Saturday, March 08, 2014

உக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்



இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாடான உக்ரைனில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இன்றைக்கும் பலர், அதன் ஆபத்தை உணராமல் இருக்கின்றனர். உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான தமிழர்கள், அல்லது தெற்காசிய நாட்டவர்கள் வாழ்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையினர் மாணவர்களாகவும், அகதிகளாகவும் உக்ரைனில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு அவர்களின் நிலைமை என்னவென்று யாராவது நினைத்துப் பார்த்தார்களா?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று கருதப் படும், தமிழ் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறன? இந்த ஆபத்தை மூடி மறைத்து, நாசிஸ பயங்கரவாதிகளுக்கு நற்சான்றிதழ் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறன.

ஒரு தடவை, அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், இந்தியா முழுவதும் பரபரப்புச் செய்தியாக பேசப் பட்டது. ஆனால், கடந்த வருடம், உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிலர் தாக்கப் பட்ட சம்பவம் பற்றி, எத்தனை பேருக்குத் தெரியும்? எந்த ஊடகம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது?

உக்ரைனில் இந்திய மாணவர்களை தாக்கியது யார் தெரியுமா? அந்த நாட்டில் ஒரு பலமான நவ நாஸி அரசியல் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் தான் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு, ரஷ்யாவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தான் மேற்குலகம் ஆதரிக்கிறது. மேற்குலகம் ஆதரிப்பதால், நாங்களும் ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி ஒன்றில் தான், அந்த சம்பவம் இடம்பெற்றது. கடந்த வருடம், உக்ரைனில் நடந்த உதைபந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இந்திய மாணவர்களே, நவ நாஸிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஏன் எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களை அடித்தார்கள்? இந்திய மாணவர்களின் கறுப்புத் தோல் நிறமே போதுமானது. வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. அதை நிறவெறி, இனவெறி என்று கண்டிப்பதற்கு பலர் முன்வருவார்கள். ஆனால், அன்று இந்தியர்களுக்கு அடித்த அதே நிறவெறியர்கள் / இனவெறியர்கள் தான், இன்று உக்ரைனிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றார்கள்.

ஆயுதமேந்திய நவ நாஸிக் குண்டர்கள், உக்ரைனில் கீவ் நகரில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த காலங்களில், "அரசுக்கு எதிரான அமைதி வழிப் போராட்டம் நடக்கின்றது" என்று தமிழ் ஊடகங்கள் புளுகிக் கொண்டிருந்தன. அவர்கள் சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சிக்கு வந்திருந்தாலும், மேற்குலகம் ஆதரிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் ஊடகங்களும் ஒரு நிறவெறி- பாசிஸ அரசை ஆதரிக்கின்றன. பாசிச வன்முறையாளர்களை, ஜனநாயகவாதிகள் போன்று சித்தரிக்கின்றன. இன்று வரையில், ஏதாவது ஒரு வெகுஜன தமிழ் ஊடகம், குறைந்த பட்சம் ஒரு இணையத் தளமாவது, "உக்ரைனிய ஆட்சியாளர்கள் நாஸிகள் / பாசிஸ்டுகள்" என்று கூறி இருக்கிறதா? (இடதுசாரி சார்பான ஊடகங்களை இங்கே குறிப்பிடவில்லை.)

தமிழ் ஊடகங்களில் வெளியாகும், அண்மைக் கால உக்ரைன் பிரச்சினை பற்றிய பற்றிய செய்திகள் எல்லாவற்றிலும், "நாஸிகள், பாசிஸ்டுகள்" என்ற சொற்கள் வர விடாமல் தணிக்கை செய்யப் பட்டிருக்கும். தாங்கள் எத்தகைய ஆபத்தை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது, இந்த ஊடகங்களுக்கு தெரிவதில்லை. நாளைக்கு, உக்ரைனில் வாழும் இந்தியர்கள், ஈழத் தமிழர்கள், நவ நாஸி காடையர்களினால் அடித்து விரட்டப் படும் காலம் வரும் பொழுது மட்டுமே விழித்துக் கொள்ளும். ஆனால், அப்போது காலம் கடந்து விட்டிருக்கும்.

உக்ரைனில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியின் பொழுது, இந்திய மாணவர்களை நவ நாஸிகள் அடித்து உதைக்கும் காட்சிகள், இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. அப்போதே பிபிசி அதனை வெளியிட்டிருந்தது. 

Ukraine football fans are racist 

உக்ரைன் பற்றிய முன்னைய பதிவுகள்:

No comments: