Friday, May 15, 2015

USSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு! - மக்கள் நீதிமன்றத் தீர்ப்பு


2010 - 2011 ம் ஆண்டு, ரஷ்யத் தொலைக்காட்சியில், கோடிக் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சோவியத் யூனியன் காலத்தில் "குற்றங்களை" புரிந்த கம்யூனிசத் தலைவர்கள் தண்டிக்கப் படவில்லை என்ற ஆதங்கத்தில், தற்கால முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தி இருந்தனர்.

பெரும்பான்மையான ரஷ்ய மக்கள், "கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள்... ஸ்டாலினிச கொடுங்கோன்மையை வெறுக்கிறார்கள்..." என்ற எண்ணத்தில் அந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டிருக்கலாம். சோவியத் கால கம்யூனிஸ்ட் தலைவர்களின் "குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு" வழக்கறிஞர்கள் குழு ஒன்று தயாராக இருந்தது. பழைய KGB ஆவணங்களை எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். 

"சூட் விரேமேனி" (Sud Vremeni : நீதிபதியின் நேரம்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தான் நீதிபதிகளாக தீர்ப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். அதாவது, ஜூரிகள் மாதிரி பார்வையாளர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு, ஒரு குறிப்பிட்ட தலைவரை குற்றவாளி என்று தீர்ப்புக் கூற முடியும்.

நீதிபதிகளுக்கு(மக்களுக்கு) தேவைப்படும் அனைத்து ஆதாரங்களையும், பழைய சோவியத் ஆவணங்களில் இருந்து எடுத்துக் காட்டினார்கள். வழக்கறிஞர்கள் தமது திறமையை எல்லாம் திரட்டி, ஸ்டாலின் போன்றவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னர், மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா?

"கூலாக் எனும் பணக்கார விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலினின் போர், பேரழிவுகளை உண்டாக்கியது", என்பன போன்ற ஆதாரங்களை எல்லாம் பார்த்த பின்னரும், பெரும்பான்மையான (78%) மக்கள் ஸ்டாலின் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்:
ஸ்டாலினின் கூட்டுத்துவ பண்ணை (Collective Farming) அமைப்பு, விவசாயிகள் மேல் பலவந்தமாக திணிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அது தான் சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது மோசமானதாக இருந்தாலும், சமுதாயத்திற்கு அத்தியாவசியமானது. அதனால், நியாயமானது. 
அதற்கு மாறாக, வெறும் 22% பார்வையாளர்கள் மட்டுமே அவையெல்லாம் குற்றங்கள் என்று தீர்ப்பளித்தனர்.

2 ம் உலகப்போர் காலத்தில், ஸ்டாலின் - ஹிட்லர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் பற்றி, எதிர்மறையான தகவல்கள் தான் மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்டு வந்தன. அதாவது, "ஸ்டாலினும், ஹிட்லரும் கூட்டாளிகள் என்பதை ஓர் ஒப்பந்தம் மூலம் நிரூபித்து விட்டார்கள்" என்று, மேற்குலகில் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் பட்டது. அதையே, இன்றைய ரஷ்ய முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் எதிரொலிக்கின்றது. ஆகவே, அதுவும் மக்கள் தீர்ப்புக்கு விடப் பட்டது. 

அது ஒரு போர் தவிர்ப்பு ஒப்பந்தம் என்ற உண்மை தெரியாத அளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். அந்த ஒப்பந்தம், அந்தக் காலகட்டத்தில் அவசியமாக இருந்தது என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள். வெறும் 9% மட்டும், அது 2 ம் உலகப்போருக்கு காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேற்கத்திய சரித்திர நூல்களும், ஊடகங்களும், "ஸ்டாலினிசத்தை அம்பலப் படுத்திய" குருஷேவ்வின் ஆட்சிக் காலத்தை, ஆஹா...ஓஹோ... என்று புகழ்கின்றன. அதே நேரம், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த, பிரெஷ்னேவ் காலகட்டத்தை குறை கூறுகின்றனர். அதாவது, "சீர்திருத்தவாதி" குருஷேவுக்கு மாறாக, பிரெஷ்னேவ் ஒரு கடும்போக்காளர், "ஸ்டாலினிச சர்வாதிகாரி" என்று விமர்சிக்கின்றனர். 

ஆனால், பிரெஷ்னேவ் பற்றி, ரஷ்ய மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா? பிரெஷ்னேவ் காலகட்டம், மக்களுக்கு பல வசதி வாய்ப்புகளை உருவாக்கிய பொற்காலம் என்று, 91% பார்வையாளர்கள் தீர்ப்பளித்தனர்.

இறுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றிய வாக்கெடுப்பு வந்தது. "சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர், ரஷ்ய மக்கள் சுத்ரந்திரக் காற்றை சுவாசித்தார்கள். கம்யூனிச சர்வாதிகாரத்தை நிராகரித்து, மேற்கத்திய ஜனநாயகத்தை தழுவிக் கொண்டார்கள்...." இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. 

சோவியத் கால "கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் அவலங்களை அனுபவித்த" ரஷ்ய மக்கள் என்ன சொல்கிறார்கள்? சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது ஒரு மாபெரும் இழப்பு. அது எமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரவலம் என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள்!


வீடியோ: ரஷ்ய மக்கள் நீதிமன்றமான Sud vremeni தொலைக்காட்சி நிகழ்ச்சி. 
இந்த வீடியோவின் தலைப்பு ரஷ்ய மொழியில்: 
Сталинская система и 1941 год (1941 ம் வருடத்திய ஸ்டாலினிச அமைப்பு): 

4 comments:

kanagu said...

தோழர் கலை,
வணக்கம்.

மிகவும் அருமையான தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள்.

நீங்கள் இந்த நிகழ்ச்சி 2011 ஆம் நடந்ததாகக் கூறுகிறிர்கள். ஆனால், Aug 31, 2010 அன்று தான் இந்த விடியோக்கள் You Tube-ல் பதிவேற்றப் பட்டுள்ளது. ஆகையால், இந்நிகழ்ச்சி நடந்த வருடம் 2011 தானா என்று சரி பார்க்கவும்.

இந்நிகழ்ச்சி பற்றி ஆங்கில நாளேடுகளில் ஏதேனும் செய்தி வெளிவந்ததா? அப்படி ஏதேனும் இருந்தால், அதன் இணைப்பை அளித்துதவவும். மொழி புரியாததனால் கேட்கிறேன்.

நன்றி!

Kalaiyarasan said...

வணக்கம் தோழர் கனகு,

எனக்கும் ரஷ்ய மொழி தெரியாது. அது ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகும், ஒரு வழமையான தொலைக்காட்சி நிகழ்ச்சி. சோவியத் யூனியன் தொடர்பான வாக்கெடுப்பு 2011 நடந்துள்ளது. (எது பொருத்தமான வீடியோ என்று தெரியவில்லை.)

பெரும்பான்மையான ரஷ்யர்கள் ஸ்டாலினை தேசிய நாயகனாக தேர்ந்தெடுத்த தகவல், அப்போதே பல மேற்கத்திய ஊடகங்களில் வந்துள்ளது. ஆனாலும், அன்று அவர்கள் மேலதிக தகவல்களை கொடுக்கவில்லை.

ஆங்கிலத்தில் இந்த நூலை வாசிக்கவும்: "Revolutionary Russia, 1891 - 1991", by Orlando Figes. அந்த எழுத்தாளர் சுருக்கமாக பதிவு செய்துள்ளார்.

kanagu said...

நன்றி தோழர்.

முதலளித்துவாதிகள், லிபரல்வாதிகள் ஸ்டாலினை வெறுப்பது, சர்வதிகாரி என்று அவதூறு செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்றும் உலக அளவில் சிறந்த கம்யூனிச சித்தாந்த வாதிகளாக அறியப்பட்ட Perry Anderson, Eric Hobswamm, E.P.Thompson, Fredrich Jameson, Ernest Mandel, Slovaj Zizek, Aijaz Ahmed, Frankfurt School Thinkers such as Adorno, Herbert Marcuse, Monthly Review and New Left Review ஆகியோரும் ஸ்டாலினை சர்வதிகாரி என்று தூற்றுவதை எவ்வாறு புரிந்துய் கொள்வது?

Kalaiyarasan said...

இன்றைக்கு மேற்குலக நாடுகளில் ட்ராஸ்கிஸ்டுகளின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் தாம் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை என்று அறிவித்துக் கொள்வதன் மூலமும், சமூக- ஜனநாயக பாதையை தேர்ந்தெடுப்பதன் மூலமும், அஹிம்சா வழியில் புரட்சி நடத்த விரும்பும் மத்தியதர வர்க்க புத்திஜீவி இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வந்தனர். ஸ்டாலின் காலத்தில், மேற்கத்திய நாடுகளில் நடத்தப் பட்ட தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதற்கு வழி திறந்து விட்டன. பிரான்சில், இத்தாலியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஸ்டாலினை நிராகரித்து "யூரோ கம்யூனிசம்" என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கின. இவர்களைத் தவிர வழமையான மார்க்சியர்கள் இருக்கிறார்கள். அதாவது மார்க்சின் தத்துவம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். லெனினிசம், ஸ்டாலினிசம் என்பன வன்முறையை ஆதரிப்பதாக, பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அதனால் தான் பல இடதுசாரி அறிஞர்களும் தம்மை மார்க்சியர்கள் என்று மட்டும் அடையாள படுத்திக் கொள்கிறார்கள்.