Wednesday, October 29, 2014

"அசல் கம்யூனிச" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின் 17 கேள்விகள்

உலகில் யாரை "தமிழ் தேசியவாதி, தமிழ் உணர்வாளர்" என்று அழைத்தாலும், அது தங்களை மட்டுமே குறிக்கும் என்று மே 17 இயக்கத்தினர் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ் தேசியத்தின் பெயரால், சுப்பிரமணிய சாமியை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, சு.சாமி அங்கம் வகிக்கும் பாஜக வை ஆதரிக்கும் இரட்டை வேடம் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். (யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி! http://kalaiy.blogspot.nl/2014/10/blog-post_27.html

முகநூலில், Rathish Kumar எனும் ஒரு மே 17 ஆதரவாளர் (அல்லது உறுப்பினர்), பொங்கி எழுந்து பொரி கடலை சாப்பிட்டுக் கொண்டே, என்னை திட்டி எழுதி பதிவிட்டிருக்கிறார். என்னைப் போன்ற "போலி கம்யூனிஸ்டுகளின்" தொல்லையை தாங்க முடியாத "அசல் கம்யூனிஸ்டான" Rathish Kumar, நான் மே 17 பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக சீறியிருக்கிறார். கூடவே என்னிடம் ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். அது பின்வருமாறு:

 //ஈழப்போரின் இறுதியில் முளைத்த இந்த இயக்கங்கள் முளைக்காமல் இருக்க சில செயல்களையாவது செய்திருக்க வேண்டாமா? கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் இவர்கள் எந்த விதமான தொடர்பையும் ஏற்படுத்தி, தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தது கிடையாது. குறைந்தபட்சம் இந்திய கம்யூனிஸ்ட் களின் நிலைபாட்டையாவது மாற்றியிருக்கலாம்.//

லத்தீன் அமெரிக்க நாடுகளில், கம்யூனிச சித்தாந்தம் கொண்ட நாடு கியூபாவைத் தவிர வேறெதுவும் கிடையாது. வெனிசுவேலா, பொலிவியா போன்றவை ஜனநாயக நாடுகள். ஆளும் கட்சிக்கும் கம்யூனிச சித்தாந்தத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவை மேற்கு ஐரோப்பாவில் இருப்பது போன்று, மக்கள் நலன்புரி அரசுக்களை உருவாக்கி உள்ளன.

மே 17 ஆர்வலர்களின் அரைவேக்காட்டு அறிவின் அடிப்படையில், சில மேற்கு ஐரோப்பிய, குறிப்பாக ஸ்காண்டிநேவிய நாடுகளையும், "கம்யூனிச சித்தாந்தம் கொண்ட நாடுகள்" என்று அழைக்கலாம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள "கம்யூனிஸ்ட்" கட்சிகள், தேர்தல்களில் போட்டியிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. அவற்றை பிற முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றாகத் தான் கருதலாம். "போலிக் கம்யூனிஸ்ட்" என்றால் யார் என்று கேட்டால், அத்தகைய பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை சுட்டிக் காட்டலாம்.

அதே நேரம், தமிழ் நாட்டில் மே 17 இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (அது ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.) வன்னியில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தி இருந்தது. தேர்தலில் போட்டியிடாத கம்யூனிஸ்ட் கட்சிகள், இயக்கங்கள் பல, ஈழத் தமிழர் ஆதரவு பேரணிகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டன. தாமாகவே முன்வந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களை செய்தன.

இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, "கம்யூனிஸ்டுகள் ஈழ விடுதலைக்கு ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடவில்லை" என்று பொய்யுரைப்பது ஏன்? அங்கே தான், மே 17 இயக்கத்தின் போலித் தமிழ் தேசிய அரசியல் பல்லிளிக்கிறது. அது வெறும் மேட்டுக்குடி வர்க்க அரசியல், தமிழ் தேசியம் அல்ல.

தமிழ்நாட்டில் நடந்த ஈழ ஆதரவு போராட்டத்தின் இடை நடுவில் புகுந்த மே 17 இயக்கத்தினர், அதனை வலதுசாரி சார்பானதாக மாற்றும் அயோக்கியத்தனத்தை செய்தனர். இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். மேட்டுக்குடி அரசியலால் வழிநடத்தப் படும் மே 17 இயக்கம், இடதுசாரியம், கம்யூனிசம் போன்ற சொற்களைக் கேட்டாலே அலறித் துடிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. தமிழ் தேசியம் பேசினாலும், வர்க்கக் குணாம்சம் மாறுமா?

மே 17 தோன்றுவதற்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே, தமிழ் தேசியப் "பொதுவுடைமைக்" கட்சி என்றொரு சுத்த தமிழினவாத அமைப்பு தீவிரமாக செயற்பட்டு வந்தது. முழுக்க முழுக்க தமிழ் தேசியவாதம் அல்லது தமிழ் இனவாதம் பேசிக் கொண்டே, கட்சியின் பெயரில் "பொதுவுடைமை" என்று வைத்துக் கொள்பவர்கள், "போலிக் கம்யூனிஸ்டுகள்" என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

மே 17 ஆர்வலர்கள், முதலில் "அசல், போலி" என்ற சொற்களிற்கு அர்த்தத்தை தேடி அறிந்து கொள்வது நல்லது. அரசியல் கலைச் சொற்களுக்கு அர்த்தம் தெரியாமல் கட்சி நடத்துவதால், மக்களுக்கு எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை.

மே 17 ஆர்வலர்கள், மற்றவர்களை "போலிக் கம்யூனிஸ்டுகள்" என்று கூறுகின்றனர் என்றால், அவர்கள் ஒன்றில் "அசல் கம்யூனிஸ்டுகளாக" இருக்க வேண்டும், அல்லது கம்யூனிசத்தை கரைத்துக் குடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த விடயம் எனக்குத் தெரியாமல், மே 17 ஒரு தமிழ் தேசியவாத இயக்கம் என்று கூறியிருந்தால், அது ஒரு "பொய்யான குற்றச்சாட்டு" தான்.

"மே 17 ஒரு தமிழ் தேசிய இயக்கம் அல்ல. அது தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உருவான, கம்யூனிஸ்ட் சித்தாந்த இயக்கம்(?)" என்றே நினைத்துக் கொள்வோம். அதனால் தான், "கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை கொண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் தொடர்பு ஏற்படுத்தி தேச விடுதலையின் நியாயத்தை எடுத்துரைத்தீர்களா?" என்று தைரியமாகக் கேட்கிறார்.

அதாவது, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியை, "தமிழர்களின் பிடல் காஸ்ட்ரோ அல்லது ஹியூகோ சாவேஸ்" என்றெல்லாம் புகழாதது எங்களது தவறு தான். "தமிழ் நாட்டையும், தமிழீழத்தையும் கம்யூனிஸ்ட் நாடுகளாக மாற்ற விரும்பும்" மே 17 போன்ற அசல் கம்யூனிச இயக்கங்கள் குறித்து, லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்டுகளிடம் எடுத்துரைக்காதது எங்களது தவறு தான். ஐயகோ... நாங்கள் எத்தனை பெரிய தவறிழைத்து விட்டோம்! பொறுத்தருள்வீர் ஐயன்மீர்!

மீண்டும் அந்தத் தவறு நடக்கக் கூடாது என்றால், மே 17 இயக்கத்தினர் தமது அரசியல் நிலைப்பாடுகளை எமக்கு தெளிவாக எடுத்துக் கூறினால் நல்லது. அதனால், மே 17 இயக்கத்தினரிடம், பகிரங்கமாக 17 கேள்விகளை வைக்கிறேன். இங்கேயுள்ள 17 கேள்விகளுக்கான பதில்களை, மே 17 தலைவர் திருமுருகன் காந்தியோ, அல்லது யாராவது ஒரு மே 17 இயக்க உறுப்பினரோ கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தமிழ் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்:

1. தமிழ் நாடு/தமிழீழத்தில் மே 17 ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால், எத்தனை வருடங்களில் சோஷலிசத்தை கொண்டு வருவார்கள்? ஐந்து அல்லது பத்து வருடங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பொருளாதார நகல் திட்டம் கைவசம் இருக்கிறதா?

2. தமிழ் முதலாளிகள் முன்னரைப் போன்று இயங்க சுதந்திரம் இருக்குமா? அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா? சொத்துக்களுக்கு அதிகளவு வரி அறவிடப் படுமா? முதலாளிகள் உழைக்கும் வர்க்க மக்களின் எதிரிகள் என்ற கொள்கை தமிழ்நாடு/தமிழீழ அரசினால் கடைப் பிடிக்கப் படுமா?

3. சோஷலிச சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள், சமூகத்தில் எந்தளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், சிறைக்குள் தள்ளப் படுவார்களா? ஊழல் பேர்வழிகள், கந்துவட்டிக்காரர்கள், நிலவுடமையாளர்கள், பண்ணையாளர்கள், முதலாளிகள் போன்றோர், இதுவரை காலமும் செய்த குற்றங்கள், மக்கள் நீதிமன்றங்களில் விசாரிக்கப் படுமா?

4. கூலித் தொழிலாளியாக இருந்தாலும், பட்டதாரியாக இருந்தாலும், சம்பளத்தில் அதிக வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப் படுமா? சம்பள உச்சவரம்பு நிர்ணயிக்கப் படுமா?

5. சாதாரண அடித்தட்டு தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப் படுமா? அந்தத் தொகை வாழ்க்கைச் செலவுகளை ஈடு கட்டுவதாக இருக்குமா? நாட்டில் உள்ள அனைத்து தொழிற்துறைகளிலும் தொழிற்சங்கங்கள் இயங்க அனுமதிக்கப் படுமா? பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப் படுமா?

6. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து, நிலவுடமையாளர்களின் அளவுக்கதிகமான நிலங்கள் பறிமுதல் செய்யப் படுமா? அவை நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் படுமா?

7. தமிழ்நாடு/தமிழீழத்தின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப் படுமா? தொழிற்சாலைகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் ஜனநாயக அமைப்பு உருவாக்கப் படுமா?

8. அந்நிய நாட்டு கடனுதவிகள் இரத்து செய்யப் படுமா? உலகவங்கி, IMF ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படுமா, அல்லது நிராகரிக்கப் படுமா? அந்நிய நாட்டு முதலீடுகள் வரவேற்கப் படுமா அல்லது ஒரேயடியாக தடுக்கப் படுமா?

9. தமிழ் நாடு/தமிழீழத்தில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படுமா? வேலையற்றோர் யாருமில்லை என்ற நிலை வருமா?

10. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேற்றுக் காலத்திலும் சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா? வரதட்சனை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்குமா?

11. அனைவருக்கும் அறுவைச் சிகிச்சை வரையில் இலவச மருத்துவ வசதி கிடைக்குமா?

12. அனைவருக்கும் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி கிடைக்குமா?

13. சேரியில் வாழ்பவர்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் அரசு செலவில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப் படுமா?

14. சாதி/மத பேதம் பார்ப்பது கிரிமினல் குற்றமாக கருதப் பட்டு, மீறுவோர் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்களா? சாதி/மத மறுப்பு செய்து கொள்ளும் தம்பதியினருக்கு அரசு சலுகைகளை அள்ளிக் கொடுத்து, அவர்களது வாழ்க்கை வசதிகளை உயர்த்துமா?

15. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுடனான சர்வதேச தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் படுமா அல்லது படிப்படியாக துண்டிக்கப் படுமா?

16. சுதந்திர தமிழ் நாடு/தமிழீழம், ஈரான், ரஷ்யா போன்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளையும் தனது புதிய நண்பர்களாக ஏற்றுக் கொள்ளுமா? வட கொரியா, கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் தமிழ் நாடு/தமிழீழம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுமா?

17. தமிழ் மக்களுடன் "மிகவும் நெருக்கமாக இருக்கும்" மே 17 இயக்கத்தினர், தமிழ் தேச விடுதலை பெற்றுக் கொண்டால், மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்தப் போவதாக, இப்போதே பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?

3 comments:

Unknown said...

நன்றி நண்பரே.உமது அனைத்து கல்விகளும் நியாயமே.இந்த postஐ delete செய்து விடாதிர்கள்.பிற்காலத்தில் அனைவரையும் இந்த கேள்விகள் கேட்க உதவும்.

Unknown said...

Kindly Share Your Blog posts with our news website
http://www.newsq.in/submit/

give your support to us

Regards

newsq india

அன்பரசு said...

அட நீங்க இவங்களுக்கு போய் உங்க நேரத்தை வீணடிச்சு பதிவெல்லாம் போட்டுக்கிட்டு. மக்கள் அடிப்படை தேவைகள் நிறைவேறாமல் துன்பப்படும் வேளையில், அது பற்றி பேசாமல் ஏதோ ஈழம் பக்கத்துக்கு ஊரில் விற்கப்படும் பலசரக்கு போல கூவிக்கொண்டு இருக்கிறார்கள். இந்திய அகதி முகாம்களும் சிறைச்சாலைகள் போல் தான் இருக்கின்றன. அதற்கு முதலில் குரல் கொடுக்கட்டும், அப்புறம் போய் பக்கத்துக்கு ஊரில் சரக்கு வாங்கலாம். ஒரு சினிமாக்காரன் ஒரு ஈழப்பெண்ணை தான் கட்டுவேன்னு சொல்லி, அப்புறம் அல்வா குடுத்தான். இப்படி தான் இவனுங்க கொள்கை எல்லாம்.