Tuesday, August 12, 2014

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் பொருளாதாரத் தடை


இவ்வளவு காலமும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகள் விதித்து வந்தன. இன்று, ரஷ்யா ஐரோப்பாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஒன்றை அறிவித்துள்ளது. இன்று முதல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. இந்தத் தடை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இதனால், பல ஐரோப்பிய நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன.

அதை விட, ஏற்கனவே, உக்ரைனுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், 5 மில்லியன் மக்கள் வாழும் கீவ் நகரில், சுடு தண்ணீர் கிடைப்பதில்லை. வசதியான கீவ் நகரவாசிகள், மின்சார கொதிகலன் வாங்கி தண்ணீர் கொதிக்க வைத்து குளிக்கிறார்கள். எல்லோரும் அதைப் பாவிக்கத் தொடங்கினால், குளிர்காலத்தில் மின்சாரத் தடை எற்படும். இந்த வருடம் வரப் போகும் குளிர்காலத்தில், எரிவாயு, மின்சாரம் இன்றி வாழ வேண்டிய நிலைமை வரலாம்.

"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது!" பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப் படப் போகும் ரஷ்ய மக்களுக்காக, மேற்கு ஐரோப்பியர்கள் கவலைப் படுகிறார்கள். அதற்கு காரணம் இது தான். மேற்கத்திய நாடுகளின் விவசாயப் விளைபொருட்கள், உணவுப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் பிரச்சினை காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வந்ததற்கு, பதிலடியாக இது நடந்துள்ளது.

இதனால், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப் படவுள்ளன. நெதர்லாந்தில் இருந்து பாலாடைக் கட்டி (சீஸ்), கறிமிளகாய், தக்காளி போன்ற உணவுப் பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகின்றன. சுமார் ஒன்றரை பில்லியன் பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப் படவுள்ளது. அவை பழுதடையக் கூடிய பொருட்கள் என்பதால் களஞ்சியப் படுத்தி வைக்கவும் முடியாது.

"தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்" என்று வாதாடி வரும், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" இந்தப் பிரச்சினையிலும் ரஷ்யா தான் அதிகளவு பாதிக்கப் படப் போகின்றது என்று ஆரூடம் கூறி வருகின்றனர். ரஷ்யா ஏற்கனவே ஈரானுடனும், லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், மேற்கு ஐரோப்பியர்கள் தான் தமது பொருட்களை விற்பதற்கு புதிய சந்தைகளை தேட வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு, உலகில் எத்தனை நாடுகள் தயாராக இருக்கின்றன என்பதும் கேள்விக் குறி தான்.

ரஷ்யர்களும், எமது மக்களைப் போன்றவர்கள் தான். வெளிநாட்டுப் பொருட்கள், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். எமது நாட்டில் நடப்பதைப் போன்று, ரஷ்யாவிலும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே, மேற்கத்திய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் பாவிக்கிறார்கள். ஏழைகளும், கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், மலிவாகக் கிடைக்கும் உள்நாட்டுப் பொருட்களுடன் திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். ஆகவே, மேற்கத்திய உணவுப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப் பட்டால், சிறுபான்மையினரான மேட்டுக்குடி மக்கள் மட்டும் தான் பாதிக்கப் படுவார்கள்.

அதே நேரம், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். ரஷ்யாவுக்கான ஏற்றுமதி தடைப் பட்டால், உள்நாட்டில் அந்தப் பொருட்களின் விலை சரியும். இதனால், மேற்கத்திய நாடுகளில் வாழும் பண வசதியற்ற, ஏழை மக்கள், குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்கக் கூடியதாக இருக்கும். தீமையிலும் ஒரு நன்மை என்று இதனைக் குறிப்பிடலாம்.

மேற்கத்திய நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை குறையும் "அபாயத்தை" தடுப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்கிறார்கள். அதாவது, "ஏற்றுமதியாகாமல் தேங்கிக் கிடக்கும் உணவுப் பொருட்களை கடலில் கொட்டினாலும் கொட்டுவார்களே தவிர," உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வர மாட்டார்களாம். ஏனென்றால், ஒரு பொருள் சந்தையில் தாராளமாக கிடைத்தால், அதன் விலை குறைந்து விடும் என்பது அடிப்படை முதலாளித்துவ நியதி. "மலிந்தால் சந்தைக்கு வரும்" என்பது ஒரு தமிழ்ப் பழமொழி.

பாலாடைக் கட்டி (சீஸ்) ஏற்றுமதியில் நெதர்லாந்து முன்னணி வகிக்கின்றது. அது உலகம் முழுவதும் ஏற்றுமதியாகின்றது. சீஸ் உற்பத்தி செய்யும் நாடென்பதால், நெதர்லாந்தில் அதன் விலை மலிவாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். (அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பலர் அவ்வாறு நினைத்து ஏமாந்து போகிறார்கள்.) உண்மையில், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் சீஸ், சந்தையில் தாராளமாகக் கிடைத்தாலும் அதன் விலை மிக அதிகம். ஆனால், அதே டச்சு சீஸ் கட்டியை, உதாரணத்திற்கு, அயல் நாடான ஜெர்மனியில் உள்ள ஒரு கடையில் மலிவாக வாங்கலாம்.

அதே மாதிரித் தான், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் கறிமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளின் விலைகளும் மிகவும் அதிகம். இலங்கையில், இந்தியாவில் தக்காளியை, "ஏழைகளின் ஆப்பிள்" என்று சொல்வார்கள். ஆனால், நெதர்லாந்தில் அந்த நிலைமை மாறி உள்ளது. இங்கே ஆப்பிளின் விலை குறைவு, தக்காளியின் விலை அதிகம். ஏன் இந்த நிலைமை என்று கேட்டால், அந்நிய நாடுகளுக்கான ஏற்றுமதி தான் முக்கிய காரணம்.

இங்கே நான் நெதர்லாந்தை ஓர் உதாரணமாகத் தான் குறிப்பிட்டுள்ளேன். மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களும், இதே கதைகளை தான் கூறுகின்றனர். அதாவது, எந்தப் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றதோ, அதன் விலை உள்நாட்டில் அதிகமாக உள்ளது. உள்நாட்டு நுகர்வை கட்டுப்படுத்தி, அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக, வர்த்தகர்கள் செயற்கையாக விலையை தீர்மானிக்கிறார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதித்த நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ரஷ்யா ஊடாக பறப்பதற்கு தடை கொண்டு வரப் படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. அமெரிக்க, ஐரோப்பிய விமான சேவைகள், இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப் படும். ஏனென்றால், ஜப்பான, சீனாவுக்கு செல்லும் மேற்கத்திய விமானங்கள் யாவும் ரஷ்யாவின் சைபீரியா வான் பரப்பில் பயணம் செய்கின்றன. இதனால், பயண நேரம் குறைகின்றது.

சைபீரியா வான் பரப்பில் பறப்பதற்கு, ரஷ்யா தடை விதித்தால், மாற்று வழிகளை தேட வேண்டும். ரஷ்யாவுக்கு மேலே வட துருவத்திற்கு அண்மையாக பறப்பது ஒரு வழி. மேற்கு ஐரோப்பாவில் இருந்து, அலாஸ்காவில் சிறிது நேரம் தரித்து நின்று விட்டு, மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டும். மற்றது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலாக பறப்பது. இந்த இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பயண நேரம் அதிகமாகும். மேலதிக எரிபொருள் செலவாகும். அதனால் பயணச் செலவும் அதிகரிக்கும்.

மேற்கத்திய விமான சேவைகள், அதிகரிக்கப் போகும் செலவை, விமானப் பயணிகளின் தலைகளில் கட்டி விட முடியாத அளவிற்கு, இன்னொரு பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத் தடையானது, மேற்கத்திய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆசிய நாடுகளில் இருந்து, மேற்கு ஐரோப்பாவுக்கு பறக்கும் ஆசிய விமான நிறுவனங்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குறைந்த செலவில் பயணம் செய்யலாம் என்று கூறி, மேற்கத்திய பயணிகளை தம் பக்கம் இழுக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட விமானத் தடை விவகாரம், ஏற்கனவே சோவியத் யூனியன் காலத்தில் வழமையாக இருந்து வந்தது. ஆயினும் அந்தக் காலகட்டம் வேறு. அன்று குறைந்தளவு வசதி படைத்த பயணிகள் மட்டுமே தூரப் பிரயாணம் செய்வதுண்டு. இன்று விமான டிக்கட் விலைகள் குறைந்து விட்டதால், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், எமிரேட்ஸ், எதிஹாட் போன்ற மத்திய கிழக்கை சேர்ந்த விமானங்கள், ஏற்கனவே குறைந்த விலையில் டிக்கட் விற்று பயணிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு, மேற்கத்திய விமானக் கம்பனிகள் தமது நாடுகளின் அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. நிலைமை அந்தளவு மோசமடையாது என்று, மேற்குலகில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யார் கண்டது? எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? 

No comments: