Friday, March 28, 2014

ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம்


இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகளும் நடந்துள்ளன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே பல தடவைகள் திருத்தப் பட்டு, தற்போது மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்ப்பாயமாக குறுகி விட்டது. ஏற்கனவே, 2012 ல் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டாலும், அது இலங்கைக்கான எச்சரிக்கையாக மட்டுமே அமைந்திருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில், இலங்கை அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத படியால், ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், இந்த வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமைந்திருந்தது. இதிலே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 2012 ல், "இலங்கையில் இறையாண்மை பாதுகாக்கப் பட வேண்டும்" என்ற நிர்ப்பந்தம் கொடுத்து, இந்தியா ஒரு திருத்தத்தை செய்திருந்தது. அதன் பின்னரே, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

ஆனால், இந்தியா இம்முறை எதிர்த்து வாக்களித்துள்ளது. அதற்கு தன்னிலை விளக்கமும் கொடுத்துள்ளது. (ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் தீர்மானம் என்று கூறியது.)  மேலும், ஐ.நா.விசாரணைக் குழுவுக்கான நிதியாதாரம் பற்றி சந்தேகம் தெரிவித்த பாகிஸ்தான், திருத்தப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தது. அதற்கான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் நிலைப்பாடு, தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது.

தமிழகத்தில், திமுக வும், அனைத்து தமிழ் தேசியவாதக் கட்சிகளும், இயக்கங்களும் இந்தியாவின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளன. இலங்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் இருந்தே, இந்தியா குறித்த பிரமை உடைந்து போனமை தெரிந்தது. "பாகிஸ்தானும், இந்தியாவும் நேரெதிர் கொள்கை கொண்ட பகையாளி நாடுகளாக இருந்த போதிலும், ஈழத் தமிழர் விடயத்தில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கொள்கையை கடைப்பிடிப்பதை ..." சுரேஷ் காரசாரமாக கண்டித்தார்.

தமிழ் தேசியவாத கண்ணோட்டம் கொண்ட தமிழர்கள் சிலர், "இது காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத கொள்கையின் விளைவு. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டால், எல்லாம் சரியாகி விடும்..." என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில், தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளும், ஊடகங்களும், இந்தியா பற்றி உருவாக்கி வைத்திருந்த தவறான கருதுகோள்கள், இன்று பலரை அதே பாதையில் சிந்திக்க வைக்கின்றது. ஆனால், உண்மை நிலையோ, (தமிழ்) தேசியவாதிகள் நம்புவதற்கு நேர்மாறாக உள்ளது.

இந்தியாவில், மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும், அதன் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் உண்டாகப் போவதில்லை. தேர்தல்கள் மூலம், மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாற்றலாம். ஆனால், அமைச்சு அலுவகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற முடியாது. அந்த அதிகாரிகள் யாரும், தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. எந்தக் கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அமைச்சு அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஆகவே, காங்கிரஸ் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, பாஜக தெரிவு செய்யப் பட்டால், இந்தியாவின் நிலைப்பாடு ஈழத் தமிழருக்கு சாதகமாக மாறி விடும் என்பது ஒரு கற்பனையான வாதம். ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை, இலங்கை சம்பந்தமான வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதி. அது எவ்வாறு இருக்கும், இனிமேல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டு விட்ட விடயங்கள்.

பாகிஸ்தானும், இந்தியாவும் பகையாளி நாடுகள் போன்று நடந்து கொள்கின்றன. அதுவும் ஒரு வகை அரசியல் தான். இந்திய- பாகிஸ்தான் மக்கள் மனதில் தேசிய வெறியை வளர்த்து விடுவதற்கே, அந்தப் பகை அரசியல் பெரிதும் உதவுகின்றது. அயல் நாடுகள் விடயத்திலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று போட்டி போட வேண்டிய தேவையிருக்கவில்லை. இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சிறிலங்கா அரசுக்கு பாகிஸ்தான் ஆயுத விநியோகம் செய்து வந்துள்ளது. இந்தியா, ஒரு தடவையாவது, அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை. அது மட்டுமல்ல, பாகிஸ்தானின் ஆயுத விநியோகமானது, இந்தியாவை அதன் "கடமையில்" இருந்து விடுவித்து விட்டதாக பார்க்கப் பட்டது. பாகிஸ்தானுக்கு பதிலாக இந்தியா ஆயுத விநியோகம் செய்திருந்தால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அது அஞ்சியது.

இறுதிக் கட்ட ஈழப்போரில், இந்திய இராணுவம் நேரடியாக களத்தில் நின்று போரிட்டிருக்கலாம் என்ற சந்தேகம், நீண்ட காலமாக நிலவுகின்றது. அதனை உறுதிப்படுத்தும்  சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் தங்கியிருந்து, பெண் போராளிகளைப் பற்றி, "எனது நாட்டில் ஒரு துளி நேரம்" (விடியல் பதிப்பகம்) என்ற ஆய்வு நூலை எழுதிய ந. மாலதி, அண்மையில் ஒரு தகவலைக் கூறினார்.

வன்னியில் முன்னேறிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தை தடுக்க முடியாத புலிகள், வேறு வழியின்றி ஒரு அணைக்கட்டை குண்டு வைத்து உடைத்தார்கள். இதனால் அயல் கிராமங்களை வெள்ளம் மூடியது. அதற்குள் சிக்கி, "ஐயாயிரம் சிறிலங்காப் படையினர் மரணமடைந்ததாக" புலிகள் தமது செய்தியில் தெரிவித்து இருந்தனர். அன்று வெள்ளத்திற்குள் மூழ்கி இறந்த இராணுவ வீரர்களின் சடலங்களை புலிகள் கண்டெடுத்திருந்தனர். அவற்றில் சில இந்திய இராணுவத்தினரின் சீருடைகளை அணிந்திருந்ததைக் கண்டனர்.

மாலதி இந்தத் தகவலை தெரிவித்து விட்டு, "வன்னியில் இந்திய இராணுவ வீரர்களும், சிறிலங்காப் படையுடன் சேர்ந்து போரிட்டிருக்கலாம் என்று புலிகள் மத்தியில் பேசப் பட்டதாக" கூறினார். இந்தியா தலையிட்டு போரை நிறுத்தும் என்று புலிகள் நம்பி இருந்த காரணத்தால், அன்று இந்தத் தகவலை யாரும் வெளி விடாமல் இருந்திருக்கலாம். இந்திய இராணுவப் பிரசன்னம் பற்றி, இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த ஒரு பெண் கூறுகையில், "ஆழ் கடலில் நின்று கொண்டிருந்த இந்திய கடற்படைப் படகு, கரையிலிருந்த தங்களது இருப்பிடத்தை நோக்கி பீரங்கியால் சுட்டதாக..." தெரிவித்தார். இது போன்ற பல தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருக்கலாம். இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச சகோதரர்கள், "இந்தியா தான் இந்தப் போரை நடத்தியது." என்று நேரடியாகவே பல தடவைகள் கூறி விட்டார்கள். அப்படியானால், எதற்காக இந்தியா இந்தப் போரை நடத்த வேண்டும்?

ஒரு முறை, தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சி, ஓய்வு பெற்ற RAW அதிகாரி ஹரிஹரன் உடனான நேர்காணலை ஒளிபரப்பியது. தந்தி டிவி நிர்வாகமும், பேட்டி எடுத்தவரும், நாம் தமிழர் போன்ற தமிழினவாதக் குழுக்களின் அரசியலை பிரதிபலிப்பவர்கள். அதாவது, "சீனாவும், இந்தியாவும் நிரந்தரப் பகையாளி நாடுகள். இலங்கையில் சீனா கால் பதிப்பது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து." என்று நம்புகிறவர்கள்.

நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்கள் கூட, "சீனாவைப் பற்றி இந்தியாவிடம் கோள் மூட்டி விட்டு, தமிழீழத்திற்கு ஆதரவாக இந்திய அரசை வளைக்கலாம்..." என்று நம்புவதுடன், அதையே தமது ஆதரவாளர்களுக்கும் கூறி வருகின்றனர். ஆகவே, அன்று ஹரிஹரனை பேட்டி கண்ட தந்தி டிவி தொகுப்பாளரின் கேள்விகளிலும், அதே போன்ற கருத்துக்கள் எதிரொலித்தன.

அந்தப் பேட்டியின் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு முன்னாள் RAW அதிகாரியான ஹரிஹரன், "சீனாவின் அச்சுறுத்தல்" பற்றி, எந்த வித அக்கறையுமின்றி பதிலளித்தார். ஒரு சில தமிழினவாதிகள் கூறி வருவது போன்று, "சீனாவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது" என்பதே ஹரிஹரனின் பதிலாக இருந்தது. ஆனால், அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த இன்னொரு தகவல் கூர்ந்து நோக்கத் தக்கது.

"இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றுவதற்கு, அமெரிக்கா முயற்சி எடுத்திருந்தது. அதற்காகவே ஒரு அமெரிக்க போர்க் கப்பல், முல்லைத் தீவு கடலுக்கு அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்தது. இலங்கையானது, இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடு. அங்கு அமெரிக்க இராணுவத் தலையீடு ஏற்படுவதை, இந்தியா விரும்பவில்லை." இதனை ஹரிஹரன், தந்தி டிவி பேட்டியில் தெரிவித்தார். அதாவது, இலங்கைக் கடற்கரையில், அமெரிக்கக் மரைன் படையினர் வந்திறங்குவதற்கு முன்னர், புலிகளின் கதையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
(ஆதாரம்:https://www.youtube.com/watch?v=9ukg8c2pyZM&fbclid=IwAR1fqUq434PEz6trKEL-jzo7nAnCQUUOr104N7L2M_kwMEh95cTzW0zCZIM&app=desktop )

அன்று இந்தியா, சிறிலங்காப் படைகளுடன் ஒத்துழைத்து போரை முடிவுக்கு கொண்டு வந்திரா விட்டால், அமெரிக்கா தலையிட்டு, புலிகளின் தலைவர்களை தப்ப வைத்திருப்பார்கள். இந்தத் தகவலை,ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தரான எரிக் சூல்ஹைமும் உறுதிப் படுத்தி இருந்தார். புலிகளின் தலைமையை சரணடைய வைப்பதற்கு, கேபி மூலம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலங்களிலும், போர் நிறுத்தம் செய்வதற்கும், ஒவ்வொரு தடவையும் இந்தியாவின் ஒப்புதல் தேவைப் பட்டது. பல தடவைகள், எரிக் சூல்ஹைம் டெல்லி சென்று, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பற்றி கூற வேண்டி இருந்தது. ஆனால், அமெரிக்க கப்பல் விவகாரம், இந்தியாவை கலந்தாலோசிக்காமல் எடுக்கப் பட்ட முடிவாகவே தெரிகின்றது.

தந்தி தொலைக்காட்சி பேட்டியில், ஹரிஹரன் சொல்லாமல் விட்ட தகவல் இது. அன்று, அமெரிக்கப் படைகள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வந்திறங்கி இருந்தால், சிலநேரம் அங்கேயே முகாமிட்டு தங்கி விட்டிருப்பார்கள். அது நடந்திருக்குமா, இல்லையா என்பதை விட, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று, இந்திய அரசு நம்புகிறது.

மேற்குறிப்பிட்ட பூகோள அரசியல் பின்னணியை வைத்துக் கொண்டே, ஜெனீவா தீர்மானங்களை ஆராய வேண்டியுள்ளது. இந்தியா அமெரிக்காவுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கலாம். பொருளாதாரத்திலும் பல விட்டுக் கொடுப்புகளை செய்திருக்கலாம். ஆயினும், அமெரிக்காவிடம் இருந்தே இந்தியாவுக்கு ஆபத்து வரும் என்று, இந்திய அரசு மட்டத்தில் நம்புகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம்: ரஷ்யா.

தொன்னூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்து, ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டது. அப்போது, ரஷ்ய அரசும், மக்களும், அமெரிக்காவை நட்பு சக்தியாகப் பார்த்தார்கள். அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அமெரிக்க உதாரணத்தை பின்பற்றினார்கள். பனிப்போர் முடிந்து விட்டது என்றும், அமெரிக்காவும், ரஷ்யாவும் நெருக்கமான நண்பர்கள் என்று பலர் நம்பினார்கள். ஆனால், ஒரு தசாப்தத்தின் பின்னர், அந்த நம்பிக்கை உடைந்து போனது. தற்போது, ரஷ்யாவும், மேற்குலகமும், மீண்டும் ஒரு பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. அதே வரலாறு இந்தியாவிலும் நடக்கின்றது.

உக்ரைன் பிரச்சினையில், ரஷ்யா மேற்குலகுடன் விட்டுக் கொடாத தன்மையுடன் நடந்து கொள்வதற்கு காரணம் உள்ளது. "உக்ரைன் பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும், மொஸ்கோவுக்கு வாருங்கள்" என்று ரஷ்யா கூறுகின்றது. பிராந்திய வல்லரசான ரஷ்யா, உக்ரைன் தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு என்று கருதுகின்றது. மேற்குலகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அதே போன்று தான், இலங்கை தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு, என்று இந்தியா கருதுகின்றது. "இலங்கை பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும் டெல்லிக்கு வாருங்கள்." என்று கூறுகின்றது. ஜெனீவாவில், இலங்கை தொடர்பாக இந்தியாவுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஒரு பலப் பரீட்சை நடக்கின்றது.

ஜெனீவாவில், இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளக் காரணம் என்ன? ஒவ்வொரு வருடமும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் உள்நோக்கம் என்ன? மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் பற்றி சிலாகித்துப் பேசப் பட்டாலும், அமெரிக்கா அவற்றை ஒரு சாட்டாகவே பயன்படுத்தி வருவது தெரிந்த விடயம்.

"அமெரிக்கா, ஈழத் தமிழர்கள் மேல் கொண்ட கரிசனை காரணமாக, சிறிலங்கா அரசை தண்டிக்க விரும்புகிறது..." என்று நம்பும் தமிழர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், தமிழர்கள் நினைப்பது போல, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களும் நினைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அமெரிக்கா எப்போதும் தனது நலன் சார்ந்தே சிந்தித்து, செயல்பட்டு வருகின்றது. ஆகவே, ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஈழத் தமிழருக்கு ஆதரவானது என்பது எந்தளவுக்கு உண்மை இல்லையோ, சிறிலங்கா அரசை தண்டிப்பதற்கானது என்பதும் உண்மையாக இருக்க முடியாது.

ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கையை அடி பணிய வைப்பது, அமெரிக்காவுக்கு இலகுவான காரியம். அதற்கு இந்த ஐ.நா.மன்றம், ஜெனீவா எதுவும் தேவையில்லை. அண்மையில், உக்ரைன் பிரச்சினையில் சில ரஷ்ய அரசியல்வாதிகள் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன. அதெல்லாம், ஐ.நா. வை கேட்காமலே நடைமுறைப் படுத்தப் பட்டன.

அமெரிக்கா நினைத்திருந்தால், போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தி, இலங்கையை ஆளும் ராஜபக்ச கும்பலை சேர்ந்தவர்களின் வெளிநாட்டு சொத்துக்களை, வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்க முடியும். அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விடாமல் தடுத்திருக்க முடியும். அது எதையும் அமெரிக்கா செய்யவில்லை. "இனிமேல் ஒரு ஐ.நா. விசாரணைக் குழு நியமித்து, அது சொன்ன பிறகு தான், அமெரிக்கா இலங்கை மீது தடைகளை விதிக்கும்" என்பது நம்பத் தகுந்தது அல்ல.

ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படும். என்ன நோக்கத்திற்காக அந்த அழுத்தம் கொடுக்கப் படுகின்றது?  என்பது தான் கேள்வி. "தமிழீழம் கிடைக்கும், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்..." என்று கூறி தமிழ் மக்களை நம்ப வைக்கலாம். ஆனால், "ஒரு சிறுபான்மை இன மக்கள் நலன் சார்ந்து அமெரிக்கா செயற்படுகின்றது" என்று, இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் நம்புவோர் மிகக் குறைவு. ஆகவே, இந்திய அரசும் அதனை நம்பப் போவதில்லை. அப்படியானால் வேறொரு காரணம் இருக்க வேண்டும். என்ன அது?

இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள டியேகோ கார்சியா தீவில், அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ளது. முன்பு பிரிட்டனின் காலனியாக இருந்த குட்டித் தீவில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்டு, அந்த இடம் அமெரிக்க படையினரிடம் குத்தகைக்கு விடப் பட்டது. அந்த ஒப்பந்தக் காலம் 2016 ம் ஆண்டு முடிவடைகின்றது. ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

டியேகோ கார்சியா தீவின் பூர்வ குடிகள், பலவந்தமாக வெளியேற்றப் பட்டு, பிரிட்டனிலும், மொரிசியஸ் தீவிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான அனுமதி மறுக்கப் படுகின்றது. இது தொடர்பாக, கடந்த சில வருடங்களாக வழக்கு நடந்து வருகின்றது. தாயகம் திரும்ப விரும்பும் டியேகோ கார்சியா மக்கள், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் யாவும், அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நீர்த்துப் போகச் செய்யப் பட்டன. ஆயினும், டியேகோ கார்சியா மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர். 2016 ம் ஆண்டிலிருந்து, புதிய ஒப்பந்தம் போடப் படுமானால், அது பெரியதொரு கலவரத்திற்கு வழி வகுக்கும்.

ஆயிரம் கடல் மைல் தொலைவில் இருந்தாலும், டியேகோ கார்சியா தனக்கு சொந்தமாக வேண்டும் என்று, மொரீசியஸ் உரிமை கோரி வருகின்றது. அதனால், 2016 ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப் படுவதை, மொரிசியஸ் நாடும் எதிர்க்கும் என்பது திண்ணம். டியேகோ கார்சியா தீவை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மொரிசியஸ் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இலங்கையில் நடந்த பொதுநல வாய நாடுகளின் உச்சி மகாநாட்டினை மொரிசியஸ் பகிஷ்கரித்ததமைக்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மொரிசியஸ் நாட்டில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், அவர்கள் உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களை ஆதரிப்பதும் உண்மை தான். ஆனால், பிரிட்டன் மீது அழுத்தம் கொடுப்பதற்கு சாதகமாக, மொரிசியஸ் அரசு தமிழ் தேசியவாதிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. மொரிசியஸ் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, பிரிட்டனும் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே, அமெரிக்கா இராணுவ தளம் அமைப்பதற்காக, மாலைதீவை அணுகியது. ஆனால், "ஒரு முஸ்லிம் நாடான" மாலைதீவு, அமெரிக்க இராணுவ தளத்தை வைத்திருப்பதால் உண்டாகும் சிக்கல்களை கவனத்தில் எடுத்து, மறுப்புக் கூறி விட்டது. ஆகவே, அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரேயொரு தெரிவு, இலங்கைத் தீவு மட்டுமே. ஏற்கனவே, டியேகோ கார்சியா தீவில் சுமார் ஆயிரம் அமெரிக்க படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்.

வெளியுலகத் தொடர்பற்ற டியேகோ கார்சியா தீவுக்கு, அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. அங்குள்ள  அமெரிக்க இராணுவ தளத்தில் வேலை செய்வதற்கென, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாட்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அதிலே குறைந்தது அரை வாசிப் பேராவது இலங்கைப் பிரஜைகள் என்பது குறிப்பிடத் தக்கது. (இலங்கையரை தவிர, பிலிப்பைன்ஸ் நாட்டவரும் வேலை செய்கின்றனர். சில பிரிட்டிஷ் படையினரும் அங்கே உள்ளனர். அவர்களைத் தவிர வேறெந்த நாட்டினரும், டியேகோ கார்சியா தீவுக்கு செல்ல முடியாது.)

இலங்கையில் அமெரிக்க தளம் அமைப்பதால், அமெரிக்காவுக்கு வேறு பல ஆதாயங்களும் கிடைக்கலாம். இலங்கை, இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பது மட்டுமல்ல, சிறந்த பொருளாதாரக் கட்டுமான வசதி கொண்டது. விமான நிலையம், துறைமுக வசதிகளும் உள்ளன. மேலும், பெரும்பான்மையான இலங்கை மக்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட, அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அது இந்தியாவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. அதனால், அமெரிக்கா இந்தியாவை கண்காணிப்பது இலகுவாகி விடும். (முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் வொயிஸ் ஒப் அமெரிக்கா தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதை, இந்தியா கடுமையாக எதிர்த்தமை இங்கே நினைவுகூரத் தக்கது.)

நடைமுறை பூகோள அரசியல் களத்தில் ஆசியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ தளம் அவசியமானது. சிறிலங்காவில் ராஜபக்ச அரசு, ஜெனீவா தீர்மானங்கள் குறித்து மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதில் இருந்தே, அது எந்தளவு தூரம் அமெரிக்காவுக்கு நெருக்கமாகச் செல்கின்றது என்பது தெரிய வருகின்றது.

இந்தியாவின் நெருக்குவாரம் காரணமாக, இலங்கையில் அமெரிக்க தளம் அமைக்கும் திட்டம் பின்போடப் பட்டு வருகின்றது. ஆனால், இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப் பட வேண்டும். அநேகமாக, அடுத்த வருடம் (2015), "இலங்கையில் அமெரிக்கத் தளம் அமைக்கப் படுமா, இல்லையா?" என்ற கேள்விக்கு விடை  கிடைத்து விடும்.


ஜெனீவா தொடர்பான முன்னைய பதிவுகள்: 
1.ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி?
2.தமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு மீளாய்வு
3.ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு

3 comments:

valai thedal said...

நல்லதொரு தகவல்....... உங்களின் தொலைநோக்கு யூகம் சரிதானா என்பது ஐயமே! ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஓர் ஆசிய(பிரராந்திய)அடியாளகவே இந்தியா தன்னை ஆக்கிக் கொண்டு வருகிறது.

Kalaiyarasan said...

திரை மறைவில் அமெரிக்கா, இலங்கைக்கு இடையிலான இரகசிய இராணுவக் கூட்டணி
--------------------

ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானமானது, பலத்த எதிர்பார்ப்புகளையும், சர்ச்சைகளையும் தோற்றுவிப்பது வழமை. தீர்மானம் நிறைவேறுவதற்கு, சில வாரங்களுக்கு முன்னர் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால், தற்போது ஈழப்போர் ஜெனீவாவில் நடக்கிறதா என்ற பிரமை உண்டாகும்.

அமெரிக்கா "தமிழர்களுக்கு நீதி வழங்கப் போகிறது" என்று, தமிழ் தேசியவாதிகள் தமிழ் மக்களை நம்பச் சொல்வார்கள். மறு பக்கத்தில், அமெரிக்கா "ஒரு சிங்கள விரோதி" என்று, சிறிலங்கா அரசு சிங்கள மக்களை நம்ப வைக்கும். அமெரிக்க தீர்மானத்தின் உண்மையான நோக்கம், ஜெனீவா கூட்டம் முடிந்த பின்னர் தான் தெரிய வரும். ஆனால், அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். எந்த ஊடகமும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காது.

அமெரிக்கா தலைமையில், ஆசிய, பசுபிக் நாடுகள் கலந்து கொள்ளும் வருடாந்த கூட்டம், ஜெனீவா சலசலப்பு ஓய்ந்த பின்னர் அமைதியாகக் கூடும். The Multinational Planning Augmentation Team (MPAT) எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 15 நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு, இந்தியா, சீனாவுக்கு (வேண்டுமென்றே) அழைப்பு விடுப்பதில்லை. ஆனால், அவற்றிற்கு அயலில் உள்ள நாடுகள் பல கலந்து கொள்ளும்.

ஒவ்வொரு வருடமும், விடுதலைப் புலிகளை தோற்கடித்த கிழக்கு மாகாணக் கடற்கரையில், பன்னாட்டு இராணுவ- கடற்படை ஒத்திகைகள் நடைபெறும். இனி வருங்காலங்களில், மனிதர்களால் அல்லது இயற்கையால் ஏற்படுத்தப் படும் பேரழிவுகளை சமாளிப்பது பற்றிய இராணுவக் கூட்டணி என்று கூறப் படுகின்றது. திடீர் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், இந்த இராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உதவிக்கு ஓடி வர வேண்டும்.

கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், சிங்கப்பூர், வியட்நாம், கம்போடியா போன்ற பசுபிக்-இந்து சமுத்திரம் சார்ந்த நாடுகள் கலந்து கொள்வது புரிந்து கொள்ளத் தக்கது. ஆனால், கடலே இல்லாத, நிலத்தால் சூழப்பட்ட நேபாளம், மொங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுப்பது தான் புதிரானது. அநேகமாக இது ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஷாங்காய் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கையாக கருதப் பட வாய்ப்புண்டு.

The Multinational Planning Augmentation Team (MPAT) அமைப்பின் பாதுகாப்பு தொடர்பான இந்த வருடத்திய கூட்டம், நாளை ஏப்ரல் 1 ம் தேதி, கொழும்பு நகரில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் 9 வரையில், ஒரு வாரம் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு, அமெரிக்க பாதுகாப்பு படைத் தரப்பில் இருந்து, 20 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

pithan said...

இதில் இந்தியா எதிர்த்து வாக்களிக்கவில்லை.வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என வந்திருக்க வேண்டும்.