத்திரிகையில் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதி வந்த காமினி நவரட்ன என்ற சிங்களவர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணம் சென்று, யாழ் பொறுப்பாளர் கிட்டுவை சந்தித்து பேசி, கைதிகள் பரிமாற்றத்திற்கு உதவிய விஜய குமாரணதுங்க என்ற சிங்களவர். இறுதி வரையில் புலிகளையும், தமிழீழத்தையும் ஆதரித்து பேசி வந்த விக்கிரமபாகு கருணாரட்ன என்ற சிங்களவர். இப்படிப் பல சிங்களவர்கள் ஈழப் போராட்டத்திற்கு தம்மாலியன்ற பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர்.

புலிகளுக்கு ஆதரவான சிங்களவர்கள் செய்த தியாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது, "செந்தமிழன்" சீமான், அல்லது நாம் "தமிழர்" கட்சியினர், ஈழப் போராட்டத்திற்கு செய்திருக்கிறார்களா? சொன்னால் வெட்கக் கேடு. ஒன்றுமேயில்லை. 

ஈழப் போராட்டத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவர்கள், சிங்களத் தோழர்கள் செய்த பங்களிப்பை அவமதிக்கும் வகையில், சிங்கள இன வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? சிங்கள, ஹிந்திய ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள் தான், சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் என்பதில் எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

(தொடரும்)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!
நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

3 comments:

MIX said...

https://mobile.facebook.com/story.php?story_fbid=698676006915098&id=505686786214022&refid=17&_ft_=top_level_post_id.1983531105205604%3Atl_objid.1983531105205604%3Athid.100006462009420%3A306061129499414%3A2%3A0%3A1459493999%3A-65042509436279393&__tn__=C

Karnaa Sattanathan said...

யோசிக்க வேண்டிய விடயம்...
அருமையான மாற்றுபார்வை....

Karnaa Sattanathan said...

அருமையான மாற்றுபார்வை