Sunday, July 19, 2015

"புலிகள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?" - ஒரு விவாதம்


புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள் (http://kalaiy.blogspot.nl/2015/07/blog-post_16.html) என்ற கட்டுரைக்கு இவ்வாறு ஒரு இடதுசாரி நண்பர் எதிர்வினையாற்றி உள்ளார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" 

பிரபாகரனோ, புலிகளோ தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. தங்கள் உறுப்பினர்களை தோழர் என்று கூட அழைக்காதவர்கள். அதற்காக, புலிகள் இயக்கத்தினுள் இடதுசாரியம் இருக்கவில்லை என்று கூற முடியாது.

முதலில் இடது, வலது பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்காக, அது பற்றி கட்டுரையாளர் என்ன நினைக்கிறார் என்பது குறித்த சிறு விளக்கம்:
 ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் இடதுசாரியம். சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் அல்லது மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கும் அரசியல் வலதுசாரியம். இடதுசாரி, வலதுசாரி என்பது பொதுப்படையான இரண்டு பிரிவுகள். இரண்டுக்கும் நடுவில் நிற்கும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள், அரசியலை எளிமைப் படுத்தி புரிந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்றன. இடதுசாரிகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

புலிகள் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் எடுத்திருந்தால் அது இடதுசாரியம் தான். இல்லை, முதலாளிகளின் திறந்த சந்தை முக்கியம் என்று நினைத்திருந்தால் அது வலதுசாரியம் தான்.

"ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், முதலாளித்துவ நலன் சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றது." 150 வருடங்களிற்கு முன்னர் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த கார்ல் மார்க்ஸின் கூற்று அது. கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்த ஐரோப்பாக் கண்டத்தில், பிரெஞ்சுப் புரட்சியும், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்களும் நடந்து முடிந்திருந்தன.

இருபதாம் நூற்றாண்டின் அரசியல் கோட்பாட்டுக் கண்ணாடி அணிந்து பார்த்தால், "நெப்போலியன் ஒரு வலதுசாரி பாசிஸ்ட்" தான். ஆனால், அந்தப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட லிபரல் அரசுகளும், முதலாளித்துவ பொருளாதாரமும், இன்று பலரும் ஜனநாயகம் பற்றி பெரிதாக பீற்றிக் கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்தன. (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)

புலிகள் இயக்கத்தில் காணப்பட்ட இடதுசாரியம் பற்றி எழுதினால், அதனை எந்தவொரு "புலி ஆதரவு வலதுசாரியும்" எதிர்ப்பதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோம் என்று மௌனமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், "புலி எதிர்ப்பு இடசாரிகள்" அதை மறுத்துப் பேசுவதற்கு என்ன காரணம்?

ஒரு தடவை, வட கொரிய எதிர்ப்பாளர் ஒருவரை, புலி எதிர்ப்பாளர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து இருந்தேன். தன்னை ஒரு புலி ஆதரவாளர் மாதிரி காட்டிக் கொள்ளும் வலதுசாரியான அவருக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்வதை விட, அவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

புலி எதிர்ப்பாளர்கள், ஈழத்தின் யதார்த்தத்தை, மக்களின் மனப்போக்குகளை புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே தவறை தான் அந்த வட கொரிய எதிர்ப்பாளரும் செய்திருந்தார்.

வட கொரிய மன்னராட்சியை தூற்றுவதாலும், மனித உரிமை மீறல்களை கண்டிப்பதாலும், அங்குள்ள மக்களை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்த முடிவதில்லை. இன்றோ, நாளையோ, வட கொரிய மக்களின் எழுச்சி நடக்கும் என்று, அமெரிக்காவும் இலவு காத்த கிளியாக காத்திருந்து ஏமாந்து போனது.

ஒரு தடவை, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தமிழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தமிழர் என்பதால் ஈழப் போராட்டம் பற்றியும், புலிகள் பற்றியும் நிறையவே அறிந்து வைத்திருந்தார். ஒரு கம்யூனிஸ்டான அவர், தமிழ் தேசியப் புலிகளை (அல்லது வலதுசாரி பாசிசப் புலிகளை) தீவிரமாக ஆதரித்து வந்தார். "புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்த" தகவல் கூட அறிந்து வைத்திருந்தார். புலிகளின் மனித உரிமை மீறல்கள், குற்றங்களை அவர் இவ்வாறு நியாயப் படுத்தினார்: 
  • "சீனப் புரட்சியின் போது கொலைகள் நடக்கவில்லையா? மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி பிற இயக்கங்களை தடை செய்து அழிக்கவில்லையா?" 
  • "அவர்கள் சோஷலிசத்தின் பெயரால் செய்ததை, புலிகள் தேசியவாதத்தின் பெயரால் செய்தார்கள்." 
  • "இது ஒரு புரட்சிகர காலகட்டம். எல்லா நாடுகளிலும் போராட்டம் நடக்கும் பொழுது, கொலைகள், மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் நடக்கவே செய்யும். இவை இல்லாமல் போராட்டம் நடப்பதில்லை."


பலர் இங்கே நினைவுகூர விரும்பாத உண்மை ஒன்றுள்ளது. புலிகள் வலதுசாரிகளையும் கொன்றார்கள். அது மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளையும் கொன்றார்கள்! புலிகளால் கொல்லப் பட்ட அமிர்தலிங்கம் போன்றோர் யார்? இடதுசாரிகளா? இல்லை, வலதுசாரி தமிழ் தேசியவாதிகள். புலிகள் அவர்களை தான் முதலில் அழித்தொழித்தார்கள். அதற்குப் பிறகு புலிகள் சொல்வது மட்டுமே தமிழ் தேசியம் என்று ஏற்றுக் கொள்ளும் புதிய தலைமுறை தமிழ் தேசியவாதிகளை உருவாக்கினார்கள்.

ஒரு நாட்டில் நடக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், மார்க்சிய பார்வையில் முற்போக்கானது. அது ஒரு ஜனநாயகப் புரட்சி என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. வலதுசாரிகளுக்கு இப்படி ஒரு மார்க்சியக் கோட்பாடு இருப்பது தெரியவே தெரியாது. இடதுசாரிகள் பலர் அதைக் கடந்து செல்லப் பார்க்கின்றனர். லெனின் அப்படியானவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள "தீவிர இடதுசாரிகள்" என்று அழைக்கிறார். லெனின் எழுதிய "இடதுசாரிக் கம்யூனிசம் - ஓர் இளம்பருவக் கோளாறு" என்ற நூல், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது.

இறுதிப்போர் காலத்தில், மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில், புலிகளுக்கு மக்களின் தார்மீக ஆதரவு இருந்து வந்தது என்ற உண்மையை மறுக்க முடியாது. அறிவுஜீவிகள் இதற்கு "Populist Strategy" என்று விளக்கம் கொடுக்கலாம். தீவிர வலதுசாரி சக்திகள் கூட, எப்போதும் இடதுசாரிய தந்திரோபாயத்தை வைத்து தான் மக்களை அணிதிரட்டுகின்றன.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியின் இறுதிக் காலத்தில், அந்த நாடு ஏகாதிபத்திய நெருக்குதலுக்குள் சிக்கித் தவித்தது. அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பிய இடதுசாரிகள் சதாம் ஆட்சியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஐரோப்பாவில் இருந்த ஈராக்கிய இடதுசாரிகள் அந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார்கள்.

சதாம் ஆட்சியை எதிர்ப்பதற்கு ஈராக்கிய இடதுசாரிகள் கூறிய காரணம்:"வலதுசாரி பாசிஸ்டான சதாம் ஹுசைன் ஈராக்கில் இருந்த இடதுசாரிகளை கொன்று குவித்தார். அவருக்கு இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!" அதையே இன்று எனக்கு ஒரு நண்பர் கூறுகிறார்: "வலதுசாரி பாசிஸ்டுகளான புலிகள் இடதுசாரிகளை கொன்று குவித்தார்கள். அவர்களுக்கு நீங்கள் இடதுசாரி சாயம் பூசாதீர்கள்!"

அந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களைப் பொறுத்தவரையில் அது நியாயம் தான். ஆனால், அரசியலில் ஆர்வமற்ற பெரும்பான்மை மக்களுக்கு, வலதுசாரி, இடதுசாரி அரசியல் ஒன்றும் புரியப் போவதில்லை. தமிழ் தேசியவாதிகள் தமிழீழம் அமைத்து தருகிறோம் என்றால் அதை நம்புவார்கள். இஸ்லாமியவாதிகள் கிலிபாத் அரசு அமைக்கிறோம் என்றால் அதையும் நம்புவார்கள். மக்கள் எப்போதும் அப்படித் தான்.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில், ஒரு தடவை, கொழும்பில் தங்கியிருந்த என்னைப் பார்ப்பதற்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மா வந்திருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, விமானக் குண்டுவீச்சுகளுக்கு தப்பி, மிகுந்த சிரமங்களுடன் வந்திருந்தார். சொல்லொணா துன்பங்களை அனுபவித்த போதிலும், மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்திற்கே திரும்பிச் சென்றார். "இனிமேல் எந்தக் காலத்திலும் இராணுவம் அங்கே வராது. பெடியள் விட மாட்டாங்கள்..." என்று, புலிகளின் இராணுவ பலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

சாதாரண மக்கள் அப்படித் தான். அவர்கள் புலிகளை பாசிஸ்டுகள் என்று ஒதுக்கவில்லை. சிங்கள இனவாத இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்புவதற்கு, புலிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை, இன்றைய சிங்கள பேரினவாத அரசு பாதுகாத்து வருகின்றது என்ற உண்மை மக்களுக்கு புரியாது. தீவிரமாக அரசியல் பேசும், வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கே இன்னும் தெரியாத விடயம் அது. மக்களுக்கு தெரியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

"2009 மே மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று, இன்றைக்கு கட்டப்பொம்மன் வசனம் பேசும் வலதுசாரி "டமில் தேசியவாதிகள்", புலிகள் பலமாக இருந்த காலங்களில் வாய்களை மூடிக் கொண்டிருந்தார்கள். சொந்தக் கருத்து எதுவுமின்றி, கிளிப்பிள்ளை மாதிரி, புலிகள் சொன்னதை ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். "புலிகள் சொன்னதெல்லாம் வேதம். செய்வதெல்லாம் சரியாகும்." என்று பக்கப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

"உலகில் சிறந்த கல்விமான்களை கொண்ட, யூதர்களுக்கு நிகரான ஈழத் தமிழ் சமூகம்" என்று பெருமையடித்துக் கொண்டிருந்த, உயர் கல்வி கற்ற தமிழ் மேட்டுக்குடி வர்க்கம், பத்தாம் வகுப்பு கல்வியைக் கூட முடித்திராத புலிப் போராளிகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தது. ஈழத்தில் இப்படி ஒரு சமூகப் புரட்சி நடக்கும் என்று, அவர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். இன்றைக்கு புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தில் அவர்கள் மீண்டும் தமது மேதாவிலாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி சமூக மாற்றத்தை பல "இடதுசாரிகள்" கவனிக்கத் தவறி விடுகின்றனர். வாழ்க்கையில் கிடைக்கும் உயர்தரமான வசதி வாய்ப்புகள் என்ற மாயை, இடதுசாரிகளையும் வலதுசாரிகளாக மாற்றும் சக்தி படைத்தது. எங்களுக்கு பிரபாகரனோ அல்லது புலிகளின் தலைமையோ முக்கியமல்ல. அவர்கள வலதுசாரி பாசிஸ்டுகளாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு பின்னால் சென்ற மக்கள் தான் எமக்கு முக்கியம். இறுதிப்போரில் தனது இயக்கம் செய்த தவறுகளை விமர்சிக்கும், சாதாரணமான முன்னாள் புலிப் போராளி, இன்றைக்கும் தனது தலைவனின் வழிகாட்டல் சரியானது என்று நம்புகிறான். அப்படியானவர்களை எவ்வாறு வென்றெடுப்பது?

"மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்." - மாவோ




இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

1 comment:

SaraK said...

இயக்க கொள்கையால் புலிகள் இடதுசாரிகள் இல்லை, ஆனால் போரட்ட கொள்கையால் அவர்கள் இடதுசாரிகள் தான். இருப்பினும், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உணவு, இடம், ஆயுதம் இதற்காக சில வலதுசாரிகலுடன் கை கோர்க்க வேண்டியிருந்தது. அதனை வலதுசாரிகள் அவர்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டனர்..

என் புரிதல் சரியா அய்யா...!!!