Friday, February 13, 2015

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை : மீண்டும் சூடு பிடிக்கும் தண்ணீருக்கான போராட்டம்


யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைவதால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அவர்களது போராட்டக் குணாம்சம் பாராட்டத் தக்கது.

தமிழீழப் போராட்டம், தேசியவாத கருத்தியல் சார்ந்தது  என்பதால், அதற்கும் ஏகாதிபத்தியத்திற்கும், அல்லது பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை என்று கடந்த முப்பதாண்டுகளாக புளுகிக் கொண்டு திரிந்தார்கள். அநேகமாக கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள், தூய தேசியவாதம் பேசி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை மூடி மறைத்தார்கள். தற்போது சிலர் மீண்டும், அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

யாழ்ப்பாணத்திற்கான மின்சார விநியோகம் செய்வதற்காக, சுன்னாகத்தில் மின் பிறப்பாக்கிகள் பொருத்தப் பட்டன. அதன் மூலம் ஒரு காலத்தில், யாழ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு ஆகிய யாழ் குடா நாட்டின் மேற்குப் பகுதிகளுக்கு மட்டும் மின்சாரம் கிடைத்து வந்தது. அதற்கு காரணம் உள்ளது. அந்தப் பகுதிகளில் தான் சன நெருக்கம் அதிகம். பெரும்பாலான யாழ் உயர் சாதியினர், மேட்டுக்குடியினர் அங்கே தான் வசிக்கின்றனர்.

யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளான வட மராட்சி, தென் மராட்சி பகுதிகளுக்கு எண்பதுகளின் இறுதிப் பகுதியில், தெற்கில் இருந்து கொண்டு வரப் பட்ட லக்சபான மின்சாரம் வழங்கப் பட்டது. சுன்னாகத்தில் உற்பத்தி செய்யப் படுவது அசுத்தமான அனல் மின்சாரம். அதே நேரத்தில், தென்னிலங்கை லக்சபான நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தது சுத்தமான மின்சாரம். ஈழப் போர் தீவிரமடைந்த காலத்தில், லக்சபான மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும், சுன்னாகம் அனல் மின் நிலையம், சில குறைபாடுகளுடன் இடைக்கிடை இயங்கிக் கொண்டிருந்தது.

ஈழப்போர் தொடங்கிய எண்பதுகள் வரையில், இலங்கை முழுவதும் பெரும் தொழிற்துறைகள் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அதனால், சுன்னாகம் அனல் மின்சார நிலையமும் அரசுடைமையாக இருந்தது. அப்போதெல்லாம் நிலத்தடி நீர் மாசடைவது தொடர்பான பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. ஈழப்போரின் இறுதியில், இலங்கையின் பொருளாதாரமும் உலகமயமாக்கலின் கீழ் கொண்டு வரப் பட்டது. பல வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப் பட்டது. அதனால் வந்தது வினை.


ஒரு மலேசிய பன்னாட்டு நிறுவனம், "நொதேர்ன் பவர்" என்ற பெயரில் சுன்னாகம் அனல் மின்சார நிலையத்தை வாங்கி நடத்தியது. உலகில் எந்த நாட்டிலும், பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழல் தொடர்பாக அக்கறை காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலும் அது தான் நடந்தது. நொதேர்ன் பவர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பாவித்த கழிவு எண்ணையை, நிலத்தடி நீர் நிலைகளில் கலக்க விட்டது. 

தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் அது கறாராக நடைமுறைப் படுத்துவதால், அங்கே உற்பத்திச் செலவுகள் அதிகம். ஆனால், இலங்கை போன்ற வறிய நாடுகளின் அரசாங்கங்களை பண பலத்தின் மூலம் பணிய வைக்கும் நிறுவனங்கள், அந்த விதி முறைகளை பின்பற்றுவதில்லை. சுன்னாகத்திலும் அது தான் நடந்தது.

சுன்னாகம் மட்டுமல்ல, தென்னிலங்கையில் வெலிவாரியா, கேரளாவில் பிளாச்சி மாடா, மற்றும் பல ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுச் சூழலை மாசடையைச் செய்கின்றன. பிளாச்சி மாடாவில் கொக்கோ கோலா கம்பனி நிலத்தடி நீரை உறிஞ்சி மாசடைய வைத்ததால் அங்கே பெரும் போராட்டம் நடந்தது. 

"கத்தி" எனும் சினிமாப் படத்தின் கதை, அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பாட்டது. அப்போது, "கத்தி ஒரு கம்யூனிசப் படமா?" என்று நக்கல் அடித்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் கூட, இன்று இந்த யாழ்ப்பாண நீர் மாசடைவதற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அத்தகைய இரட்டை வேடம், யாழ்ப்பாண மக்களால் கண்டிக்கப் பட வேண்டும். இன்று சுன்னாகம் நீர்ப் பிரச்சினைக்காக போராடுவதற்காக மட்டும் முன்னுக்கு வரும் இவர்கள், பிளாச்சிமாடா, வெலிவாரியா பிரச்சினைகள் நடந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால், இப்போதாவது தமது கடந்த கால தவறுகளை உணர்ந்து, தம்மை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடையும் பிரச்சினைக்காக, கொழும்பில் கூட கவன ஈர்ப்பு போராட்டம் நடந்துள்ளது. பாராட்ட வேண்டிய நல்ல விடயம். ஆனால், அதற்குள்ளும் சிலரது (யாழ் மத்தியதர வர்க்க) சுயநலம் ஒளிந்திருப்பதை மறுக்க முடியாது. கொழும்பில் வாழும் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் பூர்வீகம் வலிகாமம் பகுதியாக இருக்கும். அதனால் தமது ஊர், தமது உறவினர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்ற காரணத்தினாலும், அவர்களில் பலர் போராட்டத்திற்கு முன்வந்துள்ளனர்.

உண்மையில், யாழ்ப்பாணம் ஒரு வறண்ட பிரதேசம். அதனை சோமாலியாவுடன் ஒப்பிடலாம். சோமாலியாவில் உள்ள சில பகுதிகளும், யாழ் மாவட்டமும் புவியியல் அமைப்பில் ஒரே மாதிரியாக உள்ளன. அதனால் பிரச்சினைகளும் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. சோமாலியாவில் தோன்றிய தண்ணீர்ப் பிரச்சினை, வரட்சி காரணமாக அங்கே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்தது. 

யாழ்ப்பாணத்தில் ஈழப் போர் தொடங்குவதற்கும் எழுபதுகளில் ஏற்பட்ட வரட்சி, தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக இருந்தது. ஈழப் போராட்டக் குழுக்களும், சோமாலியா போராளிக் குழுக்களும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நடத்தைகளை கொண்டிருந்தன என்பது இன்னும் விசேஷம்.  அந்த நாட்டிலும் சாதிப் பாகுபாடுகள் உள்ளன. இவை எல்லாம் சோமாலியா நாட்டு அகதிகளுடன் உரையாடிய நேரம் அறிந்து கொண்ட விடயங்கள். ஆனால், அதைப் பற்றி எழுதினால், கட்டுரையின் நோக்கம் திசை திருப்பப் பட்டு விடும் என்பதால், அது பற்றி நான் இங்கே ஆராய விரும்பவில்லை.

ஒரு காலத்தில், யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகவும் தீவிரமாக இருந்தது. உண்மையில், ஈழத் தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணம், வன்னி ஆகிய பகுதிகளை விட யாழ்ப்பாணத்தில் சாதிப் பாகுபாடு அதிகமாக இருந்துள்ளது. அதற்குக் காரணமும், நிலத்தடி நீர்ப் பிரச்சினை தான்.

யாழ்ப்பாண குடாநாட்டில் ஆறுகள் எதுவும் கிடையாது. மன்னர் காலத்தில் தோண்டப்பட்ட தொண்டமானாறு கடல் நீரையே கொண்டுள்ளதால், அது பயிர்ச் செய்கைக்கு ஏற்றது அல்ல. வன்னியில் உள்ளதைப் போல பெரிய குளங்களும் அங்கே இல்லை. வருடாந்த மழை வீழ்ச்சியும் குறைவு. அதனால், நிலத்தடி நீர் தான் பிரதானமானது.

யாழ் குடாநாட்டில் நிலத்தடி நீர் எல்லா இடங்களிலும் குடிப்பதற்கான நன்னீராக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில் உவர் நீர் தான் கிடைக்கும். யாழ்ப்பாண புவியியல் அமைப்பை அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை இது. நன்னீர் கிடைக்கும் கிணறுகள், ஒன்றில் கோயில்களுக்கு அருகில், அல்லது உயர் சாதியினரின் நிலங்களில் தான் இருக்கும். 

தாழ்த்தப் பட்ட சாதியினர் வாழும் இடங்களில் உள்ள கிணறுகளில் பெரும்பாலும் உவர் தண்ணீர் தான் கிடைக்கும். தாழ்த்தப் பட்ட சாதியினர், தமது குடி தண்ணீர் தேவைக்காக, கோயில் கிணறுகளில், அல்லது உயர் சாதியினரின் வீடுகளில் தான் தண்ணீர் அள்ளிக் கொண்டு வருவார்கள். அதுவும் அவர்களாக அள்ளிக் கொள்ள முடியாது. உயர் சாதி நபர் ஒருவர் கிணற்றில் அள்ளி குடத்தில் ஊற்றிக் கொடுக்க வேண்டும்.

எங்கள் ஊருக்கு அருகில் இருந்த கோயிலின் நல்ல தண்ணீர்க் கிணற்றில், ஒரு தடவை தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் தாமாகவே தண்ணீர் அள்ளி விட்டார்கள். அதனால், "கிணறு தீட்டுப் பட்டு விட்டது" என்று சொல்லிய உயர் சாதியினர், அங்கே கழிவு எண்ணையை கொண்டு வந்து கொட்டினார்கள். அதற்குப் பிறகு கிணற்று நீர் முழுவதையும் வாரி இறைத்து விட்டு தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஈழப் போர் தொடங்கிய 1982 ம் ஆண்டளவில் நடந்த சம்பவம் இது. யாழ் குடாநாடு முழுவதும் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட உண்மைகள், இன்றைக்கு சுன்னாகம் நீருக்காக போராடும் உயர் சாதியை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை. தங்களது வீட்டுக் கிணற்றுக்குள் ஒரு பன்னாட்டு நிறுவனம் கொட்டிய கழிவு எண்ணைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களிடம் கேட்டால், யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினையே கிடையாது என்று பூசி மெழுகுவார்கள்.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். முன்னொரு காலத்தில், உயர் சாதி யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்ட காரணத்தினால் ஈழப் போராட்டம் நடந்தது போன்று, தற்போதும் அதே வர்க்கத்தை சேர்ந்த இளைய தலைமுறையினர் தான் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இதற்கிடையே, "சுயநிர்ணய உரிமை கேட்ட தமிழர்கள், கடைசியில் நிலத்தடி நீர் உரிமைக்காக போராட வேண்டிய அவலம் நேர்ந்து விட்டது..." என்று தமிழ்த் தேசியவாதிகள் புலம்பித் திரிகிறார்கள். அது அவர்களது அரசியல் அறிவின் போதாமையை வெளிப்படுத்துகிறது. சுயநிர்ணய உரிமை என்பது நிலத்தடி நீரையும் உள்ளடக்கியது தான். தண்ணீரும் ஓர் அத்தியாவசியப் பொருள் என்பதால், அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமிழீழம் கிடைத்தால் அதைச் செய்ய மாட்டார்களா? 

அது மட்டுமல்ல, தமிழீழம் கிடைத்தால் "திறந்த சந்தைப் பொருளாதாரம்" என்று சொல்லிக் கொண்டு, நொதேர்ன் பவர் போன்ற பன்னாட்டு கம்பனிகள் முதலிடுவதை அனுமதிப்பார்களா? "ஆம்" என்றால், அவர்களும் யாழ்ப்பாண மக்களின் எதிரிகள் தான். யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், சிறிலங்கா அரசுக்கு எதிராக மட்டும் போராடினால் போதாது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வலதுசாரித் தேசியவாதத்திற்கும் எதிராக தமது போராட்டத்தை விரிவு படுத்த வேண்டிய நேரம் இது.


இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: