Thursday, July 16, 2015

புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்


தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கால் பதித்து விட்டிருந்தது. புத்தளத்தில் வாய்ஸ் ஒப் அமெரிக்கா தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப் பட்டமை இந்தியாவை அச்சுறுத்தியது. மேலும், இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகள் புதுப்பிக்கப் பட்டன.

"தமிழ்ப் பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போராடுவதற்காக, மொசாட், SAS, வழிகாட்டலின் கீழ் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப் பட்டது. ஐம்பதுகளில் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை தளம் வாபஸ் வாங்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது சர்வதேச நெருக்கடி அதுவாகும்.

இந்தப் பின்னணியில் தான், 1977 இனக் கலவரத்திற்குப் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்தது. கலவரத்தின் பின்னர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற "லங்கா ராணி" என்ற கப்பலில் பயணம் செய்த தமிழ் அகதிகள் மத்தியில், ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப் பட்டது. 

அப்போது நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட லங்காராணி என்ற நாவலில் வரும் ஒரு பாத்திரம் பின்வருமாறு பேசும்:"நாங்கள் கியூபாவுக்கு செல்வோம். காஸ்ட்ரோவுடன் தொடர்பு கொள்வோம். ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் நடத்த அவர்கள் எமக்கு உதவி செய்வார்கள்."

எழுபதுகளில் கியூபாவில் நடந்த சர்வதேச மாணவர், இளைஞர் மன்ற மகாநாட்டில் புலிகளின் சார்பாக இருவர் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதப் போராட்டத்திற்கான உதவி கோரப் பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே கியூபாவிடம் உதவி கேட்டிருந்தாலும், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில், அது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு சோவியத் யூனியனிடம் இருந்தது. ஆயினும் பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் நேரடியாக தலையிடவில்லை. அன்றிருந்த பல ஆயுதபாணி இயக்கங்களை, பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டது.

ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்குமான தொடர்பு பற்றி நிறைய ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன. அப்போது லண்டனில் இயங்கிய மார்க்சிய லெனினிச இயக்கமான ஈரோஸ், வன்னிக் காடுகளுக்குள் மறைந்திருந்த புலிகள் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். அந்தத் தொடர்பின் மூலம் பல புலி உறுப்பினர்கள் லெபனான் பயிற்சிக்கு அனுப்பப் பட்டனர். அன்று ஏராளமான ஈழத் தமிழ் போராளிகள் லெபனானில் தங்கியிருந்து பயிற்சி பெற்றனர். அங்கு நடந்த யுத்தங்களிலும், சில நேரம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிரான மோதல்களிலும் நேரடியாக பங்கெடுத்தனர்.

லெபனான் பயிற்சிக்கு அனுப்பப் பட்ட ஒவ்வொரு போராளிக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவாகின. அன்றைய நிலையில், பத்து, பதினைந்து உறுப்பினர்களுக்கு, சாப்பாடு போடுவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த, மிகச் சிறிய இயக்கமான விடுதலைப் புலிகள், அந்தளவு பணம் செலவு பண்ணி உறுப்பினர்களை லெபனானுக்கு அனுப்பி இருப்பார்களா? 

லெபனான் பயிற்சிக்கான செலவுகளை யார் பொறுப்பெடுத்தார்கள்? பாலஸ்தீன விடுதலை இயக்கம் பொறுப்பு என்று அறிவிக்கப் பட்டது. ஆனால், மறைமுகமாக சோவியத் உதவி செய்து கொண்டிருந்தது. தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் விழுந்த பின்னர் தான், சிலநேரம் அதற்கு முன்னர் கோர்பசேவ் காலத்தில், சோவியத் உதவி முடிவுக்கு வந்தது.

லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடனான தொடர்பு, எந்தளவு தூரம் புலிகளின் போராட்டத்தில் தாக்கம் உண்டாக்கியது என்பதை பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். புலிகள் வைத்திருந்த தற்கொலைப் படையான கரும்புலிகள் பற்றி பலரும் அறிந்து வைத்திருப்பார்கள்.


"ஜூலை 5, கரும்புலிகள் தினம்". புலிகள் பலமாக இருந்த காலங்களில், அது ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப் பட்டு வந்தது. தற்போது, ஒரு சில தீவிர புலி ஆதரவாளர்கள் மட்டுமே அதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களும் உலகமயமாக்கப் பட்ட உலகில், புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் ஏற்படுத்திய விளைவுகளை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஒரு விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம், உலகில் இன்னொரு மூலையில் நடந்த போராட்டங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்கின்றது. புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 1987 ம் ஆண்டு, ஜூலை 5, நெல்லியடியில் இருந்த சிறிலங்கா படையினரின் முகாமுக்குள், வெடிகுண்டு நிரப்பிய டிரக் வண்டி ஒன்று மோதியது.

அதிக பட்சம் நூறு படையினர் கொல்லப் பட்ட அந்த சம்பவம், முழு இலங்கையிலும் மட்டுமல்லாது, எல்லை கடந்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேப்டன் மில்லர் என்பவர் முதலாவது தற்கொலைப் போராளியாக தாக்குதலை நடத்தி இருந்தார். அதற்குப் பிறகு கரும்புலிகள் என்ற தனியான படையணியை நிறுவி, பல நூறு தற்கொலைத் தாக்குதல்களை திறம்பட நடத்தியமை வரலாறு.

தற்கொலைத் தாக்குதல் நடத்தும் போர்த் தந்திரத்தை புலிகள் எங்கே இருந்து கற்றுக் கொண்டார்கள்? லெபனான், பெய்ரூட் நகரம், 23 அக்டோபர், 1983, உலகைக் குலுக்கிய தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. அமெரிக்க மரைன் படையினரும், பிரெஞ்சு படையினரும் தங்கியிருந்த இராணுவ முகாமை இலக்கு வைத்து ஒரு டிரக் வண்டி மோதியது. அந்தத் தாக்குதலில் 299 அமெரிக்கப் படையினரும், சில பத்து பிரெஞ்சு வீரர்களும் கொல்லப் பட்டனர்.

அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பின்னர் ஹிஸ்புல்லா என்று அறியப்பட்ட இயக்கத்தினர். அவர்களும் தனியான தற்கொலைப் போராளிகளின் படையணியை உருவாக்கி வைத்திருந்தனர். நிச்சயமாக, 1983 ம் ஆண்டு லெபனானில் நடந்த தற்கொலைத் தாக்குதல், இலங்கையில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அன்றைய ஊடகங்கள் லெபனான் போருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி தெரிவித்து வந்தமையினால், இந்தத் தகவலையும் அறிவிக்கத் தவறவில்லை.

இன்றைக்கு புலி ஆதரவு அரசியல் பேசும் பலர், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளாக இருக்கலாம். அவர்கள் தமது சொந்த வர்க்க நலன் சார்ந்து, புலிகளை வலதுசாரிகளாக கட்டமைக்க விரும்பலாம். ஆனால், உண்மை நிலவரமோ அதற்கு நேர்மாறானது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குள் அடங்காத பலவீனமான பிராந்தியமான இலங்கையில், புலிகளின் போராட்டம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. அதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகுந்த எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்திய அடிவருடிகளான வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், புலிகளை "தூய தமிழ் தேசிய" அல்லது "தமிழ் இனவாத" இயக்கமாக சித்தரிக்க விரும்புகின்றனர். அவர்களது பங்காளியான சிறிலங்கா பேரினவாத அரசும், அதையே எதிர்பார்க்கின்றது. அப்போது தான் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை, சிங்கள மக்களிடமிருந்தும், சர்வதேச சமூகத்திடம் இருந்தும் அன்னியப் படுத்த முடியும் என்பது அரசின் நோக்கமாக இருந்தது.

உலகில் உள்ள பல விடுதலை இயக்கங்களின் மத்தியில், புலிகள் பலமானதாகவும், நீண்ட காலம் தாக்குப் பிடிக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். "ஒரு தேசிய இராணுவம் நீண்ட காலமாக போரிட்டுக் கொண்டிருந்தால், அது தோல்வியடைந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு கெரில்லாப் படை நீண்ட காலம் போரிட்டுக் கொண்டிருந்தால் அது வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது." என்ற மாவோவின் கூற்றை மெய்ப்பித்துக் காட்டினார்கள். இந்தக் கருத்தை அப்போதே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எதிரொலித்திருந்தனர்.

ஈழப்போரில் புலிகள் ஈட்டிய இராணுவ வெற்றிகளுக்குப் பின்னால், கம்யூனிச போரியல் உத்திகள் மறைந்திருந்தன. இருப்பினும் அதை உணர முடியாத அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கும் வலதுசாரி தமிழ் அறிவுஜீவிகள், "பண்டைய தமிழரின் வீரக் கலை" என்று கற்பனையான கோட்பாடு ஒன்றை கட்டமைக்க முனைகின்றனர். அந்த அறிவு "மரபணு வழியாக கடத்தப் பட்டிருக்கலாம்" என்று ஒரு வேடிக்கையான காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர்.

புலிகள் என்பது, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நவீன ஆயுதபாணி இயக்கம். அதற்கும் "பண்டைய தமிழரின் வீரக் கலைக்கும்" எந்தத் தொடர்பும் இல்லை. கியூப, வியட்நாமிய, பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தான் புலிகளுக்கு முன்னோடிகளாக இருந்தனர். அதை நிரூபிப்பதற்கு நாங்கள் பெரிதாக சிரமம் எடுக்கத் தேவையில்லை. கியூபாவில் காஸ்ட்ரோ-சேகுவேரா தலைமையிலான கெரில்லா இயக்கம் நடத்திய தாக்குதல்கள், அந்தக் காலத்தில் இயங்கிய உலக விடுதலை இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தன. புலிகளும் அதில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண குடாநாட்டில், புலிகளின் கெரில்லா தாக்குதல்கள் முளை விடத் தொடங்கிய காலத்தில், "கியூபாவின் விடுதலைப் போராட்டம்" பற்றிய விரிவான நூல் ஒன்று, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான இளைஞர்கள் மத்தியில் விரும்பி வாசிக்கப் பட்டது. புலிகள் இயக்கத்திற்காக அரசியல் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவரிடமிருந்து கிடைத்த அந்த நூலை நானும் வாசித்து இருக்கிறேன். அதன் தலைப்பு சரியாக நினைவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும், காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம் நடத்திய இராணுவ தாக்குதல்கள் விளக்கமாக எழுதப் பட்டிருந்தன.

அதில் விபரிக்கப் பட்டிருந்த தாக்குதல் முறைகள், அடுத்தடுத்த வருடங்களில் நடந்த புலிகளின் தாக்குதல்களுக்கு அடிப்படையாக அமைந்திருந்தன. உதாரணத்திற்கு, பெரிய இராணுவ முகாமை முற்றுகையிடும் முன்னர், மினி முகாம்களை தாக்கி அழிப்பது.

கியூபாவில் நடந்த அதே போராட்டம் ஈழத்தில் நடந்து கொண்டிருந்தது. இதிலே வேடிக்கை என்னவென்றால், "கியூப பாணி கெரில்லாப் போராட்டம் காலாவதியாகி விட்டது" என்று, உலகளவில் வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஆனால், ஈழத்தில் புலிகள், வலதுசாரிகளின் முகத்தில் கரி பூசிக் கொண்டிருந்தார்கள்.

பலருக்கு புரட்சி என்றால் கம்யூனிஸ்டுகள் தான் நினைவுக்கு வருவார்கள். புரட்சிக்கும், கம்யூனிசத்திற்கும் அந்தளவு நெருக்கமான தொடர்பு இருப்பதைப் போன்று, கெரில்லா யுத்தத்திற்கும், கம்யூனிசத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. நவீன கால உலக வரலாற்றில், கம்யூனிஸ்டுகள் தான் கெரில்லாப் போரை ஒரு கோட்பாடாகவும், நடைமுறை சார்ந்தும் முன்னெடுத்து வந்தனர். இதற்குப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கம்யூனிஸ்டுகளின் கெரில்லாப் படைகள் இயங்கிக் கொண்டிருந்தன. நாஸிகளால் ஆக்கிரமிக்கப் பட்ட சோவியத் யூனியனின் பகுதிகள், யூகோஸ்லேவியா, போன்ற இடங்களில் நடந்த கெரில்லாப் போராட்டம், பிரமாண்டமான, சக்தி வாய்ந்த ஜெர்மன் இராணுவத்தை பின்வாங்க வைத்திருந்தது. இத்தாலியில் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் வந்திறங்குவதற்கு முன்னரே, கம்யூனிச கெரில்லா அணிகள் வடக்கு இத்தாலியை விடுதலை செய்து விட்டன.

ஐம்பதுகளில் கியூபாவில் நடந்த கெரில்லா யுத்தத்தை முன்னர் பார்த்தோம். சேகுவேரா எழுதிய "கெரில்லாப் போர்" என்ற நூல், உலக கெரில்லா இயக்கங்களின் கைநூலாக இருந்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், சீனாவில் மாசேதுங் தலைமையில் ஒரு கெரில்லாப் போராட்டம் நடந்தது. மாவோ எழுதிய இராணுவ போர்த் தந்திரங்கள் பற்றிய நூல்களில், கெரில்லாப் போர் முறைக்கும் சில அத்தியாயங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மாவோவின் இராணுவப் படைப்புகளின் தமிழ் மொழியாக்கம், ஏற்கனவே பரவலாக கிடைத்து வந்தது.

மேலும், புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட எழுபதுகளில், வியட்நாம் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. உலகமெங்கும் சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம், யாழ் நகரில் கூட, வியட்நாம் போரை நிறுத்தக் கோரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்துள்ளன. வியட்காங் படையினரின் கெரில்லாத் தாக்குதல்கள் உலகம் முழுவதும் சிலாகித்துப் பேசப் பட்டது. அது பற்றிய தகவல்கள், அன்று தமிழ் இடதுசாரிகள் மத்தியில் திரும்பத் திரும்ப பேசப் பட்ட விடயமாக இருந்தது.

இன்று ஏகாதிபத்திய ஆதரவு வலதுசாரிகள் ஏற்றுக் கொள்ள விரும்பாத ஓர் உண்மை என்னவெனில், விடுதலைப் புலிகள் கூட ஒரு இடதுசாரி விடுதலை இயக்கமாகத் தான் தொடங்கப் பட்டது. அதன் ஸ்தாபகர்கள் பலர் ஊரறிந்த இடதுசாரிகள். ட்ராஸ்கிச இடதுசாரியான அன்டன் பாலசிங்கம், இறுதி வரை அதன் அரசியல் ஆலோசகராக அல்லது தத்துவ ஆசிரியராக இருந்தார். ஆஸ்தான கவிஞரான புதுவை இரத்துனதுரை ஒரு மாவோயிஸ்ட். அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப் பட்ட பாலகுமார் ஒரு ஸ்டாலினிஸ்ட்.

இவ்வாறு பல உதாரணங்களைக் காட்டலாம். புலிகளின் போராட்டத்தில், இடதுசாரிகள் வகித்த பாத்திரம் என்ன, அவர்கள் உருவாக்கிய யுத்த தந்திரங்கள் எவை என்ற விபரம் கிடைக்கவில்லை. எனினும், தவிர்க்க முடியாமல் புலிகளின் போரியல் தந்திரம் கம்யூனிச கெரில்லாக்களை ஆதாரமாகக் கொண்டிருந்தது. கொழும்பு நகரில், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை குறி வைத்த குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற தருணங்களில், பல ஆய்வாளர்கள் அது பற்றி பேசியுள்ளனர்.

அப்போது புலிகளுடன் சேர்ந்திருந்த, மார்க்சிய- ஈரோஸ் தலைவர் பாலகுமார் ஆலோசனை வழங்குவதாக நம்பப் பட்டது. அப்படி சந்தேகிப்பதற்கு காரணம் இருந்தது. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப நாட்களில், முதன் முதலாக ஈரோஸ் மட்டுமே கொழும்பு நகரில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி இருந்தது. எழுபதுகளில், மத்திய கிழக்கிலும், ஐரோப்பிய நகரங்களிலும், பாலஸ்தீன இயக்கங்களும், கம்யூனிச புரட்சிக் குழுக்களும் நடத்திய தாக்குதல்களின் பாணியை, ஈழப் போராட்ட வரலாற்றில் பின்பற்றி இருந்தார்கள்.

ஈழப் பகுதிகளை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலத்தில், எதிரி ஒரு வித்தியாசமான கெரில்லாப் போருக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. "வியட்நாம் கெரில்லாக்கள் பாவித்த அனைத்து போர்த் தந்திரங்களையும், புலிகள் தமக்கு எதிராக பயன்படுத்தியதாக" இந்திய இராணுவ அதிகாரிகள் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தனர். 

உதாரணத்திற்கு, காடுகளுக்குள் மரங்களில் பொருத்தப் பட்டிருந்த வெடிகுண்டு, பொறிக்குள் அகப்படும் படையினரை குறி வைத்துக் காத்திருந்தது. இந்தத் தந்திரங்களை, புலிகள் வியட்நாமிய கெரில்லாக்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருந்தனர் என்பது அன்று வெளிப்படையாக பேசப் பட்ட விடயமாக இருந்தது. புலிகளுக்கு ஆதரவாக ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த புத்திஜீவிகள், அதனை பகிரங்கமாகவே குறிப்பிட்டு எழுதிக் கொண்டிருந்தார்கள்.

"ஓயாத அலைகள்" என்பது புலிகளின் பிரபலமான போரியல் தந்திரங்களில் ஒன்று. முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல் மூலம் உலகப் பிரசித்தி பெற்றது. அது பின்னர், புலிகளின் அனைத்து தாக்குதல்களிலும் பயன்படுத்தப் பட்டது. அதாவது, பெருந்தொகையான போராளிகள் ஒன்று சேர்ந்து ஒரு இராணுவ முகாமை தாக்கும் தந்திரமாகும்.

பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் போரிடும் பொழுது, இழப்புகளும் அதிகமாக இருக்கும். ஆயினும், ஒரு கெரில்லா இராணுவத்திடம் இருந்து, அது போன்ற தாக்குதல்களை எதிர்பார்க்காத எதிரிப் படையினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பின்வாங்கி ஓடுவார்கள். அதனால் எதிரிகள் தரப்பு இழப்பும் அதிகமாக இருக்கும்.

புலிகளின் ஓயாத அலைகள் தாக்குதல்கள், சிறிலங்கா இராணுவ முகாம்கள் அடுத்தடுத்து விழக் காரணமாக இருந்தன. பூநகரி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், இவ்வாறு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, மிகப் பெரிய இராணுவ முகாம்கள் புலிகளால் தாக்கி அழிக்கப் பட்டன. 

"ஓயாத அலைகள்" போரியல் உத்திகளை, புலிகள் எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? சந்தேகத்திற்கிடமின்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து தான்! மாஓசேதுங் எழுதிய இராணுவப் படைப்புகளை வாசித்த எவருக்கும், இந்த விடயம் வியப்புக்குரியதாக இருக்கப் போவதில்லை.  

மாவோவின் மக்கள் விடுதலைப் படை, சீனப் புரட்சியின் போது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திய "ஓயாத அலைகள்" (ஆங்கிலத்தில் Human Waves என்று சொல்வார்கள்), உலகம் முழுவதும் போரியல் நிபுணர்களால் வியப்புடன் நோக்கப் பட்டது. கொரிய யுத்தத்தின் போது, அமெரிக்க இராணுவம், சீன கம்யூனிச தொண்டர் படையின் ஓயாத அலைகள் தாக்குதல்களை எதிர்கொண்டது. அதன் மூலம் உலகப் புகழ் பெற்றது.

ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில், சண்டே டைம்ஸ் பத்திரிகையில், புலிகளின் தாக்குதல்களைப் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதிய இக்பால் அத்தாஸ் கூட அதைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

தெற்காசிய நாடான மியான்மரில் எழுபதுகளில் பர்மிய கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்தது. அவர்களும் மாவோயிச போர்த் தந்திரமான ஓயாத அலைகளை பயன்படுத்தி தான், பர்மிய இராணுவ முகாம்களை நிர்மூலமாக்கினார்கள். அதன் மூலம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை உருவாக்கிக் கொண்டார்கள். 

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்ணூறுகளில் புலிகள் அதே போரியல் உத்தியை பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதைப் பற்றி நான் இங்கே விரிவாக எழுதத் தேவையில்லை. ஆனால், புலிகளின் போராட்டத்திற்கு பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி முன்னோடியாக இருந்தது என்பதை மட்டும் இங்கே குறிப்பிடலாம்.

ஓயாத அலைகள் போரியல் முறை பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுத்திய அதே பின்னடைவு, பிற்காலத்தில் புலிகளுக்கும் ஏற்பட்டது. உலகில் அதிகளவு மக்கட்தொகை கொண்ட சீனாவில் அது பிரயோசனமாக இருந்தது. ஆனால், குறைந்தளவு சனத்தொகை கொண்ட சிறுபான்மையின மக்கள் மத்தியில் அது எதிர்மாறான விளைவுகளை உருவாக்கியது. 

பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையான போராளிகள், வா மற்றும் காரென் மொழிகளை பேசும் சிறுபான்மையின மக்கள் ஆவர். இலங்கையிலும் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர் என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

ஓயாத அலைகள் போரியல் உத்திகளின் விளைவாக, போராளிகளின் தரப்பில் ஏற்பட்ட பெருமளவு இழப்பு எளிதில் ஈடுசெய்ய முடியாததாக இருந்தது. பல தாப்தங்களுக்குப் பின்னர், தன்னை தயார் படுத்திக் கொண்ட அரச படைகள், பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய பொழுது ஓயாத அலைகளின் பலவீனம் உணரப் பட்டது. மியான்மரிலும், வன்னியிலும், இறுதிப்போரானது அரச படைகளினால் ஒரே மாதிரித் தான் முன்னெடுக்கப் பட்டது.

புலிகள் இயக்கத்தை தமிழ் தேசியவாதம் வழிநடத்தி இருக்கலாம். அதற்கு வலதுசாரி சக்திகள் நிதி வழங்கி இருக்கலாம். ஆனால், ஒரு விடுதலை இயக்கம் போரில் வெல்வதற்கு, நவீன போரியல் உத்திகளும் மிக அவசியமானவை. ஒரு வெற்றிகரமான போர்த்தந்திரம் வகுப்பதற்கு, புலிகள் கம்யூனிஸ்டுகளிடம் தான் கடன் வாங்க வேண்டும். அது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், புரட்சி மாதிரி, கெரில்லாப் போராட்டத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது.

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பதைப் போன்று, தமிழ் வலதுசாரிகள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால், பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லையே? அமெரிக்க அடிவருடிகளான தமிழ் பேசும் வலதுசாரிகளின், ஒரு பக்கச் சார்பான பிரச்சாரங்களால், ஈழப் போராட்டத்தின் இடதுசாரித் தன்மையை மறைக்க முடியாது.
இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 
இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!
காஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத தமிழர்களும்
புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

No comments: