Tuesday, October 21, 2014

கம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற்கு...


ஒரு முதலாளித்துவ நாட்டில் மனிதர்கள் வேலை தேடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் வேலை மனிதர்களை தேடும். 

முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்களை வருத்திய, கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கொடுங்கோன்மைகள்" இவை:


  1. ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை, அனைவருக்கும் இலவச கல்வி. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி. 
  2.  சாதாரண காய்ச்சல் முதல் சத்திர சிகிச்சை வரையில், அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி. 
  3. வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள். 
  4.  மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தை சுற்றி வரலாம். 
  5. ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலாப் பயணம். 
  6. ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் அறவிடப் பட மாட்டாது. 
  7. அனைவருக்கும் இலவச வீட்டு வசதி அல்லது வீட்டு வாடகை மிக மிகக் குறைவு. மின்சார, எரிவாயு செலவினங்களும் மிக மிகக் குறைவு. அதனால், மாத முடிவில் சம்பளத்தில் பெருந்தொகை பணம் மிச்சம் பிடிக்கலாம். 
  8. சொந்த வீடு, சொந்த வாகனம் வாங்க விரும்புவோர், அதற்காக பெருந்தொகைப் பணம் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டி அவதிப் படத் தேவையில்லை. அரசாங்கமே செலவை பொறுப்பேற்கும்.


இதைப் பற்றி கேள்விப் பட்ட பிறகும், ஒருவர் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார் என்றால், நிச்சயமாக அவர் ஒரு சமூக விரோதியாகத் தான் இருப்பார்.


  • ஒரு சந்தேகம். மக்கள் வரிப்பணம் இருந்தால்தான் அரசை இயக்க முடியும். அது இல்லாமல் எப்படி மேல் கூறியவற்றை இலவசமாக வழங்க. முடியும் அரசுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்?


ஒரு முதலாளித்துவ நாட்டில், உற்பத்தி சாதனங்கள் யாவும் முதலாளிகளின் சொந்தமாக இருக்கும். பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது அவர்களது கொள்கை. முதலாளிகள் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால், முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் எல்லா நாடுகளிலும், அரசு வரி அறவிடுகிறது. அனைத்துப் பிரஜைகளிடமும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி எடுக்கிறது. 

ஆனால், சோஷலிச நாடுகளின் பொருளாதாரம் வேறு விதமாக இயங்குகின்றது. அங்கே முதலாளிகளின் ஆதிக்கம் கிடையாது. சோஷலிச நாட்டில் பெரும்பான்மை பொருளாதார உற்பத்தி, அரசுடமையாக இருக்கும். அதை விட கூட்டுறவு அமைப்பு பொருளாதாரமும் இருக்கும். அரசு நிறுவனமாக இருந்தாலும், கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒரு சராசரி நிறுவனம், தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்திய பின்னர் கிடைக்கும் இலாபத்தை பொதுவாக இரண்டாகப் பிரிக்கும். ஒரு பகுதி அரசு செலவினங்களுக்காக கொடுக்கப் படும். மறு பகுதி மீள முதலீடு செய்வதற்கு அல்லது தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு செலவிடப் படும். 

உதாரணத்திற்கு, தொழிலாளர்களின் கல்வி, குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வூதியம், விடுமுறையில் சுற்றுலா ஸ்தலங்களில் தங்குவதற்கான செலவுகள் போன்றவற்றை சம்பந்தப் பட்ட நிறுவனம் பொறுப்பெடுக்கும். நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து, பொது மருத்துவம், பொதுக் கல்வி போன்ற செலவுகள் அரசின் பொறுப்பு. முதலாளித்துவ நாடுகளில் ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தின் பெரும் பகுதி முதலாளிகளின் சுகபோக வாழ்வுக்கு செலவிடப் படுகின்றது. ஆனால், சோஷலிச நாடுகளில், அந்தப் பணம் மக்களின் நன்மைக்காக செலவிடப் படுகின்றது. 


  •  அவை எந்தெந்த நாடுகள். அந்த நாடுகளின் இன்றைய நிலைமை என்ன? 


முன்னாள் சோவியத் யூனியன் உட்பட, பல ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. இதை நான் சொல்லவில்லை. உலகவங்கி, IMF அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகள் அளவு இல்லா விட்டாலும், அவற்றை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்த படியால் அவை இரண்டாம் உலக நாடுகள் என்று அழைக்கப் பட்டன. (மேற்கத்திய நாடுகளின் மூலதன திரட்சியை மறந்து விடலாகாது.) ஆனால், மூன்றாமுலக நாடுகளில் இருந்த சோஷலிச நாடுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளாக கருதப் பட்டன. 

ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளின் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பிறகு முதலாளித்துவத்திற்கு மாற்றப் பட்டது. தேசம் முழுவதும் விற்பனைக்காக திறந்து விடப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் தாம் விரும்பிய நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கினார்கள். அனேகமாக அடி மாட்டு விலை என்பது போல, பெறுமதிக்கு குறைவாக பணம் கொடுத்தார்கள். குறைந்தளவு தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். அதனால், ஒரே காலத்தில் ஆயிரக் கணக்கானோர் வேலை இழந்தனர். 

அது மட்டுமல்ல, எந்த முதலாளியும் வாங்க விரும்பாத நிறுவனங்கள் பல கை விடப் பட்டன. அவற்றின் உற்பத்தி நின்று போனது. இயந்திரங்கள் துருப் பிடித்தன. அங்கே வேலை செய்து வந்தவர்களும், வேலை இழந்து வீட்டில் தங்க வேண்டிய நிலைமை. வேலையில்லாதவர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. முதலாளித்துவ அரசு அவர்களைப் பொறுப்பெடுக்கவில்லை. இதனால் நாட்டில் வறுமை அதிகரித்தது.



இது முன்னாள் சோவியத் யூனியனின் மிகப் பெரிய கார் உற்பத்தித் தொழிற்சாலை VAZ (Volzhsky Avtomobilny Zavod). வோல்கா நதிக்கரையில் உள்ள தொல்யாத்தி நகரில் அமைந்துள்ளது. (தொல்யாத்தி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பெயர்.) VAZ, முழு ஐரோப்பாக் கண்டத்திலும் உள்ள மிகப் பெரிய கார் தொழிற்சாலைகளில் ஒன்றாக கருதப் படுகின்றது. தொழிற்சாலைக் கட்டிடங்களை கீழேயுள்ள படத்தில் காண்கிறீர்கள். 

மேலிருந்து இடது புறமாக: 
முதலாவது படம்: VAZ தொழிற்சாலையில் இளம் குடும்பஸ்தர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பையும் தொழிற்சாலை எடுத்துக் கொண்டது. 

இரண்டாவது படம்: முடிந்த அளவுக்கு விரைவாக, தொழிலாளர்களுக்கு புது வீடு எடுத்துக் கொடுக்கும் பொறுப்பை தொழிற்சங்கம் ஏற்கின்றது.

மூன்றாவது படம்: தொழிற்சாலையின் கல்வி நிலையம்: ஒவ்வொரு வருடமும் குறைந்தது முப்பதாயிரம் தொழிலாளர்கள் கல்வி கற்கின்றனர். 

நான்காவது படம்: வாசிக சாலை. தொழிலாளர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, VAZ தொழிலகத்தினுள் மொத்தம் 58 நூலகங்கள் இயங்கி வந்தன.

(நன்றி: De Vakbonden in de USSR (சோவியத் யூனியனில் தொழிற்சங்கங்கள்), நோவொஸ்தி பதிப்பகம், மொஸ்கோ, 1984)

No comments: