Monday, February 18, 2013

அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"

[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்] 
(பாகம் - 3)

விஸ்வரூபம் திரைக்கதை ஆப்கானிஸ்தானில் நடப்பதால், இரசிகர்கள் எல்லோரும் ஒரு பக்கச் சார்பான, முன் அனுமானத்துடன் தான் படத்தைப் பார்ப்பார்கள் என்று நினைத்து எடுத்திருப்பது தெரிகின்றது. பெரும்பான்மை இரசிகர்கள் ஆப்கானிஸ்தான், அல்லது தாலிபான் பற்றி அதிகம் அறியாமல் இருப்பதால், விஸ்வரூப படக்கதையை அப்படியே நம்பி விடுவார்கள் என்று கமல்ஹாசன் நினைத்திருக்கலாம். அது ஓரளவு சரியென நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாமரர் முதல் படித்தவர் வரை, விஸ்வரூபம் கூறும் பொய்யான, திரிபு படுத்தப் பட்ட, அபத்தமான கதை சொல்லலில் மயங்கி விட்டனர். ஆப்கானிஸ்தான் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல், அந்த நாட்டைப் பற்றிய ஒரு திரைப்படம் எடுக்க முடியும், அதனை தமிழ் இரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை, கமல்ஹாசன் நிரூபித்துக் காட்டியுள்ளார். அந்த தைரியத்தை நாம் பாராட்டலாம்.

ஹிந்தி மட்டுமே பேசும் ஒரு வட இந்தியர், தனது மதம் இந்து என்று மட்டுமே அடையாள படுத்திக் கொண்டு, RAW உளவாளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் ஊடுருவ முடியுமா? இதற்கு எல்லோரும் முடியாது என்று ஒரே குரலில் பதிலளிப்பீர்கள். அதே போன்ற ஒரு விடயத்தை, விஸ்வரூபம் படத்தில் முடியும் என்று எங்களை நம்ப வைத்திருக்கிறார்கள். நாங்களும் அதனை நம்பிக் கொண்டிருக்கிறோம். அது... வந்து... புலிகள் மொழிக்காக போராடினார்கள்....தாலிபான் மதத்திற்காக போராடினார்கள்.... இப்படியும் சிலர் நினைக்கலாம்.  அந்தந்த இயக்கங்களின் கொள்கைகள் ஒரு புறம் இருக்கட்டும். விடுதலைப் புலிகள் 100% தமிழ் பேசும் மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்பது எவ்வளவு தூரம் உண்மையோ, தாலிபான் 100% பஷ்டூன் மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்பதும் உண்மையாகும். இரண்டுமே, தமது சொந்த இன மக்களின் ஆதரவில் மட்டுமே தங்கியிருந்தன.

தாலிபான் என்ன தான் "இஸ்லாமிய சர்வதேசியம்" பேசினாலும், அவர்களால் ஆப்கானிஸ்தானில் வாழும் அனைத்து மக்களையும், "இஸ்லாம்" என்ற ஒரு மதக் கொள்கையின் கீழ் ஒன்று திரட்ட முடியவில்லை. பஷ்டூன் மொழி பேசும் மக்களைத் தவிர, வேற்றினத்தவர்கள் ஆதரிக்கவில்லை. இந்தளவுக்கும், ஆப்கானிஸ்தானில் 100% இஸ்லாமியர்கள் என்று துணிந்து கூறலாம். (ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்த சில ஆயிரம் யூதர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். அதே போல, சில ஆயிரம் இந்துக்களும், சீக்கியரும் தாலிபானின் வருகையுடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.) சர்வதேச ஜிகாதியர்களான அல்கைதாவின் ஆதரவு இருந்த போதிலும், தாலிபானால் பஷ்டூன் மொழி பேசும் மக்களை  தவிர்த்து, பிற இன மக்களை திரட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம்.

தாலிபான் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை, பஷ்டூன் மொழித் தேசியவாதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் இயக்கமாகவே இருந்து வருகின்றது. அதிலே பஷ்டூன் மொழி பேசுவோர் மட்டுமே போராளியாக சேர முடியும், அல்லது சேர்கின்றனர். ஆப்கானிஸ்தானில் வேற்றினத்தவர் ஒருவர், சாதாரண தாலிபான் போராளியாகவேனும் இருக்காத சூழ்நிலையில், தாலிபான் தலைமைக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய ஒருவராக வருவதை நினைத்துப் பார்க்க முடியுமா?  முடியாது என்பது தான் யதார்த்தம். அப்படி இருக்கையில், "ஒரு இந்திய முஸ்லிம் RAW உளவாளி தாலிபானுக்குள் ஊடுருவி, தலைவருக்கு விசுவாசமானவராக வருகிறார்" என்று, விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் எங்கள் காதில் பூச் சுற்றுகின்றார். விஸ்வரூபம் திரைக்கதையில் நிறைய முரண்பாடுகள். கமல்ஹாசன் தானும் குழம்பி, இரசிகர்களையும் குழப்புகிறார். சராசரி தமிழனுக்கு அந்தளவு பொது அறிவு கிடையாது என்று நினைத்து, தமிழன் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார். 

கமல்ஹாசன், ஆப்கானிஸ்தான் என்ற நாட்டை பற்றி, கொஞ்சமாவது அறிந்து வைத்துக் கொண்டு படத்தை தயாரித்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் முக்கியமான இரண்டு மொழிகள் பேசப் பட்டு வருகின்றன. அரசர்கள் காலத்தில் இருந்து தாலிபான் தோன்றும் வரையில், டாரி (Dari) மொழி பிரதான ஆட்சி மொழியாக இருந்தது. டாரி என்பது, ஈரானில் பேசப்படும் பார்சி மொழி ஆகும். ஆப்கானியர்கள், பார்சியை எழுதுவது போல பேசுவார்கள் என்பது மட்டுமே வித்தியாசம். குறிப்பாக, ஈரான் எல்லையோரம் உள்ள ஹெராட் மாகாணத்தில் வாழும் மக்கள் டாரி (பார்சி) யை தமது தாய்மொழியாக கொண்டுள்ளனர். (விரும்பினால் அவர்களை டாரி அல்லது பார்சி இனத்தவர்கள் என்று குறித்துக் கொள்ளலாம்.)  காபுல் நகரிலும் அவர்கள் தான் பெரும்பான்மையினர். இன்று ஆங்கிலம் போல, மத்திய ஆசியாவில் பார்சி நிர்வாக மொழியாக அமுலில் இருந்தது. அதனால், இன்றைக்கும் பெரும்பாலான ஆப்கானிய, படித்த மத்தியதர வர்க்கத்தினர் டாரி (பார்சி) மொழி பேசுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் மத்திய மலைப் பிரதேசத்தில் ஹசாரா இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பார்ப்பதற்கு சீனர்கள் போன்றிருப்பார்கள். (மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கானின் வம்சாவளியினர்.)  ஹசாரா மக்கள் இனத்தால் மாறுபட்டாலும், டாரி மொழியை தாய்மொழியாகக்  கொண்டுள்ளனர். காபுல் நகருக்கு வடக்கே, பாஞ்சீர் பள்ளத்தாக்குப் பகுதியில்  தாஜிக் இன மக்கள் மக்கள் வாழ்கின்றனர். தாஜிக் மொழி, கிட்டத்தட்ட பார்சி போன்றிருக்கும். (தமிழும், மலையாளமும் போன்றது.) அதனால் தாஜிக் மக்களும், டாரி பேசுவார்கள். இவர்களை விட, வட ஆப்கான் மாகாணங்களில், உஸ்பெக், துருக்மென் மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். உஸ்பெக், துருக்மென் இரண்டும் துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். ஆனால் நீண்ட காலமாக பார்சி மொழி பேசும் அரசர்களால் ஆளப்பட்டதால், அவர்களும் டாரி மொழியை இரண்டாம் மொழியாக பேசுகின்றனர். இன்னும்  நூரி, பலுச்சி மொழிகளை பேசும் மக்கள், இவர்களை விட சிறிய நாடோடி இனங்கள்... இப்படி பல மொழிகளை பேசும் தேசிய இனங்களின் நாடு தான் ஆப்கானிஸ்தான்.

இந்த விபரங்களை எல்லாம் இங்கே எழுதுவதற்கு காரணம், ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக மொழிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அது இலங்கையில் உள்ள சிங்களம், தமிழ் பிரச்சினை போன்று, மிகவும்  கூர்மையடைந்து இருந்தது. டாரி மொழியின் மேலாதிக்கம் பற்றி, அடிக்கடி பஷ்டூன் மக்கள் குறைப்படுவதுண்டு. நாட்டின் மொத்த சனத்தொகையில் அவர்கள் அரைவாசிக்கு சற்று அதிகமாக இருந்தாலும், ஆட்சியதிகாரம் அவர்கள் கையில் இருக்கவில்லை. எப்போதும் டாரி மொழி பேசும் ஆளும் வர்க்கமே, தலைநகரான காபுலில் இருந்து கொண்டு ஆப்கானிஸ்தான் முழுவதையும் நிர்வகித்து வந்தது. தாலிபான் வருகையின் பின்னர் தான், அந்த நிலைமை மாறியது.

உண்மையில் ஆப்கானிஸ்தான் என்பது, வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியினால் செயற்கையாக உருவான நாடு ஆகும். 19 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் படையெடுப்பு காரணமாக, பஷ்டூன் மக்களின் பாரம்பரிய தாயக பூமி, இரண்டாக பிரிக்கப் பட்டது. ஒரு பகுதி பிரிட்டிஷ் இந்தியாவுடன் (1947 இலிருந்து பாகிஸ்தான்) இணைக்கப் பட்டது. அன்றிலிருந்து பஷ்டூன் தேசியவாத இயக்கமும் கருக் கொண்டது. ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்ற கோரிக்கை வைத்தது போல, பஷ்டூன் தேசியவாதிகள் "பஷ்டூனிஸ்தான்" என்ற தாயகக் கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆனால், அந்தக் கனவு பலிக்கவில்லை. பஷ்டூன் தேசியவாத இயக்கம் காலப்போக்கில் சீரழிந்து விட்டாலும், அது இஸ்லாமிய மதவாதம் என்ற போர்வையின் கீழ் புத்துயிர்ப்பு பெற்றது.

1979 முதல் 1989 வரையில் சோவியத் படைகளுக்கு எதிராக ஜிகாத் போராட்டம் நடத்திய ஹெக்மதியார் தான் அதன் பிதாமகன். அன்று ஆப்கானிஸ்தான் சோஷலிச நாடாக இருந்ததால், "நாஸ்திகர்களுக்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் புனிதப் போர்" என்று பிரச்சாரம் செய்து தான், கல்வியறிவற்ற கிராமப்புற ஏழை மக்களை போராளிகளாக்கினார்கள். அப்போது அவர்களை "விடுதலைப் போராளிகள்" என்று வானளாவப் புகழ்ந்த அமெரிக்கா, ஆயுதங்களையும், பணத்தையும் வாரியிறைத்தது. (நாஸ்திகத்திற்கு எதிரான ஆஸ்திகர்களின் கூட்டணி?) அமெரிக்கர்கள் தான் பிற்காலத்தில், தாலிபான் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள். பாகிஸ்தான் அகதி முகாமில் தங்கியிருந்த பஷ்டூன் இன இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கி, ஆயுதங்களும் கொடுத்தார்கள். இந்த விபரங்களை எல்லாம், ஒரு அமெரிக்க திரைப்படத்தில் மறைத்திருந்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு இந்தியரான கமல்ஹாசனுக்கு, இந்திய சினிமாவில் சொல்வதற்கு என்ன தயக்கம்? இதனை அடிமைப் புத்தி என்று சொல்லாமல்,  வேறெப்படி சொல்வதாம்? 

அமெரிக்கா, ஆப்கான் ஜிகாதி குழுக்களுக்கு வழங்கிய ஆயுதங்கள் அளவுக்கு அதிகமாக குவிந்து கிடந்ததால், அவை பாகிஸ்தான் சந்தைகளில் விற்பனைக்கு வந்தன. (மலிந்தால் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள்.)  பாகிஸ்தான், பெஷாவர் நகரில் தெருவோரக் கடைகளில், ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக விற்கப் படுவதைக் காணலாம். (அதைத் தான் விஸ்வரூபம் படத்தில் காட்சிப் படுத்தியிருப்பார்கள்.) அங்கே யார் வேண்டுமானாலும் ஆயுதம் வாங்குவதற்கு, எந்தத் தடையும் இல்லை. பிஸ்டல் முதல் ஏவுகணை வரை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கலாம். விடுதலைப் புலிகளும், நீண்ட காலமாக, அங்கே தான் தமக்கு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்தார்கள். குறிப்பாக, இந்திய இராணுவத்துடன் யுத்தம் ஆரம்பித்த பின்னர், அங்கிருந்து தான் ஆயுதங்கள் தருவிக்கப் பட்டன. ஈழப்போர் முப்பது வருட காலம் தாக்குப் பிடிப்பதற்கு, ஆப்கான் போரும் உதவியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

விஸ்வரூபம் படத்தில், கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்ட ஒரு சிறுவன், கையால் தடவிப் பார்த்து எந்த வகை ஆயுதம் என்று சரியாகக் கூறுகின்றான். கமல் நடந்து செல்லும் வழியில், ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகளை பார்க்கிறார். "தாலிபான் ஆட்சியில் எந்தளவு தூரம் ஆயுதக் கலாச்சாரம் பரவியிருந்தது. மக்கள் எந்தளவு ஆயுதங்கள் மேல் காதல் கொண்டிருந்தனர்..." என்று காட்டுவதற்காக அந்தக் காட்சிகளை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தில் கமல் மீண்டும் வரலாற்று உண்மைகளை திரிக்கின்றார். "எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்கும் ஆயுதக் கலாச்சாரம்", கமல்ஹாசன் அடிமையாக சேவகம் புரியும் அமெரிக்காவில் உள்ளது. வருடத்திற்கொரு தடவையாவது, யாராவது ஒரு கிறுக்கன் தானியங்கி துப்பாக்கியுடன் பாடசாலைகளுக்குள் புகுந்து, சிறுவர்களை சுட்டுத் தள்ளிய கதைகளை கேள்விப் படவில்லையா? 

விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப் படுவது போன்ற, துப்பாக்கிகள் விற்கும் கடைகள், ஆப்கான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் நகரங்களில் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. தாலிபான் ஆட்சி நடந்த ஆப்கானிஸ்தானில், அப்படியான கடைகள் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், தாலிபானை பொறுத்தவரையில், அவர்கள் மட்டுமே ஆப்கான் மக்களின் ஏக பிரதிநிதிகள். வேறெந்த ஆயுதக்குழுவையும் இயங்க விடவில்லை. அப்படியே இருந்தாலும், ஒட்டுக் குழுக்கள், துரோகக் குழுக்கள், சமூக விரோதிகள் என்று சொல்லி அழித்து விட்டார்கள். மக்கள், அல்லது கோத்திரத் தலைவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் எப்போதிருந்து ஆயுதக் கலாச்சாரம் வந்தது? யார் அதனை அறிமுகப் படுத்தினார்கள்? அதை எல்லாம் கமல்ஹாசன் ஆராய மாட்டார். விஸ்வரூபம் படத்தில் "நல்லவர்களாக" காண்பிக்கப்படும் அதே அமெரிக்கர்கள் தான், ஆப்கானிஸ்தானில் முதன்முதலாக ஆயுதக் கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். அந்தக் காலத்தில், "இஸ்லாமிய தீவிரவாத இயக்கம்" கட்டுவது ரொம்ப எளிது. அதற்கு நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. "ஆப்கானிஸ்தானில் ஒரு இஸ்லாமிய குடியரசு அமைப்பதற்கான ஜிகாத் போராட்டம் நடத்தப் போகின்றேன்..." என்ற பிரேரணையுடன், வாஷிங்டன்  சென்று வெள்ளை மாளிகை கதவைத் தட்டினால் போதும். அமெரிக்க ஜனாதிபதியே நேரில் வந்து, உங்கள் இலட்சியத்தை பாராட்டி விட்டு, தேவையான பணமும் ஆயுதமும் தருவார்.

எண்பதுகளில் அப்படித் தான் நிறைய ஜிகாதிக் குழுக்கள் உதயமாகின. சவூதி அரேபியாவில் வேலை வெட்டி எதுவுமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த, உதவாக்கரை பின்லாடன் கோஷ்டியினரும், அப்படித் தான் ஆப்கானிஸ்தானுக்குள் நுளைந்தார்கள். விஸ்வரூபம் படத்தில், இந்திய RAW உளவாளியான கமல், அல்கைதாவில் சேருவதாக காட்டியிருந்தால், நம்பகத் தன்மை வாய்ந்த கதையாக இருக்கும். அல்கைதாவில் சேர்வதற்கு இனம், மொழி மட்டுமல்ல, மதம் கூட தடையாக இருக்கவில்லை. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அல்கைதாவில் சேர்ந்த பின்னர் முஸ்லிமாக மாறினால் போதுமானது. அப்படித் தான் 20 வயது அமெரிக்க வெள்ளையின இளைஞனான John Walker Lindh, தாலிபான் பக்கம் நின்று சண்டையிட்டு, அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டான். இப்படி உண்மையில் நடந்த சம்பவங்கள் எத்தனையோ இருக்கும் பொழுது, ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற, நம்ப முடியாத கதையை தெரிவு செய்ய வேண்டிய காரணம் என்ன? 

அன்றிருந்த அமெரிக்க அரசுக்கு, ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த சோவியத் படைகளை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. வியட்நாமில் தோற்றதற்காக பழிவாங்க வேண்டும் என்ற வெறி மட்டுமே அமெரிக்கர்களின் மனதில் இருந்தது. சாதாரண M - 16 துப்பாக்கி முதல், ஸ்டிங்கர் ஏவுகணைகள் வரை தாராளமாக அள்ளிக் கொடுத்தார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு நேர உணவு கிடைக்கிறதோ இல்லையோ, ஆயுதங்களும், வெடிமருந்துகளும் அனைவருக்கும் தாராளமாக கிடைத்து வந்தன. ஒரு ஏழை நாடான ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களின் புண்ணியத்தினால் ஆயுத வளம் நிறைந்த நாடாகியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஆயுதக் கலாச்சாரம் வளராமல், அஹிம்சைக் கலாச்சாரமா வளரும்?  என்ன கமல் சார், காமடி பண்ணுவதற்கும் ஒரு அளவில்லையா? உங்களின் விஸ்வரூபம் படத்திற்கு,  "இந்த வருடத்தின் சிறந்த காமடிப் படம்" என்ற ஆஸ்கார் விருது கிடைக்கலாம்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

*************************


சினிமா தொடர்பான பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

விரிவான விளக்கமான அலசல்! நன்றி!