Thursday, April 11, 2013

"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!


மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம் 
(பாகம் : இரண்டு)
********
"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் 
(1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.)

மார்கரெட் தாட்சர் தனது பிரதமர் பதவிக் காலம் முழுவதும், செல்வந்தர்களின் மீட்பராகவே இருந்தார். ஆனால், பொது மக்களுக்கு முன்னால், மிகவும் எளிமையானவராக காட்டிக் கொண்டார்.  தொலைக்காட்சி காமெராவுக்கு முன்னால், பொது இடங்களில் குப்பை பொறுக்கிப் போட்டார்.  அவர் தன்னை, ஒரு மளிகைக் கடைக் காரனின் மகளாக காட்டிக் கொள்வதில் பெருமைப் பட்டார். அதே நேரம், அவர் ஒரு இலட்சாதிபதியை கணவராக பெற்ற பாக்கியத்தையும், பணக்கார நண்பர்களையும் பற்றிய விபரங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தா வண்ணம் பார்த்துக் கொண்டார். இந்த இரட்டை வேடம் காரணமாக, அவரால் பலரை ஏமாற்ற முடிந்தது.

இன்றைக்கும், தமிழ் முதலாளித்துவ ஊடகங்கள், மார்க்கரட் தாட்சரின் மரணத்தை, ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்பதைப் போல, மக்களுக்கு புளுகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டே, தமிழர்களின் எதிரியை மகிமைப் படுத்துகின்றனர். இந்த இரட்டை வேடம், அவர்களுக்கு புதிதல்ல. உலகம் முழுவதும், தென்னாபிரிக்க நிறவெறி அரசை கண்டித்து, அதன் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. மார்க்கரட் தாட்சர் நிறவெறியர்களுடன் சொந்தம் கொண்டாடினார். அப்போது சிறையில் இருந்த, கறுப்பின விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலாவை, பயங்கரவாதி என்று குறிப்பிட்டு பேசி வந்தார்.

தாட்சர் ஒரு இனவாதி என்ற ஐயம் பலருக்கு ஏற்படுவது இயல்பு. அவரைப் பொறுத்தவரையில், ஆங்கிலம் பேசும் மக்கள் மட்டுமே "நல்லவர்கள்", "நம்பகத் தன்மை" வாய்ந்தவர்கள். இதனால், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற ஆங்கிலேயர்கள் ஆளும் நாடுகள் மட்டுமே, பிரிட்டனின் நட்பு சக்திகள் என்று நம்பினார். அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான சகோதர பாசம், ஒரு அமெரிக்க நிறுவனம் ஒன்றின் "ஹெலிகாப்டர் விற்பனை ஊழலில்" விரிசல் கண்டது. இரண்டாம் உலகப்போரில், பிரிட்டன் (அமெரிக்காவுடன் சேர்ந்து) "அரைவாசி ஐரோப்பிய நாடுகளை விடுதலை செய்த கதைகளை" கூறி இனப்பெருமை பேசி வந்தார். இன மேலாண்மை எண்ணம் காரணமாக, மிகத் தீவிரமான ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பாளராக இருந்தார். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களாலும், தாட்சரின் நம்பிக்கைக்கு  இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அதுவே தாட்சரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

1984 ம் ஆண்டு, பிறைட்டன் நகரில, கன்சர்வேட்டிவ் கட்சி மகாநாடு நடைபெற்ற நட்சத்திர விடுதி, IRA யினால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அதுவரையும் சிறியளவு தாக்குதல்களில் ஈடுபட்ட IRA, மிகப் பெருமெடுப்பில் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது. அந்தத் தாக்குதலில், தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். பிரிட்டன் இன்னமும் வட அயர்லாந்து என்ற பகுதியை காலனிப் படுத்தி வைத்திருப்பதையும், IRA யின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக வளர்ந்து விட்டதையும் அந்த குண்டுவெடிப்பு உலகிற்கு எடுத்துக் காட்டியது. வட அயர்லாந்து பிரச்சினையில், மார்க்கரெட்  தாட்சர் ஆக்கிரமிப்பாளர்களான ஆங்கிலேய குடியேறிகளை ஆதரித்தார்.  விடுதலைக்காக போராடிய ஐரிஷ் மக்களை அடக்குவதில் குறியாக இருந்தார்.



இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து, ஈழத்தில் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த நிகழ்வை, தமிழர்கள் பலர் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு முன்னரே, 1981 ம் ஆண்டு, வட அயர்லாந்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பத்து அரசியல் கைதிகள் மரணத்தை தழுவிக் கொண்டனர். அதில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார். விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை  ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது.

வட அயர்லாந்து சிறைச்சாலைகளில், பத்து அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த போதிலும், அவர்கள் பக்கம் திரும்பியும் பாராத கல்நெஞ்சக்காரியாக தாட்சர் விளங்கினார். பொபி சான்ட்ஸ் என்ற அரசியல் கைதி, சிறையில் இருந்த படியே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார். உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சாண்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

பிரிட்டனில் ஐரிஷ் சிறுபான்மை இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய மார்கரெட் தாட்சர், பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் எந்தப் பக்கத்தை ஆதரித்திருப்பார்? இதனை புரிந்து கொள்வது ஒன்றும் சிக்கலான விடயமல்ல. தாட்சர் பிரிட்டனை ஆண்ட காலத்தில் தான், இலங்கையில் தமிழீழப் போராட்டம் வீறு கொண்டெழுந்தது. அது பனிப்போர் காலகட்டம் ஆகையினால், பிரிட்டன் உலகம் முழுவதும் மார்க்சியத்தை வேரோடு அழிக்கும் புனிதப்போரில் ஈடுபட்டது. அன்றிருந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனே, மார்க்சிய எதிர்ப்பு புனிதப்போரில், பிரிட்டனின் கூட்டாளியாக காட்டிக் கொள்ள விரும்பினார். அந்தக் காலத்தில், புலிகள் உட்பட ஐந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு, இந்தியா நிதியும், ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கி வந்தது. இந்தியாவுக்கு சோவியத் யூனியன் ஆதரவளித்தது.

அன்று இலங்கையில் இருந்த ஜெயவர்த்தனே அரசு, தீவிரமான அமெரிக்க சார்பு அரசாக காட்டிக் கொண்டது. "வொயிஸ் ஒப் அமெரிக்கா"(VOA) வுக்கு, திருகோணமலையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கினார். இன்று, இலங்கையில் சீனா கால்பதித்து விட்டது என்றும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போடப்படுவது உங்களுக்கு தெரியும். அன்றைய நிலைமை வேறு. இலங்கையில் அமெரிக்கா கால் பதித்து விட்டது என்றும், இந்தியாவை உளவு பார்ப்பதற்கே VOA தொலைத்தொடர்பு கோபுரம் கட்டப்படுவதாகவும் சந்தேகிக்கப் பட்டது. ஜெயவர்த்தன அரசுக்கு தலையிடி கொடுக்கும் நோக்குடன், தமிழீழ போராளிக் குழுக்களுக்கான இந்திய உதவியும் அதிகரிக்கப் பட்டது.

அன்றைய காலகட்டத்தில், ஈழப்போர் பற்றி செய்தி சேகரிக்க சென்ற மேற்கத்திய ஊடகங்கள், ஜெயவர்த்தனேயிடம் பேட்டி எடுத்தன. அந்தப் பேட்டிகளில், "புலிகள் போன்ற தமிழீழ போராளிக் குழுக்களை மார்க்சியவாதிகள் என்றும், அவர்கள் இலங்கை முழுவதையும் மார்க்சிய நாடாக்குவதற்காக போராடி வருவதாகவும்..." ஜெயவர்த்தனே குறிப்பிட்டுப் பேசி வந்தார். வெகுஜன ஊடகங்களில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன என்பதால் தான், அவை எமக்குத் தெரிய வருகின்றன.  வெளிநாடுகளுடனான, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப் பட்டன என்பது எமக்குத் தெரியாது. எது எப்படி இருந்தாலும்,  இலங்கை அரசு "மார்க்சிய விடுதலைப் புலிகளை" எதிர்த்துப் போராடி வருவதாக, மார்க்கரெட் தாட்சர் நினைத்திருப்பார்.

"மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்காக, தாட்சர் அரசு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தது. உண்மையில், தக்க தருணத்தில் பிரிட்டனின் உதவி கிட்டியிராவிட்டால், சிலநேரம் அப்போதே "தமிழீழம் உருவாகி இருக்கும்." ஏனெனில், தரைவழிச் சண்டையில் போராளிக் குழுக்களின் கை ஓங்கியிருந்தது. சிங்கள இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. சிறிய இராணுவ முகாம்களை கைவிட்டு விட்டு, பெரிய இராணுவ முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தது. வான்படையினரின் தாக்குதல்கள் காரணமாகத் தான், போராளிகளை எட்டத்தில் வைத்திருக்க முடிந்தது. விமானங்களை, ஹெலிகாப்டர்களை தாக்குவதற்கு ஏவுகணைகளோ, விமான எதிர்ப்பு பீரங்கியோ இல்லாத போராளிக் குழுக்களால், விமானத் தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. பல தடவை, அதுவே களத்தில் பின்னடைவை கொடுத்தது. 

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தாக்குதிறனை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாது, அவர்களை நிலைகுலையச் செய்த,   விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் ஒட்டியது யார்? ஈழப்போர் தொடங்கும் வரையில், வெறும் சம்பிரதாயபூர்வமான பணிகளிலேயே ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபட்டு வந்தது. படையினர் எந்தப் போரிலும் ஈடுபட்டு கள அனுபவம் கண்டவர்கள் அல்லர். அதனால், தமிழீழப் போராளிகளின் திடீர் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பயந்து ஓடினார்கள். அன்று வெறும் பத்தாயிரம் பேரை மட்டுமே கொண்டிருந்த, யுத்த அனுபவமற்ற ஸ்ரீலங்கா இராணுவத்தை வெல்வது இலகு என்று தான், ஈழ விடுதலை இயக்கங்கள் கணக்குப் போட்டன. ஆனால், அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. 

காரணம், இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்காக பிரிட்டிஷ் கூலிப்படையான SAS  தருவிக்கப் பட்டது. விமானப் படையின் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் ஓட்டுவதற்கு ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் வந்திறங்கினார்கள். பிரிட்டிஷ் விமானிகள் ஓட்டிய ஹெலிகாப்டர்கள், விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது தாக்குதல்களை நடத்தின. அன்றைய காலத்தில், பல நூறு போராளிகளின் மரணத்திற்கும், பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கும், சொத்து அழிவுக்கும், பிரிட்டிஷ் கூலிப்படையினர் காரணமாக இருந்துள்ளனர். அதற்கெல்லாம், மார்க்கரெட் தாட்சர் அனுமதி வழங்கி இருந்தார். 

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து, மார்க்கரெட் தாட்சர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.)

இவர் தான் மார்க்கரெட் தாட்சர். இவருக்காக தமிழர்கள் அழ முடியுமா?  

(முற்றும்)

*******************************************

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 
மார்கரெட் தாட்சர் : ஓர் இரும்புப் பெண்மணியின் இருண்ட காலம்

விடுதலைப் புலிகள் பற்றியும், ஈழப்போரில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன BBC க்கு வழங்கிய நேர்காணல். இதில் அவர் புலிகளை ஒரு மார்க்சிய இயக்கம் என்றும், இலங்கை முழுவதும் மார்க்சிய அரசை உருவாக்குவதே அவர்களின் இலட்சியம் என்றும் கூறுகின்றார்.

1 comment:

Packirisamy N said...

Dear Kalaiyarasan

Australian foreign minister tells about the lady’s true colour, after her death.

http://www.smh.com.au/opinion/political-news/i-couldnt-believe-it-bob-carr-recalls-margaret-thatchers-unabashedly-racist-comment-about-australia-20130410-2hksz.html

Packirisamy N